கலிக்கம்ப நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்.

பொழிப்புரை :

தமக்கு உரிய நல்லொழுக்கத்தில் சிறந்த உயர்ந்த பழைமையான மரபில், நிலைபெறுகின்ற இல்லற நெறியில் வாழ்கின்ற குடிகள் தழைத்தோங்கும் இயல்புடையதாகி, வானில் நிலவும் மேகங் கள் தங்குதற்கு இடனான அழகிய சோலைகள் பக்கங்களில் சூழ்ந்து நிற்கும் வளமுடைய புறம் பணைகளுடன், உலகம் பெருமை பொருந்த விளங்குவது, நடுநாட்டின் மேற்குத் திசையில் உள்ள `பெண்ணாகடம்\' என்னும் பழைய ஊர் ஆகும்.

குறிப்புரை :

புறவு - முல்லை நிலம். பெண்ணாகடம் - திருமுது குன்றத்திற்கு (விருத்தாசலம்) அண்மையிலுள்ளது. புறச்சந்தான குரவரில் முதல்வராய மெய்கண்டார் தோன்றிய திருப்பதியாகும். நாவரசருக்கு விடையும் சூலமும் பொறிக்கப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு உடையது.

பண் :

பாடல் எண் : 2

மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்.

பொழிப்புரை :

அப்பதியில் வாழ்கின்ற வணிகர் குலத்தில் வந்து தோன்றியவர்; தொகுதியான சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளில் கொண்ட பெருவிருப்பம் தம் உள்ளத்தே தோன்றி வளரும் வளர்ச்சியுடன் வாழ்பவர்; அவர் அவ்வந்நாளும் அப்பதியில் `திருத்தூங்கானை\' மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடித் தொண்டில் ஈடுபட்டுப் பணிசெய்து வருபவர். `கலிக்கம்பர்\' என்னும் பெயர் உடையவர். அவர் இறைவனின் திருவடிப்பற்று அன்றி வேறொரு பற்றும் இல்லாதவர்.

குறிப்புரை :

பெண்ணாகடம் - ஊர்ப்பெயர். திருத்தூங்கானைமாடம் - திருக்கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 3

ஆன அன்பர் தாம்என்றும்
அரனார் அன்பர்க் கமுதுசெய
மேன்மை விளங்கு போனகமும்
விரும்பு கறிநெய் தயிர்தீம்பால்
தேனின் இனிய கனிகட்டி
திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன
எல்லாம் இன்ப முறவளிப்பார்.

பொழிப்புரை :

அத்தகைய அன்பர், என்றும் சிவனடியார்களுக்கு அமுது செய்தற்குரிய மேலாய திருவமுதுடன், விரும்பும் கறி வகைக ளும், நெய்யும், தயிரும், இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும், தேனை விட இனிய பழங்களும், கரும்புக் கட்டியும் என்னும் இவை முதலானவற்றைப் படைத்து, நிறைவாக அவர்கள் உண்ணும் படியாய்ச் செய்வித்து, மேலும் வேண்டிய பிற நிதியங்கள் எல்லாவற்றையும் இன்பம் பொருந்த அளித்து வருவார்.

குறிப்புரை :

போனகம் - திருவமுது; உணவு.

பண் :

பாடல் எண் : 4

அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்.

பொழிப்புரை :

அவ்வகையில் தொண்டு செய்து வரும் நாள்களில், ஒரு நாள், நிலைபெற்ற தம் திருமனையில் அமுது செய்யவந்த தொண்டர்களை எல்லாம் வழிவழியாகச் செய்துவரும் முறையில் அமுது செய்யத் தொடங்குவிப்பாராகி, அவர்களை முன் அழைத்து, அவர்களின் திருவடிகளை எல்லாம் விளக்க முயல்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 5

திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.

பொழிப்புரை :

மனைவியார் அவ்வில்லம் முழுதும் விளக்கம் பெறச்செய்து திருவமுதும், பொருந்தும் முறைமையில் கறியமுதும், தூய்மையான நீரும் என்றும் இவற்றுடனே உண்பார்க்கேற்ற வகையில் உளவாகும் பிற பொருள்களையும் செம்மை பெற அமைத்துக் கரகத்தில் நீரை வார்க்க, விரும்பும் நிலையில் கணவர் தம்மில்லத்தில் வரும் அடியவர்களின் திருவடிகளையெல்லாம் விளக்கி வரும் போது,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 6

முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்.

பொழிப்புரை :

முன்னைய நாள்களில் தமக்குத் தொண்டு செய்யும் சுற்றமாக இருந்த ஒருவர், பின் ஏவற்பணியை வெறுத்துச் சென்று, எலும்பையும் பாம்பையும் அணிந்த பெருமானின் அடியாராகி, அங்கு வரும் அடியார்களுடன் ஒருவராக வந்து தோன்ற, அவர் அடிகளை விளக்கும் பெருந்தகையாரான கலிக்கம்பரும்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 7

கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்.

பொழிப்புரை :

கைகளால் அவர்தம் அடிகளைப் பிடிக்க `முன்பு நம் ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் போலும்!\' என்று அன்பு மனைவியார் நினைத்த அளவில், மலர்கின்ற மலர்களை யுடைய கரக நீரை வார்க்கக் காலம் தாழ்க்க, முதன்மை பெற்ற திருத்தொண்டரான அவர், கரிய கூந்தலையுடைய மனைவியின் செயலைப் பார்த்துத், தம் மனத்தில் கருதுவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 8

வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மலரை அணிந்த திருச் சடையையுடைய இறைவரின் அடியவரான இவர், முன்பு இருந்த நிலைகுறித்து, அவர் திருவடியை விளக்க நாணி நீர் வார்க்காது விட்டார் என்று மனத்தில் எண்ணி, மீண்டும் அவர் முகத்தையும் பார்க்காமல், கூர்மையான வாளை உருவி, அவர் கையிலிருந்த கரகத்தை வாங்கிப் பின், அவரது கையை வெட்டித் துண்டாக்கி, கரகத்தை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய கால்களை விளக்கினார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 9

விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் விளக்கிய பின்பு, அவர் உணவு உண்பதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து, அசைவற்ற மனநிலையுடன் அத்தொண்டரை அமுது செய்வித்தார். அளவற்ற பெருமையுடைய அவர், பின்பும் தமக்குப் பொருந்திய அத் திருத்தொண்டின் வழியில் வழுவாது ஒழுகிக், கழுத்தில் நஞ்சை யுடைய இறைவரின் திருவடி நீழலின்கீழ்க் குலவி நிற்கும் அடியாரு டன் கலந்து பேரின்பம் பெற்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 10

ஓத மலிநீர் விடமுண்டார்
அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.

பொழிப்புரை :

குளிர்ந்த பெருகிய நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியவரது திருவேடத்திற்குரிய பெருமை இதுவென்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, சிவகணங்களின் தலைவரான சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து எவ் வுலகத்தும் விளங்கும் பெரும் பத்திமையுடைய அன்பரான `கலிய நாயனாரின்\' பெருமையை உரைப்பாம். கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

****************
சிற்பி