நின்றசீர்நெடுமாற நாயனார் புராணம்

பண் :

பாடல் எண் : 1

தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.

பொழிப்புரை :

தடுமாற்றத்தை உண்டாக்கும் குற்றமுடைய நெறி யையே தவம் என்று கொண்டு, தம் உடம்பை வருத்தும் செயல்களைச் செய்து, தீ நெறி ஒழுகும் சமணரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு, அதனின்றும் விடும்படி, தமிழ் வல்லுநரான திருஞானசம்பந்தரின், வினையகற்றிப் பிறவி அறுக்கும், திருவடிகளை அடைந்த நெடுமாற னாரின் பெருமை, ஏழ் உலகங்களிலும் நிறைந்து விளங்குவதாம்.

குறிப்புரை :

ஆல் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 2

அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச்
செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச்
சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில்
புரவலனார் பொலிகின்றார்.

பொழிப்புரை :

அக்காலத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருவருளால், பாண்டி நாட்டில் சைவத்திறம் பெருகச், செங்கோல் செலுத்தி, அறநெறி வழுவாது காத்தும், புகழ்ந்து சொல்லப்படுகின்ற சிவபெருமானின் திருப்பெயராய திருவைந்தெழுத்தின் நெறியான சைவ நெறியைக் காத்தும், இந்திரனிடத்துக் கொண்ட பொன் மாலை சூடிய அப்பாண்டியர் விளங்குவாராகி,

குறிப்புரை :

சுரர்நகர்க்கோன் - இந்திரன். தமிழகத்தில் மழை பெய்யா திருக்க, அகத்திய முனிவரின் அறவுரைப்படி சோமவாரம் விரதம் இருந்து புண்ணியம் பெற்ற உக்கிரகுமார பாண்டியர், ஏனைய, சேர, சோழ, மன்னர்களோடு மழை வேண்டி, இந்திரனிடம் சென்றனர். அவன் காட்டிய இருக்கைகளில் சேர, சோழ மன்னர்கள் அமர, பாண்டியர் மட்டும் இந்திரனோடு ஒப்ப இருந்த இருக்கையில் அமர்ந் தனர். அது கண்ட இந்திரன், பொறானாய் அதனை வெளிப்படுத்தாது, எவரும் தாங்கற்கரிய ஒரு பெருமாலையை அப் பாண்டியருக்கு அணிவிக்க, அவரும் அதனை மகிழ்வுடன் ஏற்றனர் என்பது வரலாறு. இவ்வரிய செயற்கு உரியவர், இவ்வரலாற்றுக்குரிய நெடுமாறனா ருக்கு முன்னோரான உக்கிரகுமார பாண்டியர் ஆவர்.

பண் :

பாடல் எண் : 3

ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.

பொழிப்புரை :

சுரர்நகர்க்கோன் - இந்திரன். தமிழகத்தில் மழை பெய்யா திருக்க, அகத்திய முனிவரின் அறவுரைப்படி சோமவாரம் விரதம் இருந்து புண்ணியம் பெற்ற உக்கிரகுமார பாண்டியர், ஏனைய, சேர, சோழ, மன்னர்களோடு மழை வேண்டி, இந்திரனிடம் சென்றனர். அவன் காட்டிய இருக்கைகளில் சேர, சோழ மன்னர்கள் அமர, பாண்டியர் மட்டும் இந்திரனோடு ஒப்ப இருந்த இருக்கையில் அமர்ந் தனர். அது கண்ட இந்திரன், பொறானாய் அதனை வெளிப்படுத்தாது, எவரும் தாங்கற்கரிய ஒரு பெருமாலையை அப் பாண்டியருக்கு அணிவிக்க, அவரும் அதனை மகிழ்வுடன் ஏற்றனர் என்பது வரலாறு. இவ்வரிய செயற்கு உரியவர், இவ்வரலாற்றுக்குரிய நெடுமாறனா ருக்கு முன்னோரான உக்கிரகுமார பாண்டியர் ஆவர்.

குறிப்புரை :

இப்பாடல் முதல் 5 பாடல்கள் வரை இப்பாண்டியர் பெற்ற வெற்றிச் சிறப்புக் கூறப் பெறுகின்றது. இப்பாண்டியரின் பெயர் மாறவர்மன் அரிகேசரி என்றும் இவர், சேரர்களையும் குறுநில மன்னர்கள் சிலரையும், பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் வென்றனர் என்னும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வெற்றிகளை இறையனார் அகப்பொருளில் உள்ள மேற்கோள் பாடல்களும் (22, 106, 235, 309) குறிக்கும். இவற்றுள் நெல்வேலிப் போர்வெற்றியை, `நிறைக் கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்\' எனத் தொகை நூலும் வகை நூலும் குறித்துப் பாராட்டியுள்ளமை அறியத்தக்கதாம். இப்போர் சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனுக்கும் இவருக்கும் நடந்த பெரும் போர் என்றும், நெல்வேலி வரை வந்த விக்கிரமாதித்தனைக் கடும்போரால் இவர் வென்றமை பற்றியே சுந்தரர் இதனைச் சிறப்பிப் பாராயினர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுவர். (பல்லவர் வரலாறு பக். 140.)

பண் :

பாடல் எண் : 4

எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.

