கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

துலையிற் புறவின் நிறையளித்த
சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந்
தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த்
தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த
நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.

பொழிப்புரை :

துலையின் தட்டில் வைத்துப் புறாவின் எடைக்கு ஒப்பத் தன் உடலின் தசையை அறுத்து வைத்து, நிறுத்துக் கொடுத்த, பேரரசர் சிபியின் மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாயுள்ள சோழ நாட்டில், அலைகளால் முத்துக்களையும், அகிலுடன் சந்தன மரத்தையும் கொண்டு வரும் அழகான நீரையுடைய காவிரியாற்றின் மணிகளை ஒதுக்கும் கரையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் அருகில், குளிர்ச்சியையுடைய சோலைகளில் நிலையாக வளர்கின்ற மரங்கள் நெருங்கிய நீண்ட குளிர்ந்த காடு ஒன்று இருந்தது.

குறிப்புரை :

துலை - தராசு. சிபி என்பார் சோழர் குலத்தில் தோன்றிய பேரரசர் ஆவர். இவர் சீகாழியில் வேள்வி செய்த பொழுது, இறைவர் இவர்தம் பண்பை விளக்குதற்காகத் திருவுளம் கொண்ட வகையில், தீக்கடவுள் ஒருபுறாவாகவும், இந்திரன் அதனைத் துரத்தி வரும் பருந்தாகவும் வரப், புறா தன்பால் அடைக்கலம் புக, அது தன் இரையென உரிமை கொண்டாடிய பருந்துக்கு, அப்புறாவின் எடையளவு தன் உடலை ஈந்து அளித்தனன். இவ்வரலாறே ஈண்டுக் குறிக்கப்படுகிறது. சந்திர தீர்த்தம் - தக்கன் வேள்வியில், சந்திரன் தனக்குற்ற குறையைத் தீர்க்க, தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டு நன்மை அடைந்தான். ஆதலில் அவன் பெயர் அமைந்த நீர்நிலை உருவாயிற்று.

பண் :

பாடல் எண் : 2

அப்பூங் கானில் வெண்ணாவல்
அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக்
கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட் டொழுகுமால்.

பொழிப்புரை :

அப்பூங்காவில், வெண்ணாவல் மரத்தின் கீழ், முற்காலத்தில், திருமால் தேடிய உண்மை வடிவான மலர் போன்ற திருவடிகளையுடைய இறைவர் சிவலிங்கத் திருமேனி கொண்டு வெளிப்பட்டருள, பெருகிய தவத்தையுடைய ஒரு வெண்மையான யானை, ஒருநாள் தன் துதிக்கையால் அழகிய நீரை முகந்து அத் திருமேனிக்குத் திருமுழுக்காட்டி, நறுமணமுடைய மலர்க் கொத்துகளையும் அணிவித்து வழிபட, அவ்வன்பு மீதூர்ந்த நிலையில், கரிய குவளை போன்ற கழுத்தையுடைய இறைவரை நாள்தோறும் வழிபட்டு வந்தது.

குறிப்புரை :

மைப்பூங்குவளை - கருங்குவளை. திருக்கயிலையில் சிவகணத்தவராக வாழ்ந்தவர்களுள் மாலியவான், புட்பதந்தன் என்பார் இருவர். இவர்கள் தாம் மேற்கொண்டிருக்கும் சிவத் தொண்டில் தாம் தாமும் மேம்பட்டவர் என மாறுபட்டு, இறுதியாக மாலியவான் புட்பதந்தனை யானையாகுக என்றும், புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகுக என்றும் சபித்துக் கொண்டனர். இருவரும் இறைவனின் ஆணையின் வண்ணம் யானையும் சிலந்தியுமாகத் தோன்றி இத் திருப்பதியில் தம்முள் மாறுபட்ட சிவத்தொண்டினை ஆற்றி வந்தனர். அந்நிலையில் அவர்கள் வழிபட்ட இடமே திருவானைக்கா ஆகும். இதனை வரும் பாடலால் அறியலாம். இங்குக் குறிக்கப்பெற்ற யானை புட்பதந்தன் ஆதலின் `மிக்க தவத்தோர் வெள்ளானை\' என்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 3

ஆன செயலால் திருவானைக்
காவென்று அதற்குப் பெயராக
ஞான முடைய ஒருசிலந்தி
நம்பர் செம்பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகுஉதிரா
வண்ணங் கலந்த வாய்நூலால்
மேல்நல் திருமேற் கட்டியென
விரிந்து செறியப் புரிந்துளதால்.

பொழிப்புரை :

முற்கூறிய அத்தகைய செயலால் அத்திருப்பதிக்குத் `திருவானைக்கா\\\' எனப் பெயர் வழங்க, ஞானமுடைய சிலந்தி ஒன்று அவ்விறைவரின் சிவந்த பொன் மயமான திருமுடியின் மீது கதிரவ னின் வெம்மையும் உலர்ந்த சருகுகளும் படாதவாறு, தன்னுள் கலந்த வாய் நூலினால், முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டி போல விரிவுடைய தாய வலையை நெருங்கச் செய்து அமைத்தது.

குறிப்புரை :

முற்பிறவியில் மாலியவான் என்னும் பெயர் உடைய சிவகணமே சிலந்தியாய்த் தோன்றி இவ்வழிபாட்டைச் செய்தலின் `ஞானமுடைய சிலந்தி\\\' என்றார் ஆசிரியர். கானல் விரவும் சருகு - வெப்பமும், வெண்நாவலில் பொருந்தி இருக்கும் சருகும். மேல் - திரு முடிமேல். நல் திருமேற்கட்டி - நல்ல அழகிய மேல் விதானம். ஆல் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 4

நன்றும் இழைத்த சிலம்பிவலைப்
பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என்
றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற்
றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள்
அடல்வெள் ளானை அழித்ததால்.

பொழிப்புரை :

சிலந்தி நன்றாகக் கட்டிய வாய் நூல் வலையின் பரப்பை, இறைவர் திருவடியை வணங்கச் சென்ற யானை, `இது தூய்மையற்றது\' என்று அழிக்க, `இன்று யானையின் கை சுழன்றதால் அந்த வலை அழிந்தது\' என்று எண்ணிச், சிலந்தி மீண்டும் அந்த வலையை அமைக்க, அதனை மறுநாள் வலிமையுடைய யானை திரும்பவும் அழித்தது.

குறிப்புரை :

அநுசிதம் - தூய்மையற்றது. சிலந்தி தன் வாயால் இழைத்தமையின் அன்னதாயிற்று. கரம் சுலவிற்று - யானையின் துதிக்கை சுழற்றப்பட்டதால் அழிந்தது யானை அதனையும் அழிக்கும் பொழுது தன் துதிக்கையைச் சுழற்றி அழிக்கும். அவ்வியல்பே ஈண்டும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எம்பி ரான்தன் மேனியின்மேல்
சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம்
அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில்
புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின்
மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.

பொழிப்புரை :

எம்பெருமான் திருமேனியின் மீது இலைச் சருகுகள் விழாது தடுப்பதற்காக, நான் வருந்தி மேற்கட்டியாக அமைத்த நூல் வலையை, இவ் யானை அழிப்பதா? என்று, மிகவும் சினந்து எழுந்து, சிலந்தி மனம் புழுங்கி, யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க, அச்செயலால் அந்த யானை தன் துதிக்கையைத் தரையில் அடித்து, மோதி, நிலை குலைந்து விழுந்து இறந்தது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 6

தரையிற் புடைப்பக் கைப்புக்க
சிலம்பி தானும் உயிர்நீங்க
மறையிற் பொருளுந் தருமாற்றான்
மதயா னைக்கும் வரங்கொடுத்து
முறையில் சிலம்பி தனைச்சோழர்
குலத்து வந்து முன்னுதித்து
நிறையிற் புவனங் காத்தளிக்க
அருள்செய் தருள நிலத்தின்கண்.

பொழிப்புரை :

அவ்வானை, தன்கையை நிலத்தில் மோதியதால், துதிக்கையினுள் புகுந்த சிலந்தியும் உயிர் நீங்க, நான்மறையின் பொருளாக விளங்கும் இறைவர் அருள் வழங்கும் முறையினால், மதமுடைய அவ்வானைக்கு ஏற்ற வரத்தை அளித்து, முறைப்படி சிலந்தியைச் சோழர் குலத்தில் முற்படப் பிறந்து, இவ்வுலகம் அறநிலையில் நிற்குமாறு அரசு செய்ய அருள, இந்நிலவுலகில்,

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 7

தொன்மைதரு சோழர்குலத்
தரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி
கமலவதி யுடன்சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை
மன்றாடு மலர்ப்பாதம்
சென்னியுறப் பணிந்தேத்தித்
திருப்படிக்கீழ் வழிபடுநாள்.

