முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

எப்போதும் இனியபிரான்
இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த
விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும்
ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார்
முதற்சைவ ராமுனிவர்.

பொழிப்புரை :

எஞ்ஞான்றும் உயிர்களுக்கும் இனியவரான சிவபெருமானின் இனிய திருவருளால் பெருகி, உண்மையான சிவாகம ஞான நெறியில் நின்று, தவறாமல் அவ்வக் காலத்தோறும் ஆசை மிகும் அன்புடையவராகி, முக்காலத்தும் இறைவழிபாடாற்றி வருபவர்கள் ஆதிசைவரான முனிவர்கள் ஆவர்.

குறிப்புரை :

அதிகரித்து - பெருகி. இறைவனின் ஐம்முகங்களின் வழியாகத் தோன்றிய அகத்தியர், கௌதமர், பரத்துவாசர், காசிபர், கௌசிகர் ஆகிய ஐவர் வழி வந்து பெருகியவர்கள் ஆதலின் `இன்ன ருளால் அதிகரித்து\' என்றார். மெய்ப்போதம் - உண்மை ஞானம். இதனைப் பெறுதற்குச் சிவாகமங்கள் உதவும். அந்நெறிவழி ஒழுகுப வர்களே இவ்வடியவர்கள் ஆவர். ஆறுகாலங்களிலும் வழிபாடு செய்விக்கும் இவர்கள், அவ்வக் காலத்தும் முற்காலத்தில் ஆற்றிய வழிபாட்டிற்கும் மேலாக அன்பும் ஆர்வமும் கொண்டு வழிபட்டும் வழிபாடு செய்வித்தும் வருபவர்கள் ஆவர். முதற் சைவர் - ஆதி சைவர்.

பண் :

பாடல் எண் : 2

தெரிந்துணரின் முப்போதும்
செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிஅர்ச் சனைகள்சிவ
வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை
யாம்புகழும் பெற்றியதோ.

பொழிப்புரை :

ஆராய்ந்து காணின், இறப்பு நிகழ்வு எதிர்வு என்று மூன்றாய்ப் பகுக்கப்படும் எக்காலத்திலும், வழிவழியாய்ச் சிவபெரு மானது அகம்படித் தொண்டில் விரும்பிய உள்ளத்தினராய் வழி பட்டும், போற்றியுரை செய்தும் வரும் மரபு சிவமறையோர்களுக்கே உரித்தாகும். அப் பெருந்தகையார்தம் குலத்தின் பெருமை, எம்மால் புகழப்படும் தன்மையதோ? அன்று என்பதாம்.

குறிப்புரை :

பெற்றியதோ - தன்மையதோ? அன்று என்பதாம். ஓகா ரம் எதிர்மறைப் பொருளது. முன்னைய பாடலில், நாளின் உட்பிரிவ ாகிய காலை, நண்பகல், மாலை ஆகிய முக்காலங்களிலும் வழிபா டாற்றுவோர் என்றார். இப்பாடலில் காலத்தின் உட்பிரிவாகிய, சில இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய எப்பொழுதும் வழிபாடாற்றுவோர் என்றார். இக் காலம் நாளின் உட்பிரிவாகிய பொழுதளவில் முக்காலங்களாய் அமையினும், வழிபாடாற்றும் காலம் நோக்கின் ஆறு காலங்களாய் அமையும். அவை விடியல், காலை, நண்பகல், மாலை, யாமம், (முன்னிரவு) நள்ளிரவு (அர்த்த யாமம்) எனும் ஆறுகாலங்களாம்.

பண் :

பாடல் எண் : 3

நாரணற்கும் நான்முகற்கும் அறிய வொண்ணா
நாதனைஎம் பெருமானை ஞான மான
ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் மாகும்
அண்ணலைஎண் ணியகாலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறுபூசி வாழும்
புனிதர்செயல் அறிந்தவா புகல லுற்றேன்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் அறிய இயலாத இறை வனை, எம்பெருமானை, ஞானவயத்ததாய ஆகமங்களின் உட் கிடைப் பொருளாக விளங்கும் பெருமையுடைய பிரானை, மூன்று காலங்களிலும் அன்பு காரணமாக வழிபட்டுவரும், சிவ மறையோ ரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, உள்ளம் கசிந்த நிறைவு டைமையால், முழுதும் திருநீற்றைப் பூசி வாழும் தூயவரின் செயலை அறிந்வாறு சொல்லப்புகுவாம். முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

************
சிற்பி