சத்தி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.

பொழிப்புரை :

உழவர்கள், களை என எடுத்த தாமரை மலர்களிலிருந்து பெருகிய தேனானது குளத்தை நிறைக்க உள்ளதும், ஒப்பற்ற செங்கோல் சிறப்பால் எண் திசையிலும் தம் வெற்றித் தூண்களை நாட்டி அரசு செய்யும் சோழ மன்னரின் காவிரியாறு பாயும் நாட்டில் உள்ளதும் வரிஞ்சையூர் என்பதாகும்.

குறிப்புரை :

வரிஞ்சையூர் - தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் என்னும் ஊருக்குத் தெற்கில் ஏறத்தாழ 7 கிமீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்த் திருக்கோயிலில் இந்நாயனாரின், திருவுருவம் எழுந்தருளு விக்கப் பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பண் :

பாடல் எண் : 2

வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.

பொழிப்புரை :

இவ்வரிஞ்சையூரில் வாய்மைப் பண்பையுடைய வேளாளர் குலமானது பெருஞ்சிறப்படையது; அக்குலத்துள் வந்து தோன்றியவரும், நான்முகன் முதலான தேவர்களும் நினைத்தற்கரிய சிலம்பை அணிந்த சிவபெருமானின் திருவடிக்கு ஆட்செய்பவரு மான ஒருவர் வாழ்ந்து வந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 3

அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.

பொழிப்புரை :

அவர் தலைவரான சிவபெருமானின் அடியவரை இவ்வுலகத்தில் இகழ்ந்து பேசுபவரின் நாவை வலிந்து அரியும் ஆற்றலால் `சத்தியார்\' எனும் பெயரை உடையவர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 4

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.

பொழிப்புரை :

சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த `தண்டாயம்\' என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார்.

குறிப்புரை :

தண்டாயம் - பற்றி இழுக்கும் குறடு போன்றதொரு கருவி. வலித்து - இழுத்து. ஆயில் - கூர்மை.

பண் :

பாடல் எண் : 5

அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.

பொழிப்புரை :

அத்தகைய ஆண்மையுடைய திருத்தொண்டில் நிலைபெற்ற வலிமையுடன் பல ஆண்டுகள் அன்புடன் செய்து வந்தவர், திருச்சடையில் கங்கை யாற்றைச் சூடிய இறைவரின் செம்மை நெறித்தொண்டினைத் தொடர்ந்தும் செய்து வந்தவராவார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 6

ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.

பொழிப்புரை :

ஐயம் இல்லாமல் அரியதான இத்திருப்பணியை மெய்ம்மையாகச் செய்து வந்த வீரத்தன்மையுடைய தொண்டரான சத்தியார், உலகு உய்ய அழகிய அம்பலத்தில் ஆடுபவரின் செம்மை தரும் திருவடிநிழலைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

ஐயம் - இச்செயல் செயத்தகுமோ எனும் ஐயம். இறை வனை இகழ்தலினும், அடியாரை இகழ்தல் பெருங்குற்றமாதலின் அச்செயல் செய்வாரின் நாவை அரிதல் கொடிதன்று என்ற துணிவும் உறைப்பும் உடையவர்.

பண் :

பாடல் எண் : 7

நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.

பொழிப்புரை :

சிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தை யுடைய ஐயடிகள் என்னும் தூய `காடவரின்\' அடிமைத் திறத்தைச் சொல்வாம்.

குறிப்புரை :

சாய - வீழ இனி அச்செயலைச் செய்யாது ஒழிய. சத்தி நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி