கணம்புல்ல நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.

பொழிப்புரை :

செல்வம் பெருகும் சிறப்பையுடைய மாடங்களில், எங்கும் திருந்திய பண்புடைய பெருங்குடிகள் நெருங்கியிருப்பதும், வளம் பெருக்கும் வட வெள்ளாற்றின் தென்கரையில் அழகு பொருந் திய சோலைகளில் உள்ள பலாக் கனிகளினின்றும் வடிந்த தேன், நீர் மடுவினை நிறைத்தலால், வயல்களை விளையச் செய்து விளங்குவ தும் `இருக்குவேளூர்\' என்ற பெயரைக் கொண்ட பதியாம்; அது இவ்வுலகத்தில் சிறந்து விளங்கும் பதியாகும்.

குறிப்புரை :

இருக்குவேளூர் - சேலம் மாவட்டம் ஆற்றூருக்கு வடக்கே 4 நாழிகை அளவில் பச்சை மலையின் வடசாரலில் உள்ளது. இதுபொழுது பேளூர் என வழங்குகிறது.

பண் :

பாடல் எண் : 2

அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.

பொழிப்புரை :

அந்நகரில் வாழும் குடித் தலைவர்களுக்கெல்லாம் தலைவராய், அளவில்லாத பொருள்கள் பலவும் நிறைந்து, அவற்றின் எல்லை காண இயலாதவாறு நிறைந்த பெருஞ்செல்வத்தை உடைய வராய், ஒப்பில்லாத பெருங்குணங்களால் உலகத்தில் மேன்மையுடன் வாழ்ந்து வருபவர். உண்மைப் பொருளாவன, இறைவரின் திருவடி களே ஆகும் எனும் மெய்ம்மையை அவர் உணர்ந்தவர்.

குறிப்புரை :

ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பர். அத்தலைவர்களுக்கெல்லாம் தலைவராய் விளங்குபவர் இவர் என்பார் `குடிமுதல்வர்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 3

தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.

பொழிப்புரை :

பெருஞ் செல்வத்தால் பெறும் சிறந்த கெடாத பயன் இதுவே! எனும் உள்ளத்தராய், நீங்காது ஒளிதரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுக்குள் ஏற்றி வைத்து, நாவாரப் போற்றுபவ ரான இந்நாயனார், வறுமை வந்து அடையவே, அந்த வறுமையுடன் இங்கு இருத்தல் தகாது என்று எண்ணித், தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தில்லையைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 4

தில்லைநகர் மணிமன்றுள்
ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி
அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச்
சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி
எரித்துவரும் அந்நாளில்.

பொழிப்புரை :

தில்லையம்பதியில் அழகிய அம்பலத்தில் ஆடும் சிவந்த திருவடிகளைப், பொருந்திய அன்புடன் வணங்கி, அங்கு விரும்பியிருப்பவரான நாயனார், முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்திய இறைவரின் `திருப்புலீச்சரம்\' என்னும் கோயிலில், விளக்கு எரிக்கும் பணி செய்வதற்குத் தம் இல்லத்தில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று எரித்து வந்தார். அந்நாளில்,

குறிப்புரை :

தில்லையம்பதியில் அழகிய அம்பலத்தில் ஆடும் சிவந்த திருவடிகளைப், பொருந்திய அன்புடன் வணங்கி, அங்கு விரும்பியிருப்பவரான நாயனார், முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்திய இறைவரின் `திருப்புலீச்சரம்\' என்னும் கோயிலில், விளக்கு எரிக்கும் பணி செய்வதற்குத் தம் இல்லத்தில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று எரித்து வந்தார். அந்நாளில்,

பண் :

பாடல் எண் : 5

ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.

பொழிப்புரை :

அத்தகைய செயலைச் செய்வதற்கும் மனையில் விற்றற்கென ஏதும் பொருள் இலதாக, மற்றவரிடம் இரந்து செய்தற்கு அஞ்சி, தம் உடலின் முயற்சியால் அரிந்த கணம்புல்லைத் தொகுத்து எடுத்துக் கொண்டுவந்து, கிடைத்த விலைக்கு விற்று, அதனால் பெற்ற பொருளால் நெய் வாங்கி, அசைவற்ற மெய்ம்மையான தொண்டினைச் செய்பவரான நாயனார், தூய விளக்கை ஏற்றி எரித்தார்.

குறிப்புரை :

கணம்புல் - இது புல்வகையைச் சார்ந்தது; மென்மை யானது. வீடுவேய்தற்கும் பயன்படுவது. மலைச் சாரலின் அருகே பெரிதும் வளர்வது. நாயனார் தோன்றிய இருக்குவேளூர் அருகே இப்புல் மிகுதியாய் இருக்க, வறுமையுற்ற நிலையில் அங்கு அதனை விற்று விளக்கு எரித்த நாயனார், தில்லைக்கு வந்த பின்னும் அதனைப் பயன்படுத்தி வரமுற்பட்டார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 6

இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.

பொழிப்புரை :

இவ்வாறு அந்நாயனார் ஒளிவிளங்குதற்குரிய விளக்கை எரித்து வர, ஒருநாள், உடல் வருந்தி அரிந்து எடுத்துக் கொண்டு வந்து விற்கின்ற புல் எங்கும் விலையாகாதவாறு கண்டும், விளக்குத் திருப்பணியைக் கைவிடாதவராய், அரிந்த அப்புல்லையே தீக்கொளுத்தி அழகிய விளக்கை எரிப்பவர் ஆனார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 7

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

பொழிப்புரை :

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

குறிப்புரை :

`விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்\' (தி.4 ப.77 பா.3) என்பதால், இத்திருத்தொண்டின் பயனாக ஞானமும், அதன் பயனாக வீடுபேறும் நாயனார் அடைதல் ஒருதலை ஆதலின், இங்குத் தம் முடியையே விளக்காக எரித்ததோடு, இரு வினைகளின் தொடக்கையும் எரித்தார் என்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 8

தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.

பொழிப்புரை :

இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டருக்கு, இறைவனார் நன்மை பெருகும் பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி அங்கு அமர்ந்தருளினார்.

குறிப்புரை :

இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டருக்கு, இறைவனார் நன்மை பெருகும் பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி அங்கு அமர்ந்தருளினார்.

பண் :

பாடல் எண் : 9

மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில், தம்முடியையே திருமுன்பு இடும் விளக்காகக், கங்கை எனும் பேராற்றை அணிந்த சிவபெருமானுக்கு எரித்த கணம்புல்ல நாயனாரின் திருவடிகளைப் போற்றித், தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் `திருக்கடவூரில்\' தோன்றி யருளிய `காரி நாயனார்\' செய்த திருத்தொண்டினைச் சொல்வாம்.

குறிப்புரை :

மூரியார் கலி - வலிமை பொருந்திய கடல்; படைத்தும் காத்தும் அழித்தும் வரும் வலிமை. முந்நீர் என அழைக்கப்பெறுதலும் காண்க. கணம்புல்ல நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி