இரண்டாஞ் சூத்திரம் - வாக்குக்கள்


பண் :

பாடல் எண் : 1

வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வரும்அடைவு படஒடுக்கி மயிலண்ட சலம்நேர்
சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி உயிரிற்
சேர்ந்துவரும் அவைமருவும் உருஎவையும் தெரித்து
முந்தியிடும் செவியில்உறா துள்ளுணர்வாய் ஓசை
முழங்கியிடும் மத்திமைதான் வைகரியில் உதானன்
பந்தமுறும் உயிரணைந்து வந்தமொழிச் செவியின்
பால் அணைய நிறைந்தபொருள் பகரும் தானே.

சூக்குமை முதலாச் சொற்பத மீறா
ஆக்கிடும் வாக்கி கடைவினை வகுத்தது.

பொழிப்புரை :

வந்தடைந்து அந்தநாதமாகிய அறிவுதானே வடிவாகச் சூக்குமை வந்து உந்தித்தானத்திலே பொருந்தி ; பின்னமாய் வன்னங்கள் தோற்றம் வருமடைவு பட ஒடுக்கி வெவ்வேறாய் வரும் அக்கரங்களினுடைய சொரூபங்கள் தோன்று முறைமை தெரியாதபடி மறைத்து நிற்கும்; மயிலண்ட சலம் நேர் மயில் முட்டைக்குள் சலமானது புறம்பே மயிலினிறமாய்ந் சொரூபீகரித்துத் தோன்றச் செய்தே யுடைத்தால் சலமாய் விடுமாப்போல; சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி பைசந்தி வாக்கானது ஆன்மாவினிடத்திலே நினைவு மாத்திரையாய் நிற்கும் ; உயிரிற்சேர்ந்து வரும் அவை மருவும் உரு எவையும் தெரித்து முந்தியிடுஞ் செவியில்உறா துள்ளுணர்வாய் ஓசை முழங்கியிடு மத்திமைதான் மத்திமை வாக்கானது மேற்சொல்லப் போகிற அக்கரங்களினுடைய சொரூபங்களைப் பிராணவாயுவோடுங் கூடி ஒழுங்குபட நிறுத்திச் செவிக்குங் கேளாதே ஆன்மாவினிடத்திலே உள்ளறிவுமாய்த் தொனியுமுண்டாய் முற்பட்டு நிற்கும்; வைகரியில் உதானன் பந்தமுறும் உயிரணைந்து வந்தமொழிச் செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே வைகரி வாக்கானது முற்கூறிய பிராணவாயுவோடுங் கூடிவந்து உதான வாயுவிலேயும் பந்தித்துச் செவிப்புலனிடத்திலே கேட்கத் தக்கதாக நினைவிலுண்டான வசனத்தைச் சொல்லும்.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்களுக்குத் தானமும் வடிவுமாவது; சூக்குமைக்குத் தானம் நாபியடியும் நாததத்துவம் வடிவுமென அறிக; பைசந்திக்குத் தானம் உந்தியும் பிராணவாயு வடிவுமென அறிக; மத்திமைக்குத் தானம் நெஞ்சுங் கண்டமுமாய் நின்று பிராணவாயு வடிவமென அறிக; வைகரிக்குத் தானம் தாலு மூலமும் பிராணவாயுவும் உதானவாயுவும் வடிவென அறிக. ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்கள் நாலுக்கும் பிம் சித்தியாரில், “சூக்கும வாக்க துள்ளோர் சோதியா யழிவ தின்றி’’ எம், “வேற்றுமைப் பட்ட வன்னம்’’ எம், “உள்ளுணர் ஓசையாகி’’ எம், “வைகரி செவியிற் கேட்பதாய்’’ (1.23,22,21,20) எம், விருத்தம் நாலையு மொட்டிக் கண்டுகொள்க. இந்த வைகரி வாக்குக் காரியப்படுமிடத்து நாக்கு உண்ணாக்கு பல் உதடு மூக்கு இவையோடுங் கூடி நின்று காரியப்படுமென அறிக. இவையிற்றுக்கு பிம் நேமிநாதத்தில்,
“உந்தியிற் றோன்றி யுதான வளிபிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து வந்தபின்
நாசிநா வண்ண மிதழெயிறு மூக்கென்னப்,
பேசு மெழுத்தின் பிறப்பு” (6)
எது கண்டுகொள்க. ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்கள் நாலுந் தோன்றுகைக்குக் காரணமாகப் பஞ்சமை யென்றொரு வாக்குண்டென்றும் அதற்குத் தானம் மூலாதாரமென்றும் அது பிரணவ சொரூபமாயிருக்கு மென்றுஞ் சொல்லுவாருமுளர். அதனை ஆராய்ந்து கண்டுகொள்க. இந்த வாக்குக்கள் காரியப்படுமிடத்துச் சாந்தியாதீத முதலான கலைகள் ஐந்தினோடும் பற்றுக்கோடாக நின்று காரியப்படுமென அறிக. அப்படிக் காரியப்படுமிடத்துப் பராசத்தியுந் திரோதசத்தியும் இச்சாசத்தியும் ஞானசத்தியுங் கிரியாசத்தியுங் கூடிநின்று காரியப்படுத்துமென அறிக. இதில் சூக்குமை வாக்குச் சாந்தியாதீத கலையுஞ் சாந்திகலையும் பற்றாக நிற்கப் பராசத்தியுந் திரோத சத்தியுங் காரியப்படுத்துமென அறிக. இனி பைசந்தி வாக்கு வித்தியாகலை பற்றாக நிற்க இச்சாசத்தி காரியப்படுத்துமென அறிக. இனி மத்திமை வாக்குப் பிரதிட்டாகலை பற்றாக நிற்க ஞானசத்தி காரியப்படுத்துமென அறிக. இனி வைகரி வாக்குக்கு நிவிர்த்திகலை பற்றாக நிற்கக் கிரியாசத்தி காரியப்படுத்துமென அறிக. அன்றியும் முற்கூறிய பஞ்சமையென்னும் வாக்குக் கூட்டுகில் பராசத்தியுஞ் சாந்தியாதீதகலையும் அதற்குக் கூட்டிக்கொள்க. இங்ஙனஞ் சொல்லப் பட்ட வாக்குக்கள் நாலுங் கலைகள் ஐந்தினோடுங் கூடிக் காரியப்படும் என்பதற்கு பிம் சித்தியாரில் “நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித், திகழ்ந்திடும் அஞ்ச தாக’’ (1.24) எது கண்டுகொள்க. இதனுள் ‘நிகழ்ந்திடும் வாக்கு நான்கும்’ என்றது கொண்டே நிகழாத வாக்கும் ஒன்றுண்டென்பது கருத்தாகப் பஞ்சமை என்னும் வாக்கு உண்டெனதென அறிக. இங்ஙனங் கூறப்பட்டவையிற்றில் சத்திகள்இவையிற்றைக் காரியப்படுத்துமென அறிக. இதற்கு பிம் இந்நூலில் மேல் வருகிற “இத்தகைமை இறையருளால்’’ (39) என்னும் விருத்தத்தை முடியவொட்டிக் கண்டு கொள்க. இனி உயிரிற்சேர்ந்து வருமவை மருவும் எ து உயிரென்பது கொண்டே ஆன்மா என்பாருமுளர். அது பிராணவாவுவென அறிக. அப்படிப் பிராணவாயுவை உயிரென்பதற்கு பிம் சித்தியாரில் வாக்குக்கள் காரியப்படுமிடத்துச் சொன்ன விருத்தத்தில் “உள்ளுணர் ஓசை யாகிச் செவியினி லுறுதல் செய்யா, தொள்ளிய பிராண வாயு’’ (1.21) எம், “ஐயமில் பிராணவாவு அடைந்தெழுந் தடைவு டைத்தாம்’’ எம் கண்டுகொள்க. உயிர் வாயுவென்றுஞ் சொல்லப்படுமென்பதற்கு பிம் “உயிரொலி வங்கூழ் சலநம் வாதம் வளி மாருதம்’’ என்னும் இலக்கணங்களினுங் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது சூக்குமை வாக்கு நாத வடிவாக உந்தியை வந்துகூடி யாதாமொன்றைச் சொல்லுமிடத்துப் பைசந்தி வாக்கானது அந்த வசனத்துக்குரித்தாகிய அக்கரங்களை மயில் முட்டையில் ஜலம்போலத் தோற்றுவித்து நிற்குமென்றும், மத்திமை வாக்கானது பிராணவாயுவையுங் கூடி உள்ளே தொனியாய் நிற்குமென்றும், வைகரி வாக்கானது பிராணவாயுவோடு உதானவாயுவையுங் கூடிச் செவிப்புலனுக்குக் கேட்பதாக வசனிக்குமென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

இந்த வாக்குக்கள் நாலொடுங் கூடி ஆன்மா அருளாலே காரியப்படுமிடத்துச் சுத்த தத்துவங்கள் ஐந்தினாலே காரியப்படுமென்றும் அந்தச் சுத்த தத்துவங்களிலே அசுத்த மாயையில் தோற்றப்பட்ட கலையாதி தத்துவங்களிற் கலையும் வித்தையுங் காரியப்படும் முறைமையும் மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

இத்தகைமை இறைஅருளால் உயிர்அறியும் அறிவுக்(கு)
ஈடாக வாடாதே ஈரிரண்டில் உரைத்த
வித்தைமுதல் ஐவரான் விளங்கு ஞானம்
மேவியிடும் எனஉரைப்பர் அசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலம்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதர வித்தையிடை நின்றறிவை உயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.
.
சுத்ததத் துவத்தால் தொல்லுயிர் உணர
வைத்திடுங் கலைவித்தை மருவு மென்றது.

பொழிப்புரை :

இத்தகைமை வாடாதே ஈரிண்டில் இறையருளால் உயிரறியும் அறிவுக்கீடாக இந்த முறைமையாலே கெடாதே வருகிற வாக்குக்கள் நாலினுங் கூடித் தம்பிரானார் காருண்ணியத்தினாலே ஆன்மா அறியுமறிவுக்குத் தக்கதாக; உரைத்த வித்தை முதல் ஐவரான் விளங்கு ஞானம் மேவியிடுமென உரைப்பர் முன்னே சுத்த மாயையிற் றோற்றமாகச் சொல்லப்பட்ட சுத்த வித்தை ஈசுவரம் சாதாக்கியஞ் சத்தி சிவம் என்கிற தத்துவங்கள் ஐந்தினாலும் பிரகாசிக்கிற அறிவு பொருந்தியிடுமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அன்றியும்; அசுத்த மாயை வைத்த கலைதான் மூலமலம் சிறிதே நீக்கி மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனை அசுத்த மாயையிலே யுண்டாக்கப்பட்ட கலையானது அந்தச் சுத்த தத்துவத்திற் சத்தி தத்துவம் உதவியாகக்கொண்டு ஆன்மாவை மறைக்கப்பட்ட ஆணவ மலத்தைச் சற்றே ஒதுக்கி இந்திரியங்களின் பயனாகிய விடயங்களை ஆன்மாப் பொருந்தும்படி எழுப்புவிக்கும்; வித்தை யிடை புத்திதர உயிர்க்கு நின்றறிவை பொருந்தியிடும் வகை புணரும் சுத்த மாயையில் தோற்றமாயுள்ள சுத்த வித்தை உதவியாகக்கொண்டு சொல்லப்பட்ட அசுத்த மாயையில் தோற்றமாயுள்ள வித்தையானது அந்த விடயங்களை ஆன்மா கொள்ளுமிடத்து இன்னதென்று நிரூபித்து அறியத்தக்க ஞானத்தை ஆன்மாவுக்கும் விடயங்களுக்கும் நடுவேநின்று அறிவுண்டாம்படி கூட்டும். இதுதான் கூட்டு முறைமை யாராலே யென்னில் ; புனித சத்தி புணர்ந்தே சுத்தனாகிய சிவனுடைய சத்திகள் தொழிலாகப் பூண்டுநின்று செலுத்த அதனோடுங் கூடிக்கொண்டு நின்று. உரைத்த வித்தைமுதல் ஐவரான் விளங்கு ஞானம் எகு சுத்த தத்துவம் ஐந்தினாலும் ஆன்மாக்களுக்கு ஞானமுண்டாமென்ற தெங்ஙனே என்னில், சிவசத்திகள் சுத்த தத்துவங்களைக் காரியப்படுத்தச் சுத்த தத்துவங்கள் அசுத்த மாயையிற் கலாதிகளைக் காரியப்படுத்த அவையிற்றினாலே ஆன்மாக்களுக்கு அறிவுண்டாமென்றதென அறிக. அஃதாவது கிரியாசத்தி சத்தி தத்துவத்தை எழுப்பச் சத்தி தத்துவங் காலமும் நியதியுங் கலையையும் எழுப்பக் கலை தழற்பொடி நீங்கினாற்போல ஆணவமலத்தைச் சிறிதே நீக்கி அந்தக் கலையே வடிவாக ஆன்மாவுக்குச் சிறிதறிவை உண்டாக்க ஞானசத்தி சுத்த வித்தையை யெழுப்ப சுத்தவித்தை வித்தையையெழுப்ப வித்தை ஆன்மாவுக்கு அறிவை உண்டாக்குமென்றதனை அறிக. இனி, புத்திதர வித்தை யிடைநின்று எ கு புத்திதர என்பதை புத்திதத்துவம் என்பாருமுளர். அது பொருளாகாதென அறிக. “புந்தி பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே’’ (42) என்று புத்தி தத்துவத்தின் காரியப்பாடு பின்பே வருகையால் அதனை இவ்விடத்துக் கூறவேண்டுவதில்லையென அறிக. ஆகையால் புத்திதர என்பதை ஆன்மா அந்த விடயங்களை நிரூபித்தறியவென்று பொருள் கூறுமதே வழியென அறிக. இதனாற் சொல்லியது முன்னர்ச் செய்யுளிற்கூறிய வாக்குக்கள் நாலிலும் ஆன்மாக்கள் அறியுமிடத்துச் சிவ தத்துவங்களினாலே அறியுமென்னும் அவையாலே அசுத்த மாயையிற் கலையும் வித்தையுங் காரியப்படும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

மேல் அராக தத்துவமும் நியதிதத்துவமுங் கால தத்துவமுங் காரியப்படுமுறைமை அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்ப்
பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் நியதி
தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே
ஓசைதர வருங்காலம் எல்லைபலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே.
.
மாலுறும் அராகமும் மன்னிய நியதியுங்
காலமு மூன்றின் கருத்தையு முரைத்தது.