பொழிப்புரை :

பழம்பெருமையுடைய சோழர் குலத்தில் தோன்றி, சோழ நாட்டை ஆண்ட சுபதேவன் என்பான், தன் உரிமைக் கிழத்தியாம் கமலாவதியாருடன் சேர்ந்து, நிலைபெற்ற புகழையுடைய தில்லை நகரில், பொன்மன்றத்தில் ஆனந்தக் கூத்து இயற்றும் நடராசப் பெருமானின் மென்மையான திருவடியில், தலைதோயப் பணிந்து போற்றி, திருக்களிற்றுப்படியின் கீழிருந்து பணிசெய்துவரும் நாள்களில்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 8

மக்கட்பே றின்மையினால்
மாதேவி வரம்வேண்டச்
செக்கர்நெடுஞ் சடைக்கூத்தர்
திருவுள்ளஞ் செய்தலினால்
மிக்கதிருப் பணிசெய்த
சிலம்பிகுல வேந்துமகிழ்
அக்கமல வதிவயிற்றின்
அணிமகவாய் வந்தடைய.

பொழிப்புரை :

மக்கட்பேறு இல்லாமையால் அரசமாதேவி, அதனைப் பெறும் வரத்தை வேண்டச், செவ்வானம் போன்ற நீண்ட சடையையுடைய சிவபெருமானும் இரங்கித், திருவுளம் பற்றியதால், மிக்க பணியைச் செய்த சிலந்தியானது குலவேந்தன் மகிழும் தேவியான கமலவதியின் திருவயிற்றில் அழகிய ஆண் குழந்தையாய் வந்து சேர,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 9

கழையார் தோளி கமலவதி
தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த
வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப்
பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும்
அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற தோளையுடைய கமலவதியின் இடத்தில் கருப்பம் முற்றும் நாள் நிரம்பி, யாவரும் விரும்பி ஏற்கும் குழந்தையைப் பெறுதற்குரிய நேரத்தில், கால நிலைமை அறியும் கணிதர்கள் (சோதிடர்கள்) `ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கு மாயின், இடம் அகன்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்யும்\' என்று கூறிய அளவில், அதனால் ஒளி விளங்கும் அணியை அணிந்த அரசமாதேவியும்,

குறிப்புரை :

விழைவார் மகவு - யாவரும் விரும்பத்தக்க குழந்தை. உழையார் புவனம் ஒரு மூன்றும் - இடம் அகன்ற மூவுலகங்களும்.

பண் :

பாடல் எண் : 10

பிறவா தொருநா ழிகைகழித்துஎன்
பிள்ளை பிறக்கும் பரிசென்கால்
உறவார்த் தெடுத்துத் தூக்கும்என
வுற்ற செயன்மற் றதுமுற்றி
அறவா ணர்கள்சொல் லியகாலம்
அணையப் பிணிவிட்டு அருமணியை
இறவா தொழிவாள் பெற்றெடுத்துஎன்
கோச்செங் கண்ணா னோஎன்றாள்.

பொழிப்புரை :

இப்பொழுது பிறவாமல், ஒரு நாழிகை கழித்து, இந்தப் பிள்ளை பிறந்தால், பிற்காலத்தில் உலகம் எல்லாம் காக்கும் பேறு பெறுவான் என்று அறவோர்கள் சொல்லிய நேரம் கடக்கும்வரை இருந்து, பின்னர் பெற்றெடுத்து, `நீ என் கோச்செங்கண்ணனோ?` என அழைத்தாள் கமலவதி.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 11

தேவி புதல்வன் பெற்றிறக்கச்
செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன்
தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத்
தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து
தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.

பொழிப்புரை :

தன் மனைவியான கமலவதி மகனைப் பெற்றெ டுத்து இறந்துவிடச், செங்கோன்மையுடைய சோழனான `சுபதேவன்\\\', தன் உயிர் போன்ற அம்மகனை வளர்த்து, உரிய வயதில், அழகு பொருந்திய முடியைப் பொருந்திய தனயன் என்னும் உரிமைப்படி, முடிசூட்டி, அரசன் எனும் பட்டம் தந்து, தானும் விரும்புதற்குரிய பெரிய தவம் செய்தல் எனும் குற்றம் இல்லாத நெறியை மேற் கொண்டு, அதன் பயனாக இறைவரின் இருக்கையான சிவலோகத்தை எய்தினன்.

