சிறுத்தொண்ட நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.

பொழிப்புரை :

உருக்கொண்டிருந்து, உயிர்கள் மீது செலுத்தும் தன் ஆணைச் செயலை மன்மதன் ஒழியுமாறு, விழியினின்றும் வெளிப் படுத்தும் செந்தீத் தோன்றும் நாட்டத்தையுடைய சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருப்பதி, வயல்களில் கருங்கண்களை யுடைய உழத்தியர் தம் களியாடல்களைக் காட்டுவதற்கு இடமான `காவேரித் திருநாடு\\\' என்று சொல்லப்படுகின்ற சோழ நாட்டில், வளம் வாய்ந்த திருச்செங்காட்டங்குடி என்பதாகும்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 2

நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.

பொழிப்புரை :

நிலவும் அப்பதியில் நீண்ட சடையையுடைய சிவ பெருமானின் திருநீற்றுச் சார்பினால் உலகத்தில் தோன்றி வளர்கின்ற எல்லா உயிர்களுக்கும் உயர்வான மருத்துவத் தொழிலை மேற் கொண்டு, பெருகும் புகழையுடைய அம்மருத்துவர் குலத்தின் சீலம் பெருகுமாறு வந்து தோன்றியவர், பலரும் புகழ்கின்ற பரஞ்சோதியார் என்று அழைக்கப்படும் திருப்பெயரை உடையவர்.

குறிப்புரை :

: காவல் தொழில் - மருத்துவத் தொழில். அடுத்து வரும் `ஆயுள் வேதக் கலையும்\' எனவரும் திருப்பாடலால் இத் தொழிலு டைமை பெறப்படும். படைக்கலத் தொழிலிலும் வல்லுநராயினும், அதன் பயன் ஓரொருகால் நேர்ந்த தொன்றாதலின், இஃது அதனினும் சிறப்பாகக் குறிக்கப் பெறுவதாயிற்று. மாமாத்திரர் குலம் - வழிவழியாக மருத்துவம் செய்துவரும் மரபு. இம்மரபினர்க்கு முந்நூல் அணியும் மரபும் உண்டு. இவ்வர லாற்றில் வரும் 23ஆவது பாடலால் இவ்வுண்மை அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 3

ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.

பொழிப்புரை :

ஆயுள் வேதம் என்று கூறப்படுகின்ற மருத்துவ நூற் கலையும், எல்லை இல்லாத வடநூல்களில் உள்ள பல்வேறான கலை களும், தூய படைக்கலத் தொழிற்கலைகளும் ஆகிய இவற்றை யெல்லாம், அவ்வவற்றில் எல்லை காண்பளவும் பயின்றவர். அவற் றுடன் பாய்கின்ற மதம் பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய வீரம் செறிந்த கலையிலும், உலகத்தில் மேம்பட்டவராக விளங்கினார்.

குறிப்புரை :

உயிர்கள் நோயின்றி வாழவும், நெடிது வாழவும் கூறும் நூல்கள் ஆயுள் வேதமாகும். தமிழில் உள்ள சித்தர் மருத்துவ நூல்கள் இவையாம். இவை போகர் முதலியவர்களால் செய்யப் பெற்றவை யாம். மருத்துவன் தாமோதரனார் என்பார் சங்கப் புலவர்களில் ஒருவாராய் இருந்துள்ளமையும் எண்ணத்தக்கது. மறைகளின் சங்கங்களுள் இம்மருத்துவக் கலையும் ஒன்றுதல் பற்றி இதனை ஆயுள் வேதம் என்றனர். தமக்கினி தென்று பிறர்க்கின்னா செய்தல் நன்றன்று. எந்நாட்டிற்கும் எந்நிலையிலும் தீங்குவாராமல் காக்கும் நோக்கில் இக்கலையைப் பயின்றும், பயன்படுத்தியும் வந்தார். ஆதலின், `தூய படைக்கலத் தொழில்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 4

உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.

பொழிப்புரை :

தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, `அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, சிவனடிகளில் பொருந் திய அன்புடைமையான ஒழுக்கமேயாகும்\' என்று கொள்ளும் உணர் வினால் முதன்மை பெற, இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம், பள்ள மடையில் நீர் ஓடுவது போல், தடையில்லாது விரைவாக என்றும் பயின்றுவரும் பண்பை உடையவரானார்.

குறிப்புரை :

இடையீடின்மைக்கும், விரைவிற்கும் பள்ளத்தில் பாயும் வெள்ள நீரைக் காட்டல் இயல்பு. அவ்வகையிலேயே ஆசிரியர் சேக்கி ழாரும் `அன்பு பள்ளமடை யாய்\' என்றார். `பள்ளந்தாழ் உறுபுனலில்\' (தி.8 ப.5 பா.21) என மணிவாசகர் அருளுவதும் நினைவு கூர்தற் குரியதாம்.

பண் :

பாடல் எண் : 5

ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.

பொழிப்புரை :

சிவனடியார்களுக்கு எந்நாளும் இயல்பால் பொருந்திய தொண்டுகளைச் செய்தே, குற்றம் அற்ற புகழையுடைய மன்னனிடத்து அன்பினால் பக்கத் துணையாயிருந்து, அவனுக்காகப் போரில் செலுத்தப்படுகின்ற யானைப் படையைச் செலுத்திப் பல போர்களில் வெற்றி கொண்டு, போரில் எதிர்த்து நின்ற மன்னர்களின் நாடுகள் பலவற்றையும் கைக்கொண்டு, தேர்ப்படையையுடைய தம் மன்னனிடம் சிறப்பைப் பெற்றார்.

குறிப்புரை :

மன்னவன் - மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன். இவன் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

பண் :

பாடல் எண் : 6

மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.

பொழிப்புரை :

அம் மன்னனுக்காகப் படையெடுத்துச் சென்று வடநாட்டில் `வாதாபி\' என்ற பழைய நகரம் தூளாக ஆகும்படி, யானைப் படையைச் செலுத்தி வென்று, பல மணிகளையும், பொருட் குவைகளையும், யானைக் கூட்டங்களையும், குதிரைத் தொகுதிகளை யும், இன்னும் இத்தகைய எண்ணில்லாதவற்றையும் கைக்கொண்டு, போர்செய்தலில் விருப்புடைய தம் மன்னன் முன் கொணர்ந்தார்.

குறிப்புரை :

வாதாபி - மும்பை மாகாணத்தின் பெல்காம் மாவட்டத்தில் பதாமி என அழைக்கப் பெறும் நகரமாகும். இது சாளுக்கிய அரசனான புலிகேசிக்குத் தலைநகரமாயிருந்ததென்றும், அவனுக்கும் நரசிம்மவர்மனுக்கும் நிகழ்ந்த போரில், பல்லவனுக்குத் தானைத் தலைவராக இருந்த பரஞ்சோதியார் போர்முகத்துட் சென்று வென்று கொண்டு வந்த பொருள்கள் பல என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுவர். திருத்தொண்டர்களின் கால ஆய்விற்கு, இனைய பல இடங்கள் பெரிதும் துணை செய்கின்றன. `எண்ணில கவர்ந்தே\' என்பதால் இங்குக் கூறப்படும் பொருள்களுடன் வேறு பல பொருள்களும் கவர்ந்து வந்தமை புலனாம். அவற்றுள் மூத்த பிள்ளையாரின் திருவுருவம் ஒன்று என்றும், அப்பெருமானே, திருச்செங்காட்டங்குடியில் இன்று காணப்பெறும் `வாதாபி கணபதி\' என வணங்கப் பெற்று வருகிறார் என்றும் கூறுவர். இதனால் மூத்த பிள்ளையார் வணக்கமே ஆறாம் நூற்றாண்டு முதல்தான் வந்தது என்பது எவ்வாற்றானும் பொருந்துவதன்றாம். `கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை\' (மணிமேகலை பதிகம் 10 - 12) என வரும் கூற்றாலும், சுமத்திராவிலுள்ள `லாரா யோங்ராங்\' என்னும் இடத்தில், மூத்த பிள்ளையாரின் படிமங்கள் பல காணப்படுகின்றன என ந. சி. கந்தையா தரும் குறிப்பாலும் (சிவன். பக்.87) மூத்த பிள்ளையாரின் வணக்கம் தொன்மையானது என அறியலாம்

பண் :

பாடல் எண் : 7

கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய முடியுடைய மன்னனும் இவர்தம் யானைப் படை செலுத்துவதற்குரிய வல்லமையைப் பார்த்து, வியந்து, புகழ்ந்து கூற, அவரை அறிந்த அமைச்சர்கள் எடுத்துக் கூறுவாராய்ப், `பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமானின் திருத்தொண்டு வாய்க்கப் பெற்ற வல்லமையினால், இவரை எதிர்த்து நிற்பவர் எவரும் இவ் வுலகத்தில் இல்லை\' என்று உரைத்தார்கள்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 8

தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.

பொழிப்புரை :

`தம் இறைவரின் திருத்தொண்டர் இவர்\' என்று அமைச்சர்கள் கூறக் கேட்ட மாலைசூடிய மன்னன், `எம்பெருமானின் அடியவரான இவரை இத்தகையவர் என்று அறியாது கெட்டேன்! மிக்க கொடிய போர்முனையில் சென்று போர் செய்யுமாறு விட்டிருந்தேனே!\' என்று நினைத்து, நடுக்கம் அடைந்து, அவரை நோக்கி, `எம்பெருமானே! இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும்!\' என்று இறைஞ்சினான்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 9

இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.

