முழுநீறு பூசிய முனிவர் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.

பொழிப்புரை :

பிறப்பொழுக்கத்தில் தலைமையான அற ஒழுக் கத்தை உடையவர்களாய், மெய்யுணர்வு உடையவர்களாய், தாம் கொண்ட அறநெறியில் தவறாது நிற்பவர்களாய்த் தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த வாய்மையுடைய அரிய முனிவர்கள், முறையாகச் செய்துவரும் நாள்வேள்வியில் விளைத்து எடுத்த திருநீற்றைப் புதிய கலத்தில் வைத்துக் கொண்டு, புலித் தோலை உடுத்த இறைவரை வணங்கி, அத்திருநீற்றை மேனி முழுவதும் பூசிக் கொள்வர். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.

குறிப்புரை :

புதிய பாசனம் - புதிய கலம்; பாத்திரம். இப்பாடற்கு முன்னர் ஐந்து பாடல்கள் அச்சிட்ட பல படிகளிலும் உள்ளன. எனினும் இவை பழைமையான ஏடுகள் பலவற்றிலும் காணப்படவில்லை ஆத லாலும், திருநீற்றின் வகையினையும் செய்முறைகளையும், அணியும் முறைகளையும் இங்குக் கூறுவது ஆசிரியர் திருவுள்ளமாயின், பத்த ராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் முதலிய தொகையடியார் வரலாறுகளிலும் அவ்வந் நெறி களையும் நீர்மைகளையும் விளங்கக் கூறியிருப்பர் ஆதலானும், இச் செய்யுட்களின் நடை, ஆசிரியரின் ஏனைய செய்யுள்களின் நடையி னும் முற்றிலும் மாறானவையாய் உள்ளன ஆதலாலும் இவை இடைச் செருகலாக இருக்க வேண்டும் என்றே துணிவர் சிவக்கவிமணியார். அத்துணிவே வன்மையும் உண்மையும் உடையது எனக் கருதி அவை இப்பதிப்பில் விடுக்கப்பட்டுள்ளன. முழுநீறு பூசிய முனிவர் புராணம் முற்றிற்று.
சிற்பி