திருஅனேகதங்காவதம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீடன் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம்
பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய் வேதவிதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடுதலை விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப் பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் பற்றுக்களையும் அறுப்பர்.

குறிப்புரை :

நீடல் - (நீள் + தல்) நீளல், நீடுமாம். நிமிர்தல் - உயர்தல். புன்மை - மென்மை, பொன்மையுமாம். நிலாமுளை - பிறையாகிய முளை. சூடல் - சூடுதல். மறையின்முறை - வேதவிதி. சுலாவு அழல் - சுழன்றெரியுந்தீ. அழலாடல் - தீயிலாடுதல். அநேகதங்காபதம் - வடநாட்டிலுள்ளதொருமலை, பாடல் - பாடுதலை. மேவும் - விரும்பும். வினைபற்று - வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாக நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.

பொழிப்புரை :

சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக் கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம் பொருந்திய பெரிய கண்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கும் அழகினராய், அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை.

குறிப்புரை :

உண்டு என்னும் இரண்டும் வினைமுற்று. அவர் தொல்படையாகச் சூலமும் மழுவும் உள என்க. ஆலம் - நஞ்சு; நீலம் - நீலநிறம். நீலோற்பலமுமாம், கோலம் - திருக்கோலம். நிலாவுதல் - பிரகாசமாயிருத்தல். குலாவுதல் - பொருந்துதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

செம்பி னாருமதின் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்ப னாமநவி லாதன நாவென லாகுமே.

பொழிப்புரை :

செம்பினால் இயன்ற ஒப்பற்ற மும்மதில்களும் எரியச் சினத்தை முனையிலே உடைய ஓர் அம்பினால் எய்து தேவர்கட்கு அருள்புரிந்த வில்லாளியும், அனேகதங்காவதத்தில் பூங்கொம்பு போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிக் கொல்லேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட நம்பனுமாகிய பெருமான் திருப்பெயரைச் சொல்லாதவை நாக்கள் எனல் ஆகுமோ?

குறிப்புரை :

மதில் மூன்று - திரிபுரம். சினம் வாயது - எரிதலையுடைய முனையுடையது. விண்டுவாகிய பாணத்தின் முனையில் அக்கினியிருப்பதுபற்றிச் சினவாய் எனப்பட்டது. கொம்பின் நேர் இடையாள் - கொம்புபோன்ற இடையினையுடைய அம்பிகை. நம்பன் - எல்லா உயிர்களாலும் விரும்புதற்கு உரியவன், சிவநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகாத நாக்கள் நாவாகா. (தி.3 ப .4. பா.6,9) நவிலல் - நாவாற்சொல்லி அடிப்படல். `மறை நவில் அந்தணர்`(புறநானூறு, கடவுள் வாழ்த்து)

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

பொழிப்புரை :

`தந்தத் திந்தத் தடம்` என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது.

குறிப்புரை :

அருவிக்கூட்டம் பாயும்போது உண்டாகும் ஒலிக் குறிப்பு, `தந்தத் திந்தத் தடம்` என்றுள்ளதாம். பாய்தலால் சிந்துகின்றன. வெந்த - சுடர்ந்த, கதிரோன் - கதிர்களையுடைய சூரியன். வெந்தகதிர்:- வெங்கதிர். மாசு - குற்றம். திங்கள் - சந்திரன். அந்தம் - முடிவு. அளவு - எல்லை. நாசமுமில்லை அளவுமில்லை என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன் னணியா ரசும்பார்புனல்
அறையு மோசை பறைபோலு மனேகதங் காவதம்
இறையெம் மீச னெம்மா னிடமாக வுகந்ததே.

பொழிப்புரை :

திங்களும் ஞாயிறும் உயர்ச்சியை அறிய முடியாது, பக்கத்தே விலகிச் சென்று உறையும் வானளாவிய கோயிலை உடைய தாய்ப், பசும்பொன் போன்ற அழகிய நீர்த்துளிகளை உடையவாய்ப் பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகளை அடுத்துள்ளது ஆகிய அனேகதங்காவதத்தை, எம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் கொண்டு உகந்தருளுகின்றான்.