பொழிப்புரை :

அங்ஙனம் மன்னன் வணங்கவும், அதன் முன்பு தாம் இறைஞ்சி, `என் உரிமையான படைத்தொழிலுக்கு ஏற்றதான பொருந்திய திறத்தை யான் செய்தேன். அதனால் ஒரு தீங்கும் இன்று\' என்று பரஞ்சோதியார் உரைக்க, அறவழிச் செங்கோல் செலுத்தும் மன்னன், அப்போது அவருக்கு நிறைந்த செல்வக் குவியல்களுடன், நெடிது துய்த்தற்குரிய நிலங்களையும் அளித்து அவரை வணங்கி உரைப்பானாகி,

குறிப்புரை :

நீடுவிருத்திகள் அளித்தல் - தம் வாழ்விற்கெனப் பிறர் பால் பொருள்வேண்டாதிருக்க இறையிலியாக நிலங்கள் பலவற்றை அளித்தல்.

பண் :

பாடல் எண் : 10

உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க
வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.

பொழிப்புரை :

`உம் உண்மை நிலையான திருத்தொண்டை, யாம் இதுகாறும் அறியாதவாறு செய்து வந்தீர்! எம் மனக் கருத்திற்கு இனிமை பெற இசைந்த, உம் மெய்ம்மைத் திருத்தொண்டின் வழி ஒழுகி, இனி நீர் வேண்டியவாறே, செம்மை தரும் நெறியான சிவ நெறித் தொண்டு செய்வீராக!\' என்று சொல்லித், தம் கீழ் அவர் ஆற்றிவரும் பணியினின்றும் விடுவித்து விடைதந்தான்.

குறிப்புரை :

சரித்தல் - வேண்டியவாறு ஒழுகல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 11

மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.

பொழிப்புரை :

புகழ்ந்து கூறப்படும் பரஞ்சோதியாரும் அம் மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு, தம் பதியான செங்காட்டங் குடியை அடைந்து, குளிர்ந்த பிறைச் சந்திரன் வாழ்வதற்கு இடமான திருமுடியையுடைய சிவபெருமானைக் `கணபதீச்சரம்\' என்ற கோயி லில் வணங்கித், திருத்தொண்டினை முன்னைய நிலைமையி னின்று வழுவாது முறையாக அன்புடன் செய்து வருவாராயினார்,

குறிப்புரை :

அரசன் அரசுபுரிந்து வந்த இடம் காஞ்சிமா நகராகும். திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோவிலின் பெயர் கணபதியீச் சரம் ஆகும். கயமுகாசுரனைக் கொன்ற பாவம் நீங்கத் திருச்செங்காட் டங்குடியில் கணபதி சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்து வழிபாடாற்றிய திருக்கோயில் கணபதியீச்சரம் எனப் பெயர் பெறுவ தாயிற்று. எனவே மூத்த பிள்ளையார் (கணபதி) வழிபாடாற்றிய இடமும், அவரைப் பற்றிய வழிபாடும் அக்காலத்திற்கு முன்னமேயே இருந்திருத்தல் வேண்டும் என இதன்வழி அறியலாம்.

பண் :

பாடல் எண் : 12

வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.

பொழிப்புரை :

மறைகள் தோன்றற்குக் காரணரான சிவபெருமா னின் அடியவர்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்வாராய், குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்ற காதலையுடைய இல்லக் கிழத்தியாருடன், இருவர் கருத்தும் ஒன்றாய்ப் பொருந்த வரும் பெருமையுடையதாய், நீதியின் வழியே வரும் இல்லறம் நடத்தி வாழும் தன்மையில் நிலை நிற்பாராய்,

குறிப்புரை :

இயற்பெயர் அறிய இயலாமையின் ஊர்ப்பெயரோடு கூட்டித் திருவெண்காட்டுநங்கை என்றே அழைத்து வந்தனர் எனத் தெரிகிறது. `தீதில் குடி - குற்றமற்ற தம் கணவர் குடியிலேயே தாமும் பிறந்தவர். `இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி\' என்னும் திருமுரு காற்றுப்படையும் (தி.11 ப.17 வரி.181).

பண் :

பாடல் எண் : 13

நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.

பொழிப்புரை :

தேனையுடைய கொன்றை மலர் மாலையைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் அடியவர்களை நூல் விதிப்படி நாள்தோறும், முறையாக முன்னமேயே உணவு உண்ணச் செய்து, அதன் பின்னர்த் தாம் உண்ணுதலான பெருவிருப்பத்தால் அதனை வழக்கமாகக் கொண்டு ஒழுகும் நிலையில், தவறாது ஒழுகுதலான தூய்மையான தொழிலில் சிறந்து விளங்கினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 14

தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.

பொழிப்புரை :

தூய திருவமுதும், பழவகைகளும், அறு சுவைகளை யுடைய கறிவகைகளும், நெய்யும், உறைந்த தயிரும், பாலும், இனிய பலகாரங்களும், அமுது போன்ற உண்ணீரும் என்ற இவற்றைப் பொருந்தியவாற்றால், திருவமுது செய்விக்க, அதற்கு இசைந்து அடியார்கள் வந்து அமுதுண்டு, பெரிய உலகம் போற்ற வரும் இவரிடம், உள்ளம் மகிழ்ச்சி கொண்டனர்.

குறிப்புரை :

பண்ணியம் - இனிப்பொடும் காரத்தொடும் கூட்டிச் செய்யப்பட்ட பலகாரங்கள். உண்ணீர் அமுதம் - அருந்துதற்கெனத் தூய்மையும் மணமும் பெற்ற நீர். `அமிழ்தம் என்று உணரற்பாற்று\' (குறள், 11) என்பர் திருவள்ளுவனாரும்.

பண் :

பாடல் எண் : 15

சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறைச் சந்திரனுடன், பாம்பையும் செஞ் சடைமீது அணிந்து கொண்டுள்ள இறைவரின் அடியவர்களுக்கு விருப்புடன் செய்யும் வழிபாட்டு வகையால், மேன்மையுடைய அவ்வடியவர்களின் முன்பு, தம்மை மிகவும் சிறியவராய்க் கருதி ஒழுகி வந்தமையின், அவர், சிறுத்தொண்டர் என்ற பெயருடன் உலகில் விளங்கலானார்.

குறிப்புரை :

தாழ்வெனும் தன்மை கொண்டு அவர் வாழ்ந்துவரினும், அவர்தம் பண்பாலும் செய்கையாலும் மிகப்பெரிய தொண்டராவர். `நீரோ பெரிய சிறுத்தொண்டர்\' என இறைவரால் பின்னர் அழைக் கப்படுதலும் காண்க. நயப்பாட்டு வழிபாட்டால் - விருப்பத்துடன் கூடிய வழிபாட்டால்.

பண் :

பாடல் எண் : 16

கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.

பொழிப்புரை :

நெற்றியில் கண்ணையுடைய இறைவரின் கணபதீச் சரத்தில் கருத்துப் பதிய, உள்ளம் நிறையும் அன்பினால் தொண்டுகள் பலவும் செய்து ஒழுகுபவரான அவர், குறைவின்றி அளவில்லாத பெருமையுடைய சிறந்த அடியார்கள் இடைவிடாது வந்து உணவு உண்டருளப் பொருந்திய மகிழ்ச்சியுடன் விரும்பி வாழ்ந்திருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 17

நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.

பொழிப்புரை :

கங்கைநீர் பொருந்திய சடையையுடைய சிவபெரு மானின் திருவருளால், நிறைந்த தவத்தையுடைய அவருக்குப் பெரு கும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கையாரின் மணிவயிற்றில் `சீராள தேவர்\' என்னும் திருமகனார் தோன்றினார்.

குறிப்புரை :

மனையறத்திற்கு வேராக விளங்குபவர், வீட்டிலிருக்கும் மனைக்கிழத்தியர்களேயாவர். `இல்லதென் இல்லவள் மாண்பானால்\' (குறள், 53), `மனைக்கு விளக்கம் மடவார்\' (தண்டி. மேற்கோள்) என்றெல்லாம் பண்டைப் பனுவல்கள் கூறுதல் காண்க. இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 18

அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.

பொழிப்புரை :

பிறர் எவரும் பெறுதற்கரிய அருமையான ஒப்பற்ற நன்மகவு தோன்றியபொழுது, மனையை அழகுபடுத்தி, மகவு தோன் றிய பெருமையால் சுற்றத்தார்கள் மகிழ, பெறற்கரிய அம்மகவைப் பெற்றமையால் பெருகிவரும் மனமகிழ்ச்சி, தந்தையாரின் மனத்தில் அடங்குதற்கரிய நிலையில் வளர்ந்து வரச் சிறப்புமிக்க நெய்யாடல் விழாவினைத் திருச்செங்காட்டங் குடியிலுள்ளார் கொண்டாட,

குறிப்புரை :

நெய்யாடல் - எண்ணெய் தேய்த்துக் குழந்தையைக் குளிக்கப் படுத்துதல்.

பண் :

பாடல் எண் : 19

மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.