பொழிப்புரை :

பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்ப் பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும். சொல்லுதற்கரிய அராக தத்துவம் ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கு ஈடாகப் பெற்றதிலே நின்றும் பெறாததற்கு ஆசையை மிகவும் உண்டாக்கும்; நியதி தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கைபோல நேசமுறு தம் கன்மம் நிச்சயித்து நிறுத்தும் நியதி தத்துவமானது பொதுவாக இராச்சியம் பண்ணும் இராசாவினுடைய ஆக்கினையைக் கொண்டு உலகில் ஆன்மாக்கனை எல்லைவிட்டுக் கடவாதபடி அந்த ஆக்கினையிலே நிறுத்தி நடத்தும் மந்திரியைப்போல இவ்வான்மாக்கள் செய்த கன்மத்தின் வழியன்றி ஏறக்குறையப் போகாதபடி அறுதியாக நிறுத்தும்; நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே ஓசைதர வருங்காலம் எல்லை பலம் புதுமை உறுவிக்கும் கால தத்துவமானது நடக்கிறகாலமென்றும் இறந்தகாலமென்றும் வருகிற காலமென்றுஞ் சொல்லப்பட்டு, போன காலத்தில் உண்டாகிய எல்லையையும் நடக்கிற காலத்தில் உண்டாகிய பலத்தையும் வருகிற காலத்தில் உண்டாகிய புதுமையையும் உண்டாக்கி நிற்கும். இவைதான் ஆராலே யுண்டாக்குமென்னில்; இறை சத்தி உடனாய் நின்றே கர்த்தாவினுடைய திருவருளான சத்தி கூடிநின்று காரியப்படுத்தும்.
பேசரிய அராகம் எ து ஆசையின் மிகுதி சொல்லுதற் கரிதென்றதென அறிக. கழிகாலத்துக்கு எல்லையென்றது ஆண்டு திங்கள் நாளென அறிக. நிகழ்காலத்துக்குப் பலனென்றது தனக்கு அநுபவமான புசிப்பாயுள்ள விடயங்களையென அறிக.
எதிர்காலத்துக்குப் புதுமையென்றது தானறியாததன்றி அறிந்தவற்றையும் புதுமையென்றதென அறிக. இனி இறை சத்தி உடனாய் நின்றே என்றது இச்சாசத்தி ஈசுவர தத்துவத்தை எழுப்ப ஈசுவர தத்துவம் அராக தத்துவத்தை எழுப்ப அராக தத்துவம் ஆன்மாவுக் கிச்சையை எழுப்புமென்றதென அறிக. இனி நியதி யாதாமொரு பொருளை நிச்சயிக்குமிடத்துக் கிரியாசத்தி சத்தி தத்துவத்தைக் கொண்டு நியதியை எழுப்ப நியதி யாதாமொரு பொருளை நிச்சயிக்குமென்றதென அறிக. இனி காலங்கூட்டுமென்றது கிரியாசத்தி தத்துவத்தைக் கொண்டு காலத்தை எழுப்பக் காலம் ஆன்மா புசிக்கும் அவதரங்களைக் கூட்டுமென்றதனை அறிக.
இதனாற் சொல்லியது அராக தத்துவம் கன்மங்களுக்கீடாகப் பெற்றதைச் சிறிதாக்கிப் பெறாததிலே ஆசையை மிகவும் உண்டாக்குமென்றும், நியதி தத்துவம் இராசாக்கினைபோலக் கன்மத்தை நிச்சயித்து நிறுத்துமென்றும், கால தத்துவம் கழிகாலத்தின் எல்லையையும் நிகழ்காலத்திற் பலத்தையும் எதிர்காலத்திற் புதுமையையும் உண்டாக்குமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவம் ஐந்துங் காரியப்படுகிற சமுகந்தானே புருட தத்துவமென்றும் பிரகிருதி தத்துவம் காரியப்படும் அவதரத்து மூன்று குணமாக நின்று காரியப்படும் முறைமையும் மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம்
அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனின்இதற்கும் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பியநூல் விளம்பும்
செய்வகையின் தொடர்ச்சியிங்குத் தோன்றுவிக்கும் குணத்தின்
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் அவைதாம்
இவ்வகையிற் சாத்துவித ராசததா மதமாய்
இயம்புவர்கள் ஒன்றிரண்டு குணம்ஏற்க உடைத்தே.
.
புகன்றவ ற்றால் வரு புருடதத் துவமும்
அகன்ற மானு மதன்ழுணம் விரித்தது.

பொழிப்புரை :

ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம் அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர் ஆன்மாவானது காலம் நியதி கலை வித்தை அராகம் இவை ஐந்துந் தனக்கு உடம்பாகக் கொண்டு இந்திரியங்களுடனே கூடிச் சத்தாதி விடயங்களைப் புசிக்க வருகிற அவதரத்தைப் புருட தத்துவமென்று சொல்லுவார்கள் பெரியோர்கள்; மெய்வகைய கலாசுத்தி தனின் இதற்கும் சுத்தி மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்பும் உண்மையாகச் சொல்லப்பட்ட மந்திர முதலான ஐந்தும் நிவிரித்திமுதலான கலைகள் ஐந்தினுமடைந்து சுத்தி பண்ணுமிடத்து இந்தப் புருட தத்துவத்தையுஞ் சுத்தி பண்ணப்படுமென்று நம்மால் விரும்பப்பட்ட திவ்வியாகமங்கள் சொல்லும்; அன்றியும், மெய்வகைய கலாசுத்தி எ கு மெய்யாகிய சரீரத்தில் ஐவகைப்பட்ட கலாசோதனை செய்யுமிடத்துமென அறிக; செய்வகையின் தொடர்ச்சி யிங்குத் தோன்றுவிக்குங் குணத்தின் சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் ஆன்மாக்கள் முன் ஜநநத்திற் செய்த கன்மத்துக்கு ஏதுவாயுள்ள சுக துக்கங்களை இப்பொழுதுண்டாக்குங் குணங்களின் வடிவாய்ப் பொருந்துகிற பிரகிருதி மூன்று வகையாகிய குணமாம்; அவைதாம் அந்தக் குணங்களின் பெயராவன; இவ்வகையிற் சாத்துவித ராசத தாமதமாய் இயம்புவார்கள் இந்த முறைமையிலே சாத்துவித குணமென்றும் இராசத குணமென்றுந் தாமத குணமென்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள்; ஒன்றிரண்டு குணமேற்க வுடைத்தே இந்தக் குணங்கள் மூன்றுக்கும் ஒவ்வொன்றுக் கிவ்விரண்டு குணமாக ஆறு குணமும் அநாதியே பொருந்தும் இயல்பினை யுடைத்து.
மெய்வகைய கலாசுத்தி எ கு மெய்யாகிய சரீரத்தில் ஐவகைப் பட்ட கலாசோதனை செய்யுமிடத்து மென்னவுமாமென்று பொருள் கூறியது ஏதென்னில், ஆசாரியன் தீடிக்ஷ செய்யும் அவதரத்துக் கலாசோதனை செய்யவேண்டுகையால் அதற்கு நிவர்த்தி முதலான கலைகள் ஐந்தினையுஞ் சீடன் சரீரத்திலே ஐந்துவகைப்படுத்திச் செய்யவேண்டுகையால் அப்படிச் சொன்னதென அறிக.
அதற்கு வகை எங்னே என்னில் மூலாதாரந் தொடங்கி உந்திக்குமேல் எண் விரலளவு நிவிர்த்திகலைக்கு எல்லையென அறிக. அதற்கு மண்டலம் அக்கினி மண்டலம். ஆதாரம் மூலாதாரமுஞ் சுவாதிட்டானமும். அக்கரம் அகாரம்.பிரகாசஞ் சொரிதழற்கொழுந்து. மலம் மாயாமலம். அவத்தை சாக்கிரம். மாத்திரை ங. மந்திரம் இருதயமுஞ் சத்தியோசாதமும். பதம் ஓநமோ முதல் மாதேவ ரந்தமாக உஅம். வன்னம் க்ஷகாரமொன்றும். புவனம் காலாக்கினி முதல் வீரபத்திரர்கள் முடிவாகிய 108 தத்துவம் பிருதிவியொன்றும். தெய்வம் பிரமா. தொழில் சிருஷ்டி என்று இங்ஙனம் நிவிரித்திகலைக்குக் கண்டுகொள்க.
இனி, பிரதிட்டாகலைக்கு இருதயந் தொடங்கிக் கண்டத்தளவும் எல்லையென அறிக. அதற்கு மண்டலம் ஆதித்த மண்டலம். ஆதாரம் மணிபூரகம். அக்கரம் உகாரம். பிரகாசம் அக்கினியும் ஆதித்தனுங் கூடின பிரகாசம். மலம் கன்ம மலம். அவத்தை சொப்பனம். மாத்திரை உ மந்திரம் சிரசும் வாமதேவமும். பதம் மகேசுர முதல் அரூபினி முடிவாகிய உகம். வன்னம் உடி முதல் அந்தம் உசம் புவனம் அமரேசர் முதல் சிகண்டி முடிவாகிய ருசாம். தத்துவம் பிருதிவி நீங்கலாக ஆன்ம தத்துவம் உஙம் தெய்வம் விஷ்ணு. தொழில் திதி என்றிங்ஙனம் பிரதிட்டா கலைக்குக் கண்டுகொள்க. இனி, வித்தியாகலைக்குக் கண்டத்துக்குமேல் தாலு மூலத்தளவு மெல்லை நாலங்குலமென அறிக. அதற்கு மண்டலம் ஆதித்த மண்டலம். ஆதாரம் அநாகதம். அக்கரம் மகாரம். பிரகாசம் மின். மலம் மாயேய மலம். அவத்தை சுழுத்தி. மாத்திரை க. மந்திரம் சிகையும் அகோரமும். பதம் வியாபினி முதல் தியானகாரிய முடிவாகிய உயம். வன்னம் முதல் அந்தமாகிய ஏழும். புவனம் தியானம் முதல் வாமம் முடிவாகிய உஎம். தத்துவம் வித்தியா தத்துவம் ஏழும். தெய்வம் உருத்திரன். தொழில் சங்காரம் என்றிங்ஙனம் வித்தியாகலைக்குக் கண்டுகொள்க.
இனி, சாந்திகலைக்குத் தாலுமூலத்துக்குமேற் புருவ மதத்தியத்தளவுமெல்லை நாலங்குலமென அறிக. இதற்கு மண்டலம் சோம மண்டலம். ஆதாரம் விசுத்தி. அக்கரம் விந்து. பிரகாசம் விளக்கொளி. மலம் திரரோதாயி. அவத்தை துரியம். மாத்திரை அரை. மந்திரம் கவசமுந் தற்புருடமும். பதம் நித்திய நியோகினி முதல் வியோம வியாபினி முடிவாகிய ககம். வன்னம் முதல் அந்தமாக ஙம் புவனம் முதல் சதாசிவ முடிவாகிய கஅ ம். தத்துவம் சுத்தவித்தையும் ஈசுரமும் சாதாக்கியமும். தெய்வம் மகேசுரம். தொழில் திரோபாவம் என்றிங்ஙனஞ் சாந்திகலைக்குக் கண்டுகொள்க.
இனி, சாந்தியாதீதகலைக்குப் புருவ மத்தியத்துக்குமேல் மூன்றங்குலம் எல்லையென அறிக. இதற்கு மண்டலம் சோம மண்டலம். ஆதாரம் ஆக்கினை. அக்கரம் நாதம். பிரகாசம் வாளொளி. மலம் ஆணவமலம். அவத்தை துரியாதீதம். மாத்திரை கால். மந்திரம் நேத்திரமும் அத்திரமும் ஈசானமும். பதம் பிரணவம் ஒன்றும். வன்னம் முதல் அந்தம் கசா ம். புவனம் நிவர்த்தி முதல் சமனாந்தம் முடிவாகிய கரும். தத்துவம் சத்தியுஞ் சிவமும். தெய்வம் சதாசிவம். தொழில் அநுக்கிரகம். என்றிங்ஙனஞ் சாந்தியாதீதகலைக்குக் கண்டுகொள்க. ஆக இங்ஙனங் கலைகள் ஐந்துக்கும் கண்டுகொள்க.
இங்ஙனங் கூறிவந்த பொருள்களிற் கலாசோதனைக்கும் மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள் என்று சொல்லியிருக்க இவை நீங்கலாக மற்றுள்ள ஆதார முதலான பொருள்கள் கூறவேண்டியதேதென்னில் அஃதாவது கலாசோதனை செய்யுமிடத்துச் சரீரத்தில் ஐவகைப்படுத்திச் செய்ய வேண்டுகையால் அந்தத் தத்துவங்கள் தோறும் நிற்கும் பொருள்களை வகுத்துக் கூறியதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “மந்திரங்கள் முதலைந்துங் கலையைந்தில் வியாத்தி’’ (8.7) என்னும் விருத்தம் முதலாகிய செய்யுள் மூன்றிலும் இது காவை அம்பலவாணத் தம்பிரான் செய்தது. உரையோடு அச்சிடப்பட்டிருக்கிறது. பிரசாத அகவலினும் தத்துவப் பிரகாசத்தில் “இவ்வகையு மண்விகற்ப மெட்டு மேவிலெழிலலகா ரமுநிறஞ் சொரிதழல்மாத் திரையும்’’ (134) எம் விருத்தம் முதலாகிய செய்யுள் எட்டினுங் கண்டுகொள்க. இனி ஒன்றிரண்டு குணமேற்க வுடைத்தே எகு ஒவ்வொரு குணத்திலே இவ்விரண்டு குணம் ஏற்க உண்டாமென்று பொருள் கூறியதற்கு வகுப்பேதென்னில், சாத்துவிதத்தில் இராசதமுஞ் சாத்துவிதத்தில் தாமதமும் இராசதத்திற் சாத்துவிதமும் இராசதத்தில் தாமதமும் தாமதத்தில் இராசதமும் தாமதத்தில் சாத்துவிதமும் என்றிங்ஙனங் கண்டுகொள்க. இதற்கு பிம் சித்தியாரில் “வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையிற் றோன்றித், தருங்குண மூன்றா யொன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும், இருங்குண ரூப மாகி இசைந்திடு மெங்கு மான்மாப், பெருங்குணவடிவாய்ப் போக சாதனம் பெத்த மாமே’’ (2.57) எது கண்டுகொள்க. குணத்தின் சேர்வுபுரி பிரகிருதி என்பதற்கும் இந்தப் பிரமாணத்திலே கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமுங் கூடின சமுகந்தானே புருட தத்துவமென்றும் தீடிக்ஷயிலே கலாசோதனை செய்யுமிடத்து இந்தப் புருடதத்துவத்துக்குஞ் சோதனை பண்ணவேண்டுமென்றும் குணசொரூபமாயுள்ள பிரகிருதி தானே மூன்று குணமாகக் காரியப்படுமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட குண மூன்றும் ஒன்பது வகையாகக் காரியப்படுகைக்கு வகுப்பெங்ஙனேயென்று வினவ அவை காரியப்படும் முறைமையும் மேல் புத்தி தத்துவங் காரியப்படும் முறைமையும் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 5

அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா பிருதி
அடர்ச்சிமிகுங் கவுரவம்அ நியமம்இவை அடைவே
நிலவியிடும் மும்மூன்றும் உயிரொன்றில் கலந்தே
நிற்கும் இவை நிறைபுலனின் பயன்எவையும் கவரும்
குலவிவரு போகங்க ளிடமாய் மாறாக
குறைவில்ஒளி யாம்அலகில் புலனிடத்தின் ஒருமை
பலவகையும் உடையதாய்ப் பரனருளாற் புந்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே.
.
விளம்பிய குணம்நவ மாக விரிந்தும்
வளந்திகழ் புத்தியைம் பதுவகைத் தென்றது.

