திருவாரூர்ப் பிறந்தார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

அருவாகி உருவாகி
அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள்
மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள்
திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால்
உரைக்கலாந் தகைமையதோ.

பொழிப்புரை :

அருவாயும், எல்லாப் பொருள்களுமாயும் விளங்கு கின்ற பெருமானாரும், மணம் பொருந்திய கூந்தலையுடைய உமை யம்மையாரின் கணவனாருமான, இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்களின் திருத்தொண்டைச் சிறியேனால் ஒருவாயால் ஆராய்ந்து உரைக்க இயலும் தன்மைய தாகுமோ? ஆகாது! என்பதாம்.

குறிப்புரை :

`ஒரு நாவுக்குரை செய்ய ஒண்ணாமை உணராதேன்\\\' என ஆசிரியர் முன்னர்க் கூறியதையும் (தி.12 பு.21) நினைவு கூர்க. இப்பாட்டு, பல ஏடுகளில் இல்லை என்பார் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 2

திருக்கயிலை வீற்றிருந்த
சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப்
பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கியஐம் பொறியடக்கி
மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கியநெஞ் சுடையவர்க்கே
அணித்தாகும் உயர்நெறியே.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகுதற்குரிய சிறப்பையுடைய திருவாரூரிடத்துப் பிறந்தவர்கள், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிவகணங்களே ஆவர். எனவே, செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி, அவர்களின் திருவடிகளை வணங்கி, ஒன்றித்த உள்ளம் உடையவர்க்கே உயர்நெறியானது அணியதாகும்.

குறிப்புரை :

பெருக்கிய சீர் - திருவாரூரின் சிறப்பு நாளும் பெருக நிற்பது, மேன்மேலும் வளர்தற்குரியது என்பார். `பெருக்கிய சீர்\\\' என்றார். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களா தலை, `ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்\\\' (தி.12 பு.27 பா.27) எனப் பெருமான் நமிநந்தியடிகளுக்கு முன் அருளியவாற்றானும் அறியலாம். தருக்கி - செருக்குற்று. பொறிகள் தருக்குற்று உயிர்களை அலைக்குமாற்றை `மூள்வாய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இவ்வுலகை ஓடி நால்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடத்துகின்றீர்க்கு ...... அலையேன் மின்னே\\\' (தி.6 ப.27 பா.9) என ஆளுடைய அரசர் அறிவுறுத்து மாற்றானும் அறியலாம். உயர்நெறி - சிவப்பேறு.
திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றிற்று.
சிற்பி