பொழிப்புரை :

மங்கலமான நல்ல இயங்களின் ஒலியும், மறை களின் ஒலியும் வானத்தில் ஓங்க, இறைவரின் சிறப்புடைய அடியார் களுக்கு அளவில்லாத பொருள்களைத் தந்து, தங்கள் குல மரபிற்கு உரிய செயற்பாடுகளைப் பத்து நாள்களிலும் மேன்மேலும் மிக மகிழ்ச்சியுடன் செய்து, காப்பு அணிவித்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 20

ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.

பொழிப்புரை :

மிக்க விருப்பமுடைய சுற்றத்தவர்கட்கு எல்லாம் உள்ளம் மகிழக் கொடுத்து, உலகத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன் அவ் வப் பருவங்கள் தோறும் செய்யப்பெறும் செயற்பாடுகளை எல்லாம் சிறப்பாகச் செய்ய, வளரும் திருமகனாரான சீராளதேவர், தம் சிறப்பு மிகுந்த அடிகளில் மாலையாகக் கோத்த கிண்கிணிச் சதங்கை அசை யும்படி தளர்நடைப் பருவத்தை அடைந்தார்.

குறிப்புரை :

பருவமுறைப் பாராட்டு - செங்கீரை முதலாகச் சொல்லப் படும் பருவங்களில் செய்யப்பெறும் சிறப்புக்கள்.

பண் :

பாடல் எண் : 21

சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.

பொழிப்புரை :

சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டியும், இரண்டு காதுகளில் குதம்பைகளும், திருக்கழுத்தில் பொருந்தும் கண்டசரமும், மார்பில் ஐம்படைத் தாலியும், கைகளில் ஒப்பில்லாத வயிரத்தால் ஆன சரிகளும், இடையில் பொன் அரைஞாணும், திரு வடிகளில் சதங்கைகளும் விளங்கத் தெருவில் ஒளிவிளங்க, வளரும் பிள்ளைத் திருவிளையாட்டினைச் சீராளதேவர் செய்து வந்தார்.

குறிப்புரை :

கண்ட சரம் - கழுத்தொடு விளங்கும் நாண். இது பொன் னாலாயது. ஐம்படைத் தாலி - திருமாலின் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் என்பன. சரிகள் - கை வளையல்கள்.

பண் :

பாடல் எண் : 22

வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.

பொழிப்புரை :

முறைமையாக வளர்கின்ற அவரின் மூன்றாம் ஆண்டில் மயிர் நீக்கும் மணவினையைச் செய்வித்துத், தந்தையாரும் தாயாரும் ஒப்பில்லாத சிறிய தோன்றலான மகனாருக்கு, மனம் மலர் வதற்குக் காரணமான சொற்களின் தெளிவையுடைய செழுங்கலை களைப் பயில்வதற்காகத் தம் பிறவிப் பிணிப்பு நீங்க வந்த அவரை ஐந்தாம் ஆண்டில் பள்ளியில் சேர்த்தனர்.

குறிப்புரை :

ஐந்தாம் ஆண்டில் பள்ளியிற் சேர்க்கும் மரபு, சண்டேசுவர நாயனார் வரலாற்றாலும் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 23

அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.

பொழிப்புரை :

அந்நாளில் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அங்கு வந்தருள, முப்புரி நூல் அணிந்த மார்பையுடைய சிறுத்தொண் டர் முன்னாகச் சென்று எதிர்கொண்டு வரவேற்று, அழைத்து வந்து, நகருள் புகுந்து, தம் மனையில் இருக்கச் செய்து, அச்சீகாழித் தலைவ ரின் நலமும் பெருமையும் மிக்க திருவடிகளைப் போற்றி நலம் பெற்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 24

சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.

பொழிப்புரை :

சீகாழியினரின் தலைவரான ஞானசம்பந்தரும் அளவிடற்கரியதாய், மேன்மேலும் வளரும் அரிய பத்திமைப் பண் புடைய சிறுத்தொண்டருடன் பயின்று, அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்து, தம் நட்பினராகும் பேற் றையும் வழங்கியருளி, இன்பமும் விருப்பமும் மிக அங்கு அமர்ந் திருந்தார்.

குறிப்புரை :

திருச்செங்காட்டங்குடிக்குப் பாலறாவாயர் அருளிய பதிகங்கள் இரண்டுள்ளன (தி.1 ப.61, தி.3 ப.63). இவற்றுள்ளும் பின்னைய திருப்பதிகத்தில் மூன்றாவது செய்யுள் காணக் கிடைத் திலது. தி.1 ப.61 10 ஆவது பாடலில், `பொடிநுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதியீச்சுரத்தானே\' என்று சிறப்பிக்கிறார். தி.3 ப.63இல் பாடல் தொறும் சிறுத்தொண்டரைச் சிறப்பிக்கும் ஞானசம்பந்தர், அப்பதிகத் தின் முதற் பாடலில், `செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய\' என்று குறிப்பிடுகின்றார். மற்ற இடங்களில் எல்லாம் அவர்தம் சீர்மையும் நீர்மையும் விளங்கப் பலபடக் குறிக்கப் பெற்றுள்ளன. `கன்னவில் தோள் சிறுத்தொண்டன்\' (தி.3 ப.63 பா.2), `சீருலாம் சிறுத் தொண்டன்\' (தி.3 ப.63 பா.5), `செருவடி தோள் சிறுத்தொண்டன்\' (தி.3 ப.63 பா.7), `சிறப்புலவாச் சிறுத் தொண்டன்\'(தி.3 ப.63 பா.9) என்பன அவற்றுட்சில.

பண் :

பாடல் எண் : 25

இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.

பொழிப்புரை :

இவ்வாறாக நிகழ்ந்துவரும் சிறுத்தொண்டரின் திருத்தொண்டானது, உயர்ந்த திருக்கயிலாய மலையில் வீற்றிருக் கின்ற இறைவரின் திருவடிக் கீழ்ப் போய்ச்சேர, ஆனேற்றூர்தியை யுடைய இறைவர், தாமே அவர்தம் மெய்யார்ந்த அன்பை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு, உள்ளம் மகிழும் வயிரவக் கோலத் துடனே திருமலையினின்று நீங்கி எழுந்தருளி வருவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 26

மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.

பொழிப்புரை :

இதழ்களையுடைய கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையையே அழகுபொருந்த, கருநீலக் கடலில் சேர்ந்து நீரை யுண்டு மேலே எழுந்த கரிய மேகத்தின் சுருள் போலத் தொடர்ந்து, நீண்ட தலைமயிராகக் காடு என அடர்ந்து, நெறிப்பும் அசைவும் உடையதாகச் செறித்துப் படரும் வரிசை கொண்ட கருங்குஞ்சிக் கொத்தைப் போல் ஆக்கி அழகுடையதாய்ப் பரப்பி முடித்து,

குறிப்புரை :

திருச்சடையை மயிர்க்கொத்தாக ஆக்கி என்பதே இதன் கருத்தாகும். இதன் கருமை, நீரை முகந்த மேகத்தின் கருமையதாம். இம்மயிர் முடி சுருண்டு, இருண்டு, காடென அடர்ந்து, கருமணலின் நிரல் எனச் செறிந்து, அசைவுடையதாகி இருந்தது என ஆசிரியர் குறித்தருளுகின்றார். ஒரு மயிர் முடிக்கு இதனினும் அழகு அமைய இயலாதவாறு குறித்திருக்கும் நுண்மை அறிந்து இன்புறத்தக்கதாம். தொடர்பங்கி - தொடர்ந்து நீண்ட மயிர். குஞ்சி - ஆண்களின் தலை மயிர். கொந்தளம் - கொத்து.

பண் :

பாடல் எண் : 27

அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.

பொழிப்புரை :

மைக்குழம்பை மூழ்கச் செய்ததைப்போல், அழகு மிகும் கரிய மயிரான மேகத்திடையே எழுந்து தோன்றும் விண்மீன் களின் பரப்பைப் போன்று திரட்சியாய், வரிசையாய்ப் பல வண்டின் கூட்டங்கள் அருகே சூழ்ந்து ஒலிக்க நிலைபெறும் வரிசைகளில் தும்பை மலர்கள் விளங்க,

குறிப்புரை :

மேற்கூறியவாறமைந்த திருமுடியில் தும்பை மலர்கள் விளங்குவன, மேகத்தினிடையே விண்மீன்கள் தோன்றுவனபோல் இருந்தனவாம். பம்பை - சுருண்டு விரிந்த மயிர். புஞ்சம் - திரட்சி. துஞ்சின் நுனி - நிலைபெறும் மயிர்ச்செறிவின் நுனி.

பண் :

பாடல் எண் : 28

அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.

பொழிப்புரை :

திருமுடியின் ஒரு மருங்கில், செருகும் மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனையே ஒளி பெருகும் சிறிய முழுமதி போலே ஆக்கி, மீண்டும் நெற்றியில் அணிந்ததைப்போல் விரியும் ஒளி பொருந்திய சிவந்த பவளக் கதிர்களை விரித்து வீசும் விளக்கமுடைய சுடர்த்திரு நெற்றியின்மீது, திருநீற்றின் ஒற்றைப் பொட்டு ஒளி வீசி விளங்க,

குறிப்புரை :

இளம்பிறையை முழுமதியாக்கி வைத்தது போன்று, நெற்றியில் திருநீற்றின் பொட்டு விளங்கியது என்பது கருத்து. `நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா\' (தி.12 திருமலைச் சரு. தடுத்தாட். பா.162) என ஆசிரியர், தாமே கூறியிருத்தலின் நிலவின் ஒளி, நீற்றின் ஒளிக்கு உவமையாயிற்று என அறியலாம். `பெரியோன் தருக திருநுதலாகென\' என வரும் பகுதிக்குச் சிவபெருமான் சூடிய பிறை இரண்டுகலை யுடையதாதலின், அதனை எட்டாம் பிறையாக்கித் தருக என அடியார்க்கு நல்லார் உரைத்த உரையும் ஈண்டு நினைவு கூரத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 29

வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.