குறிப்புரை :

உரிமை முடி - தந்தை தனயன் என்னும் வழிவழி வரும் உரிமை மரபால் முடிசூட்டி.

பண் :

பாடல் எண் : 12

கோதை வேலார் கோச்செங்கட்
சோழர் தாம்இக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி அருளால்முன்
அறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் தான்மகிழ்ந்து
பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந்
தொண்டு புரியுங் கடன்பூண்டார்.

பொழிப்புரை :

மாலை அணிந்த வேலையுடைய கோச்செங்கட் சோழனார், இம்மண்ணுலகத்தில் முதன்மை பொருந்திய சிவபெரு மான் திருவருளால், தம்முன்னைப் பிறப்பின் நிலையை உணர்ந்த நினைவுடன் பிறந்து, அரசாள்பவராய், உயிர்கட்குத் தலைவரான இறைவர், தாம் மகிழ்வுடன் பொருந்தி வீற்றிருந்தருளும் பேரருள் நிறைந்த கோயில்கள் பலவற்றையும் பெருவிருப்பத்துடன் எடுப்பிக் கும் திருத்தொண்டை மேற்கொண்டார்.

குறிப்புரை :

கோதைவேல் ஆர் - மாலையையுடைய வேலைப் பொருந்திய. பெருந்தண் சிவாலயம் - மாடக்கோயில். முற்பிறவியில் யானை பகையாய் இருந்தமையின் இப்பிறவியில் அவ்வினங்களில் யாதொன்றும் ஏற இயலாதவாறு கோயில் எடுப்பித்தனன். இவ்வாறு அமைந்த கோயில்களை மாடக்கோயில் என்பர். இவ்வகையில் அமைந்த கோயில்கள் 78 ஆகும். `பெருங்கோயில் எழுபதினோடு எட்டும்`(தி.6 ப.71 பா.5) எனவரும் நாவரசர் திருவாக்கால் இவ் வுண்மை அறியப்படும். `எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது எடுத்தனன்` என்பர் ஆழ்வாரும்.

பண் :

பாடல் எண் : 13

ஆனைக் காவில் தாம்முன்னம்
அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ
லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான்
அமருங் கோயிற் பணிசமைத்தார்.

பொழிப்புரை :

திருவானைக்காவில் தாம் முற்பிறப்பில் திருவருள் பெற்றமையை அறிந்தவர் ஆதலால், அத்திருப்பதியில் மானை ஏந்திய கைகளையுடைய இறைவர் மகிழும் கோயிலை எடுப்பிப்பாராகி, மெய்ஞ்ஞானத்தின் சார்புடைய வெண்ணாவல் மரத்துடன் பொருந்த, நன்மை சிறந்தோங்க, நீலமலர் போன்ற கழுத்தையுடைய தம் இறைவர் வீற்றிருக்கும் கோயில் பணியைச் செய்து அமைத்தார்.

குறிப்புரை :

சம்பு முனிவர் உள்ளிட்ட பல முனிவர்களும் இருந்து தவம் செய்ததும், இறைவர் வெளிப்பட்டு அருளியதுமான சிறப்புக்கள் உடைமையின் `ஞானச்சார்பாம் வெண்ணாவல்` என்றார். இனித் தாம் ஞானச்சார்பு பெறுதற்காம் பொருட்டு கோயிற் பணியைச் செய்தார் எனப் பொருள் கோடலுமாம்.

பண் :

பாடல் எண் : 14

மந்திரிகள் தமைஏவி
வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ
ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில்
அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந்
தானங்கள் பலசமைத்தார்.

பொழிப்புரை :

கொடைச் சிறப்புடைய அநபாயப் பேரரசரின் முன்னோராக அமையும் குலமுதல்வரான முதன்மையுடைய கோச் செங்கண்ணனார், தம் அமைச்சர்களை அனுப்பி, சிறப்புமிக்க சோழ நாட்டில் அகன்ற பதிகள் தோறும் பிறையை ஏற்றருளும் சிவபெரு மான், விரும்பி எழுந்தருளுதற்கான அழகு நிறைந்த மாடக் கோயில் கள் பலவற்றையும் கட்டச் செய்தார்.