குறிப்புரை :

பிறையும் - சந்திரனும், மாசு - குற்றம், கதிரோன் - சூரியனும். அறியாமை - அறியாமல். கோயிலின் உயர்ச்சியை அறியமாட்டாமல், பெயர்ந்து - அப்பால் விலகி, சூரிய சந்திரர் திருக்கோபுரத்தைத் தாண்டற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்திற் பெயர்ந்துபோவர் என்றது. அசும்பு - நீர்த்துளி, துளித்தல் பொருந்திய புனல். புனல் - நீர். அறையும் - ஒலிக்கும். பறை - வாத்திய வோசையை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சார லனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.

பொழிப்புரை :

தேனை மிகுதியாகப் பெற்ற மணம் கமழும் சிறந்த மலர்களைப் பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றும் சரியை, கிரியை முதலான நெறிகளில் நின்று அவனை உணர நீவிர் வல்லீராயின் யானைகள் ஏறி உலாவும் அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்துள் விளங்கும் ஆன் ஐந்தாடும் முடியானாகிய சிவபிரான் உங்கட்கு அவ்வானுலகப் பேற்றினை வழங்கியருளுவான்.

குறிப்புரை :

தேனையேறும் - தேனை மிகுதியாகப்பெற்ற. அடி - திருவடியில். சேர்த்துவீர் - (தூவித்) தொழுபவர்களே என்று விளித்தார். ஆனை - யானை. வானை - பேரின்ப வீட்டுலகை. நெறி - சரியை முதலிய நான்குநெறி. உணருந்தனை - உணரும் அளவை. ஆன்ஐ - பசுவினிடத்துண்டாகும் பால் தயிர் நெய் முதலிய ஐந்து. ஆனிலங்கிளர் ஐந்தும் அவிர்முடியாடி, வானை ஏறு நெறியுணர வல்லீரேல் ஆனையேறுமுடியவன் அருள்வதும் வானையே (தி .2 ப .10.பா .5) என்று ஐயந்தீர்த்தருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.

பொழிப்புரை :

யானைகள் அஞ்சி ஓடுமாறு ஒலித்துப்பாய்வனவும், ஒளிபொருந்திய முத்துக்கள், வெண்பளிங்கு ஆகியன நீரை ஊடுருவி வீழ்வனவும், வயிரங்களைக் கொழித்து அகில்மரங்களை உந்திக்கொண்டு வருவனவும் ஆகிய வெண்மையான அருவிகள் பாயும் அழகியசாரலை உடைய அனேகதங்காவதத்தை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை அடைவதே மெய்ந்நெறியாகும்.

குறிப்புரை :

அநேகதங்காவதம் என்னும் மலையின்மேலிருந்து பாயும் வெள்ளருவியொலியால் யானைகள் அஞ்சி ஓடும். அவ்வருவி முத்துக்களையும் பளிங்குகளையும் வயிரங்களையும் அகில் (முதலிய மரங்) களையும் அடித்து வருகின்றது. அத்தகைய அழகிய சாரல் உடைய மலை; அம்மலைமேல் எழுந்தருளிய இறைவன் திருவடி சேர்வது மெய்ந்நெறி. வெருவி - அஞ்சி. வேழம் - யானை. இரிய - ஓட. உருவி - ஊடுருவி. வயிரம் - வச்சிரமணி. கொழியா - கொழித்து. அகில் - மணமுள்ளதொருமரம். வாய்மை - மெய்ந்நெறிக்குப் பண்பாகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஈர மேதுமில னாகி யெழுந்த விராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்ற னனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

அன்பு ஒருசிறிதும் இன்றித் தன் வலிமையைப் பெரிது என எண்ணி எழுந்த இராவணனை வீரம் அற்றவனாகச் செய்தருளிய, கயிலை மலைக்குரியவனும், ஆரமாகப் பாம்பை அணி பவனும் ஆகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு நினைபவர் வினைகள் மாயும்.