பொழிப்புரை :

வெம்மையுடைய கதிரவன், விளக்கமான சந்திரன், நெருப்பு ஆகிய மூன்றும் தாம்தாமும் விளக்கமுறும் இடங்களுடன் ஒன்றாகக் கூடினாற் போல, அழகைத் தன் வயமாக்கும் செவியில், அழகான சங்குக் குழையை வளைத்து அணிந்து, அதனுள் செவ்வரத்தம்பூவைச் செறித்த தோடு, இருமருங்கும் சிறந்து விளங்க,

குறிப்புரை :

கதிரவன், சந்திரன், தீ ஆகிய முச்சுடர்களும் இறைவற்கு முக்கண்களாக விளங்க, அவற்றின் ஒளிப்பரப்பு முறையே காதிலும், குழையிலும், மலரிலும் விளங்கலாயின என்பது கருத்து. மண்டலம் - வளைவு. `பருதி பலவும் எடுத்து சுடர் பாலித்தாற் போலக் குலவும் மகரக் குழையும்\' எனவரும் குமர குருபர அடிகளின் திருவாக்கும் நினைவுகூர்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 30

களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.

பொழிப்புரை :

திருக்கழுத்தில் கொண்ட நஞ்சை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தின் குமிழிகளின் வரிசையாய் வாய்ந்த ஒளியுடைய வெள்ளிய திரட்சிகளின் தூய வடத்தை அணிந்ததுபோல, உள்ளத்துள் நினைப்பவரின் உடலும் உயிரும் உருகும்படி மிக விளங்கும் திருக்கழுத்திலே வெண்மையான பளிங்கு மாலை விளங்க,

குறிப்புரை :

அமுதம் வெண்மையானது. ஆதலின் அமுதக் குமிழி எனப் பளிங்கின் வடம் இருந்தது என்றார். நஞ்சு - கறுப்பு. வெண்மை அதனை மறைத்தது.

பண் :

பாடல் எண் : 31

செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.

பொழிப்புரை :

சிவந்த கதிரவன் கடலில் குளிக்கும் சமயத்தில் தோன்றும் செவ்வான ஒளியை, அந்தி முதிர வரும் இருள் அடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வதைப்போல், அழகிய பவளம் போன்ற மேனியின் மீது தம் பழைய யானைத் தோலைக் கொண்டு ஆக்கிய சட்டையின் அழகு விளங்க,

குறிப்புரை :

சிவந்த கதிரவன் கடலில் குளிக்கும் சமயத்தில் தோன்றும் செவ்வான ஒளியை, அந்தி முதிர வரும் இருள் அடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வதைப்போல், அழகிய பவளம் போன்ற மேனியின் மீது தம் பழைய யானைத் தோலைக் கொண்டு ஆக்கிய சட்டையின் அழகு விளங்க,

பண் :

பாடல் எண் : 32

மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.

பொழிப்புரை :

அடியாரிடத்தில் மேல் ஓங்கி எழும் அன்பானது தம் திருமேனியின் மீது அங்கங்கும் வடிவு கொண்டு வளைந்தாற் போல, எலும்பு மணிகளால் அமைந்த வெற்றி மாலையும், கோவை களும், கைகளுக்கு அணியும் கங்கணங்களும், இடுப்பில் அணியும் அரைஞாணும், கால்களில் அணியும் காலணிகளும் அணிந்த ஒன்றிய பேரொளி விளங்க,

குறிப்புரை :

சன்னவீரம் - வெற்றிமாலை. சன்னவீரம், ஆரம், வடம் ஆகியவை மார்பில் அணியத்தக்கன. வளைச்சரி - வளை விளங்க : சரித்தல் - சலிப்பது; விளங்குவது. கடிசூத்திரம் - அரைஞாண். இவ் வணிகளனைத்தும் அடியவர்களின் அன்பு என வளைந்து இலங்கின.

பண் :

பாடல் எண் : 33

பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.

பொழிப்புரை :

ஒப்பில்லாத தொண்டரான சிறுத்தொண்டருக்கு, இவ்வுலகத்தில் வந்து அருள் செய்யும் பெருகிய அருளின் தன்மை யைக் கண்டு இறைவரின் திருவருளையே விரும்பிப் போற்றுவீர்! வளர்கின்ற அன்பின் வழியில் நிற்கக் கடவீர்! என்று மறைகள் குறிக் கொண்டு கூறுவன போலத், திருவடிகளின் மீதுள்ள சிலம்புகளின் ஒலி எல்லாத் திசைகளிலும் செல்லுமாறு ஒலிக்க,

குறிப்புரை :

மறைஒலி எனச் சிலம்பொலிகள் இசைத்தன என்பதாம்.

பண் :

பாடல் எண் : 34

அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.

பொழிப்புரை :

நான்முகனின் மண்டையோட்டை எடுத்த இடக் கையினால், அணைத்த விளங்கும் ஒளியையுடைய மூவிலைச் சூலமா னது அழகிய தோள்களில் விளங்க, விளங்கி வீசும் ஒளியையுடைய வலத்திருக்கையிலே பிடித்த தமருகத்தின் ஒலி ஒலிக்க, முன்னைத் தவத்தால் பயன் பெறும் நிலமும் அடித் தாமரைகளைத் தாங்க,

குறிப்புரை :

இடத்திருக்கையில் சூலமும், வலத் திருக்கையில் துடியும் விளங்க, நடந்தருளி வர என்பதாம்.

பண் :

பாடல் எண் : 35

அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.

பொழிப்புரை :

அருள் பொழியும் திருமுகத்தில் புன்முறுவலானது நிலவைப் போன்று குளிர்ந்த ஒளி வீச, மயக்கத்தை மிகச் செய்யும் மும் மலங்களின் வலியையும் போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச, உண்மைப் பொருளை விளக்கும் பெருகும் அன்பு மேலும் மேலும் தழைத்து ஓங்கி இவ்வுலகம் போற்ற, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.

குறிப்புரை :

இப்பதினொரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 36

தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.

பொழிப்புரை :

குறையாத பசியை உடையவரைப் போலத், தம்முன் வருபவர்களைப் பார்த்துச் `சிறுத்தொண்டரின் இல்லம் எங்குள்ளது?\' என்று கேட்டு அறிந்து, விரைவில் அங்கு வந்து, `சிவபெருமானது தொண்டருக்கு எந்நாளும் சோற்றை அளிக்கின்ற தொண்டரான, வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையைச் சூடிய சிறுத்தொண்டர் இந்த இல்லத்தில் உள்ளாரோ?\' என்று வினவ,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 37

வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.

பொழிப்புரை :

வந்து சேர்ந்து வினவுகின்றவர் மாதவரான அடியவரே என்று எண்ணிச் சந்தனத்தாதியார் என்ற அம்மையார், முன் வந்து, அவர்தம் திருவடிகளை வணங்கி, `எல்லையில்லாத சிறப் புடைய அடியவரைத் தேடும் பொருட்டு அவர் வெளியே சென்றுள் ளார்; எம்மை ஆள்பவரான முதல்வரே! மனையகத்து எழுந்தருளுக!\' என்று கூற,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 38

மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.

பொழிப்புரை :

(இறைவர்) அந்த அம்மையாரைப் பார்த்துப், `பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்!\' என்று உரைப்ப, அதைக்கேட்டு, அவர் அங்கிருந்து நீங்கிச் சென்று விடுவார் போல் தோன்றுகின்றார் என்று அச்சம் கொண்டு, விரைந்து, மனைத்தக்க மாண்பு உடையவரான திருவெண்காட்டு அம்மையார், உள்ளிருந்து மனையின் முன்வந்து,

குறிப்புரை :

அற்றேல் காரைக்காலம்மையார் தனித்திருப்ப, அடியவ ராக வந்த இறைவர் அவரிடத்தில் சென்று உணவருந்தியது என்னை யெனில், அங்குத் தமிழ் நாட்டவராகவும், எளிய இனிய வயது முதிர்ந்த அடியவராயும் வந்தமையானும், தம் தீப்பசி நீங்க உணவு ஒன்றே தேவையாம் நிலையில் திருவுள்ளம் பற்றியமையாலும், அதனைத் தீர்த்தற்கு அம்மையார் ஒருவரே இருப்பினும் அமையுமாத லானும், அங்கு அவர் தனித்திருப்ப எழுந்தருளியது தகவாயிற்று. இங்கு அந்நிலைமைக்கு முற்றிலும் மாறானதாய் இருத்தலின், இவ் வாறு திருவுள்ளம் கொண்டாராயிற்று.

பண் :

பாடல் எண் : 39

அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.