குறிப்புரை :

இச் சோழர் பெருமகனார் எடுப்பித்த கோயில்கள் 78 என நாவரசர் அருளியிருக்கவும், சேக்கிழார் அத்தொகை கூறாது `பல சமைத்தார்` என்றளவிலேயே கூறற்குக் காரணம், செய்த அறங்களைக் கணக்கிடலாகாது என்பது பற்றியும், நிறைவு செய்த கோயில்கள் மேற்கண்ட தொகைக்கு உரியன வேனும், மேலும் எடுப்பிக்க நினைந்த கோயில்கள் பலவாம் என்பது பற்றியும் ஆம் என விளக்கம் காண்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 15

அக்கோயில் தொறுஞ்சிவனுக்
கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள்
விருப்பினால் மிகஅமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோல்
முறைநிறுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முதல் நடமாடும்
முதல்தில்லை முன்னினார்.

பொழிப்புரை :

அவ்வகையிலான கோயில்கள் தோறும் இறை வற்குத் திருவமுதுக்குரிய படித்தரம் முதலான அனைத்துச் செயல் களுக்கும் வேண்டிய பெருஞ் செல்வங்களைத் தம் விருப்பத்திற் கிணங்கப் பெரிதும் அமைத்து, எல்லாத் திசைகளிலும் ஒப்பில்லாத தம் செங்கோல் ஆணை முறையைச் செலுத்தி நிறுத்தித், தேர்ப்படையை உடைய கோச்செங்கண்ணனார் முக்கண்களையுடைய இறைவர் திருக்கூத்து இயற்றுகின்ற முதன்மையுடைய திருத்தில்லையை நினைந்து அடைந்தார்.

குறிப்புரை :

இறைவற்குரிய திருவமுது முதலாக உள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் (ஆண்டாண்டு தோறும் தவறாது நிகழ்வதற் கென) நிலங்களாகவோ பணமாகவோ உரிய பொருள்களாகவோ கொடுக்கப்படும் பொருள்கள் `அறக்கட்டளை\' எனப்படும். நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் தொடர்ந்து நிகழ இவ்வறக்கட்டளைகள் பயன்பட்டு வரும் என்று நம் முன்னோர் கருதினர்.

பண் :

பாடல் எண் : 16

திருவார்ந்த செம்பொன்னின்
அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப்
பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத்
தொழுதேத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு
மாளிகைகள் பலசமைத்தார்.

பொழிப்புரை :

தெய்வத் தன்மை உடைய செம்பொன்னால் செய்யப்பெற்ற,பொன்னம்பலத்தில் நடம்புரியும் நடராசப் பெருமான் திருவடிகளை வணங்கி, பேரன்புடன், உள்ளம் உருகி நின்று வழிபட்டுவரும் நாளில், தொன்றுதொட்டுவரும் வாய்மை மறையவர்களாகிய தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் பல எடுப்பித்து உதவினான்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 17

தேவர்பிரான் திருத்தொண்டில்
கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி
யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந்
திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை
வேந்தர்திரு வடிநிழற்கீழ்.

பொழிப்புரை :

தேவதேவர்களின் தலைவனாகிய சிவபெருமானுக்குப் பல திருப்பணிகள் செய்து மகிழ்ந்த கோச்செங்கட்சோழன், உலகம் முழுவதும் நடுநலையோடு அரசு புரிந்து, நல்ல பல தொண்டுகளை இயற்றி, தேவர்கள் யாவரும் வாழ்த்த, தில்லைச்சிற்றம்பலப் பெருமான் திருவடிக்கீழ் எய்தினார் சிறந்து.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 18

கருநீல மிடற்றார் செய்ய
கழலடி நீழல் சேர
வருநீர்மை யுடைய செங்கட்
சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசைகொள் யாழின்
தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர்
திறம்இனிச் செப்ப லுற்றேன்.

பொழிப்புரை :

கரிய நீல மலரைப் போன்ற கழுத்தையுடைய இறைவரின், செம்மை பொருந்திய திருவடி நீழலில் சேர்ந்து இன்புறும் கோச்செங்கட் சோழரின் மலர் போன்ற அடிகளை வாழ்த்தி, இனிய தன்மை பொருந்திய இசையை வழங்கும் யாழினது தலைவராய் உலகம் போற்றும் திருநீல கண்ட யாழ்ப்பாணரின் திறத்தை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன். கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

***************
சிற்பி