சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

காரணபங் கயம்ஐந்தின்
கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி
பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த
சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர்
அடித்தொண்டின் வழியடைந்தார்.

பொழிப்புரை :

நான்முகன் முதலான காரணக் கடவுளர் ஐவர்க்கும் உரிய ஐந்து தாமரைகளுடன் இருக்கும் இடங்களைக் கடந்து, மேற்சென்று, அப்பால் நிறைவுடையதாய், உள் பொருளாய், தூண்டப்படாத பேரொளியாய் உள்ள சிவம், ஞான ஒளிவீசி விளங்கும் நாதமுடிவில் உள்ளத்தைச் செலுத்த, அவ்விடத்தில் காணப்பெறும் சிவபரம் பொருளிடத்தில் நிறுத்திய சித்தத்தைக் கொண்டிருப்பவர் `சித்ததைச் சிவன்பால் வைத்தார்\' என்பார்; இவர் தமக்கு உவமையில்லாத அம்பலத்துள் விளங்கும் நான்மறையின் முதல்வராய கூத்தப் பெருமானாரின் திருவடித் தொண்டின் வழியில் நின்று அவரை அடைந்தவர் ஆவர்.

குறிப்புரை :

ஐந்தின் காரணக் கடவுளர், பங்கயக் கடவுளர் எனத் தனித் தனியே கூட்டுக. படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும், அயன் முதலிய ஐவரையும் கொண்டு இறைவன் இயற்றுவித்தலின் இவ்வைவரும் `காரணக் கடவுளர்` எனப்பட்டனர். இவர்கள் ஐவ கைத் தாமரைப் பீடங்களில் வீற்றிருப்பவர் என்பர். இவர்களை இதயம் முதலாக உச்சித்துளை ஈறாகவுள்ள இடங்களில் வைத்து வழிபடல் வேண்டும். இவர்களுக்குரிய இடமும் பிறவும் முன்பக்கத்தில் உள்ள நிரல்கட்டத்தில் காண்க.:
1 அயன் இதயம் ல மண் நாற்கோணம் பொன்னிறம்
2 மால் கழுத்து வ நீர் அரைவட்ட வெண்ணிறம்
3 உருத் உள் ர தீ முக்கோணம் செந்நிறம் திரன் நாக்கு
4 மகேசன் புருவநடு ய வளி அறுகோணம் கருநிறம்
5 சதா உச்சித் ஹ வெளி வட்டம் புகைநிறம் சிவம் துளை
இவ்வகையில் வைத்துப் படிப்படியாக வழிபட, அதன் பயனாக உச்சித்துளை திறக்கும். திறக்க அதன்மீது 12 அங்குல உயரத்தில் உள்ள துவாத சாந்தப் பெருவெளியில் நாதவடிவாக இருந்தருளும் சிவத்தை எண்ணியவாறு அசைவற்றிருப்பதுவே சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலாம். இந்நிலையில் இருந்தவர்களே இப்பெருமக்களாவர்.
பூரண மைய்ப்பரஞ்சோதி - எங்கும் நிறைந்தும், நிலையான தும், மேலானதுமான பேரொளி: சிவம். தாரணை - இவ்வாறு நிற்றலால் வரும் நிலை.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் முற்றிற்று.
சிற்பி