பொழிப்புரை :

அலகில் குணம் எண்ணிறந்திருக்கப்பட்ட இந்தக் குணத்தின் விரிவைச் சொல்லுமிடத்து முன்சொல்லப்பட்ட பிரதானமான குணம் மூன்று மொழிந்து ஏறின குணம் ஆறுக்கும் வகையாவன; பிரகாசம் பிரகாசமாயிருக்கும். அஃதாவது சாத்துவிகத்திலே இராசதங் கூடினால் அந்தச் சாத்துவிகத்தைப் பிரகாசித்துக்கொண்டு நிற்கு மென்றதென அறிக ; லகுதை நொய்தாயிருக்கும். அஃதாவது சாத்துவிகத்திலே தாமதங் கூடினால் நல்லொழுங்குகளை மறைத்துக்கொண்டு அந்தப் பிரகாசத்தை நொய்தாக்கிக்கொண்டு நிற்குமென்றதென அறிக; வியாபிருதி தெரியாமல் மறைத்து நிற்கும். அஃதாவது இராசதத்திலே தாமதங்கூடினால் நல்லொழுங்குகளை மறைத்துக்கொண்டு நிற்குமென்றதென அறிக; அடர்ச்சிமிகும் செறிவித்து நிற்கும். அஃதாவது இராசதத்திலே சாத்துவிகங் கூடினால் நன்மைகளைச் செறிவித்து நிற்கு மென்றதென அறிக; கவுரவம் பெருமையை உண்டாக்கும். அஃதாவது தாமதத்திலே இராசதங் கூடினால் கர்வத்திலே பெருமையைப் பண்ணி நிற்குமென்றதென அறிக ; அநியமம் நல்ல நியம் மல்லாததைச் செய்வித்து நிற்கும். அஃதாவது தாமதத்திலே சாத்துவிகங் கூடினால் அந்நிய நியமங்களைச் செய்வித்துக் கொண்டு நிற்குமென்றதென அறிக; இவை யடைவே நிலவியிடும் இந்தக் குணங்கள் இங்ஙனஞ் சொன்ன முறைமையிலே பொருந்தி நிற்கும். இவை வெவ்வேறாய் நிற்குமோ கூடி நிற்குமோ என்னில்; மும்மூன்றும் உயிரொன்றில் கலந்து நிற்கும் இவை ஒன்பது குணமுமொரு ஆன்மாவிலே கூடிநிற்கும்.
ஒன்பது குணமாவது சாத்துவிகத்திற் சாத்துவிகமென்றும் சாத்துவிகத்தில் இராசதமென்றும் சாத்துவிகத்தில் தாமதமென்றும், இராசதத்தில் இராசதமென்றும் இராசதத்திற் சாத்துவிகமென்றும் இராசதத்தில் தாமதமென்றும், தாமதத்தில் தாமதமென்றும் தாமதத்திற் சாத்துவிகமென்றும் தாமதத்தில் இராசதமென்றும் இங்ஙனம் ஒன்பது வகைப்படும். அதற்கு வகையேதென்னில் சாத்துவிகத்திற் சாத்துவிகமாவது துறவும் சாந்தமும் மோக்ஷத்திலே மிகுந்த தாகமுமாகையென அறிக. சாத்துவிகத்தில் இராசதமாவது துறவும் சாந்தமும் இடையே நழுவ முத்தியில் முயலுகையுமாமென அறிக. சாத்துவிகத்தில் தாமதமாவது துறவும் சாந்தமும் மோக்ஷத்திலே முயலுகைகையுமன்றி விடயவிருப்பமும் உண்டாகையென அறிக. இனி இராசதத்தில் இராசதமாவது தன்மத்தில் ஆசையயோடுங் கூடி இடைவிடாமற் செய்கையென அறிக. இராசதத்திற் சாத்துவிகமாவது யாவர்க்குங் கிருபையோடே அறங்களைச் செய்கையென அறிக. இராசதத்தில் தாமதமாவது இவையிற்றினை இகழ்தலும் பாவத்தொழில்களைச் செய்தலுமென அறிக. இனி தாமதத்தில் தாமதமாவது மயக்கமும் இகழ்ச்சியும் பாவமும் ஆசையும் பயமும் உறக்கமுமென அறிக. தாமதத்தில் இராசதமாவது தகாதன செய்தலும் உண்ணாதன உண்ணலுங் களிப்பும் வெகுளியுமெனஅறிக. தாமதத்திற் சாத்துவிகமாவது வேதாகமங்களில் விருத்தமாயிருக்கிற கிருத்தியமான சிறு தேவதைகளைப் பிரபத்தி பண்ணுகையென அறிக. இப்படி எண்ணிறந்த குணங்களை உடைத்தாகையாலே அலகில் குணமென்று சொல்லப்பட்டதென அறிக.
இங்ஙனங் குணபேதங்களாகக் கூடிநின்று செய்யுமிடத்து; இவை நிறைபுலனின் பயனெவையுங் கவரும் இந்தக் குணங்கள் ஒன்பதும் நிறைந்து நிற்கிற இந்திரியங்களின் பயனான விடயங்களைத் தன்னிடத்திலே கவர்ந்து கொள்ளும்; குலவிவரு போகங்களிடமாய் மாறாக் குறைவில் ஒளியாம் சர்வராலுங் கொண்டாடப்பட்டு வருகிற புசிப்புக்களை ஆன்மாக் கொள்ளுகிற இடமுமாய் உடல்முழுதும் விட்டு நீங்காத குறைவற்ற பிரகாசமுமாய் நிற்கும். இவ்வளவும் வித்தியா தத்துவத்தின் கலை தொடங்கிப் பிரகிருதி மாயையாகிய குணங்கள் காரியப்படுகையை அருளிச்செய்து மேல் ஆன்ம தத்துவத்திற் புத்தி தத்துவங் காரியப்படுகையை அருளிச் செய்கின்றது; அலகில் புலனிடத்தின் ஒருமை பலவகையும் உடையதாய்ப் பரனருளாற் புந்தி பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே எண்ணிறந்த விருத்தியாகிய விடயங்களை இந்திரியங்களைக் கொண்டு ஆன்மாக் கொள்ளுமிடத்து நிச்சயித்தலைப் பலவகையாலும் உண்டாவதாய்ச் சிவனுடைய அநுக்கிரகத்தினாலே புத்தியானது ஐம்பது ஐம்பது பேதங்களை ஒவ்வொரு குணங்கள் தோறுஞ் செய்து நிற்கும்.
இந்தப் புத்தியின் விருத்தி எங்ஙனே என்னில், அவ்வியத்தமாவது மூன்று குணங்களுந் தோன்றாமல் வடவித்துப்போலெயிருந்த அவதரமென அறிக. குணதத்துவமாவது வடவித்திலே நின்றும் அங்குரந் தோன்றினாற் போல அவ்வியத்தித்திலே மூன்றாய்த் தோன்றிச் சமமாய் அலைவறநின்ற அவதரமென அறிக. வேறுபட்ட குணங்களையுடைத்தாய் ஏற்றக்குறைச்சல் புத்தி முதலான தத்துவங்களென அறிக. புத்தி தத்துவமாவது இராசதமுந் தாமதமுங் குறைந்து சாத்துவிககுணம் மேலிட்ட அவதரமென அறிக. இந்தப் புத்தியினது காரியமாவது தன்ம ஞான வைராக்கிய ஐஸ்வரியமென்றும் அதன்ம அஞ்ஞான அவைராக்கிய அநைஸ்வரியமென்றும் எட்டு வகையாம். இதில் தன்மத்திலே நின்றும் பத்து பாவகந் தோன்றும். ஞானத்திலே நின்றும் நூற்றெண்பது பாவகந்தோன்றும். வைராக்கியத்திலே நின்றும் அறுபத்துநாலு பாவகந்தோன்றும். ஐஸ்வரியத்திலே நின்றும் நூற்றெழுபத்தாறு பாவகந்தோன்றும். மற்ற அதன்மத்திலே நின்றும் முப்பத்தெட்டு பாவகந்தோன்றும். அஞ்ஞானத்திலே நின்றும் முப்பத்தெட்டு பாவகந் தோன்றும். அவைராக்கியத்திலே நின்றும் நூறு பாவகந்தோன்றும். அநைஸ்வரியத்திலே நின்றும் எட்டு பாவகந்தோன்றும். ஆக புத்தியினுடைய காரியம் அறுநூற்றொருபத்து நாலென அறிக. அப்படியிருக்க இந்நூலிலே பஞ்சாசற்பாவகமென்று நானூற்றைம்பதாகச் சொல்லுவான் ஏனென்னில் அப்படியுஞ் சில ஆகமங்களிலே சொல்லுகையாலென அறிக. அன்றியும் பஞ்சாசற்பாவகமுமென்ற உம்மைகொண்டே மற்றதும் உண்டென அறிக. இனி, புத்தி தத்துவத்தை அலகில் புலனிடத்தி னொருமை பல வகையுமுடையதாய் என்றதேதென்னில் அது கன்மாகன்மங்களும் உடையதாய்ச் சத்தாதி விடயங்களிலே நிச்சயித்தலும் உடையதாய் இன்பதுன்பங்களிலே மோகத்தையும் உடையதாய் அறிவு தொழில்களுமுடையதாய் நிற்கையினாலே அப்படிச் சொன்னதென அடிறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சித்தமா மவ்வி யத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும், புந்தியவ் வியத்திற் றோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து, வத்துநிச்சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப், பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்’’ (2.58) எது கண்டுகொள்க. இனி, புந்தி பஞ்சாசற்பாவகமும் பண்ணுவிக்கும் எகு புத்தி தத்துவமானது குணங்களோடுங்கூடிச் சம்பந்தமா யிருக்கையினாலே ஒரு குணத்துக்கு ஐம்பது வகையாக ஒன்பது குணத்துக்கு நானூற்றைம்பது வகையாகப் பேதித்ததென அறிக. என்றிங்ஙனம் புத்தி குணத்தோடு சம்பந்தமாய் நிற்கும் என்பதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “எண்ணிய புத்தியில் முக்குணஞ் சேரியல் பாற்கரந்து’’ எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது குணதத்துவம் ஒன்பது வகையாகக் காரியப்படும் முறைமையும் புத்திதத்துவம் ஒன்பது குணத்துக்கும் ஒவ்வொரு குணத்துக்கு ஐம்பது ஐம்பதாக நானூற்றைம்பது பாவகமாகக் காரியப்படும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

