கோட்புலி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

நலம்பெருகுஞ் சோணாட்டு
நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார்
கோட்புலியார் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர்
தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப்
போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.

பொழிப்புரை :

நன்மை பெருகும் சோழ நாட்டில் `திருநாட்டியத் தான்குடியில்\\\\\\\' வேளாளர் குலம் புகழால் மிகுமாறு வந்து, அக்குலத்தில் தோன்றியவர், `கோட்புலியார்\\\\\\\' என்னும் பெயரையுடையவர். அவர் உலகில் பெருகும் புகழையுடைய சோழ மன்னரின் தானைத் தலைவ ராய், அயலிடத்திலுள்ள பகைமன்னர்க்கு மிக்க துன்பம் உண்டாகு மாறு போரிட்டு புகழ்விளைப்பாராய்,

குறிப்புரை :

தந்திரம் - சேனை; இதன் தலைவர் தந்திரியார். கோட்புலியார் - தாங்கொண்ட கோட்பாட்டில் புலியாக விளங்குபவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் எனலாம். புலி, தான் கொன்ற பொருள் வலப்புறம் விழுந்தாலன்றி இடப்புறத்துவீழின் உண்ணாது.
`கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையோடு
இயைந்த வைகல் உளவாகியரோ\\\\\\\'
(புறம் - 180)
எனவும்,
`தொடங்கு வினை தவிரா அசைவில் நோன் தாள்
கிடந்துஉயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த,
தாழ்வில் உள்ளம்\\\\\\\'
(அகம் - 29)
எனவும்
`கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும்\\\\\\\'
(நாலடியார் 340)
எனவும் வரும் கூற்றுகளைக் காண்க. இத்தகைய உரனுடைமை இருந்தமை, இவ்வடியவர் வரலாற்றால் அறிய இயலும்.

பண் :

பாடல் எண் : 2

மன்னவன்பால் பெறுஞ்சிறப்பின்
வளமெல்லாம் மதிஅணியும்
பிஞ்ஞகர்தங் கோயில்தொறுந்
திருவமுதின் படிபெருகச்
செந்நெல்மலைக் குவடாகச்
செய்துவருந் திருப்பணியே
பன்னெடுநாள் செய்தொழுகும்
பாங்குபுரிந்து ஓங்குநாள்.

பொழிப்புரை :

மன்னனிடம் தம்தொழில்வழிப் பெறும் சிறந்த செல்வங்களை எல்லாம், பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் கோயில் தோறும் திருவமுதுக்குரிய கட்டளை பெருகுவதற்காகச் செந்நெல்லை மலைச்சிகரம் போல் குவித்துச் செய்துவரும் தொண் டையே பலகாலங்களும் செய்து, சிறந்து விளங்கும் நாளில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 3

வேந்தன் ஏவலிற்பகைஞர்
வெம்முனைமேற் செல்கின்றார்
பாந்தள்பூண் எனஅணிந்தார்
தமக்கமுது படியாக
ஏந்தலார் தாம்எய்தும்
அளவும்வேண் டும்செந்நெல்
வாய்ந்தகூடு அவைகட்டி
வழிக்கொள்வார் மொழிகின்றார்.

பொழிப்புரை :

வேந்தனின் ஏவலால், பகைவர்களின் கொடிய போர் மேல் செல்பவரான அந்நாயனார், பாம்பை அணியாய் அணிந்துள்ள இறைவற்குத் திருஅமுதுக்குரிய கட்டளையாக, பெருமையுடைய அவர் வரும் வரையில், வேண்டிய அளவு செந்நெல் பொருந்திய நெல்கூடுகளை அமைத்துப் போர் மேற்செல்பவர், சொல்வாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தந்தமர்கள் ஆயினார்
தமக்கெல்லாந் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்கு
ஏற்றியநெல் இவையழிக்கச்
சிந்தையால் தாம்நினைவார்
திருவிரையாக் கலியென்று
வந்தனையால் உரைத்தகன்றார்
மன்னவன்மாற் றார்முனைமேல்.

