சிறப்புப் பாயிரம்


பண் :

பாடல் எண் : 1

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருள்தீர்ந்
தருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வற நந்தி முனிகணத் தளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன்
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.

பொழிப்புரை :

இதன் பொருள், மலர் தலை உலகின் மா இருள் துமியப் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் என்பது விரிந்த இடத்தையுடைய ஞாலத்தின்கண்ணே துன்னிய பெரிய புறவிருள் கெடும்படி பல சமயத்தாரானும் புகழப்படுகின்ற பரிதியங்கடவுள் உதயகிரியினின்றும் போந்தாலன்றிக் காட்சி யெய்தமாட்டாத கண்ணொளிபோல, அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி என்பது பொறுத்தற்கரிய துயரங்களுக்கெல்லாம் ஒரு நிலைக்களமாய்ச் சத்த தாதுக்களாற் பொத்திய குரம்பையாகிய காணப்பட்ட உடம்பானே காணப்படாத ஆன்மாவையும் பரமான் மாவையும் அனுமான அளவையான் வைத்தாராய்ந்து அவற்றது தடத்த லக்கணமெனப்படும் பொதுவியல்புணர்ந்து, கண் இருள் தீர்ந்து எது அவ்வுணர்ச்சியானே கருதியுணரப்படும் அகவிருளாகிய ஆணவமலத்தினின்று நீங்கி, ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு என்பது அது நீங்கிய வழி எல்லா நூல்களுந் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய பெரும்பெயரெனப்படும் ஒரு வார்த்தையாகிய மகாவாக்கியத்தான் எடுத்தோதப்படும் முதற்கடவுளது திருவருளானே அப்பொருள்களது சொரூபலக்கணமெனப்படுஞ் சிறப்பியல்பை அநுபூதியிற் கண்டுணர்ந்து, மயர்வு அற என்பது இம்முறையானே மயக்கவாசனையற்றுச் சிவாநுபவம் பெறுதற்பொருட்டு, நந்திமுனிகணத்து அளித்த என்பது சீகண்டதேவர்பாற் கேட்டருளிய நந்திபெருமான் சனற்குமாரமுனிவன் முதலிய முனிவர்கணங்கட்கு முறையானே அளித்தருளப்பட்ட, உயர் சிவஞானபோதம் எது சரியை முதலிய மூன்று பாதப்பொருள்களை ஆராயு நூல்களின் மேற்பட்ட சிவஞான போதமென்னும் வடநூலை,உரைத்தோன் என்பது மொழி பெயர்த்துக் (இது இவ்வுரையாசிரியர் தம்முரையுட் பல இடங்களில் கூறுவது: தமிழ்ச் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல, தமிழ் முதனூலே என்பது இக்காலத்திய ஆராய்ச்சியின் முடிபு) கூறி வார்த்திக மெனப்படும் பொழிப்புரை செய்தோன் பெண்ணைப்புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன் எது பெண்ணையாற்று நீராலே சூழப்பட்ட திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளிய சுவேதவனப் பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமமுடையான், பொய் கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் என்பது பொய்ச்சமயங்களின் பொருள் இதுவிது என்று கண்டு கழிப்பித்த காரணத்தாற்பெற்ற மெய்கண்ட தேவனென்னுஞ் சிறப்புத் திருநாமமுடையான், பவம்நனி வன்பகை கடந்த தவர் அடிபுனைந்த தலைமையோன் எது பிறவியாகிய மிக்க வலிய பகையினை வென்ற தவத்தோர் தனது திருவடியைப் புனைந்து கோடற் கேதுவாகிய தலைமைப் பாட்டினையுடையோன் என்றவாறு.

குறிப்புரை :

படரிற் காண்டல் செல்லுங் கண்ணெனற்பாலதனை எதிர் மறைமுகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு. இப்பொருள்பற்றிக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கேற்பக் காண்டல்சேறற்குப் படர்ந்த ஞாயிறு போலென்பது கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும் நிருவிகற்பஞ் சவிகற்பமென்னும் இருவகைக்காட்சிக்கும் ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற் றாயவாறுபோல, மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி அநுபூதியென்னும் இருவகை யுணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிற்றாயது இந்நூலென்பார், துமியப் படரினல்லதைக் காண்டல் செல்லாக் இது இவ்வுரையாசிரியர் தம்முரையுட் பல இடங்களில் கூறுவது: தமிழ்ச் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல, தமிழ் முதனூலே என்பது இக்காலத்திய ஆராய்ச்சியின் முடிபு. கண்போனாடித் தீர்ந்து கண்டு மயர்வறவளித்த சிவஞானபோதமென்றார். தலைமைபற்றி அருந்துயர்க்குரம்பையின் என்றாரேனும், இனம்பற்றிக் கரணம் புவனமுதலியனவும் உடன் கொள்ளப்படும். அருந்துயர்க் குரம்பையி னாடப்படுவதாகிய பொதுவியல்பு முன்னாறு சூத்திரத்தானும், பெரும்பெயர்ப் பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு பின்னாறு சூத்திரத்தானும் ஓதுப. நாடியெனவே அநுமான அளவையான் என்பதூஉம், கண்டெனவே அநுபூதியில் என்பதூஉம், தாமே போதரும். பொதுவியல்பு அளவை முகத்தானும் இலக்கணமுகத்தானுங் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் என்னும் இருதிறத்தானுணரப்படும்; சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன்முகத்தானுங் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டையென்னும் நான்கு திறத்தானுணரப்படும்.
இஃதென்சொல்லியவாறோவெனின், இவ்விருவகையியல்பும் வேறுகூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது ஒரோவொன்றேபற்றி ஐக்கவாதமுதற் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை யுணர்த்தற்கு எழுந்தது இந்நூலென்றவாறாயிற்று. சிவஞானபோதம் என்பதூஉம் இக்காரணத்தாற் பெற்ற பெயரென்பது வடமொழிச் சிவஞானபோதத்து இறுதிச் சூத்திரத்து ஓதியவாறுபற்றி யுணர்க.
சரியை முதலிய மூன்று பாதப்பொருளை ஆராயும் நூல்களாவன சோமசம்பு பத்ததி முதலாயின. அந்நூல்களின் மேற்பட்ட சிவஞானபோதமெனவே, அந்நூல்களுணர்ந்த பின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது பெறப்பட்டது; படவே, முன்னர்த் தீக்கையுற்றுச் சிவாகமங்களையோதி அதன்பின்னர்ச் சரியாபாத முதலியவற்றை ஆராயும் நூல்களை முறையேகேட்டு அவ்வாறொழுகி மனந்தூயராய் நித்தியாநித்திய வுணர்வு தோன்றிப் பிறவிக்கஞ்சி வீடுபேற்றின் அவாமிக்குடையராய் வந்த அதிகாரிகளுக்கு இந்நூல் உணர்த்துக என்பது போந்ததெனக்கொள்க.
உயர் சிவஞானபோதமெனவே யாப்பும், கேட்போரும், நுதலிய பொருளும், நூற்பெயரும்; நாடித் தீர்த்து கண்டு மயர்வறவெனவே நுதலிய பொருளின்வகையும், பயனும்; நந்தி முனிகணத்தளித்தவெனவே வழியும்; வெண்ணைச்சுவேதவனன் மெய்கண்டதேவனெனவே ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்குநிலமே இந்நூல் வழங்குநிலமென எல்லையும் போந்தவாறுணர்க. வடநூலார் யாப்பை ஆனந்தரியமென்றும், நுதலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசனமென்றுங் கூறுப. யாப்புச்சம்பந்தமென்பாருமுளர்.
சிற்பி