மேல் ஆங்காரமும் மனதுஞ் சித்தமுங் காரியப்படும் முறைமையை அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 6

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.
.
அகந்தைக் கிடமா மாங்கா ரத்துட
னிகழ்ந்தெழு மனஞ்சித்த மிவ்வகைத் தென்றது.

பொழிப்புரை :

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய் யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின் இல்லையெனும் இயல்பினதாய் ஆங்கார தத்துவமானது ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக உண்டான சரீரத்திலே பொருந்திப் போதும்; வாயுவையும் இயங்கும்படி நிறுத்தி நீங்காத மமதைக்கு மூலமாய் நானேயொழியப் பிறர் எனக்கொப்பார் பூமியிலில்லையெனும் இயல்பினையும் உடையதாய் நிற்கும். இனி மனது காரியப்படும் வகையாவது; இந்திரியம் புலன்கள் தாம் நுகரும் அளவிலதின் முந்தியுறும் இச்சை தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து மானதமானது நிற்கும் இந்திரயங்களானது விடயமாகிய புலன்களைப் புசிக்குமிடத்து அதற்கு முந்திச் செல்லுமதா யிருக்கிற இச்சையே தனக்கு வடிவாய்த் தனக்கு வேண்டினதிலே சதாகாலமுஞ் சங்கற்பித்துக் கொண்டு நிற்கும் மனதானது. இனி சித்தங் காரியப்படும் வகையாவது; சிந்தை நினைவு சித்தமானது நினைவு மாத்திரமாய் நிற்கும். இங்ஙனமிவை காரியப்படுமிடத்து ; ஐயம் வந்துதரு மனமொழிய வகுப்பொணாதே யாதாமொன்றின்மேலே செல்லுமிடத்து ஆமோ அல்லவோவென்று ஐயப்பாட்டையுமுடைய மனதாலொழிய அவை காரியப்படமாட்டாது.
இதனாற் சொல்லியது யானெனதென்னும் மமதையையுடைய ஆங்காரமும் ஆமோ அல்லவோ என்கிற சந்தேகத்தினையுடைய மனதும் நினைவுமாத்திரமாயிருக்கிற சித்தமுங் காரியப்படும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

மேல் சோத்திராதியுஞ் சத்தாதியும் வசனாதியும் வாக்காதியு மாகத் தத்துவம் இருபதுங் காரியப்படும் முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 7

சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இவைஅடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறும் ஐந்திற்கும் பிறங்கொலிகொள் வசனம்
உன்னரிய கமனதா னவிசர்க்கா னந்தம்
உற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.
.
ஞானமுங் கன்மமும் நண்ணுமிந் திரியமும்
ஊனமில் விடயமுந் தொழிலு முரைத்தது.

பொழிப்புரை :

சொன்னமுறை செவி துவக்கு நோக்கு நாக்குத் துண்டம் இவை ஐந்திற்கும் தொகுவிடயமாக முன் சொல்லிவந்த முறைமையிலே உட்கரணங்களன்றியே புறக்கரணமாயுள்ள சோத்திரம் தொக்கு சக்ஷ சிங்ஙுவை ஆக்கிராணமென்னுமிவை ஐந்துக்குங் கூடத்தக்க விடயமாக ; மன்னிய சத்தப் பரிச ரூப ரச கந்தம் மருவியிடும் நிலைபெற்ற சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் இவை ஐந்தும் பொருந்தியிடும் ; இவை அடையே வாக்குப் பாதம் பின்னர் வருபாணி மிகு பாயுவினோ டுபத்தம் பேசலுறும் ஐந்திற்கும் வாக்கும் பாதமும் பின்வரப்பட்ட பாணியும் மிகுதலையுடைய பாயுவும் இதனோடு உபத்தமுமென்று சொல்லப்பட்ட கன்மேந்திரியம் ஐந்திற்கும்; பிறங்கொலிகொள் வசனம் உன்னரிய கமனதான விசர்க்கானந்தம் உற்றதொழில் பெற்றிடுவ துண்மையாமே விளங்கப்பட்ட ஓசையையுடைய வசனமும் நினைத்தற்கரிய கமனமும் தானமும் விசர்க்கமும் ஆநந்தமுமென்று பொருந்தப்பட்ட ஐந்து தொழிலும் அடைவே உண்டாகிறது முறைமையாம்.
வாக்கென்றது வாயென அறிக. இவை அடைவே என்றதற்கு வகையாவது: சோத்திரத்தின் வழித்து வாக்கு. தொக்குவின் வழித்துப்பாதம். சக்ஷவின் வழித்துப்பாணி. சிங்ஙுவின் வழித்துப் பாயுவு. ஆக்கிராணத்தின் வழித்து உபத்தம். என்னும் இவையிற்றைக் காரியப்படுத்தும் அவதரத்திலும் கண்டுகொள்க.

