திருவையாறு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை குலாயசீர்
ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள். கோங்கம் - கோங்குமரம். இதைக் கன்னிகாரம் துருமோற்பலம் என்பர். கூவிளம் - வில்வம். இதன் முன்னீரடியிற் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும் பின்னீரடியில் அவனது திருக்கூத்து வன்மையும், இசைக்கருவிகளும் கூறப்பட்டன. எல்லாத்தலங்களிலும் பரமேசுவரனது நடனம் வணங்கப் பெறும் உண்மை சாத்திரமுணர்ந்தோர்க்கே விளங்கும். ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயாறு என்ற அப்பர் அருண்மொழியும் அறிக. பாடல் - இசைப்பாட்டு. முழவம் - தண்ணுமை, மத்தளம், குடமுழா. குழல் - வேய்ங்குழல், மொந்தை - ஒருகட்பறை, பண்ணாக ஆடல் - பண்ணோடு பொருந்த ஆடுதல். ஐயாறு:- பஞ்சநதம் என்பது வடமொழிப் பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தன்மை யாருமறி வாரிலை தாம்பிற ரெள்கவே
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்
துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்
அன்னமா லுந்துறை யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத்திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.

குறிப்புரை :

எள்க - இகழ. திரிதர்வர் - திரிதருவார், திரிவார். துன்னம் - துளைத்தல், தைத்தல். துன்னவாடை - கந்தை. `துன்னங் கொண்ட உடையான்` (தி .2 ப .76. பா .2) `துன்னலினாடையுடுத்து` ( ப .1 ப .41 பா .3) எனப்பிற பதிகங்களிலும் காணலாம். சிவபிரானியல்பை அறிபவர் எவரும் இல்லை. அவர் பின்னும் முன்னும் சில பேய்க்கூட்டம்சூழத் திரிவதைக் கண்டு பிறர் இகழ்தலுங்கூடும். கந்தலணிவார். சுடுகாட்டுப் பொடி பூசுவார். அவற்றால் அவனை அளந்தறியலாகாது. அன்னப்புட்கள் ஆலும் (- ஒலிக்கும், ஆடும்) துறை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கூறு பெண்ணுடை கோவண முண்பது வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் அணிகலம்
ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு தேத்தவே
ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமையோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.

குறிப்புரை :

கூறு - இடப்பால், பெண் - உமாதேவியார், உடை கோவணம், உண்பதும் வெண்டலையில். மார்பிலணிந்தன முற்றலாமையிளநாகமொடு ஏனமுளைக் கொம்பு, பரிவர்த்தனஞ் செய்து கொள்ளுமுறையில், ஏனைப் பொற்கலம் மணிக்கலம்போலக் கொள்வார் எவருமில்லை. மாறில் - பரிவர்த்தனஞ் செய்யவேண்டின். இப்பொருளில் உலக வழக்குமுண்டு. ஏறு - எருது. ஆறும் - சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும்; நான்கும் - வேதம் நான்கும், (தி .2 ப .84 பா .11) சொன்னான் - சிவபிரான். `மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே` திருவாசகம் 147.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.

குறிப்புரை :

பண்ணின் - பண்ணிசைபோல, பண்ணிசையிலும், நல்ல - இனிய, பவளம்போன்ற துவர் வாயினார்; துவர் - செந்நிறம். எண் இல் - கணக்கில்லாத, எண்ணில் என்பது வினையெச்சமாக்கோடலமையாது. கண் இரண்டாதலின், வேலிணை (இரண்டு) ஒப்பாக்கப்பட்டன. வண்ணம் - அவனருளே கண்ணாகக் காணும் வண்ணம். தன்மை. வலி - மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளும் வன்மை. தம் வாய் மொழி - சிவநாமமே பாடும் நல்ல வாயின் மொழியுந் தோத்திரங்களை. மொழி - ஆகு பெயர். அண்ணல் - சிவபெருமான், அக்காலத்தில் திருவையாற்றில் இளமகளிர் சிவபத்தியிற் சிறந்திருந்தனர் என்று கருத இடனுண்டு, `காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட ... சேயிழையார் நடமாடுந்திருவையாறு` என்று வருந்தேவாரமும் (தி .1 ப .130 பா .6) ஈண்டுக் கருதுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் பின்றெளி
ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.

குறிப்புரை :

வேனல் - வெம்மை. `கெடிலக்கரை வேனலானையுரித்த வீரட்டர்` (தி .5 ப .54 பா .5). வானையூடறுக்கும் மதி - விண்ணூடு அறுத்துச்செல்லும் பிறை. தேன் முதலிய ஏழும் அபிடேக திரவியங்கள், நெய் பால் தயிர் என்னும் மூன்றும் தனித்தனி ஆட்டற்குரியன. இம்மூன்றையும் `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்` என்று தனித்தும், `ஆனிலங்கிளரைந்தும் அவிர் முடியாடி` என்று ஐந்தாகச் சேர்த்தும் கூறுதல் திருமுறை வழக்கு. `ஆனஞ்சு` பஞ்ச கௌவியம்,(ஞானபூசாவிதி. 14. உரை பார்க்க) தெளி - தெளிந்த சாறு. (ஆகு பெயர்) தெங்கு - தென்னை. தென்கு என்பதன் மரூஉ.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல் பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதி சூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

எங்குமாகி நின்றான் - அகண்ட வியாபகன். இயல்பு அறியப்படாமங்கை. சிவனுக்கும் ஏற்றிக்கூறலாம். பங்கம் - இழிவு, பதினெட்டு - பதினெண்புராணம் `சூதன் ஒலிமாலை` (தி.3 ப.54 பா.8 பெரிய புராணம், திருஞான.840.) நான்கு - நாலு வேதம். உணர்வு - மலம் அகற்றற் பொருட்டு, உயிரினிடத்து நிலை பெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் தெளியவோதுகின்ற அபரஞானமாகிய சிவாகமங்களும், அங்கம் - வேதாங்கங்கள். (பார்க்க: பா.3 உரை)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள் தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச்சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேதவடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகி உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகிய பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

