பொய்யடிமையில்லாத புலவர் புராணம்


பண் :

பாடல் எண் : 1

செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத
புலவர்எனப் புகழ்மிக்கார்.

பொழிப்புரை :

செய்யுட்கண் வரும் சொற்களின் அமைவைத் தெளிதலும் சிறந்த நூல்கள் பலவற்றையும் நுணுகி ஆராய்தலும் ஆகிய எல்லாம், மெய்யுணர்வின் பயனாக விளங்கும் செம்பொருளின் அடைவேயாம் எனத் துணிந்து, விளங்கி ஒளிவீசுகின்ற நஞ்சினை யுண்ட கழுத்தினையுடைய சிவபெருமானின் மலர் அனைய திருவடிக்கு ஆளானவர்களே, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனக் குறித்துப்போற்றப் பெற்று விவரிகளாவர்.

குறிப்புரை :

செவ்வியநூல் - இலக்கண வரம்பாலும், நுவலப்படும் பொருட்சிறப்பாலும் செவ்விதாய நூல். கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழுவ தேயாம். ஆதலின் சொற்பொருள் தெளிதலும், அவற்றின் மெய்ம்மை உணர்தலுமான பயன், மலரடிக்கே ஆளாதல் எனத் துணிந்தனர் புலவர்கள். `மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்\' எனவே பொது நீக்கித் தனை உணரும் பான்மை தெரிய வருகிறது. ஏகாரம் பிரிநிலை. இவர்கள் கபிலர் `பரணர்\' நக்கீரர் முதலான 49 புலவர்கள் என வகை நூல் கூறுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

பொற்பமைந்த அரவாரும்
புரிசடையார் தமையல்லால்
சொற்பதங்கள் வாய்திறவாத்
தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினில் மெய்யடிமை
யுடையாராம் பெரும்புலவர்
மற்றவர் தம்பெருமையார்
அறிந்துரைக்க வல்லார்கள்.

பொழிப்புரை :

இவர்கள் அழகிய பாம்புகளை அணிந்த முறுக் குண்ட சடையையுடைய சிவபெருமானையே அல்லாமல், மற்றவ ரைப் பற்றிச் சொற்பொருள்களை அமைத்துச் செல்லாத இயல்பில், திருத்தொண்டின் நெறியில் முதன்மை பெற்ற பண்பினால், மெய்யடி மையுடையவராகும் பெரும் புலவர்கள் ஆவார்கள். இவர்களின் பெரு மையை அறிந்து உரைக்க வல்லவர் யார்? எவரும் இலர் என்பதாம்.

குறிப்புரை :

தலை நிற்றல் - முதன்மை பெறுதல். மெய்ப்பொருள் - நிலையுடையதும் தலைமையுடையதுமான பொருள்; அப்பொருள், சிவபெருமான் ஒருவரேயாவர் என உணர்ந்து போற்றி வரும் பான்மையில் முதன்மை பெற்றவர்கள் இவர்கள் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

ஆங்கவர்தம் அடியிணைகள்
தலைமேற்கொண் டவனியெலாம்
தாங்கியவெண் குடைவளவர்
குலஞ்செய்த தவம்அனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டின்
உண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர்
திருத்தொண்டு புகல்கின்றாம்.

பொழிப்புரை :

அத் தன்மையுடைய பொய் அடிமை இல்லாத புலவர்களின் திருவடிகளை எம் தலைமீது கொண்டு வணங்கி, இந் நிலவுலகினைத் தாங்கி அரசளித்த வெண்கொற்றக் குடையை உடைய சோழ மரபினர் செய்த தவப்பயனைப் போன்றவரும், மேலோங்கி வளர்கின்ற தொண்டின் உண்மைத் தன்மையினை உணர்ந்த செயலைச் செய்தவரும், கழல் அணிந்த வெற்றியையுடையவரும் ஆகிய புகழ்ச் சோழ நாயனாரின் திருத்தொண்டைச் சொல்லப் புகுகின்றோம்.

குறிப்புரை :

ஆங்கு - அத்தன்மை; மேல் இரு பாடல்களும் குறித்த தன்மை. பொய்யடிமையில்லாத புலவர் புராணம் முற்றிற்று.
சிற்பி