பொழிப்புரை :

பேரவையை இடனாகக் கொண்டிருக்கும் இறைவ ரின் அடியவர்களைத் திருவமுது செய்விக்கின்ற நியமம் உடையவர், அச்செயலை முடிப்பதற்கு, `எம்பெருமானே! இன்று அடியார் எவரை யும் காணாமையால் தேடிச் சென்றுள்ளார், புதிதாய் நீங்கள் எழுந் தருளி வரும் இத்திருக்கோலத்தைக் கண்டால் தம் பேறே என்று மிக வும் மகிழ்ச்சி அடைவார், இனிக்காலம் தாழ்க்க மாட்டார்\',

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 40

இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.

பொழிப்புரை :

`இப்பொழுதே வந்து சேர்வார். இங்குத் தங்கி யிரும்\' என்று சொல்ல, `ஒப்பற்ற இல்லறத்தைத் தவறாது நடத்துபவரே! யாம் வடநாட்டில் உள்ளோம். சொல்வதற்குரிய சிறப்புடைய சிறுத் தொண்டரைக் காணும்பொருட்டு இங்கு வந்து அடைந்தோம், எவ்வகையாலும் அவர் இல்லாதபோது இங்கே நாம் இருக்க மாட்டோம்!\' என்று கூறியருளி,

குறிப்புரை :

முன்னிருந்த தோழியரின் மொழிக்கு அடியவர் இணங்காமை கேட்ட நங்கையார், உள்ளிருந்து முன்வந்து, தாமே அவருக்கு முழுமையாகவும், இனிமையாகவும் விடை பகர்ந்தது அவர்தம் பொறுப்புணர்வையும், விருப்புணர்வையும் காட்டி நிற்கின் றன. இந்நிலையில் வந்தருளிய வயிரவரும், வரலாற்றின் எதிர் நிகழ்வை உளங்கொண்ட நிலையில் வழங்கிய விடையும் உளங் கொளத்தக்கதாய் அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 41

கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை மறைத்தவாறு வந்த அவர், `கணபதியீச்சரத்தில் அழகிய மலர்களையுடைய திருவாத்தி மரத்தின் கீழ்ச் சென்று அமர்ந்து இருப்போம், அவர் மீண்டு இங்கு வரும் பொழுது, அங்கு நாம் இருக்கும் தன்மையினைச் சொல்வீராக!\' என்று கூறி, இறைவர் திருவாத்தி மரத்தின் அடியைச் சேர்ந்து, அங்கு விரும்பி எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை :

இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 42

நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.

பொழிப்புரை :

சிறப்பு மிகுந்த தவத்தையுடைய சிறுத்தொண்டர், கங்கையாற்றைத் திருச்சடையிலுடைய சிவபெருமானின் அடியவரை எங்கும் தேடிக் காணாது, மீண்டும் இல்லத்தை அடைந்து, அளவு கடந்த அன்பினையுடைய மனைவியாருக்கு அதைச் சொல்லி வருந்த, அவரும் உலகம் அன்புகூரும் கோலம் கொண்ட ஒருவர் அங்கு வந்து சென்றவாற்றை அவருக்குச் சொன்னார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 43

அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.

பொழிப்புரை :

`அடியேன் வாழ்ந்தேன்! அவர் எங்கு இருக்கின் றார்? சொல்வாயாக!\' என்று வினவ, அவ்வம்மையாரும் கூறுவா ராய்க் ` கூர்மையுடைய சூலத்தையும், மண்டை ஓட்டையும் கையிற் கொண்ட அவர், நாம் வடநாட்டில் உள்ளோம்\' என்றார்: அவர் வள மான துடியை ஒரு கையில் பிடித்த வயிரவக் கோலத்தவர்: நாங்கள் இல்லத்தில் எழுந்தருளி இருக்குமாறு சொல்லி வேண்டவும், இங்குத் தங்கி இராமல் சென்று கணபதியீச்சரத்தில் மணம் பொருந்திய திருவாத்தி மரத்தின் நிழலில் தங்கி உள்ளார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 44

என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.

பொழிப்புரை :

என்று மனைவியார் கூற, அதைக் கேட்ட சிறுத் தொண்டர், மேன்மேல் எழுந்த விருப்பினால் விரைவாகச் சென்று, அவருடைய திருவடிகளை வணங்கி நின்றார். வணங்கி நின்ற சிறுத் தொண்டரைப் பார்த்து, `நீர் தாமோ பெரியவராய்ச் சொல்லப்படுகின்ற சிறுத்தொண்டர்\' எனத் திருவாய் மலர்ந்தருள, அவர் இறைவரை வணங்கிச் சொல்வாராய்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 45

பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.

பொழிப்புரை :

`திருநீற்றுத் திருத்தொண்டர்களின் முன் சென்று போற்றி வழிபடவும் தகுதியற்றவனாயினும், அடியேன் அடியவர்க ளின் அருளால் அப்பெயருடையவன்\' எனக் கூறுவர், குற்றம் தீர்ந்த அடியவரை அமுது செய்விப்பதற்காகப் பழமை வாய்ந்த இப்பதியில், பெருவிருப்பத்தால் எங்கும் தேடியும் கண்டிலேன், முன்பு செய்த தவப்பயனால் உம்மைக் கண்டேன்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 46

அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.

பொழிப்புரை :

`அடியவனின் இல்லத்தில் தாங்கள் எழுந்தருளி வந்து திருவமுது செய்தல் வேண்டும்!\' என்று சிறுத்தொண்டர் வேண்ட, நீண்ட திருமாலும் அறிய மாட்டாத அவ்வடியவர் தாமும், `விளங்கும் தவத்தை உடையவரே! உம்மைக் காண்பதற்காக வந்தோம்! வடநாட்டில் உள்ளோம், எம்மை அன்புடன் உண்ணச் செய்ய இயலாது, அஃது அரியதாகும்! ஆதலால் உம்மால் செய்ய ஒண்ணாது\' என்று கூறியருள,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 47

எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.

பொழிப்புரை :

`அடியேன் எண்ணிப் பாராது கூறமாட்டேன். கண் நிறைந்த அழகையுடைய நிறை தவத்தவரே! தாங்கள் திருவமுது செய்யும் இயல்பை, விரைவாக அமைப்பதன் பொருட்டுக் கூறியருள் செய்வீராக! குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடிய இறைவரின் அடி யார்கள் கிடைக்கப் பெற்றால், தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும், எனக்கு அருமை இல்லை\' என்று சொன்னார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 48

அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.

பொழிப்புரை :

`அரியது இல்லை\' என்று சிறுத்தொண்டர் கூறக் கேட்ட அமையத்தில், அழகைச் சொரிகின்ற பெரிய வயிரவக் கோலத்துடன் வந்துள்ள இறைவர், `அன்புத் தொண்டரே! நாம் ஆறு திங்களுக்கு ஒருமுறை, பசுவை வீழ்த்தி அமுது இட உண்பது வழக்க மாகும். அங்ஙனம் உண்பதற்குரிய நாளும் இன்றே யாம். ஆனால் அவ்வாறு உண்பித்தல் உமக்கு அருமையுடையதாகும்!\' என அருள் செய்தார்.

குறிப்புரை :

ஓர் இருது, இரு திங்களை நிலைக்களனாகக் கொண்டது. மூவிருது ஆறு திங்கள். ஈண்டுப் பசு என்றது உயிர் என்ற பொதுப் பொருளில் வந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 49

சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.

பொழிப்புரை :

அதுகேட்ட சிறுத்தொண்டர், `மிகவும் நல்லது. அடியேன், ஆடு, எருமை, பசு என்ற மூன்று நிரைகளையும் பெற்றி ருக்கின்றேன், எனக்கு இங்குக் குறைவில்லை. நஞ்சை உண்ட சிவ பெருமானின் அன்பராம் தாங்கள், உண்டற்குரிய அப்பசுதான் இன் னது என்றருளின், அடியேன் விரைவாகச் சென்று உணவு சமைத்து அதற்குரிய காலம் தவறாது வருவேன்!\' எனக் கூறிக் கை தொழுதார்.

குறிப்புரை :

முந்நிரை - பசு, ஆடு, எருமை ஆகியன.

பண் :

பாடல் எண் : 50

பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.

பொழிப்புரை :

அடிமைப் பண்பு மிகுந்த சிறுத்தொண்டரின் அன்பைக் கண்டு, பயிரவக் கோலத்தராய் வந்த சிவபெருமானும், `அடியாரிடம் அன்பு உடையவரே! நாம் உண்பதற்குக் கொல்லப் படுகின்ற பசுவும் மானிடப் பசுவாகும். ஐந்து வயதாயும், உடற் குறையற்றதாயும் இருத்தல் வேண்டும். அதுவே யாம் உண்பதாகும்; நோய் செய்யும் புண்ணிலே வேலைப் பாய்ச்சியதைப் போல், மேலும் கூறத்தக்கது ஒன்றுண்டு!\' என்று உரைப்பவர்,

குறிப்புரை :

`புண்ணுலாம் பெரும்புழையிற் கனல்நுழைந்தால் எனப்புகுத லோடும்\' (கம்ப. கையடை. 12) எனக் கம்பர் கூறும் இடனும் ஈண்டு எண்ணற்குரியதாகும்.

பண் :

பாடல் எண் : 51

யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.

