கழற்சிங்க நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
கோக்கழற் சிங்கர் என்பார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகில் விளங்கும் பழமையான பல்லவர் குலத்தில் தோன்றியவர். காப்புமிக்க மதில்களையுடைய முப்புரங்க ளையும் எரித்த கங்கை பொருந்திய நீண்ட சடையையுடைய சிவ பெருமானின் செவ்விய திருவடிகளையே அல்லாது வேறொன்றை யும் தம் அறிவினில் பொருளாகக் கொள்ளாத தன்மையர். அவர் வெற்றிக் கொடியை ஏந்திய நெடிய படைகளையுடைய மன்னர் மன்னரான `கழற்சிங்கர்\' என அழைக்கப்படுபவர்.

குறிப்புரை :

படி- நிலவுலகம். மன்னர் கோக்கழற்சிங்கர் - மன்னர் மன்னராகிய கழற்சிங்கர். கழல் - காலில் அணியும் சிலம்பு; மேற் கொண்ட போர்கள் பலவற்றிலும் வெற்றியே பெற்றமையின் அச் சிறப்பிற்கு அறிகுறியாகச் சிலம்பணிந்து கழற்சிங்கர் எனச் சிறப்பிக்கப் பெற்றார். இவர் மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னர் ஆவர். கி. பி. 825-850 வரை ஆண்ட இவர், தெள்ளாற்றுப் போரில் மிகச் சீரிய முறையில் வென்றார். இவரைப் பற்றி, நந்திக் கலம்பகத்தில் இப்போர்ச் சிறப்பாக 28, 29, 33, 38, 42, 52, 53, 64, 71, 75, 77, 79, 80, 85, 86 ஆகிய பாடல்களில் விவரிக்கப்படுகின்றது. இவரது காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனாரும் தம் பாரத வெண்பாவில்,
`வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாராள் உரிமையால் - திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்!\'
என இவரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

பண் :

பாடல் எண் : 2

காடவர் குரிசி லாராம்
கழற்பெருஞ் சிங்க னார்தாம்
ஆடக மேரு வில்லார்
அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய
வடபுலங் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக
நன்னெறி வளர்க்கும் நாளில்.

பொழிப்புரை :

பல்லவர் குலத்தில் தோன்றிய பெரியவரான இக் கழற்சிங்கர், பொன்மயமாய மேருமலையை வில்லாக உடைய இறை வரின் திருவருளால், போரில் சென்று, பகைவர் அழிய, வட புலத்து நாடுகளைக்கைக் கொண்டு, தம் நாடானது நீதி நெறியில் தங்கு மாறு நன்னெறியை வளர்த்து, ஆட்சி செய்கின்ற காலத்தில்,

குறிப்புரை :

இராட்டிர கூட அரசருள் ஒருவரான முதலாம் அமோக வர்ஷன் என்பான் கி.பி. 814 -880 வரை ஆண்டவன். பெருவீரனான அவனை, அவன் இருந்த வடபுலத்திற்குச் சென்று வென்ற வெற்றியே இங்குச் சிறப்பிக்கப் பெறுகின்றது என்பர் வரலாற்றாசிரியர்கள். (பல் லவர் வரலாறு பக்கம் 201).

பண் :

பாடல் எண் : 3

குவலயத் தரனார் மேவும்
கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து
தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும்
தென்திரு வாருர் எய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங்
கோயிலுள் பணியப் புக்கார்.

பொழிப்புரை :

இவ்வுலகில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில்கள் பலவும் சென்று, பிறழாத அன்பினால் வணங்கி, உண்மை யான தொண்டுகளைச் செய்வாராய்ச் `சிவநகர்\' எனும்படி நிலை பெற்ற தென் திருவாரூரை அடைந்து, பிறவியை அறுத்து அடிமை கொள்ளும் இறைவரின் திருக்கோயிலுக்குள் புகுந்தார்.

குறிப்புரை :

ஆரூரில் பிறக்க முத்தி என்பர். அது கருதியே அந்நகரைச் `சிவன் நகர்\' என்றார். தென் திருவாரூர் - அழகிய திருவாரூர். இவ் விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 4

அரசியல் ஆயத் தோடும்
அங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர்
முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்தல்
உரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத்
தொருதனித் தேவி மேவி.

பொழிப்புரை :

முரசுகளையுடைய படைமன்னர், ஐவகைக் குழுக்கள் சூழ இறைவரின் கோயிலுக்குள் சென்று முதல்வரான புற்றிடம் கொண்டவரை வணங்கும் பொழுது, தம்முடன் வந்த மணம் பொருந்திய மலர்களை அணிந்த மென்மையான கூந்தலையுடைய உரிமைத் தேவியர்களுள் புகழால் தனித்துச் சிறந்து உயர்ந்த பட்டத் தரசி வந்து,

குறிப்புரை :

இப்பட்டத்தரசி இராட்டிரகூட அரசனான அமோக வர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா என்றும், இவள் சமண சமயத்தைச் சார்ந்த வள் என்றும், பேரழகும் பேரறிவும் படைத்தவள் என்றும் கூறுவர். (பல் லவர் வரலாறு, பக்கம் 206).

பண் :

பாடல் எண் : 5

கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.

பொழிப்புரை :

சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள வளங்களை எல்லாம் தனித் தனியே பார்த்து மகிழ்ந்தவள், தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் புதிய பூ ஒன்று விழுந்து கிடப் பதைக் கண்டு எடுத்து மோந்தாள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 6

புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.

