திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

எருக்கத்தம் புலியூர் மன்னி
வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப்
பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம்
பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும்
ஆலவாய் பணியச் சென்றார்.

பொழிப்புரை :

திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஎருக்கத்தம் புலியூரில் நிலைபெற்று வாழ்பவர், அவர் சிவபெருமானின் பொருள் சேர் புகழைச் சிறப்புடைய தமது தக்க யாழில் அமைத்துப் போற்று பவர், செழிப்புமிக்க சோழ நாட்டில் உள்ள பதிகள் அனைத்திற்கும் சென்று வணங்கி வருபவர், திருநான்மாடக்கூடல் என்னும் மதுரை யில் மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான் நிலைபெற எழுந் தருளியுள்ள திருஆலவாயினைப் பணியச் சென்றார்.

குறிப்புரை :

திருஎருக்கத்தம்புலியூர் - இராசேந்திரப் பட்டணம் என அழைப்பர். நடுநாட்டில் திருமுதுகுன்றத்திற்கு தெற்கே 12 கிமீ. தொலைவில் உள்ளது.

பண் :

பாடல் எண் : 2

ஆலவாய் அமர்ந்தார் கோயில்
வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த
பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில்
கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர்
பாணிகள் யாழில் இட்டார்.

பொழிப்புரை :

திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறை வரின் திருக்கோயிலின் வாயிலை அடைந்து, அங்கு நின்று, பாலையாய் நின்ற பதினான்கு வகையில் அமைந்த பண் பெறும்படி கருவியின் நரம்புகளை முறுக்கிப், பண்கள் பலவற்றுள்ளும் அக்காலத்துக்கு இசைந்த பண்ணில் நரம்புகளை விரலின் தொழிலால் பலமுறையும் அளந்தறிந்து, பண்ணின் அமைதி யாழ்க்கருவியில் வரப்பெற்ற பின் னர், மணம் கமழும் நீண்ட கூந்தலையுடைய உமை அம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் இசைப் பாடல்களை யாழில் இசைத்தார்.

குறிப்புரை :

யாழிலிருந்து செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்ற ஏழிசைகளும் பிறக்கும். இவை வரன் முறை, இடமுறை எனத் திரிபு வகையால் இரு திறப்படப் பாலை ஈரேழு ஆகும் என்பர்.

பண் :

பாடல் எண் : 3

மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

அப்பாணனாரின் யாழ்க்கருவியில் இசைக்கப் பெற்ற பாடலை மதுரையில் திருவாலவாயில் வீற்றிருக்கின்ற பெருமானார் தம் திருவுளத்தில் கொண்டருளி, தம் தொண்டர்களுக்கெல்லாம் அன்றைய கனவிலே தோன்றி ஆணையிட்டருளியவாறு, அவ்வடிய வர்கள், மறுநாள், சிவபெருமானின் அருளைப் பெற்ற பெரும் பாணனாரைப் பகைவரின் முப்புரங்களை எரித்த இறைவரின் திருமுன்பு கொண்டு புகுந்தனர்.

குறிப்புரை :

பெரும்பாணர், சிறுபாணர் என்ற பகுப்பு அவரவரும் கொண்டிருந்த யாழ் பற்றியதாகும். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என வழங்குவதும் இதுபற்றியேயாம். பாணர் கள் அக்காலமரபில் கோயில்களில் உட்சென்று வணங்கத் தகாத வர்களாய் இருந்தனர். நம் பாணர் திருவருட் செல்வராய் விளங்கிய மையின், இறைவன் அருளிப் பாட்டால் அடியவர்களால் உள் அழைத்துச் செல்ல நேர்ந்தது.

பண் :

பாடல் எண் : 4

அன்பர்கள் கொண்டு புக்க
பொழுதினில் அரிவை பாகன்
மன்பெரும் பாண னாரும்
மாமறை பாட வல்லார்
தன்பெரும் பணியாம் என்று
தமக்குமெய் யுணர்த லாலே
முன்பிருந் தியாழிற் கூடல்
முதல்வரைப் பாடு கின்றார்.