பொழிப்புரை :

அதைக் கேட்ட சிறுத்தொண்டர் `எனக்கு ஏதும் அரியது இல்லை, விரைவாய்க் கூறியருளுக\' என்று உரைக்க, இறை வரும், `ஒரு குடிக்கு ஒரே மகனாக உள்ள அவனைத் தந்தை அரிய வும், தாய் பிடிக்கவும், அந்நிலையில் அவர்கள் இருவரும் உளம் உவந்து அமைத்த கறியே நாம் உண்பதாகும்\' என உரைத்தருளினார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 52

அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.

பொழிப்புரை :

அவ்வுரையையும் முதல்வர் உரைத்தருளக் கேட்ட சிறுத்தொண்டர், `எம் இறைவரான தாங்கள் திருவமுது செய்யும் பேற்றைப் பெற்றால் எனக்கு இதுவும் அரியதன்று\' எனக்கூறி, விரைவாக அவரிடம் விடை பெற்று, மிக்க மகிழ்ச்சியால் ஆசை யோடும் அவரது தேன்பொருந்திய மென்மையான தாமரையனைய திருவடிகளை வணங்கிச் சென்று, தம் வீட்டை வந்தடைந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 53

அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.

பொழிப்புரை :

அன்புமிக்க பெருங்கற்பையுடைய பெண்ணான திருவெண்காட்டு நங்கையார், சிறுத்தொண்டரின் வரவை எதிர்நோக்கி வாயிலின் முன் நின்று இன்பம் மிக மலர்ந்திருந்த அவரது முகத்தைப் பார்த்து, அவருடைய திருவடிகளில் வணங்கிப் பின்பு, தம் கணவரான அவரை முகம் நோக்கி, அத்தவ முனிவரைப் பற்றி வினவ,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 54

வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.

பொழிப்புரை :

வள்ளல் தன்மையுடைய சிறுத்தொண்டரும், மனைவியாரான திருவெண்காட்டு நங்கையைப் பார்த்து, `வந்திருக்கும் மாதவர், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாக, ஐந்து வயது உள்ளவனாக, உறுப்புகளில் குறைவு ஒன்றும் இல்லாதவனாக இருக்கும் மைந்தனைத் தாய் பிடிக்கத் தந்தை மகிழ்வுடன் அரிந்து அமுது சமைக்கப் பெற்றால், உள்ளம் மகிழும்படி உணவு உண்டருளலாம் என இசைந்துள்ளார்\' என்று இயம்பினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 55

அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.

பொழிப்புரை :

அரிய கற்பையுடைய மனைவியார் அங்ஙனம் உரைத்த அவரைப் பார்த்து, மேலும் உரைப்பாராய்ப் `பெருமை யுடைய வயிரவத் தொண்டர் உணவு உண்ணப் பெறுவதற்கு இங்கு உரிய வகையினால் அமுது அமைப்போமானால் ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாகிவரும் அந்தச் சிறுவனை நாம் பெறுவது எங்ஙனம்?\' எனக் கூறி வணங்கவும்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 56

மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.

பொழிப்புரை :

அதைக்கேட்ட சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தைப் பார்த்து, `இத்தகைய தன்மை பொருந்திய மைந்தர்தமை, அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவு நிதியம் அளித்தால் கொடுப்பவர் களும் இருப்பர்; ஆனால் நேர் நின்று, தம் மைந்தனைத் தந்தையும் தாயுமாக அரிபவர் இவ்வுலகத்தில் இல்லை! எனவே, இனியும் காலம் தாழ்த்தாது இங்கு என்னை உய்யச் செய்வதற்கு நீ பெற்ற மகனை நாம் இதன் பொருட்டு அழைப்போம்!\' என உரைத்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 57

என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.

பொழிப்புரை :

என்று கணவர் உரைக்கவும், அதற்கு அவ்வம் மையாரும் இசைந்து, `எம் இறைவரின் தொண்டர் இன்று காலம் தாழ்க்காது அமுது செய்யப்பெற்று அவர்தம் மகிழ்ச்சி பொலியும் திருமுகத்தை நாம் காண்பது இங்கு செய்யத்தக்கதாகும்!\' என விரும்பி, கணவரைப் பார்த்து `நம்மைக் காக்க வரும் மணி போன்ற மகனைப் பள்ளியில் போய் அழைத்துக் கொண்டு வாருங்கள்\' என்று உரைத்தார்.

குறிப்புரை :

`இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு\' (குறள்,224), `ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்\' (குறள்,228) என்பனவாய குறட் பாக்கள் நினைவுகூர்தற்குரியன.

பண் :

பாடல் எண் : 58

காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.

பொழிப்புரை :

அன்பையுடைய மனைவியார் மேற்கூறியபடி உரைக்க, கணவனாரான சிறுத்தொண்டரும் குற்றம் நீங்கப் பெற்ற எல்லாப்பேறும் அப்போதே பெற்று விட்டவரைப் போல் மகிழ்ந்து, இறைவருக்கு அங்குத் திருஅமுதாக ஆக்குதற்கு, நல்ல மென்மையான மழலை மொழி பயிலும் மைந்தர், கல்வி பயிலச் சேர்ந்துள்ள பள்ளியி னின்றும் உடன் கூட அழைத்து வருவதற்கு விரைவாகச் சென்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 59

பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.

பொழிப்புரை :

சிறுத்தொண்டர் பள்ளியை அடையவும், காலில் அணிந்த சதங்கை மணிகள் ஒலிக்கப் பிள்ளை அவர் எதிரே ஓடி வந்து தழுவிக் கொள்ள, அவனை எடுத்துத் தோள்மீது வைத்துப் பொருந் தும் படி அணைத்துக்கொண்டு, மீண்டு வந்து தம் இல்லத்துக்குள் புகுந்திடவும், நற்குலத்தில் தோன்றிய திருவெண்காட்டுநங்கையார், வள்ளலார் சிறுத்தொண்டரின் முன்பு போய், அம்மைந்தனை எதிரில் தாம் வாங்கிக் கொண்டு,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 60

குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.

பொழிப்புரை :

அம்மைந்தனின் தலைமயிரைத் திருத்தி, முகத்தைத் துடைத்துக், காதணியிலும், அரைஞாணிலும் படிந்த தூசியைப் போக்கி, அணிந்த கலவைச் சாந்து அழிந்ததற்கு வருந்திக், கண்ணில் அணிந்த மையினையும் கண்ணில் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் அமைய ஒதுக்கிப், பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையுடைய அடியையுடைய அம்மையார், அன்புடன் எடுத்து நீராட்டிக், குறையாத கோலத்தைச் செய்து, கணவரான சிறுத்தொண்டரின் கையிலே அம்மைந்தனை அளித்தார்.

குறிப்புரை :

கொட்டை - காதணி. `அரைநாண்\' எனப்பின் வருதலின் கொட்டை என்பது பஞ்சைக் குறித்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 61

அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.

பொழிப்புரை :

திருத்தொண்டருக்கு ஆக்கும் அமுதுக்கு உதவும் பொருள் என்பதால் அச்சம் கொண்டு அரிய மைந்தனை உச்சிமோவா ராய், மார்பில் அணைத்து முத்தம் தாராராய்க், குற்றம் இல்லாத திருத் தொண்டராம் புனிதரான அடியவருக்குக் கறியை ஆக்குதற்கு விரும் பும் உள்ளத்தால், அடுக்களையில் மேவாராகி வேறு தனியிடத்திலே கொண்டு செல்பவராய்,

குறிப்புரை :

பொச்சம் - குற்றம். அடுக்களை - சமையல் செய்யும் இடம்; அது மாதவருக்கு அமுதாக்குதற்குரிய இடம் ஆதலின், அங்கு அச்செயலைச் செய்யலாகாது என வேறிடம் கொண்டனர். இந்நிகழ் வுகள் கண்களில் நீர் மல்கச் செய்யும்.

பண் :

பாடல் எண் : 62

ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.

பொழிப்புரை :

ஒன்றுபட்ட உள்ளம் கொண்டு அவ்விருவரும் உலகத்தவர் இதன் உண்மை இயல்பை அறியமாட்டார் என்று நினைத்து, மறைவான இடத்தை எய்திப் பிள்ளையைப் பெற்ற தாயார் திருவெண்காட்டு நங்கையார் செழுமையான கொள்கலங்களை நன்றாய்க் கழுவி எடுத்துக்கொண்டு செல்ல, நல்ல மைந்தனாரை எடுத்து, உலகியலை முற்றும் வென்ற தந்தையாரான சிறுத்தொண்டர் தலையைப் பிடித்துக் கொள்ள, மெய்த் தாயாரான அம்மையார் விரைந்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 63

இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.

பொழிப்புரை :

குழந்தையின் இனிய ஒலிதரும் கிண்கிணி அணிந்த கால்கள் இரண்டையும் மடியின் இடையே பிறழாமல் அமிழ்த்தி வைத்துக்கொண்டு, கொவ்வைக் கனியைப் போன்ற வாயையுடைய மகனின் கைகள் இரண்டையும் தம் கையால் பிடிக்க, அவ்வன்பின் சிறுவனும் தம் பெற்றோர் தம்மை மிகவும் அணைத்து மகிழ்ச்சி கொள்கின்றார்கள் என்று மகிழ்ந்து நகைக்க, ஒப்பில்லாத பெருமை யுடைய மகனாரைத் தந்தையாரான சிறுத்தொண்டர் வாள் கொண்டு தலையை அரிவார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 64

பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.