பொழிப்புரை :

தம் சுற்றத்தவர் எல்லாருக்கும் தனித்தனியே எம் இறைவற்கு அமுது படிக்காகச் சேர்த்துள்ள இந்நெற்கூடுகளைத் தாம் அழிக்குமாறு உள்ளத்தாலும் நினைப்பாராயின், `திருவிரையாக் கலியின் மேல் ஆணை நிகழ்வதாகுக!\' என்று கூறி, அனைவர்க்கும் வணக்கம் கூறிப் போர் மேற்சென்றார்.

குறிப்புரை :

திருவிரையாக் கலி - சிவபெருமானின் ஆணை. அழிக்க - நினைவார் திருவிரையாக்கலி - நெற்கட்டை அழிக்க உள்ளத்தால் நினைவாரேனும், அவர் சிவபெருமானின் ஆணையைப் பிழைத்தவ ராவீர் என்பது கருத்து. `பொய்தீர் விரையாக்கலி என்னும் ஆணை யும்\' (கோயில் நான்மணி மாலை- 4) எனவரும் திருவாக்கும் காண்க. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 5

மற்றவர்தாம் போயினபின்
சிலநாளில் வற்காலம்
உற்றலும்அச் சுற்றத்தார்
உணவின்றி இறப்பதனில்
பெற்றமுயர்த் தவர்அமுது
படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போம்
எனக்கூடு குலைத்தழிந்தார்.

பொழிப்புரை :

அவர் சென்ற பின்பு சில நாள்களில், பஞ்சம் வரவும், முற்கூறியவாறு அறிவுறுத்தப்பட்ட அச்சுற்றத்தார்கள், `உணவில்லாது இறப்பதைவிட, ஆனேற்றுக் கொடியையுடைய இறைவரின் அமுதுக் குரிய படியான நெல்லை எடுத்துச் கொண்டேனும் உயிர் பிழைத்துக் குற்றம் இல்லாது பின்பு அந்நெல்லைத் திரும்ப, கொடுத்து விடலாம்!\' என்று எண்ணித் துணிந்து நெற்கூடுகளை அழித்தனர்.

குறிப்புரை :

இந்நாயனார் காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டு என்றும், அக்காலத்தில் பல்லவ மன்னராய மூன்றாம் நந்திவர்மர் பேரரசராக, அவர் ஆட்சியின் கீழ்க் குமாராங்குசன் என்றொரு சோழ மன்னன் சிற்றரசனாய் இருந்தான் என்றும், அக்காலத்தேயே வடபுலத்தும், தென்புலத்தும் பஞ்சம் நேர்ந்தது என்றும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். பிற்காலச் சோழர் சரித்திரம் (பக்கம் 9 , 10), பல்லவர் வரலாறு (பக்கம் 207). அக்காலத்தில் நேர்ந்த வறுமையை நீக்கினான் நந்திவர்மன் என நந்திக்கலம்பகம் 11ஆவது பாடலும் கூறுகின்றது. எனவே இக்காலத் துப் பஞ்சம் நேர்ந்தமை வரலாற்றாசிரியர்களாலும் உறுதி செய்யப் பட்ட தொன்றாகும்.

பண் :

பாடல் எண் : 6

மன்னவன்தன் தெம்முனையில்
வினைவாய்த்து மற்றவன்பால்
நன்னிதியின் குவைபெற்ற
நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரில் தமர்செய்த
பிழையறிந்த தறியாமே
துன்னினார் சுற்றமெலாம்
துணிப்பனெனுந் துணிவினராய்.