பொழிப்புரை :

அடியவர்கள் அழைத்துச் சென்று கோயிலில் புகுந்த போது, `உமை ஒரு கூறரான இறைவரின் பெரிய ஆணையே யாகும் இது\' என்று தம் உணர்வினுள் உண்மை புலப்பட நின்ற பெரும் பாணரும், பெரிய நான்மறைகளை இசைப்பதில் வல்லவரான சோம சுந்தரப் பெருமானது திருமுன்பு இருந்து கொண்டு, அவ்வாலவாய்ப் பெருமானைப் பாடுபவராய்,

குறிப்புரை :

பணி - கட்டளை; ஆணை.

பண் :

பாடல் எண் : 5

திரிபுரம் எரித்த வாறும்
தேர்மிசை நின்ற வாறும்
கரியினை யுரித்த வாறும்
காமனைக் காய்ந்த வாறும்
அரிஅயற் கரிய வாறும்
அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப்
பரமனார் அருளி னாலே.

பொழிப்புரை :

முப்புரங்களையும் எரித்த பண்பையும், அதன் பொருட்டுத் தேரின் மிசை நின்றருளிய தன்மையையும், யானையை உரித்த வரலாற்றினையும், காமனைக் காய்ந்த தன்மையையும், மாலும் நான்முகனும் அறிவதற்கு அரியவராய் நின்ற பாங்கையும் அடியவர்க்கு எளியவராயின தன்மையையும், அன்பினால் பாடக் கேட்டு, இறைவரின் திருவருளினால்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 6

அந்தரத் தெழுந்த ஓசை
அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந்
தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர்
இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந்
திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.

பொழிப்புரை :

விண்ணகத்து எழுந்த ஓசையானது `அன்பினால் பாணர் பாடும் இசையையுடைய யாழானது தரையில் உள்ள குளிர்ச்சி தாக்கினால் நரம்புகளின் இறுக்கம் சிதைந்து அந்த நல்ல இனிய இசை கெடும் ஆதலால், அழகிய பலகையை முன்னால் நீங்கள் இடுங்கள்!\' என்று கூற, அடியவர்களும் அவ்வாறே, அழகிய பொற்பலகையை இட்டனர். செந்தமிழ்ப் பாணரும் திருவருளைப் பெற்று அதன் மீது அமர்ந்து பாடினர்.

குறிப்புரை :

அந்தரம் - விண்ணகம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 7

தமனியப் பலகை ஏறித்
தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை
உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி
எண்ணில்தா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளாது ஆரூர்
ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.

பொழிப்புரை :

பொற்பலகையின் மீது ஏறி, யாழை இசைத்து, உமையொரு கூறரான இறைவரின் வள்ளன்மையை உலகெலாம் அறியுமாறு போற்றிப் புகழ, அதனைக் கேட்ட தேவர்களும் ஏத்த, அவ் விடத்தினின்றும் சென்று, அளவில்லாத பல பதிகளையும் வணங்கிச் சென்று, தேவர் உலகையாளும் ஆட்சியை விடுத்து வந்து, திருவா ரூரை ஆட்சி கொள்ளும், தியாகேசப் பெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை அடைந்தார்.

குறிப்புரை :

தமனியம் - பொன். தந்திரி - நரம்பு. `அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே\' (தி.6 ப.25 பா.1) என நாவரசர் அருளிய திருவாக்கினை இப்பாடலில் வரும் நான்காவது அடி முகந்து நிற்கின்றது.

பண் :

பாடல் எண் : 8

கோயில் வாயில் முன்னடைந்து
கூற்றன் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெருங்கருணை
அடியார்க் களிக்குந் தண்ணளியும்
ஏயுங் கருவி யில்தொடுத்தங்
கிட்டுப் பாடக் கேட்டுஅங்கண்
வாயில் வேறு வடதிசையில்
வகுப்பப் புகுந்து வணங்கினார்.