பொழிப்புரை :

அத்தந்தையார், `ஒப்பில்லாத பெருமை மிகுந்த மகன், மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான்\' என்று பொருந்திய மகிழ்ச்சியடைய, அவருடைய மனைவியாரான அம்மையாரும், `கணவனாரின் அரிய உயிரை எனக்கு இம்மைந்தன் அளித்தான்\' என்று மிகவும் மனம் மகிழ, இங்ஙனம் இருவருள்ளமும் பெரு மகிழ்ச்சி பொருந்த இவ்வரிய செயலைச் செய்தனர்.

குறிப்புரை :

மெய்யாம் தன்மை - மெய்ம்மை பெறுந்தன்மை : மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிதரும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாதலின் அன்னதாயிற்று. இச் செயற்கு ஊறுநேரின் கணவர் உயிர் வாழார். அவ்வூறுநேராமை காத்தவன் மைந்தன் ஆதலின், `கணவனார் அருமையுயிரை எனக் களித்தான்\' என்றார் அம்மையார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 65

அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.

பொழிப்புரை :

அறுத்து எடுத்த தலையின் இறைச்சி, உணவுக்கு ஆகாது எனக் கழித்து, அதை மறைத்து ஒதுக்கும் பொருட்டுச் சந்தனத் தாதியார் என்ற மங்கையின் கையிலே அளித்து, மற்ற உறுப்புகளின் இறைச்சி எல்லாவற்றையும் கொத்தியும், அறுத்தும், எலும்பினுள்ளே உள்ள மூளைப் பகுதியைத் திறந்து எடுத்து இட்டும், கறியாக்குதற்கு வேண்டும் பலவகையான காய வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் அமுது சமைப்பாராய்,

குறிப்புரை :

கறிக்கு வேண்டும் பலகாயம் - கறிக்குக் கூட்டப்படும் பெருங்காயம், சோம்பு, இலவங்கப்பட்டை முதலியன என்பர்.

பண் :

பாடல் எண் : 66

மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை யுடைய அம்மையார், அவற்றை ஒரு கலத்தில் வைத்து அடுப்பிலே ஏற்றி, உள்ளம் மகிழ்ந்து சமைத்த கறியைப் பக்குவம் அறிந்து அடுப்பினின்றும் இறக்கி வைத்து, வேறு பல கறிகளையும் சமைத்து, நன்றாகச் சோற்றையும் விரைவில் சமைத்து, தாம் சமைத்து முடித்ததைத் தம் கணவனாருக்கு உரைத்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 67

உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.

பொழிப்புரை :

தம்மை அடிமையாக உடைய இறைவர் திருவமுது செய்வதற்கு, அவர் அருளியவாறே அமைத்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியுற்று, அம்மகிழ்ச்சி மீதூர்வால், விடைமீது வருபவரான சிவ பெருமானின் தொண்டரான சிறுத்தொண்டர் விரைந்து சென்று, மென்மையான மலர்களில் வண்டுகள் ஒலித்தற்கு இடமான திரு வாத்தியின் கீழ் வீற்றிருந்தருளிய தூயவரான வயிரவரிடம் சென்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 68

அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.

பொழிப்புரை :

இறைவரின் திருமுன்பு சென்று வணங்கி, அன்ப ரான சிறுத்தொண்டர் சொல்லத் தொடங்கியவர், `அடியேனிடத்து எழுந்தருளித் தாங்கள் அமுது செய்தருள வேண்டும்; அடியவனின் அன்பிற்கு இணங்கிப் பசித்திருந்து, இதுவரைக் காலம் தாழ்க்க நேர்ந்தது என்றாலும், தங்கள் ஆணையின்படி சமைத்துள்ளேன். அடியவனின் விருப்பப்படி எழுந்தருள வேண்டும்\' என்று சொல்லி, மேலும் கூறுபவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 69

இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.

பொழிப்புரை :

`இனிச் சிறிதும் காலம் தாழ்க்காது எழுந்தருளி உணவு உண்டருளல் வேண்டும்!\' எனக் கூறி வணங்கக் கழுத்தில் உள்ள நஞ்சினை மறைத்தும், நெற்றியில் உள்ள கண்ணை மறைத்தும் வந்தவரான இறைவர், `நிறைந்த பெருமையுடைய சிறுத்தொண்டரே! செல்வோம்!\' என்று அருள, வறியவனான ஒருவன் சங்கநிதி, பதுமநிதி என்ற இரண்டையும் பெற்று மகிழ்ந்தாற்போல, உடன் அழைத்துக்கொண்டு தம் இல்லத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 70

வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.

பொழிப்புரை :

அங்ஙனம் இல்லத்துள் புகுந்தருளிய அளவில் மனைவியார் அம்மாதவத்தவரின் முன்வந்து எதிர்கொண்டு அழைத் துச் சென்று, திருவடிகளில் விழுந்து வணங்கி, மணம் கமழும் மலர் மாலைகளும், முத்தால் இயன்ற மாலைகளும் தொங்கவிடப்பெற்ற தால் முற்றும் அழகுபடுத்திய அந்த இல்லத்தில், மணமுடைய மலர் மாலைகள் பரப்பிய இருக்கையில் அமர்ந்தருளுமாறு வேண்டி, மணமுடைய நீர் நிறைந்த கரகத்தை எடுத்து ஏந்தி நின்று நீரை வார்க்க,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 71

தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.

பொழிப்புரை :

தூய்மையான அந்நீரால், சிறுத்தொண்டர், இறைவ ரின் திருவடிகளை விளக்கி, அங்ஙனம் விளக்குவதால் பெற்ற நீரைத் தலைமீது நிறையத் தெளித்துக்கொண்டு, இன்பம் பொருந்திய மனை யின் எப்பக்கத்தினும் வீசி இறைத்து, மணமுடைய மெல்லிய மலர்கள் கொண்டு போற்றியுரை செய்து, சந்தனக் கலவை சாத்திப், பொருந்திய வாறு நறுமணமும் ஒளிவிளக்கும் காட்டி, அடியவருக்கு ஆற்றத்தக்க வழிபாட்டு முறைகளை எல்லாம் செய்து வணங்குவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 72

பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறைச் சந்திரனைச் சூடிய சடையை விரித்த, மலர்களைச் சூடிய, தலைமயிரை உடைய வயிரவராம் தூய பெருமானைச் சோற்றையும் கறிவகைகளையும் படைக்கும் வகையை அழகிய மாதராரும் கணவனாரும் வணங்கி, `இன்னவாறு என்று அருள் செய்ய வேண்டும்\' என்று வேண்ட, அவர் தாமும் `இனிய சோறு உடன் கறி வகைகளையும் ஒருசேரப் படைப்பீராக!\' என்று சொல்ல,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 73

பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.

பொழிப்புரை :

பண்பு விளங்குமாறு உண்கலத்தை விளக்கி, அதனைப் பாவாடையின் மேல் வைத்து, அமுது வகைகள் வெவ் வேறாக நன்கு தெரியும்படி செந்நெல்லரிசியான செழுஞ் சோற்றையும் கறிவகைகளையும் நிரல்பட முன்னே வைத்து, அந்தப் பரிகலத்தை எடுத்து நிலையான முக்காலியின்மேல் விரித்த வெண்மையான ஆடைமீது வைக்க, குற்றம் அற்றவரான இறைவர் பார்த்து, அப்போது கூறியருளுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 74

சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.

பொழிப்புரை :

`யாம் சொன்ன முறையில், பசுவினது தொடர்ந்த உறுப்புக்கள் எல்லாவற்றையும் கொண்டு சுவைபெறச் சிறப்பாக அமைத்தீர்களோ?\' என்று வினவ, அன்னம் போன்ற அம்மையார், `தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது எனக் கருதி அதனை நீக்கி னோம்\' எனக் கூற, அடியார்களின் இடர்களை எல்லாம் முற்ற நீக்கு பவராய இறைவர் `அதனையும் நாம் உண்பது ஆம்\' என்றருளினார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 75

சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.

பொழிப்புரை :

உள்ளம் கலங்கிய சிறுத்தொண்டர், மனைவி யாருடன் சேர்ந்து மனம் தடுமாறச் சந்தனத் தாதியார், `அந்தத் தலையின் இறைச்சியானது அருள் செய்ய வந்த திருத்தொண்டர் உணவு உண்ணும் பொழுது நினைக்க நேரிடும் என்று எண்ணியே முன் உணர்வால் முன்னமேயே அதனைக் கறியமுதாக அமைத்துள் ளேன்!\' எனக் கூறி எடுத்துக் கொடுக்க, அவர்கள் முகம் மலர்ந்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 76

வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.

பொழிப்புரை :

சந்தனத் தாதியார் தந்த தலை இறைச்சியைப் பெற்று, மகிழ்ந்து, படைத்தபின்பு, வணங்கி நின்ற தொண்டரைப் பார்த்து, மாதவர்தாமும், `இப்போது தனித்து உண்ண எமக்கு இய லாது, சிவனடியார் எவரேனும் இப்பக்கத்தில் இருக்கக் கூடியவரை அழைத்து வருவீராக!\' என்று அருளச், சிறுத்தொண்டர் மனம் வருந்திக், `கெட்டேன். இவர் உணவு உண்பதற்கு இதுவோ இடையூறாய் வருவது?\' என நினைவாராகி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 77

அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.

