பூசலார் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

அன்றினார் புரம் எரித்தார்க்
காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே
நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை
வினை யுரைக்க லுற்றாம்.

பொழிப்புரை :

பகைவரின் முப்புரங்களையும் எரித்த சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில் அமைக்க நினைந்து, அதற்கு வேண்டும் நிதி ஒரு சிறிதும் அங்குக் கிடைக்காமல் போக, தம் நினைவளவில் அமைத்தலே தக்க பணியாகும் என்று கருதி, மனத்தில் நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில் தோன்றிய பூசலாரின் நினைவினாலாய வரலாற்றைக் கூறுவாம்.

குறிப்புரை :

அன்றினார் - பகைவர்; முப்புரத்தவர். பல ஏடுகளில் இப்பாட்டு இல்லை.

பண் :

பாடல் எண் : 2

உலகினில் ஒழுக்கம் என்றும்
உயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க
நான்மறை விளங்கும் மூதூர்
குலமுதற் சீலமென்றுங் குறை
விலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி
நிகழ்திரு நின்ற வூராம்.

பொழிப்புரை :

இவ்வுலகில் நல்லொழுக்கம் எக்காலத்தும் உயர்ந்து விளங்கும் பெருமையுடைய தொண்டை நாட்டில், நலம் மிக்க சிறப்பு களைக் கொண்டு நான்மறைகளும் விளங்குவதற்கு இடமான பழைய ஊர், குலத்திற்கு முதன்மையான ஒழுக்கத்தை எந்நாளும் கொண்டு ஒழுகுகின்ற குறைவற்ற மறையவர்கள் தம் கொள்கையில் நிலை நின்ற விளங்குதலாகிய செல்வம் பொருந்திய திரு நின்றவூராகும்.

குறிப்புரை :

குலம் முதற்சீலம் - குலத்திற்கு முதன்மையானது அரிய ஒழுக்கம் ஆகும். `ஒழுக்கம் உடைமை குடிமை\', `பார்ப்பான் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்\' (குறள், 134) என்பனவாய திருக்குறளும் காண்க. கொள்கை நிலவிய செல்வம் - தாம் கொண்ட உயர்ந்த கோட்பாடுகளையே செல்வமாகக் கொண்டு விளங்கும் தன்மை.

பண் :

பாடல் எண் : 3

அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந்
தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு
வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக்
கலையுணர் பொலிவின் மிக்கார்.

பொழிப்புரை :

அரிய மறைவழிவரும் மரபு வாழ, அப்பதியில் தோன்றிச் சித்தத்தில் வரும் உணர்வுகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் சேருமாறு அமையும் நெறியினின்றும் பிறழாது, அன்பு வளர்ந்தோங்கத் தாமும் வளர்ந்து, மெய்ப் பொருளை அடைதற்கு ஏதுவான மறைக் கலைகளை உணரும் விளக்கத்தின் மிக்கார்.

குறிப்புரை :

இறைவன் திருவடிகளைச் சாரும் உணர்வுடன், அதனை அறிந்து போற்றுதற்குரிய கலைகளையும் பயின்றார் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 4

அடுப்பது சிவன்பால் அன்பர்க்
காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர்
மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
இருநிதி இன்மை யெண்ணார்.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கும் அவருடைய அன்பர்களுக்கும் ஆகும் பணிகளைச் செய்தலே தக்கது என்று துணிந்து, அடியவர்க ளுக்குக் கொடுப்பதற்கென எவ்வகையாலும் பொருளைத் தேடி, அவர்கள் கொள்ளும்படி தந்து, திருக்கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான செல்வம் தம்மிடம் இல்லாமையை எண்ணாதவராய்க் கங்கை தங்கிய சடையையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளி இருப்பதற்கு என ஒரு கோயிலைக் கட்டும் செயலையும் தம் உள்ளத் தில் கொண்டார்.

குறிப்புரை :

அடுப்பது - செயத்தகுவது. இருநிதி - பெருஞ் செல்வம்.

பண் :

பாடல் எண் : 5

மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி
என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
சிந்தையால் திரட்டிக் கொண்டார்.

பொழிப்புரை :

திருக்கோயில் அமைத்தற்கென வேண்டும் பொரு ளைத் தேடிப், பெறும் இடங்களை உள்ளத்தால் நினைத்து, எங்கும் அப்பெருஞ் செல்வத்தை வருந்தித் தேடியும், ஒரு சிறிதும் அதனைப் பெறும் பேறு கிட்டாதவராய், இனி என் செய்வேன் என்று வருந்தி, நினைவால் கோயில் எடுக்க எண்ணித் துணிந்து, அச் செயல் நிகழ்வதற்குரிய செல்வங்களையெல்லாம் தினையளவு கிடைப்பினும் அதனையும் சிறிதுசிறிதாக உள்ளத்தால் சேர்த்துக் கொண்டனர்.