வேதி - வேதசொரூபன். விண் - ஆகாயம், எரி - தீக் கடவுள். ஆதி - முதற்பொருள். ஓதியறிவார்யாரும் இல்லை. உயிர்கள் ஓதியறிதலில்லையேனும், சிவபிரான் தானே தன்னை உயிர்க்கு ஓதுவித்தும் உணர்வித்தும், சேதனாசேதனப் பிரபஞ்சம் எல்லாம் சோதி (ஒளி) யாய் நிறைந்துள்ளான். சுடரையுடைய சோதிகளாகிய சூரிய சந்திராக்கினிக்குள் சோதியாய் உறைபவன். (திருவிசைப்பா.2) வேதியாகி - சேதன சொரூபியாகி, விண் ... ஆகி - அசேதனரூபமாகி, (தடத்த வடிவத்தைச் சார்ந்தது). பழம் பதிப்பிலுள்ள `எரிகாற்றுமாய்` என்ற பாடமே சிறந்தது. எரி - தீ. எறியுங்காற்று எனின், காற்று என்பதில் உள்ள பொருளே எறிதலுமாதலின் சிறப்பில்லை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குராமலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.

குறிப்புரை :

குரவம் - குராமரம். நாள் மலர் - காலையிற் பூத்த பூ. வியப்ப - புகழ்ந்துரைக்க. பரவி - வாழ்த்தி. பறைதல் - நீங்குதல். அரவம் - பாம்பு, ஆர்த்து - கட்டி, (அணிந்து) உகந்தான் - உயர்ந்தவன். `விரவி` என்றது புதிய பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

உரைசெய் தொல்வழி செய்தறி யாவிலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் துமதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலைமலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதி சூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.

குறிப்புரை :

இராவணன் மிக்க சிவபக்தனாகித் திரிலோகாதி பத்தியம் முதலிய பெருவரங்களைப் பெற்றவன். அதற்குரிய வேதாகமவழி அவனுக்குப் புதுவழியன்று. தொல் (பழைய) வழியே. அறியாமை மேலிட்டபோது, அத்தொல் வழிமறந்து திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். அதனால், அவனுடைய மலைகளைப் போன்ற தோள்களை நசுக்கப் பெருவிரல் நுனியை மட்டும் ஊன்றியருளினார், சந்திரசேகரரான வீரனார். மதி - வளராததும் தேயாததும் ஆன திங்கட்பிறை. மைந்தனார் - வீரனார். திருவையாறு காவிரியின் வடகரைக் கண் உள்ளது. காதல் - அத்தலத்தில் எழுந்தருளியிருக்க விரும்புதல். அரைசெய் மேகலையான் - மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன். மேகலை - பொன்னாடை விசேடம். `எண்கோவை மேகலை`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாலுஞ் சோதி மலரானு மறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழலு ளானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால்போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல்போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மால் - (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ. வாய்மையான் - சத்தியசொரூபி. காலம் காம்பு வயிரம் கடிகையன் என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம். கால் - திருவடி, அம் காம்பு - அழகிய காண்பு. வயிரம் - வைரரத்னம், கடிகை - துண்டு, கால்போலக் காம்பு. கழல்போலக் கொழுந்து. கடிகையம் பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல்போலப் பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க் கொழுந்தீன்று என்க. ஈன்று - தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார். பவளம்போன்ற செந்நிறம் உடைய பழங்களைப் பவளமென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச் சாதியடை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையான்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத் திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம் பொருள் எனத்தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான்.

குறிப்புரை :

கையில் உண்டு உழல்வார் - கையில் உணவை ஏந்தி உண்டு திரியுஞ்சமணர். கமழ் ... உழல்வார் - நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடம்பைப் போர்த்துத் திரியும் புத்தர். மைகொள் கண்டம் - நீலகண்டம். முக்கண் - சோம சூரியாக்கினி. ஐயம் - பிச்சை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 12

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயவை யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.

பொழிப்புரை :

பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

பண்டங்கன் - பாண்டரங்கம் என்னுந்திருக்கூத்தை ஆடுபவன். கலி - வறுமை, கலிகடிந்தகையான் என்றது திருஞானசம்பந்தர் எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோர் வறுமை நீக்கிய உண்மையை உணர்த்திநின்றது. கடிந்த - நீக்கிய, `உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளுங் கரவாவண்கைக் கற்றவர் சேருங்கலிக்காழி` (தி.1 ப.102. பா.1) யில், திருஞானவேந்தர் திருக்கைகள் உலகவர் கலி (வறுமை) முதலிய துன்பங்களைக் கடிதலில் ஐயமின்று. கடந்த என்றது புதியது. காழியர் காவலன் என்றதால், பாலறாவாயரான காரணம் பற்றி, அக்காழியில் இருந்த அந்தணர் எல்லோரும் அப்பெருமான் திருவடித் தொண்டர் ஆயினர் என்பதும், காழிவேந்தர் தலைவரானார் என்பதும், சிவனருள் பெற்றவரையே, நல்லோர், தமக்குக் காவலராக் கொள்ளும் வழக்கம் உடையவராயிருந்தனர் என்பதும் புலப்படும். `ஒலிகொள் சம்பந்தன்`:- பரநாதத்தைக்கொண்டு பாட்டாக அருளும் சிவஞானசம்பந்தர். கொள் தமிழ் எனலுமாம்.
சிற்பி