குறிப்புரை :

ஈரம் - அன்பு. ஏதும் - யாதும், சிறிதும். விலங்கல் -(கயிலை) மலை. ஆரம் - மாலை. வாரம் - அன்பு. பக்தியின்றி வீரம் ஒன்றே கொண்டு கயிலையைத்தூக்கிய இராவணனுக்கு அவ்வீரம் சிறிதும் இல்லாதவனாக்கினார். விலங்கலான் - கயிலையான், சிவபிரான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமை யெழுந்ததோ ராரழல்
அண்ண னண்ணுமணி சாரல னேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.

பொழிப்புரை :

திருமால் நான்முகனோடு கூடி அடிமுடி அறிய முற்பட்டபோது அவர்கள் அறிய முடியுமா என எண்ணி ஐயுறும் வண்ணம் அவர்கட்கு இடையே எழுந்ததோர் அழற்பிழம்பாகிய சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை நண்ணும் இயல்புடையார் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

கண்ணன் - கிருட்டிணனாக அவதரித்த திருமால். வண்ணமலர் - தாமரை. வண்ணம் - அழகு. ஐயம் - சந்தேகம். அறியாமை - அறியாமல். ஆர் அழல் - நிறைந்த பெரியதீப்பிழம்பு (அக்கினிமலை வடிவம்) அண்ணல் - சிவபிரான். நண்ணும் - சேர்ந்து வழிபடும். வண்ணம் - வகை கூட்டியோர்க்கு ஐயமாய் எனப்பொருள் காண்க. மதுரைத் திருஞானசம்பந்தப் பிள்ளைப் பதிப்பில் `கையமாய்` என்ற பாடமுளது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில னேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.

பொழிப்புரை :

சிறந்த சிவபதத்தை அறியாதவராகிய சமண புத்தர்கள் `ஏ ஏ` என இகழத்தக்கவர்களாய் இறுமாப்புடையவர்களாய் உழல்கின்றவர் ஆவர். நாம் அடையத்தக்கது ஆகிய சிவபதத்தை அறியும் அவா உடையீராயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை ஆராய்ந்துணர்தலே நீவிர் செய்யத்தக்க கருமம் ஆகும்.

குறிப்புரை :

மாபதம் - பெரிய பதவி. ஏ பதம் - ஏ ஏ என்னும் இகழ்கின்ற சொல்; `ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்` (சீவக சிந்தாமணி. பா. 652.) அறிவீருளிர் - அறிவீராயிருப்பீர் (ஆகில்). கருமம் - இன்றியமையாது செயற்பாலதொருகடன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம் பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த வனேகதங் காவதம்
சொல்ல நல்லவடை யும்மடை யாசுடு துன்பமே.

பொழிப்புரை :

பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் அப்பெயர் பெற்ற தோணிபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தன் நல்லோர்கள் திருமுன்னர், அல்லல்தீர உரைத்தருளிய அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள் நம்மை அடைய மாட்டா.

குறிப்புரை :

தோணிபுரம் - சீகாழி. இறை - தலைவர். தமிழ் - சைவத்தமிழ் நூல்களை அருளும். கேள்வி - சுருதி. ஒவ்வொரு பதிகமும் ஒவ்வொருநூலாதல் ஆசிரியர் திருவாக்காலறியலாம். `கழுமலத்தின் பெயரை நாளும் பரவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையால் பனுவல்மாலை.`(தி .2 ப.70 பா.12) `வன்றொண்டன் பன்னு தமிழ் நூல் வல்லார்`(தி.7 ப.41 பா.10) நல்லார்கள் - சிவனடியார்கள். நல்ல - நல்லன. நல்ல அடையும், சுடுதுன்பம் அடையா என்க.
சிற்பி