குறிப்புரை :

குறிப்புரை இல்லை

பண் :

பாடல் எண் : 6

சாதனத் தோடு தச்சர்
தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய்
நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால்
அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங்
கண்படா தெடுக்க லுற்றார்.

பொழிப்புரை :

திருக்கோயிலைக் கட்டுவதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் மனத்தால் தேடிக் கொண்டு, இறைவற்குக் கோயில் எடுப்பிப்பதற்குரிய நலம்மிக்க நல்ல நாளையும் பொழுதையும் குறிக்கொண்டு, விரும்பி, ஆகம நெறியின் படி, அடிநிலை எடுத்து, அன்பின் நிறைவினால் ஆசை மிகுந்து, இரவிலும் பகலிலும் உறங்காது கோயில் எடுக்கலானார்.

குறிப்புரை :

சாதனம் - திருக்கோயிலை எடுப்பித்தற்குரிய கல், மண், மரவகைகள் முதலாயின. தச்சர் - ஈண்டு மரவேலை செய்வாரே யன்றி, மண், கல் முதலியன கொண்டு ஏனைய பணிகள் செய்வாரை யும் குறித்து நின்றது. அடிநிலை - மேல் எடுக்கப்படும் கட்டடம், நிலைபெறுவதற்காகக் கற்களால் மண்ணின் கீழ் எடுக்கப்படுவது; இதனை அத்திவாரம் என்பர். பாரித்தல் - கால் கொள்ளுதல்.

பண் :

பாடல் எண் : 7

அடிமுதல் உபான மாதி
யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற
மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும்
முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில்
நிரம்பிட நினைவால் செய்தார்.

பொழிப்புரை :

திருக்கோயிலின் அடிநிலை முதல், திருக் கோபுரத்தின் அடிப்பகுதி வரையிலான அடுக்குகள் எல்லாவற்றையும் ஓவிய வேலைப்பாடுகள் பொருந்த மனத்தால் அமைத்து, விமானத் தின் முடிவில் அமையும் சிகரமும், ஆகமத்தில் விதிக்கப்பட்ட முழு அளவில் கொண்டு, நீண்ட நாள்கள் செல்ல, கோயில் நிறைவுபட அனைத்தையும் நினைவால் செய்தார்.

குறிப்புரை :

உபானம் - திருக்கோபுரத்தின் அடிக்கீழ் அமைக்கப் பெறும் முதல் சித்திர வரி. படை - அடுக்கு, இக்காலத்தும் சுவர் எடுக்கும் பொழுது குறிப்பிட்டதொரு அளவுடையதாக மேன்மேல் எடுத்துச் செல்லும் அடுக்குகளைப் படை என்பர். முன்னிய முழும் - விதித்த முழு அளவு.

பண் :

பாடல் எண் : 8

தூபியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
விதித்தநாள் சாரும் நாளில்.

பொழிப்புரை :

தூபியையும் பொருத்தி, நிறம் பொருந்திய கலவை பூசி, மேல் சிற்பங்களுக்குரிய ஒப்பனை வகைகளையும் செய்து, திருமுழுக்கிற்கெனத் தூயநீர் அமைந்த கிணறும் அமைத்துப், பக்கத் திலும் கோயில் சுற்றிலும் மதில்களை எடுத்துக், குளம் அமைத்து, மேலும் வேண்டுவனவற்றையும் வகைபடச் செய்து, நிலைபெற்ற இலிங்கத்திருமேனியில் சிவபெருமான் எழுந்தருளுமாறு உறுதிப் படுத்திய நாள் நெருங்கும்பொழுது,

குறிப்புரை :

தூபியும் நட்டு - திருக்கோவிலின் விமானத்து உச்சியில் கூரிய சிகரம் அமைதற்கெனத் தறியை அமைத்து. கூவல் - கிணறு. தொட்டு - அகழ்ந்து. மன்னுதாபரம் - சிவபரம்பொருளைச் சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளுதற்கெனச் செய்யப்படும் செயற்பாடுகள்: குடமுழுக்கு விழாச் செய்தல்.

பண் :

பாடல் எண் : 9

காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப்
பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத்
தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
இரவிடைக் கனவில் எய்தி.

