கணநாத நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

ஆழி மாநிலத் தகிலம்ஈன்
றளித்தவள் திருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந்
தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து
மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை
யவர் குலக் காவலர் கணநாதர்.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரின் கொங்கையில் உண்டான பாலை உண்டதால், சிவஞானச் சீர்மைபெற்ற திருஞானசம்பந்தர் வந்து தோன்றிய அழகிய பெருமையுடையதும், ஊழிக்காலத்தில் பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாமல் மிதந்து நின்று, உலகம் உளதாவதற்கு ஒரு முதலானதுமான சீகாழிப் பதியில், மறையவர் தலைவராய் விளங்கியவர் ‘கணநாதர்’ என்பார்.

குறிப்புரை :

ஆழி - கடல். வாழி - வாழ்வு; சிவஞானச் சீர்மை

பண் :

பாடல் எண் : 2

ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநல் திருப்பணி
யாயின நாளும்அன் பொடுசெய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.

பொழிப்புரை :

அத்தகைய அன்பர் அழகிய மதில் சூழ்ந்த சீகாழிப் பதியில் விரும்பி எழுந்தருளிய திருத்தோணியப்பரின் நல்ல திருப் பணிகளை நாடோறும் செய்து, அவ்வாறு தொண்டு செய்யும் நிலைமையில் சிறந்து விளங்குவாராய், விருப்புடன் தம்பால் வந்து சேர்கின்ற அன்பர்களுக்கு, உயிர்த் தூய்மை பெறுதற்குரிய கைத் தொண்டாகிய சரியை முதலான நிலைகளில், அவர்களை அவ்வத் துறைதொறும் பயிலச் செய்பவராய்,

குறிப்புரை :

கைத்திருத் தொண்டு - கைகளால் செய்யும் சிவத் தொண்டு; இதனைச் சரியை, கிரியை என்பர். இவ்வகையான தொண்டின் வகைகளை வரும் பாட்டால் அறியலாம். `கைத்தொண் டாகும் அடிமையினால்\' என்பர் முன்னும் (தி.12 பு.21 பா.260).

பண் :

பாடல் எண் : 3

நல்ல நந்தன வனப்பணி
செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ம லர்த்தொடை புனைபவர்
கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பக லும் திரு
வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.

பொழிப்புரை :

நல்ல நந்தனவனத்தில் பணி செய்பவரும், மணம் மிக்க கொத்துக்களில் மலர்ந்த மலர்களைக் கொய்பவரும், பல வகைப்பட்ட மலர்களை மாலைகளாகத் தொடுப்பவரும், இறைவற் கெனத் திருமுழுக்கிற்கான நீரைக் கொணரும் பணிக்கு உரியவரும், இரவும் பகலும் திருவலகும் திருமெழுக்கும் அமைப்பவரும், அள வற்ற விளக்குகளை எரிப்பவரும், திருமுறைகளை எழுதுபவ ரும், அவற்றை வாசிப்பவரும்,

குறிப்புரை :

நந்தனவனம் அமைத்துக் கொடுத்தல் சிவபுண்ணியச் செயலாகும். திலகவதியாரும், நாவரசரும் இவ்வகையான வினைத் துறைகளில் தலைநின்றவர்கள். மலர்கொய்தற்குரிய நியமம் எறிபத்தர் வரலாற்றால் உணரப்படும். மலர் தொடுக்கும் இயல்பு சங்கிலியார் செய்தவாற்றால் அறியப்படும். புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு (தி.6 ப.31 பா.3) என்பதால், அப்பணி செய்தற்குரிய காலம் அறியப்படும். ஈண்டு அல்லும் பகலும் ஆக அமைப்பவர் என்றது, அவ்வலகும் மெழுக்கும் சிதையும் தொறும் செய்யவேண்டுதல் பற்றியாம். `அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும் நந்தியெம் பெருமான்\' (திருவிளையாடல் பு.) என வரும் பரஞ்சோதி யாரின் திருவாக்கும் காண்க.
`விரும்பி நல்விளக்குத் தூபம்\'(தி.4 ப.31 பா.3), வேண்டளவு உயரத் தூண்டி\'(தி.4 ப.54 பா.9) என்றல் தொடக்கத்தனவாய திருவாக்குகளைக் காண்க. விளக்கிடுமாற்றான் வரும் பயனை, `விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்\' (தி.4 ப.77 பா.3) எனவரும் திருவாக்கால் அறியலாம்.
திருமுறைகள் மந்திரமாதலின், அவற்றை எழுதும் பொழுதும், வாசிக்கும் பொழுதும் பிழையின்றி எழுதவும் ஓதவும் வேண்டும். சைவசீலமும், ஒன்றிய மனமும் ஒருங்கிருத்தல் வேண்டும். ஞான நூல்களை ஓதல், ஓதுவித்தல், நற்பொருளைக் கேட்பித்தல், தான் கேட்டல், நன்றாம். ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானப் பூசையாகும் (சித்தியார் சூத்.8 பா.23).