பொழிப்புரை :

அரசனின் போர்முனையில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்து, அவ்வரசனிடம் நிதியின் குவியலைப் பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவரான கோட்புலியார், அந்நகரத்தில் தம் சுற்றத்தார் செய்த பிழையை அறிந்து, `எம் சுற்றத்தார் அனைவரையும் துணிப்பேன்\' எனத் துணிவு கொண்டு, அதனை அவர்கள் அறியாதவாறு செயற்படுத்து வாராகி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 7

எதிர்கொண்ட தமர்க்கெல்லாம்
இனியமொழி பலமொழிந்து
மதிதங்கு சுடர்மணிமா
ளிகையின்கண் வந்தணைந்து
பதிகொண்ட சுற்றத்தார்க்
கெல்லாம்பைந் துகில்நிதியம்
அதிகந்தந் தளிப்பதனுக்
கழைமின்கள் என்றுரைத்தார்.

பொழிப்புரை :

தம்மை எதிர்கொண்டு வரவேற்ற சுற்றத்தார் அனைவர்க்கும் இனிய சொற்களைச் சொல்லி, திங்கள் தங்கும் ஒளியும் அழகும் உடைய தம் மாளிகையை அடைந்து `அந்நகரத்தில் உள்ள சுற்றத்தார்க்கு எல்லாம் பசுமையான ஆடையும் பெரும் பொருளும் கொடுப்பதற்கு அழையுங்கள்!\' எனச் சொல்லி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 8

எல்லோரும் புகுந்ததற்பின்
இருநிதியம் அளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன்
கடைகாக்க நாதன்தன்
வல்லாணை மறுத்தமுது
படியழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ
எனக்கனன்று கொலைபுரிவார்.

பொழிப்புரை :

அந்நிலையில் உறவினர் எல்லாரும் வந்து சேர்ந்த பின்பு, பெரும் பொருள் தருபவர் போல் காட்டி, நல்லவரான கோட் புலியார், தம் பெயரினையுடைய காவலன், முன் வாயிலைக் காவலாக நின்று காக்க, இறைவரின் வலிய ஆணையையும் மறுத்துத் திரு வமுதுக்காக இருந்த நெல்லை அழித்து உண்ட பாவம் செய்த உறவினரையெல்லாம் கொல்லாமல் விடுவேனோ! என்று சினம் கொண்டு கொலை செய்வாராகி.

குறிப்புரை :

இறைவற்குரிய உணவையுண்ட தீமையை நீக்கச் செய்தார் ஆதலின், நல்லார் என்றார். `தீவினையின் பயன் துணிப்பார்\' என வரும் அடுத்த பாடலும் காண்க.

பண் :

பாடல் எண் : 9

தந்தையார் தாயார்மற்
றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார்
பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற்று
உண்ணவிசைந் தார்களையும்
சிந்தவாள் கொடுதுணித்தார்
தீவினையின்பயன் துணிப்பார்.

பொழிப்புரை :

தந்தையார், தாயார், உடன் பிறந்தவர், மனைவியர், பிணிப்புடைய சுற்றத்தார், அவ்வூரில் வாழும் அடிமைகள் என்ற இவர்கள் அனைவரையும், எம் தந்தையான இறைவரின் திருவமுதுக் குரிய படி நெல்லை உண்ணுதற்கு எண்ணி இசைந்த தீவினையின் பயனை அழிப்பவரான நாயனார், உடல் அழியும்படி வாளைக் கொண்டு வெட்டினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 10

பின்னங்குப் பிழைத்ததொரு
பிள்ளையைத்தம் பெயரோன்அவ்
அன்னந்துய்த் திலதுகுடிக்
கொருபுதல்வ னருளுமென
இந்நெல்லுண் டாள்முலைப்பால்
உண்டதுஎன எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால்
இருதுணியாய் விழவேற்றார்.