பொழிப்புரை :

பல்லவ மன்னனாய இராசசிம்மன் காஞ்சி மாநகரத் தில் கற்கோயில் எடுப்பித்து, முழுமையாக அதன் பக்கங்களில் எல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வங்களை நியமிப்பவன், திருமாலும் தேடற்கு அரியவரான இறைவரைத் திருக்கோயிலில் எழுந்தருளு வித்தற்கென நியமித்த அந்நாளுக்கு முன்னைய நாளில், இதழ்கள் விரிகின்ற கொன்றை மலர்களைச் சூடிய இறைவர், இரவில் அவனது கனவில் தோன்றி,

குறிப்புரை :

இராசசிம்மன்: இவன் பரமேசுவர வர்மனின் மகன். கி.பி. 666 - 705 வரை ஆண்டவன். மாபெரும் வீரன். சிறந்த சிவ பத்தன். சைவசித்தாந்தத்தில் பேரறிவுடையவன். இசைப்புலவன். இவன் கட்டிய கோயில் காஞ்சிக் கயிலாய நாதர் கோயில் ஆகும்.

பண் :

பாடல் எண் : 10

நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.

பொழிப்புரை :

\'திருநின்றவூரில் உள்ள பூசல் என்ற அன்பன் நீண்ட நாட்களாக நினைவளவில் செய்த நன்மையால் நீடும் கோயிலில், நாளை நாம் புகுவோம்: எனவே, இங்குக் கனவில் பொருந்திய செய்கையை (குடமுழுக்கின்) நாளை வைத்துள்ளமையை மாற்றிக் கொள்க\' என்று கூறிக், கொன்றை சூடிய நீண்ட சடையுடைய இறைவர் பூசலாரின் கோயிலின் எழுந்தருளுவித்திருக்கும் திருமேனியைக் கொண்டருள எழுந்தருளினார்.

குறிப்புரை :

இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோயில் கல்வெட்டில், \'துஷ்யந்தன் முதலானோர் வான் ஒலி கேட்டதில் வியப்பில்லை. நற்குணம் பறந்தோடிப் போன இக்காலத்தில் அவ்வான் ஒலியை ஸ்ரீபரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பே\' என வரும் பகுதி, இவ்வரலாற்றிற்கு அரண் செய்யும், நன்று நீடு - நலங்கள் பலவும் நீடிய.

பண் :

பாடல் எண் : 11

தொண்டரை விளக்கத் தூயோன்
அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான்.

பொழிப்புரை :

தொண்டரான பூசலாரை இந்நிலவுலகத்தவர் அறி யும் பொருட்டுத் தூய சிவபெருமான் இங்ஙனம் கூறியருள, உறக் கத்தை விட்டு எழுந்த, திண்ணிய ஆற்றலையுடைய அம் மன்னன், `அத்தகைய திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்க வேண்டும்!\' என்று மேன்மேலும் எழுகின்ற பெருவிருப்பத்தோடும் சோலைகள் சூழ்ந்த திருநின்றவூரை அடைந்தான்.

குறிப்புரை :

தண்டலை - சோலைகள்.

பண் :

பாடல் எண் : 12

அப்பதி யணைந்து பூசல்
அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
வருகஎன் றுரைத்தான் வேந்தன்.

பொழிப்புரை :

மன்னன், அத் திருநின்றவூரை அடைந்து பூசலார் என்ற அடியவர் கட்டிய கோயில் எம் மருங்கில் உள்ளது? என்று அங்கு இருந்தவர்களைக் கேட்க, நீங்கள் கூறுமாறு பூசலார் கோயில் ஏதும் கட்டியது இல்லை! என்று உரைத்தனர். அது கேட்ட அரசன், மெய்யுணர்வு தலைப்பட்ட அந்தணர்கள் எல்லாம் ஒருங்கு வருக! என்று ஆணையிட்டான்.

குறிப்புரை :

குறிப்புரை இல்லை

பண் :

பாடல் எண் : 13

பூசுர ரெல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான்.

பொழிப்புரை :

(அவ்வாணையின் வண்ணம்) அப்பதியிலுள்ள அந்தணர்கள் எல்லாம் வந்து பல்லவ மன்னனைக் காணக், `குற்றம் இல்லாத பூசலார் என்பவர் யார்?\' என்று மன்னன் வினவ, அம் மறையவர் எல்லாம் `அவர் குற்றமற்ற அந்தணர்! இவ்வூரினர்\' என்று கூறினர். அவ்வாறு கூறிய அவர்களைப் பூசலாரை அழைத்து வருமாறு அனுப்பாது, இறைவரின் அன்பரான அப்பூசலாரிடத்தில் கொடிய வேலையுடைய மன்னன் தானே சென்று அடைந்தான்.

