நேச நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.

பொழிப்புரை :

பெருமை மிகும் தன்மையுடைய சிறப்பு மிக்க செயல் முறைமைகளில் ஒழுக்கம் குறையாத அன்புமிக்க சிந்தையும், வாய்மையும், நன்மையும் மிக்கவரான நேச நாயனார், நிலை பெற்று வாழ்தற்கு இடனான, உலகத்தில் உயர்ந்த புகழால் மிக்க பழைய பதியாவது, பிறைச் சந்திரன் தவழ்கின்ற முகட்டினையும் மேகங்கள் தவழும் உச்சியையும் கொண்ட மாடங்கள் மிக்க `காம்பீலீ\\\' என்னும் ஊராகும்.

குறிப்புரை :

காம்பீலீ என்னும் ஊர் பல்லாரி மாவட்டத்தில் காம்பீலீ என்னும் வட்டத்தில் உள்ள ஊராகும். இப்பதியில் தோன்றிய நேச நாயனார் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைப் பகுதியைச் சார்ந்த கூறை நாட்டில் வாழ்ந்து வந்தார் என்றும், இங்குள்ள சிவபெருமானின் திருக்கோயிலில் தம் பதியிலிருந்து கொணர்ந்த மூத்தபிள்ளையாரையும், இளைய பிள்ளையாரையும் (தண்டபாணி) எழுந்தருளுவித்து வழிபட்டார் என்றும் கூறுவர். கூறைநாட்டில் உள்ள சாலியர்களால் பங்குனித் திங்கள் உரோகிணி நாளில் இவருக்குக் குருபூசை விழா இன்றும் நிகழ்ந்து வருகிறது. (காம்பீலீ = காம்பிலி)

பண் :

பாடல் எண் : 2

அந்நக ரதனில் வாழ்வார்
அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள்
மரபின் மேம்பாடு பெற்றார்
பன்னாகா பரணற் கன்பர்
பணிதலைக் கொண்டு பாதம்
சென்னியிற் கொண்டு போற்றுந்
தேசினார் நேசர் என்பார்.

பொழிப்புரை :

அந்நகரத்தில் வாழ்பவரான நேச நாயனார் அறுவையர் (சாலியர்) குலத்தில் தோன்றியவர். நிலைபெற்ற நெசவுத் தொழிலில் தம் மரபில் உள்ளாரினும் மேன்மை அடைந்தவர். பாம்பை அணியாய் அணிந்த சிவபெருமானுக்கு அடியவர்களாய் உள்ளவர்களின் பணியினைத் தலைக்கொண்டு போற்றி, அவர்களின் திருவடிகளைத் தலையில் சூடிப் பணிந்து ஏத்தும் இயல்பு உடையவர்.

குறிப்புரை :

சாலியர் - நெசவாளர். அறுவை - ஆடை. தறியினின்றும் அறுத்து எடுப்பதால் அறுவை எனப்பட்டது. இவை வெட்டி எடுப்பதால் வேட்டி என்றும், துணித்து எடுப்பதால் துணி என்றும் அழைக்கப் பெறுவனவாயின. இம் மரபில் தோன்றியவரே மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார் என்னும் புலவராவர். இவர் கடைச்சங்க காலத்தவர். பன்னகம் - பாம்பு.

பண் :

பாடல் எண் : 3

ஆங்கவர் மனத்தின் செய்கை
யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை
யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை
தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும்
பழுதில்கோ வணமும் நெய்வார்.

பொழிப்புரை :

அந்நிலையில், அவர் தம் உள்ளத்தின் நினைவை சிவபெருமானின் திருவடி மலர்களுக்கு ஆக்கி, மேன் மேலும் ஓங்கிய வாக்கின் செயலை உயர்வுடைய ஐந்து எழுத்துக்கு ஆக்கி, மேற்கொண்ட கைத்தொழில் திறனையெல்லாம் தம் இறைவரின் அடியவர்களுக்காக ஆக்கி, நல்ல பான்மையுடைய கீள் உடையும், பழுது இல்லாத கோவணமும் ஆகிய இவற்றை நெய்துவருவாராகி,

குறிப்புரை :

மனத்தின் செய்கை - நினைதல், `நினையாது ஒரு போதும் இருந்தறியேன்` என்ற நாவரசர் திருவாக்கும் காண்க. `சிந்தனை நின்தனக்காக்கி நாயினேன் தன் கண் இணை நின் திருப்பாதப் போதுக் காக்கி, வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆரத் தந்தனை` எனும் திருவாசகமும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 4

உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்.

பொழிப்புரை :

நல்ல உடையுடன் ஒப்பில்லாத கோவணத்தையும் நெய்து, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் அடியார்கள் வரின், அவர்கள் வேண்டியவாறே கொடுக்கும் முறைப்படி, இடையறாது கொடுத்து, நாளும் அவர்களின் திருவடிகளை வணங்கிப் போற்றி அடையத்தக்க நன்மையைப் பெற்றவராகிச் சிவபெருமானின் திருவடி நீழலைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

குறிப்புரை இல்லை

பண் :

பாடல் எண் : 5

கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்.

பொழிப்புரை :

தொகுதியான சடையை முடியாக உடைய இறைவரின் திருவடிகளைச் சேர்வதற்கு ஏற்பத் தம்மைச் சார்ந்திருந்த வினைச் சார்புகளை அறுத்த நேச நாயனாரின் திருவடிகளை வணங்கித், தவச் சிறப்பால் தம் முன்னைப் பிறப்பையுணர்ந்து அவ்வுணர்ச்சியுடன் வந்து தோன்றி, விடைக் கொடியை உயர்த்திய இறைவற்குத் திருக்கோயில்கள் பலவற்றை எடுத்து, மண்ணுலகம் காவல் கொண்டு, வெற்றி பொருந்திய மன்னரான கோச்செங்கட்சோழரின் பெருமையை இனிச் சொல்லத் தொடங்குவாம்.

குறிப்புரை :

கற்றை - தொகுதி, கலந்தவினை - உயிரொடு கலந்த வினை.
சிற்பி