குறிப்புரை :

இதனாற் சொல்லியது புரக்கரணமாயுள்ள ஞானேந்திரியமாகிய சோத்திராதியும் அதன் விடயமாகிய சத்தாதியுங் கன்மேந்திரியமாகிய வாக்காதியும் அதன் தொழிலாகிய வசனாதியும் ஆக இருபதும் காரியப்படும் முறைமையை அறிவித்தது.
மேற்பூதங்கள் ஐந்துக் காரியப்படும் முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 8

முந்தியஐம் பூதங்கள் வானாதி யாக
முயங்கியநற் செவிநாசி கண்ணாமெய்ம் முறையால்
இந்தவயி னின்றுவரும் ஐம்புலனும் உயிர்தாம்
எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் புறத்தும்
வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டும்தீ வெம்மை
தந்தவைசுட் டொன்றுவிக்கும் நீர்குளிர்ந்து பதமே
தரும்உரத்துத் தரிக்கும்இது தரணி தானே.
.
ஒன்றுமைம் பூதங்க ளுள்ளும் புறம்பும்
நின்றுகா ரியப்படும் நெறியிது வென்றது.

பொழிப்புரை :

முந்திய ஐம்பூதங்கள் வானாதி யாக தத்துவங்கள் எல்லாவற்றினும் முந்தத் தரிசனப்பட்டு வருகிற ஆகாசம் ஆதியான பூதங்கள் ஐந்தினும்; முயங்கிய நற் செவி நாசி கண்ணா பொருந்தப்பட்ட சோத்திர முதல் ஆக்கிராணம் ஈறாகவுள்ள இந்திரியங்கள் ஐந்துமிடமாக ; மெய்ம்முறையால் இந்த வயினின்று வரும் ஐம்புலனும் உண்மையாக அடைவே இந்த விடயங்களிலே நின்று கூடாநிற்கும் விடயங்கள் ஐந்தும். அன்றியும், இந்தப் பதத்துக்கு இந்திரியங்கள் ஐந்திற்கும் அடைவிலே பொருள் சொல்லவேண்டுகில், முயங்கிய நற்செவி மெய் கண் நாசி முறையால் இந்த வயனின்று வரும் ஐம்புலனும் என்று பாடமோதி பொருள்படுத்து மிடத்து பொருந்தப்பட்ட நன்மைப் பகுதியினையுடைய சோத்திரம் தொக்கு சக்ஷ சிங்ஙுவை ஆக்கிராணம் இவை யடைவே நின்று வருகிற சத்தாதியாகிய விடயங்கள் ஐந்துமென்று பொருள்படுத்திக்கொள்க; உயிர்தாம் எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் ஆன்மாக்கள் பொருந்தும்படித் தத்தஞ் சரீரங்களிலே விளங்கா நிற்கும் ; புறத்தும் உள்ளன்றியே புறம்பேயும் பூதங்கள் சீவிக்கும் படியாவது ; வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம் ஆகாசமானது சர்வமுந் தன்னிடத்திலே வந்து பொருந்துகைக்கு இடத்தினையுங் கொடுத்து வெளியாய் நிற்கும் ; வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டும் வாயுவானது எல்லாவற்றையும் மிகுதியாக இயக்குவித்துக்கூட்டும்; தீ வெம்மை தந்தவை சுட்டொன்றுவிக்கும் அக்கினியானது உஷ்ணத்தையும் உண்டாக்கித் தன்னோடுங் கூடினவையிற்றையுஞ் சுட்டொன்றுபடுத்தும்; நீர் குளிர்ந்தது பதமே தரும். அப்புவானது தன்னோடுங் கூடினவையிற்றைக் குளிர்வித்து நெகிழ்ச்சியாக்கும் ; உரத்துத் தரிக்கும் இது தரணி தானே பிருதிவியானது கடினமாய் எல்லாவற்றையுந் தாங்கிநிற்கும்.
முந்திய ஐம்பூதங்கள் தம்முருவின் இலங்கியிடும் என்றது ஆன்மாக்கள் சோத்திராதிகளைக் கொண்டு சத்தாதிகளை அறியுமிடத்துப் பூதங்களிடமாக நின்று கொள்ளவேண்டுகையாலென அறிக. அதற்கு வகையாவது ஆன்மா ஆகாசமிடமாகநின்று சோத்திரத்தைப் பொருந்திச் சத்தத்தை அறிவன்; வாயுவிடமாக நின்று தொக்கைப் பொருந்திப் பரிசத்தை அறிவன்; தேயுவிடமாக நின்று சக்ஷவைப் பொருந்தி உருவத்தை அறிவன்; பிருதிவியிடாக நின்று ஆக்கிராணத்தைப் பொருந்தி கந்தத்தை அறிவன். இப்படியே ஞானேந்திரியங் காரியப்பட்டாற்போல ஆகாசமாதியான பூதங்களிடமாக நின்று கன்மேந்திரியமான வாக்காதிகள் காரியப்படும் முறைமையை அநுபவத்தாற் கண்டுகொள்க. தம்முருவின் என்றது பூதரூபமென்றுமாம். புறத்துமென்ற உம்மை கொண்டே உள்ளுமம்படிக் காரியப்படுமென்றதென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மா சத்தாதிகளை அறியுமிடத்துப் பூதங்களிடமாக நின்றறியுமென்றும் அந்தப் பூதங்கள் காரியப்படுமிடத்து உள்ளும் புறம்புமாக நின்று காரியப்படுமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவம் முப்பத்தாறுஞ் சுத்தமா யிருப்பதொன்றோ அசுத்தமாயிருப்பதொன்றோ என்றும் இந்தத் தத்துவங்களோடு ஆன்மா கூடிநிற்குமிடத்து இவர்களுக்குண்டாகிய பயனேதென்றும் வினவ மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 9

இந்நிரையின் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம்
எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத் தாறாம்
மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தாம்
மருவும்உரு நிலையழிய வரும்பொழுது வரியார்
பன்னகம்அண் டசம் கனவு படர்வகையே முன்னம்
பகரவரும் கலாதிநிலை பரவியசூக் குமமாம்
தன்உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால்
தரையினிடை வருமென்று சாற்றும் நூலே.
.
தூல வுடல்விட்டுச் சூக்கும வுருவுடன்
மேலுறு பயன்துய்த்து மீளு மென்றது.

பொழிப்புரை :