பொழிப்புரை :

கோயிலின் வாயில் முன் நின்று, இயமனை உதைத்தருளிய பெரிய உண்மையையும், தாயினும் மிக்க பெருங் கருணையினையும் அடியவர்களுக்கு வழங்கிவரும் குளிர்ந்த பேரருள் திறத்தையும், பொருந்திய யாழிலே அமைத்துப் பாட, அதைத் திருச்செவியில் ஏற்றருளிய இறைவரும், அவர் வழிபடுதற்கென அவ்விடத்தின் வடக்குத் திக்கில் வேறு வாயில் ஒன்றை வகுத்தருள, அதன் வழியே உள் புகுந்து வணங்கினார்.

குறிப்புரை :

மதுரையில் ஆலவாயின்கண் இப்பெரும்பாணரை அடியவர்களின் வழி நேர்முகமாக அழைத்து வரச்செய்த இறைவர், இங்கு அவர் வருதற்கெனத் தனிவாயில் அமைத்து வரச் செய்கின் றார். இவ்வருளிச் செயல், `ஆட்பாவலர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்க வேண்டா\' (தி.3 ப.54 பா.4) எனவரும் திருவாக்கினையே நினைவுகூரச் செய்கின்றது.

பண் :

பாடல் எண் : 9

மூலத் தானத் தெழுந்தருளி
இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
அமருந் தானம் பலவணங்கி.

பொழிப்புரை :

கருவறையில் (திருமூலட்டானத்தில்) விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, எஞ்சிய காலம் அங்கிருந்து இறைவரின் திருவருள் குறிப்பைப் பெற்றுச், சிவனடியார்கள் நீங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நஞ்சுண்ட கழுத்தையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,

குறிப்புரை :

கருவறையில் (திருமூலட்டானத்தில்) விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, எஞ்சிய காலம் அங்கிருந்து இறைவரின் திருவருள் குறிப்பைப் பெற்றுச், சிவனடியார்கள் நீங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நஞ்சுண்ட கழுத்தையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,

பண் :

பாடல் எண் : 10

ஆழி சூழுந் திருத்தோணி
யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம்
ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன்
கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில்
வந்தார் சந்த இசைப்பாணர்.

பொழிப்புரை :

கருவறையில் (திருமூலட்டானத்தில்) விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, எஞ்சிய காலம் அங்கிருந்து இறைவரின் திருவருள் குறிப்பைப் பெற்றுச், சிவனடியார்கள் நீங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நஞ்சுண்ட கழுத்தையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,

குறிப்புரை :

ஆழி - கடல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 11

ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.

பொழிப்புரை :

யாழ்ப்பாணர் சீகாழிக்கு வந்ததைச் சிவ ஞானம் உண்ட திருஞானசம்பந்தர் கேட்டருளி, நல்ல இசையையுடைய யாழ்ப்பாணருக்கு ஏற்றவாறு சிறப்புச் செய்து, விரும்பி உறையும் நாளில், அவர் பாடுகின்ற மேன்மையுடைய திருப்பதிகத்து இசையை யாழில் இட்டு வாசிக்கும் பேறு பெற்று, அவருடனே கூடத் தங்கிய பின்னர், நீல மலர் போலும் கழுத்தினையுடைய இறைவரின் திரு நல்லூர்ப் பெருமணத்தில், அவருடனே இறைவரின் திருவடிகளை அடைந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 12

வரும்பான் மையினில் பெரும்பாணர்
மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்ல லுறுகின்றாம்.

பொழிப்புரை :

அடியவர் வரலாறுகளைத் தொடர்ந்து கூறிவரும் மரபில், திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மலர் போன்ற திருவடிகளை வணங்கி, நெல்லும் கரும்பும் நிறைந்த வயல்களையுடைய திரு நாவலூரில் வாழ்ந்து வந்த சிவாகம நெறி நின்று ஒழுகும் சிவ வேதியரும், முளைக்கும் அழகிய பிறையையும், பாம்பையும், சூடிய சிவபெருமானின் திருவருளைப் பெற்றவரும் ஆகிய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையுடைய சடையனாரது பெருமையைச் சொல்லப் புகுகின்றாம். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

************
சிற்பி