பொழிப்புரை :

படைகொண்டு போரிட்ட போர்க்களத்தில் இரு பக்கத்துப் படை வீரர்களும், வீழ்த்திய பெரிய யானைகளின் உடல் துண்டங்களும், குதிரைகளின் உடல் துண்டங்களும், எதிர்த்துப் போர் செய்யும் படை வீரர்களின் கரிய தலையாகிய மலைகளும் என்ற இவற்றினின்றும் வரும் குருதியின் பெருக்குக் கலக்கப் பெற்ற கட லானது, முற்காலத்தில் உக்கிரகுமார பாண்டியர் கடல் சுவறவேல் வாங்கியதைப் போல் மீண்டும் இவர் வேல் வாங்கும் படிபெருக,

குறிப்புரை :

முனைஞாட்பு - போர்க்களம்; இரு பெயரொட்டு. அறுகுறை - உடலினின்றும் அறுபட்ட துண்டங்கள். பெருகிவந்த கடல் சுவற வேல்விட்ட பெரியவர் உக்கிரகுமார பாண்டியர் ஆவர். இவ் வரலாறு திருவிளையாடற் புராணத்துக் காணப்படுவதாம்.

பண் :

பாடல் எண் : 5

வயப்பரியின் களிப்பொலியும்
மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும்
கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின்
மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று
தாம்விடுக்கும் படிதயங்க.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய குதிரைகளின் களிப்பால் உண்டாகும் ஒலியும், வீரர்தம் படைகளின் ஒலியும், யானைகளான மலைகளின் பிளிற்று ஒலியும், `பல இயங்களின் ஒலியும், வியக்கத் தக்க ஊழியின் முடிவுக் காலத்தில் பெருகும் மேகங்களின் ஒலியே எனச் சிந்தித்து, முன்பு உக்கிரகுமார பாண்டியர் விட்டது போல் வீரத் தொடர்பையுடைய விளங்கின திரும்பவும் இன்று தாம் விடுக்கும் படி ஒலிக்க,

குறிப்புரை :

சயத்தொடர் வல்லி - வெற்றியினால் பகைவரைப் பிணிக்கும் விலங்கு.

பண் :

பாடல் எண் : 6

தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.

பொழிப்புரை :

தீயை உமிழும் படைகளை வீசியும் எறிந்தும் போர் செய்யும் களத்தில், வெட்டுப்பட்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவில் குளித்துப் பிணங்களை உண்டு கூத்தாடி முன் நாளில் ஏவல் கொண்ட பூதங்களே அல்லாது, பேயும் அரிய பணி செய்யும் படி அவற்றுக்கு உணவு அளித்ததாகும் எனக் கூறும்படி விளங்க,

குறிப்புரை :

திருநெல்வேலிப் போரில் வடவரசர் தம் வெற்றி மேலோங்கக் கண்டு, பாண்டியன் சிவபெருமானை நினைய, நெல்லை யப்பர் ஆணையால் சிவபூதகணங்கள் வந்து அவர்களை அழித்தன என்பது தலவரலாறு. அதனை நினைவு கூர்ந்தவாறு இப்பாடல் அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 7

இனையகடுஞ் சமர்விளைய
இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து
முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை
பூழியர்வேம் புடன்புனைந்து.

பொழிப்புரை :

இத்தகைய கொடிய போர் மூளும்படி பொருந்திய போர்க்களத்தில், பனைபோல் நீண்ட துதிக்கையையுடைய மத யானைகளையுடைய பாண்டியரின் படைகளுக்குத் தோற்றுப் போரில் அழிந்த தலைமையையுடைய வடநாட்டு அரசரின் படைகள் சிதைந்து ஓடிப்போக, வெற்றி பெற்ற முறையில், அணியும் மணமுடைய வாகை மாலையைப் பாண்டியர்க்குரிய வேம்பு மாலையுடனே அணிந்து.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 8

வளவர்பிரான் திருமகளார்
மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந்
தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க்
கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்.

பொழிப்புரை :

சோழ மன்னரின் மகளாரான மங்கையர்க்கரசி யாரின் கலவைச் சாந்து அணிந்த கொங்கைகள் மூழ்கப் பெற்ற அகன்ற மார்பையுடைய பாண்டியரான `நின்றசீர்நெடுமாறனார்\' இளைய பாம்பையும் வெண்மையான பிறையையும் சூடிய சிவபெருமானுக்கு, ஏற்ற திருத்தொண்டுகளை எல்லாம் அளவில்லாத புகழ் பெரும்படிச் செய்து, சிவனருள் பெருகுமாறு ஆட்சி செய்தார்.

குறிப்புரை :

இவ்வேழு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 9

திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.

பொழிப்புரை :

அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகில், திருநீற்று நெறியான சிவநெறி விளக்கம் பெறுமாறு சான்றோர்களால் எடுத்துச் சொல்லப்படுகின்ற பெரும் புகழ் விளங்க வைத்ததால், மேன்மை யுடைய நின்றசீர் நெடுமாறனார், நீண்ட காலம் ஆட்சி செய்திருந்து, சிவபெருமானின் திருவருளால் எல்லோராலும் போற்றப்படுகின்ற பெருமையுடைய சிவலோகத்தைச் சேர்ந்து, இன்பம் பொருந்தப் பணிந்து அமர்ந்திருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 10

பொன்மதில்சூழ் புகலிகா
வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார்
செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம்
பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம்.

சிற்பி