இந்நிரையில் இந்த முறைமையிலே ; ஐந்து சுத்தம் முன்னே “உன்னலரும் பரசிவன்தன் அருளாலே’’ (21) என்னும் விருத்தத்தில் தோற்றமாகச் சொல்லப்பட்ட சிவதத்துவம் ஐந்துஞ் சுத்த தத்துவமென்று பேராம்; ஏழ்சுத்தா சுத்தம் வித்தியா தத்துவம் ஏழும் சுத்தா சுத்தமென்று பேராம் ; எண் மூன்றும் அசுத்தம் ஆன்ம தத்துவம் இருபத்துநாலும் அசுத்தமென்று பேராம்; எனும் இவை முப்பத்தாறாம் என்றிங்ஙனம் மூன்று வகையாகச் சொல்லப்பட்ட தத்துவங்களினது தொகை முப்பத்தாறென்று நாட்டப்பட்டிருக்கும்; மன்னிய தத்துவங்களிடை மயங்கி இப்படி நிலைபெற்ற தத்துவங்களின் நடுவே ஆன்மா மயக்கமுற்று; நெடுந்துயர்தாம் மருவும் உரு நிலையழிய வரும்பொழுது மிகவுஞ் சுகதுக்க வேதனைகள் பொருந்தப்பட்ட தூல சரீரத்திலேயுள்ள கன்மந் தொலைந்து இதனை விட்டுப்போங் காலத்து; வரியார் பன்னகம் அண்டசம் கனவுபடர் வகையே வரி பொருந்தின பாம்பு தோலுரித்துப் போமாறு போலவும் முட்டையில் ஐநநமாயுள்ளவை அந்தத் தோடுவிட்டு நீங்குமாறு போலவும் நனவிலேயுள்ளவர்கள் கனவிலே அடையுமாறு போலவும்; முன்னம் பகரவருங் கலாதிநிலை பரவிய சூக்குமமாம் தன் உருவில் அணைந்து பயன் அருந்தி முன்னே சொல்லப்பட்டு வருகிற கலையாதியுள்ள தத்துவம் முப்பத்தொன்றும் விரிந்திருக்கப்பட்ட சூக்கும தேகமான யாதனாசரீரத்தைப் பொருந்திச் சுவர்க்க நரகங்களிலுண்டான இன்ப துன்பங்களைப் புசிசித்து; அரன் அருளால் தரையினிடை வருமென்று சாற்றும் நூலே தம்பிரானார் காருண்ணியத்தினாலே மீளவும் பூமியின்கண்ணெ வருமென்று சாத்திரங்கள் சொல்லும். சிவதத்துவம் ஐந்தையுஞ் சுத்தமென்றது ஏதென்னில், அது சுத்த மாயையில் தோற்றமாகையாலும் கர்த்தா கொள்ளப்பட்ட திருமேனியெல்லாம் அதினிடமாகக் கொள்ளுகையாலும் வேதாகமங்கள் தோற்றுகையாலுமென அறிக. இனி வித்தியா தத்துவம் ஏழையுஞ் சுத்தாசுத்த மென்றதேதென்னில், இவையிற்றைச் சுத்த தத்துவங்கள் காரியப்படுத்துகையாலும் அசுத்த மாயையில் தோற்றமாகையாலுமென அறிக. இனி ஆன்ம தத்துவம் இருபத்து நாலையும் அசுத்தமென்றதேதென்னில் அது பிரகிருதியில் தோற்ற மாகையாலும் மும்மலத்தையுடைய சகலர்க்குத் தனு கரண புவன போகங்களா யிருக்கையாலுமென அறிக. இனி வரியார் பன்னகம் அண்டசமென்றது தூல உடல்விட்டுச் சூக்கும தேகத்தோடும் போகிறதற்கு உவமையென அறிக. இனி கனவு படர்வகையே யென்றது ஒரு உடலிற்செய்த காரியம் மற்றோருடலில் தெரியாததற்கு உவமையென அறிக. இனி கலாதிநிலை பரவிய சூக்குமமா மென்றது கலையாதி தத்துவம் முப்பத்தொன்றுங் கூடியே சூக்கும தேகமா மென்றதென அறிக. இனி பயனருந்தி யென்றது தூலதேகத்தோடுங் கூடிநின்று செய்த புண்ணிய பாவத்துக்குத் தக்கதாகச் சூக்கும தேகத்தோடுங்கூடி இயம தண்டத்தினும் நரக சுவர்க்கங்களிலுள்ள இன்ப துன்பங்களினும் அநுபவிக்கிறதென அறிக. இனி தரையினிடை வருமென்றது அப்படித் தொலைந்துந் தொலையாத சேடகன்மத்தைப் புசிப்பதற்காக மீளவுங் தூல தேகத்தை வந்தெடுக்கையென அறிக.
இதனாற் சொல்லியது தத்துவம் முப்பத்தாறும் சுத்தமென்றுஞ் சுத்தாசுத்தமென்றும் அசுத்தமென்றும், இந்தத் தத்துவங்களினோடுங் கூடி நிற்கப்பட்ட ஆன்மாக்கள் தூல தேகத்தைவிட்டுப் போய்ச் சூக்கும தேகத்தோடுங்கூடி இன்ப துன்பங்களை இயம தண்டத்தினும் நரக சுவர்க்கங்களினும் அநுபவித்து மீளவும் பூமியின் கண்ணேவந்து தூல தேகத்தை எடுப்பார்களென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் ஜநந மரணப்பட்டு வருகிற ஆன்மாக்கள் எடுக்கப்பட்ட யோனிபேதம் எத்தனை வகைப்பட்டிருக்குமென்று வினவ நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமுமா யிருக்குமென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 10

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானிடர்ஒன் பதின்மர்
ஏற்றியொரு தொகைஅதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
.
பாயிர மாகவெண் பத்து நான்குநூ
றாயிர யோனிக் கடைவிது என்றது.

பொழிப்புரை :

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்து வரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின் ஆன்மாக்கள் ஜனனமெடுக்குமிடத்து முட்டையில் தோன்றுவன வேர்வையில் தோன்றுவன பூமியிற் செறிந்துவருகிற வித்தில் தோன்றுவன பைக்குடரிலே தோன்றுவன. இந்த நால்வகைத் தோற்றத்திலும் உண்டாகப்பட்ட எழுவகைப் பிறப்பாவன ; ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்பதென்றும் மிகவும் உறுதிபெற்றுடைய தாபரவர்க்கங்கள் பத்தொன்பது நூறாயிர வர்க்கமென்றும் ; ஊர்வ பதினைந்து ஊர்ந்து திரிவன பதினைந்து நூறாயிர வர்க்கமென்றும்; அமரர் பதினொன்றோடுலவா மாற்றரு நீர் உறைவன நற்பறவைகள் நாற்காலி மன்னியிடும் பப்பத்து தேவர்கள் பதினொரு நூறாயிர வாக்கமென்றும் ஒருகாலத்திலும் நீரைவிட்டு நீங்காமல் உண்டாகப்பட்டவை பத்து நூறாயிர வர்க்கமென்றும் நல்ல பறவைகள் பத்து நூறாயிர வர்க்கமென்றும் நாலு காலையுடையவை பத்துநூறாயிர வர்க்கமென்றும்; மானிடர் ஒன்பதின்மர் மனிதர் ஒன்பது நூறாயிர வர்க்க மென்றும் ; ஏற்றியொரு தொகை அதனில் இயம்புவர்கள் ஆக இவை ஒன்றாக எண்ணி ஒருதொகைப் படுத்துவர்கள் பெரியோர்கள்.அது ஏதென்னில், யோனி எண்பத்து வான்கு நூறாயிரமென்றெடுத்தே யோனி பேதங்கள் எண்பத்து நான்கு நூயிரமென்று வகையினைத் தெரித்து.
அண்டசமென்ற தோற்றம் பறவை பாம்பு முதலாயுள்ளவையென அறிக. சுவேதசமென்ற தோற்றம் கிருமி கீடம் விட்டில் பேன் முதலானவையென அறிக. உற்பீசமென்ற தோற்றம் மரம் பூண்டு கொடி முதலானவையென அறிக. சராயுசமென்ற தோற்றம் நாற்காலிகள் மானுடர் தேவ வர்க்க முதலானவையென அறிக. ஆகத்தோற்றம் நால்வகையென அறிக. இதில் எழுவகைப் பிறப்புக்கு வகையாவன: தேவர் நரர் மிருகம் பக்ஷி ஊர்வன நீருறைவன விருக்ஷமென அறிக.
இதனாற் சொல்லியது நால்வகைத்தோற்றமும் எழுவகைப் பிறப்பும் இதிலுண்டான யோனிபேதம் எண்பத்து நான்கு நூறாயிரமாக விரிந்த முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் ஆன்மாக்கள் ஜநநமரணப்பட்டு வரும் அவதரத்து மலபாகம் வந்து சத்திநிபாத முண்டாகும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
சிற்பி