பொழிப்புரை :

இல்லத்திற்கு வெளியே சென்று தேடியும் இறைவன் திருவருட் செயலால் எங்கும் அடியவரைக் காணாராய், முகத்தில் மிகவும் வாட்டம் கொண்டு திரும்பி வந்து, முதல்வருக்குச் சொல்லுப வராய், `இகத்தினும் பரத்தினும் இனியவரான சிவனடியார்களைத் தேடியும் காணேன், அடியேன் அறியேனாயினும் உலகத்தில் திருநீறு இடுவார்களைப் பார்த்து நானும் திருநீற்றை இடுவேன்!\' எனத் தாழ்ந்து வணங்க,

குறிப்புரை :

சிறுத்தொண்டர், தம்மை யடியார் என எண்ணாது, திருநீறிடுவார் தமைக் கண்டு யானும் இடுவேன் என்றது அவர்தம் பணிவுடைமையைக் காட்டுகிறது. சிவனடியார்கள் எவரையும் காணாமையின், தாமே அந்நிலையிலிருந்து உண்ணலாமோ என அவர்தம் குறிப்புணரவும் நின்றது.

பண் :

பாடல் எண் : 78

உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.

பொழிப்புரை :

அதைக் கேட்ட அம்மாதவர், `உம்மைப் போல் திருநீற்றைச் சிறப்பாய் இட்ட அடியவரும் உளரோ? நீவிர், எம்முடன் இருந்து உண்பீராக!\' என்று சொல்லி, செம்மை பொருந்திய கற்பை யுடைய திருவெண்காட்டு நங்கையை நோக்கிப் `பரிகலம் திருத்தி விரும்பத்தக்க இறைச்சியும் சோறும் ஆகிய இவற்றின் மற்றப் பகுதியையும் இவருக்குப் படைப்பீராக\' என்று இறைவர் ஆணையிட, அவரும் அவ்வாறே படைத்தனர். இறைவரை உண்பிக்க வேண்டி அவர் விரைந்து உண்ணத் தொடங்க, அப்போது தடுத்தருளி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 79

ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.

பொழிப்புரை :

`ஆறு திங்கள் கழிய நாம் ஒருமுறை உண்போம், நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! அங்ஙனமாக நாம் உண்பதற்கு முன் நீவிர் உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்றீரானால் அவனையும் இப்போது அழையும்!\' என்று அம்மாதவர் கூற, அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், `அவன் இப்போது இங்கு உதவான்\' என்று விடையளித்தனர்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 80

நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.

பொழிப்புரை :

`அவன் இங்கு வரின் நாம் உண்ண முடியும். ஆதலால் அவன் வருகையை நாடி அழையும்!\' என்று இறைவர் அருள, சிறுத்தொண்டர் அதைத் தவிர்க்க இயலாதவராகித் தலைவ ரான இவ்வடியார் உணவு உண்டருள இங்கு நாம் என்ன செய்தால் முடியும்? என்று ஏங்கியவாறு, விரைவாய் எழுந்து, இறைவரின் அருளா ணையின் வழியில் நின்று, மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையா ருடனே, வீட்டின் புறத்தே சென்று, அழைக்கத் தொடங்கும் பொழுது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 81

வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.

பொழிப்புரை :

உலகத்தில் என்றும் நிலைபெறும் புகழையுடைய சிறுத்தொண்டர், `மகனே! வருவாய்\' எனக் கூவி அழைத்தார். தலைவர்தம் ஆணைவழி நிற்கும் அம்மையாரும், தாமும் அழைப் பாராய், `சிவந்த மணியே! சீராளா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார். வா!\' என்று அழைத்து ஓலமிட,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 82

பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.

பொழிப்புரை :

இறைவர் அருளால், அழைக்கும் ஒலிகேட்டுப் பள்ளியினின்றும் ஓடி வருபவனைப் போல எதிரே ஓடிவந்த ஒப்பில் லாத அழகுடன் விளங்கிய, தன் மகனை அம்மையார் எடுத்துத் தழுவிக் கொண்டு, கையால் அணைத்துக் கணவனின் கையில் தர, `முப்புரங்க ளையும் எரித்த இறைவனின் தொண்டர் உணவு உண்ணப்பெறும் பேற்றைப் பெற்றோம்\' என்று மகிழ்ச்சியுடன் விளங்கினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 83

வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.

பொழிப்புரை :

அங்ஙனம் வந்த மகனை அழைத்துக் கொண்டு இறைவரை உண்ணச் செய்யும்பொருட்டு விரைந்து வந்தவர், அதற்கு முன்னமேயே வயிரவராக வந்த முதல்வர் அவ்விடத்தினின்றும் மறைந்தருள, அவரைக் காணாமல் உள்ளம் கலங்கித் திகைப்படைந் தார்; விழுந்தார்; எழுந்தார், அச்சமுற்றார். வெந்த இறைச்சிக் கறியை யும் பரிகலத்தில் காணாதவராய்த் திடுக்கிட்டார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 84

செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.

பொழிப்புரை :

`சிவந்த மேனியும் கரியமுடியும் செழிய போர்வை யும் கொண்ட வயிரவர், நாம் உய்யும்படி உணவு உண்ணாமல் எங்கு ஒளிந்தார்?\' என்று தேடியவராகி, மயங்கி வெளியே வர, மறைந் தருளிய அவ்வயிரவர் தாமே, மலைமகளாரான உமையம்மையா ருடனும் சரவணப் பொய்கையில் வளர்ந்த திருமகனாரான முருகப் பெருமானொடும் அணைவாராகி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 85

தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.

பொழிப்புரை :

சிவபூதக் கணத்தலைவரும், முனிவரும், தேவரும், வித்தியாதரரும் முதலாக உள்ளவர்கள் போற்றி செய்ய, இனிய கறியையும் உணவையும் அமைத்த அவர்கள் காணும்படி, நீண்ட விண்வெளியில் ஒப்பில்லாத வெண்மையான விடையின்மீது வெளிப் பட்டு எழுந்தருளிக் குளிர்ந்த வெண்மையான சந்திரனைச் சூடிய திருமுடி அசைய, பரந்த அருள் நோக்கத்தை அருளினார்.

குறிப்புரை :

தாய் தந்தையரொடு தனயரும் சேர, இவ்வரிய செயல் நிகழ்ந்திருத்தலின், இறைவரும் தையலோடும் சரவணத்துத் தனயரோ டும் காட்சியருளினார். யார் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் என எண்ணுமாறு நிகழ்ந்த இவ்வரிய அருளிப்பாடும், இவ்வருந்தொண்டர் குடும்பத்திற்கே வாய்த்தது. குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த கருணைப் பெருக்கு ஈதாம்.

பண் :

பாடல் எண் : 86

அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.

பொழிப்புரை :

அன்பின் உறைப்பினால் உலகியல் வழிப்பட்ட உணர்வை வென்ற சிறுத்தொண்டரும், அவர் தம் நெஞ்சொத்த மனைவியாரும், மைந்தரும் தம்முன்பு வெளிப்பட்டுத் தோன்றிய பெருவாழ்வான சிவபெருமானின் காட்சியை முற்றும் கண்டு, தம் வயமிழந்து, அக்காட்சியின் அருள்வயமாய் நின்று, எலும்பும் உள்ளமும் கரைந்து உருக விழுந்தனர்; எழுந்தனர்; போற்றினர். இறைவர் அப்பெருமக்களுக்கேற்ற தகுதிப்பாட்டால் அருள் செய்வாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 87

கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.

பொழிப்புரை :

கொன்றை மலரைச் சூடிய சடையை உடைய சிவபெருமானும், அவர்தம் இடமருங்கை இடமாகக் கொண்ட உமை யம்மையாரும், வெற்றி பொருந்திய நீண்ட வேல் ஏந்திய மைந்தரான முருகப் பெருமானும், தம் மணமுடைய தாமரை மலர் போன்ற சேவடி களின் கீழ் விழுந்து எழுந்து போற்றி நிற்கும் சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டு நங்கையாரையும் மகனாரான சீராள தேவரையும் சந்தனத் தாதியாரையும் என்றும் தம்மைப் பிரியாமல் வணங்கி மகிழுமாறு, தம் சிவலோகத்துள் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 88

ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.

பொழிப்புரை :

கங்கையாற்றைச் சடையில் ஏற்ற இறைவருக்கு அடியவர் என்று கறியமுதாகத் தம் களங்கமற்ற சிறந்த மகனாரை அரிந்து, அங்கு அமுது ஊட்ட வரும் அப்பெரும் பேற்றைப் பெற்றவ ரான சிறுத்தொண்ட நாயனார்தம் திருவடிகளை எம் தலையின் மீது தாங்கிக் கொண்டு வணங்கி, அத்துணையால், மற்ற உயிர்கள் எல்லாம் வெவ்வேறாகப் பேசும் மொழிகளை எல்லாம் அறியும் தன்மையி னால் `கழறிற்றறிவார்\' என்ற பெயரைப் பெற்ற நாயனாரின் பெருமையைக் கூறுவாம். சிறுத்தொண்டநாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

*****************
சிற்பி