அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம்

பண் :

பாடல் எண் : 1

மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.

பொழிப்புரை :

மூவேந்தர்களின் ஆளுகைக்குட்பட்ட தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால், சிவபெருமானின் அடியைச் சார்ந்து முறைமை வழுவாது நிற்பவர்களும், நம்பியாரூரரின் தெய்வ நலம் பொருந்திய திருநாவால் அருளிச் செய்யப்பட்ட திருத்தொண்டத் தொகையின்கண் அவரால் போற்றி வழிபடப் பெற்ற தொண்டர்களான தனியடியார் களின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும், மலர்கள் பொருந்திய நீண்ட சடையின் மேல் அடம்பு மலரும் தும்பை மலரும் கங்கையும் கொன்றையும் பொருந்தச் சூடியவரும், விடையைப் பொறித்த கொடியையுடையவருமான சிவபெருமானின் அடியைச் சார்ந்தவர் களும், சொல்லப்பட்ட அப்பாலும் அடிச் சார்ந்தார் எனக் கூறப் பெற்றவர் ஆவர்.

குறிப்புரை :

அப்பாலும் அடிச்சார்ந்தார் எனும் தொடர் தொகை நூலிலும், வகைநூலிலும் உள்ள தொடராகும். இத்தொடரில் உள்ள அப்பால் என்பதற்கு இடத்தாலும் காலத்தாலும் அப்பால் என உரை கண்ட ஆசிரியரின் திறம் அறிதற்குரியது. சுந்தரர் வணக்கம்

பண் :

பாடல் எண் : 2

செற்றார்தம் புரம்எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட
தொகு நிதியின் பரப்பெல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலைஉமையாள் பாகன் பூத
முதற் கணமேயுடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ அடியேன் முன்னைப்
பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.

பொழிப்புரை :

பகைவரின் முப்புரங்களையும் எரித்த மலை வில்லை ஏந்திய சிவபெருமானின் செல்வம் நிறைந்த திருமுருகன் பூண்டியின் வழியாகச் செல்லும்போது, தம்மைச் சுற்றி வளைத்த, பெருகிய வில் வேடர்கள் வந்து மிக்க நிதியின் சுமைகளை எல்லாம் பறித்துக் கொள்ள, என்றும் முதிராத இளங் கொங்கைகளையுடைய உமை யொரு கூறராய இறைவரின் முதன்மையுடைய பூதகணங்கள், தாமே, பின் அப்பெரும் பொருளைச் சுமந்து கொண்டு உடன் வருமாறு அளவற்ற பெரும் பேற்றைப் பெற்ற நம்பியாரூரரின் திருவடிகளைப் போற்ற அடியேன் முன்னைப் பிறவியில் செய்த தவங்கள் மிகப் பலவாகும்.

சிற்பி