பண் :

பாடல் எண் : 4

இனைய பல்திருப் பணிகளில்
அணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின்
வினைவி ளங்கிட வேண்டிய
குறையெலாம் முடித்துமே விடச்செய்தே
அனைய அத்திறம் புரிதலில்
தொண்டரை யாக்கிஅன் புறுவாய்மை
மனைய றம்புரிந் தடியவர்க்
கின்புற வழிபடுந் தொழில்மிக்கார்.

பொழிப்புரை :

இத்தகைய பல திருப்பணிகளைச் செய்தற்கு, விரும்பி வரும் அன்பர்களுக்கு, அவரவர்க்கேற்ற அவ்வத் திருத்தொண்டின் செயல்கள் விளங்கும் படியாகக் கூறி, அவர் வேண்டிய குறைகளை எல்லாம் நீக்கி நிறைவாக்கி, அவற்றில் ஈடுபடுமாறு செய்து, அத்தகைய நற்றிறங்களால் தொண்டர்களைப் பெருகும்படி செய்து, அன்பு பொருந்திய வாய்மையுடைய இல்லறத்தை நடத்தி, வாழ்ந்து, சிவனடி யார்களுக்கு இன்பம் பெருகுமாறு செய்யும் தொழிலில் சிறந்து விளங்கினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 5

இப்பெ ருஞ்சிறப் பெய்திய
தொண்டர்தாம் ஏறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ
னகர்கழல் மேவிய விருப்பாலே
முப்பெ ரும்பொழு தருச்சனை
வழிபாடு மூளும்அன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூர் உளங்களி
சிறந்திட வொழுகினார் வழுவாமல்.

பொழிப்புரை :

இத்தகைய பெருஞ்சிறப்பையுடைய அத் தொண்டர், அடியவரின் உள்ளங்களில் மேன்மேலும் மீதூர்ந்த சிறப்பு வளருதற்கு ஏதுவான சீகாழியில், தோன்றியருளிய மெய்ப்பெரும் திருஞானம் உண்டவரான பிள்ளையாரின் திருவடிகளைப், பொருந்திய விருப் பினால், நாளும், முப்போதும், போற்றிசெய்து, பெருகும் அன்புடன், ஒப்பில்லாத பத்திமை மிகுவதான உள்ளத்தில் மகிழ்ச்சி மேலோங்கச் செய்து, வழுவாது ஒழுகி வந்தார்.

குறிப்புரை :

ஏறுசீர் - சீர்மை வளர்ந்தமைந்த காலத்தும் வளர்ந்து மாறியதன்றி மேன்மேலும் வளருமாறு அமைந்திருப்பது. மெய்ப் பெருந்திரு ஞானம் - மெய்ப் பொருள் உள்ளத்தில் தழையுமாறு அமைந்த திருவருள் ஞானம்.

பண் :

பாடல் எண் : 6

ஆன தொண்டினில் அமர்ந்தபேர்
அன்பரும் அகலிடத் தினில்என்றும்
ஞான முண்டவர் புண்டரீ
கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர்
சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு
நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.

பொழிப்புரை :

இத்தகைய திருத்தொண்டில் விரும்பியிருந்த பேரன்பரான கணநாதரும், பரந்த மண் உலகத்தில் எந்நாளும் ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடியை வழிபடுதலான நன்மையை அடைந்து, அதன் பயனாய்த், தூய மணமுடைய கொன்றைப் பூக்களைச் சூடிய சடையுடையவரின் ஒளியுடைய நீண்ட திருக்கயிலை மலையை அடைந்து, பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும் தலைமை பெற்று, அங்கு வழி வழியாகச் செய்து வரும் திருத்தொண்டில் நிலைபெற்று நின்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 7

உலகம் உய்யநஞ் சுண்டவர்
தொண்டினில் உறுதிமெய் யுணர்வெய்தி
அலகில் தொண்டருக் கறிவளித்
தவர்திற மவனியின் மிசையாக்கும்
மலர்பெ ரும்புகழ்ப் புகலியில்
வருங்கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்றுவண் கூற்றுவ
னார்திறங் கொள்கையின் மொழிகின்றாம்.

பொழிப்புரை :

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு நஞ்சை யுண்ட சிவபெருமானின் தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியான மெய்யுணர்ச்சி பொருந்தப் பெற்று, அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர் தொண்டிற்கான அறிவை அளித்து, அவர்களின் திறங்களை உலகிலே நிலை நிறுத்தும் விரிந்த பெரும் புகழையுடைய சீகாழியில் தோன்றிய கணநாதரின் திருவடிகளைத் துதித்து, விளங்கும் திருநீற்றுச் சார்பு பூண்ட வண்மையுடைய கூற்றுவ நாயனாரின் இயல்பை உளங் கொண்ட கொள்கையின்படி சொல்லப் புகுகின்றாம். கணநாத நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

**************
சிற்பி