பொழிப்புரை :

அதன் பின் அங்கு அவரது வாளுக்குத் தப்பி உயிர் பிழைத்திருந்த ஒரு குழந்தையை அப்பணியாளன் காட்டி, `இஃது அச்சோற்றை உண்ணவில்லை, அன்றியும் ஒரு குடிக்கு ஒரு மகனாகும், ஆதலால் இதனை வெட்டாமல் அருள வேண்டும்!\' எனச் சொல்ல, `இக்குழந்தை அச்சோற்றை உண்ணவில்லையாயினும், அச் சோற்றை உண்ட தாயரின் முலைப்பாலை யுண்டது\' என்று நாயனார் சொல்லி, எடுத்து மேலே வீசி எறிந்து, மின்னும் நல்ல கூரிய வாளால் இரண்டு துண்டாகி விழுமாறு அக்குழந்தையையும் வெட்டினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 11

அந்நிலையே சிவபெருமான்
அன்பர்எதிர் வெளியேநின்று
உன்னுடைய கைவாளால்
உறுபாசம் அறுத்தகிளை
பொன்னுலகின் மேலுலகம்
புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடன்அணைகஎன்
றுஏவியெழுந் தருளினார்.

பொழிப்புரை :

தந்தையும், தாயும், அரிய உயிரும், அமிர்தமும் ஆய வினையின் நீங்கிய இறைவனின் திருவடிகளை உட் கொண்டதால், சுற்றத்தாரின் பாசத்தை, வேர் அறத் தடிந்த, கொத்தான மலர்களைக் கொண்ட மாலையையுடைய கோட்புலி நாயனாரின் திருவடியை வணங்கிக் கூட்டத்தவரான (தொகை) அடியார்களுள் பத்தராய்ப் பணிபவரின் இயல்பை இனி இயம்புவாம்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 12

அத்தனாய் அன்னையாய்
ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள்
அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார்
அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார்தம்
பரிசினையாம் பகருவாம்.

பொழிப்புரை :

தந்தையும், தாயும், அரிய உயிரும், அமிர்தமும் ஆய வினையின் நீங்கிய இறைவனின் திருவடிகளை உட் கொண்டதால், சுற்றத்தாரின் பாசத்தை, வேர் அறத் தடிந்த, கொத்தான மலர்களைக் கொண்ட மாலையையுடைய கோட்புலி நாயனாரின் திருவடியை வணங்கிக் கூட்டத்தவரான (தொகை) அடியார்களுள் பத்தராய்ப் பணிபவரின் இயல்பை இனி இயம்புவாம்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 13

மேவரிய பெருந்தவம் யான்
முன்பு விளைத் தன வென்னோ
யாவது மோர் பெருளல்லா
என் மனத்து மன்றியே
நாவலர் காவலர் பெருகு
நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போது
செனனியினுள் மலர்ந்தனவால்.

பொழிப்புரை :

ஒன்றுக்கும் பற்றாத எளியேனின் உள்ளத்தில் மட்டு மன்றிப் பெருக்கெடுத்து ஓடிய காவிரியாறு, இடையீடுபட்டுப் பின், வழிவிட்ட வழியில், நடந்தருளிய திருநாவலூர்த் தலைவரின் சேவடி மலர்கள் எப்போதும் என் தலையின் மேலும் மலர்ந்தன.இப்பேறு பெறுவதற்குப் பொருந்துதற்கரிய பெருந்தவம் நான் முன்னே செய்தன எவையோ? அறியேன்?

குறிப்புரை :

ஒன்றுக்கும் பற்றாத எளியேனின் உள்ளத்தில் மட்டு மன்றிப் பெருக்கெடுத்து ஓடிய காவிரியாறு, இடையீடுபட்டுப் பின், வழிவிட்ட வழியில், நடந்தருளிய திருநாவலூர்த் தலைவரின் சேவடி மலர்கள் எப்போதும் என் தலையின் மேலும் மலர்ந்தன.இப்பேறு பெறுவதற்குப் பொருந்துதற்கரிய பெருந்தவம் நான் முன்னே செய்தன எவையோ? அறியேன்?
சிற்பி