குறிப்புரை :

அடியவரைத் தம்பால் அழையாது, அடியவரிடத்துத் தான் சென்றான் எனவே, அவ்வடியவரிடத்து அரசனுக்கு இருந்த பத்திமை புலனாகின்றது.

பண் :

பாடல் எண் : 14

தொண்டரைச் சென்று கண்ட
மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
கண்ணுதல் அருள்பெற் றென்றான்.

பொழிப்புரை :

அத்தொண்டரை சென்று கண்ட மன்னன், அவரை வணங்கித் தாங்கள் இவ்விடத்துத் தேவர் பெருமானான சிவபெருமா னைத் தங்கள் கோயிலில் எழுந்தருளுவிக்கும் நாள் இன்று எனத் தெரிந்து, கண்ணுதல் பெருமானின் திருவருளால், உங்களைக் கண்டு, திருவடிகளை வணங்குவதற்கு வந்தேன் எனக் கூறினன்.

குறிப்புரை :

குறிப்புரை இல்லை

பண் :

பாடல் எண் : 15

மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.

பொழிப்புரை :

இங்ஙனம் பல்லவ மன்னன் சொல்லக் கேட்ட பூசலார் நாயனார், வியப்படைந்து அவரைப் பார்த்து, `என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு எம் பெருமானார் இவ்வாறு அருளிச் செய்தாராயின், முன்னதாக வேண்டும் நிதி கிடையாமையால், உள்ளத்தினால் முயன்று நினைவளவில் செய்த கோயில் இதுவாகும்\\\' என்று தம் சிந்தனையின் செயலாகச் செய்த கோயிலைத் தாம் விளங்க எடுத்துச் சொன்னார்.

குறிப்புரை :

என்னையும் என்புழி உம்மை இழிவு சிறப்பின்கண் வந்தது. இதனால் அடியவரின் அடக்க வுணர்வு புலனாகின்றது.

பண் :

பாடல் எண் : 16

அரசனும் அதனைக் கேட்டங்
கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
மீண்டுதன் மூதூர் புக்கான்.

பொழிப்புரை :

அரசனும் அவ்வடியார் கூறியதைக் கேட்டு, மிக்க வியப்படைந்து \'குற்றமில்லாத அன்பரின் பெருமை இருந்தவாறு என்னே!\' என்று அவரைப் போற்றி, வணங்கி, நறுமணம் மிக்க மாலை கீழே படியுமாறு நிலத்தில் விழுந்து வணங்கி, முரசுகள் ஒலிக்கும் படைகளுடன் திரும்பித் தன் பழைய ஊரை அடைந்தான்.

குறிப்புரை :

மூதூர் - காஞ்சி மாநகரம்.

பண் :

பாடல் எண் : 17

அன்பரும் அமைத்த சிந்தை
ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத்
தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம்
பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும்
பொற்கழல் நீழல் புக்கார்.

பொழிப்புரை :

அன்பரான பூசலாரும், தம் உள்ளத்தில் அமைத்த திருக்கோயிலில் சிவபெருமானை, நாளும் ஓரையும் நலம் மிகவந்த அமையத்து எழுந்தருளுவித்து, நன்மைமிக அதன் பின்பு செய்ய வேண்டிய வழிபாடுகளை எல்லாம் பல நாள்கள் விரும்பிச் செய்து, வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், பொன்னால் ஆய அம்பலத்தில் ஆடும் கூத்தப்பெருமானின் அழகிய திருவடி நீழலைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

நல்ல பெரும் பொழுது - நல்ல நேரம்; குடமுழுக்குச் செய்தற்குரிய நேரம்.

பண் :

பாடல் எண் : 18

நீண்டசெஞ் சடையி னார்க்கு
நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத
பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம்
பாதங்கள் பரவ லுற்றேன்.

பொழிப்புரை :

மிக நீண்ட சிவந்த சடையையுடைய இறைவற்கு உள்ளத்திலேயே கோயில் அமைத்துத் தாம் கொண்ட அன்பினை இடையறாது செலுத்திய பூசலாரின் பொன்னடிகளைப் போற்றி, ஆண்மைமிக்க சோழர் பெருமான் உலகம் உய்யப் பெற்றுக் கொடுத்த செல்வப் பாண்டி மாதேவியரான மங்கையர்க்கரசி அம்மையாரின் திருவடிகளைப் போற்றப் புகுகின்றேன்.

குறிப்புரை :

குறிப்புரை இல்லை
சிற்பி