பொழிப்புரை :

புதிய மலரை மோந்த போதில், செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இம் மலரை மலர் மண்டபத் திருமுற்றத் தில் எடுத்து மோந்தனள் என்று எண்ணித், துணிந்து, தேன் பொருந் திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அவள் மூக்கைப் பிடித்து அரிந்தார்.

குறிப்புரை :

செருத்துணையார் - இவர் வரலாற்றை இச்சருக்கத்தில் இனி வரும் பகுதியால் (தி.12 பு.55) அறியலாம்.

பண் :

பாடல் எண் : 7

வார்ந்திழி குருதி சோர
மலர்க்கருங் குழலும் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை
மயிலெனத் துளங்கி மண்ணில்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி
புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு
அரசரும் அணையவந்தார்.

பொழிப்புரை :

மூக்கை அரிந்த அளவில் குருதி வழியவும், மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து குலையவும், சோர்வடைந்து விழுந்து, தோகையையுடைய மயில் போல் நடுங்கித், தரை மீது அயர்ந்து, பட்டத்துத் தேவியார் புலம்ப, செம்பொன் வடிவாய புற்றிடத்தில் நிறைந்த பேரொளியாகிய சிவபெருமானை வணங்கிய அரசரும், அங்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

வார்ந்த - அரிந்த.

பண் :

பாடல் எண் : 8

வந்தணை வுற்ற மன்னர்
மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று
பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை
நோக்கிஇவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே
யார்செய்தார் என்னும் எல்லை.

பொழிப்புரை :

வந்து அவ்விடத்தை அணைந்த மன்னர், மலர்கள் மலரப் பெற்ற கற்பகத்தின் மணமுடைய பசிய தளிர்களையுடைய பூங்கொம்பு ஒன்று நிலத்தின் மீது விழுந்தது போல வருந்தி, அழிந்து, அரற்றுவாளான தேவியைப் பார்த்து, இவ்வுலகத்தில் உள்ளவர்களுள் இக்கொடிய செயலை அச்சம் இன்றிச் செய்தவர் யார்? என வினவ,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 9

அந்நிலை யணைய வந்து
செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப்
புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி
மற்றிதற் குற்ற தண்டம்
தன்னைஅவ் வடைவே யன்றோ
தடிந்திடத் தகுவ தென்று.

பொழிப்புரை :

அந்நிலையில் அருகிருந்த செருத்துணையாரான அன்பர், முந் நிகழ்ந்த நிலைமையை அங்கு நிகழ்ந்தவாறே சொல்ல, அப்போது மன்னரும், அச்செருத்துணையாரைப் பார்த்து, `இச் செயல்களுக்குப் பொருந்திய தண்டனையை அக்குற்றங்கள் புகுந்த முறைப் படியன்றோ விழுங்கத் தக்கது!\' என்று சொல்லி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 10

கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.

பொழிப்புரை :

தம் இடையில் கட்டியிருந்த உடைவாளை உருவி, அம் மணம் கமழும் மலரைத் தொட்டு, முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கத் தகுவது என்று கூறி, தம் அரசுரிமைப் பட்டம் பூண்டு, தம் அன்பையும் பூண்டு விளங்கும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப் போதே துண்டித்தார்.

குறிப்புரை :

தரையில் விழுந்த மலரைத் கை எடுத்த பின்பே, மூக்கு நுகர்ந்தது; ஆதலில் முறைப்படி முன்னர் ஒறுக்கத் தக்கது கையே ஆதலின் அதனைத் தடிந்தார் அரசர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 11

ஒருதனித் தேவி செங்கை
உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின்
பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும்
இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச
மலர்மழை பொழிந்த தன்றே.

பொழிப்புரை :

தரையில் விழுந்த மலரைத் கை எடுத்த பின்பே, மூக்கு நுகர்ந்தது; ஆதலில் முறைப்படி முன்னர் ஒறுக்கத் தக்கது கையே ஆதலின் அதனைத் தடிந்தார் அரசர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 12

அரியஅத் திருத்தொண் டாற்றும்
அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி
மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே
செய்யசே வடியி னீழல்
பெருகிய வுரிமை யாகும்
பேரருள் எய்தி னாரே.

பொழிப்புரை :

அரிய அத்திருத் தொண்டைச் செய்த அரசர், பொருந்திய அளவில்லாத காலம், தம் உரிமையான அரசாட்சியையும் திருத்தொண்டையும் ஆற்றியிருந்து, மால், அயனுக்கும் அரியவரான இறைவரின் நிலை பெற்ற திருவருட் சிறப்பால், செம்மை தரும் சிவந்த திருவடி நீழலின் கண், பெருகிய உரிமையான திருவருள் நிறைவைப் பொருந்தப் பெற்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 13

வையகம் நிகழக் காதல்
மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர்
கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர்
இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர்
செய்வினை விளம்ப லுற்றாம்.

பொழிப்புரை :

உலகம் விளங்கத், தம் காதலுடைய பட்டத்தரசியின் கையினைத் தடிந்த கழற்சிங்கரின் திருவடிகளைத் தொழுது, போற்றிப், பொருந்திய பெருமையுடைய அன்பரான `இடங்கழியார்\' என்று போற்றப்படும் மெய்யருளுடைய திருத்தொண்டர் செய்த திருத் தொண்டை இனிச் சொல்லலானோம். கழற்சிங்க நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

***************
சிற்பி