திருவாஞ்சியம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வன்னி கொன்றைமத மத்த மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாக வுகந்ததே.

பொழிப்புரை :

வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் `தென்ன` என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஞ்சியமாகும்.

குறிப்புரை :

வன்னி - வன்னிமரத்திலை. கொன்றைப்பூ, ஊமத்தம் மலர், எருக்கம்பூ. கூவிளம் - வில்வம். பொன் இயன்ற - பொன்போன்ற. சடையில் வன்னி முதலிய வற்றைப் பொலிவு பெறச்சூடிய புராணனார். புராணன் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளாயுள்ளவன். தென்ன என்று இசை செய்வன வரிவண்டுகள். உகந்தது - விரும்பியது (வினையாலணையும் பெயர்), மேலும் இவ்வாறாதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே.

பொழிப்புரை :

காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

காலகாலர் - இயமனுக்குங் காலமுடிவைச் செய்பவர். இயமனுக்கியமன் என்பாருமுளர். கரிகான் - கரிந்தகாடு, மேலர் - எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழுமுதல்வர். வேலை - கடல். மிடறு - கழுத்து. நஞ்சுண்டிருண்ட கண்டத்தர். `இருள்கின்ற` என நிகழ்வாற் கூறியதால், இன்னும் இருளும்படி செய்யுங்கொடிய நஞ்சையுண்டு வாழ்வித்த கருணைத்திறத்தை அறியலாம். திருவாஞ்சியத்து மாடங்கள் சந்திரமண்டலத்தின் அளவும் ஓங்கியவை என்று உயர்த்துக்கூறினார். மதிமண்டலத்தை அளாவிய மாடம். மாலைமதி, கோலமதி, மாலைப்பொழுதும் அழகும் மதிக்கு அடை, ஞாலம் - உலகத்துயிர்கள், இடவாகுபெயர், ஞாலம் - தொங்குவது என்னுங்காரணப் பொருளதாய், முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது அறிக. நயந்தது - விரும்பியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மேவி லொன்றர் விரிவுற்ற விரண்டினர் மூன்றுமாய்
நாவி னாலருட லஞ்சின ராறரே ழோசையர்
தேவி லெட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

பொழிப்புரை :

விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமையின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.

குறிப்புரை :

இதனுள் ஒன்று முதல் எட்டீறாகிய எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத்தக்கது. 79,380- ஆம் (திருக்கழுமலம், திருவோமமாம்புலியூர்த்)திருப்பதிகங்களுள்வரும் `எண்ணிடை யொன்றினர்` `மணந்திகழ் திசைகளெட்டும்` எனத்தொடங்குந் திருப்பாடல்களை இங்கு நோக்கின், இவ்வாசிரியர்க்கு இவ்வாறு பாடியருளும் எளிமை இனிது விளங்கும். மேவில் ஒன்றர் - விரும்பி வழிபட்டால் அநந்நியமாதலையுடையவர், `அறிபவன் அருளினாலே அநந்நியமாகக் காண்பன்` என்பதும்`அறிய வல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள் அதனோடு ஒற்றித்து நின்று அவ்வருளானே அறியற்பாலதாம் என்னும் அதன் உரையும் (சித்தியார் .245), சைவ உப நிடதங்களினும் சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையிற் கோசரிப்பது என்று ஓதப்படுஞ் சிவனருளாம் மெய்ப்பொருள்` என்னும் சிவஞான பாடிய வசனமும் (சூ .6.) ஈண்டுணரத் தக்கன. ஒன்றர் - ஒருபொருளாயிருப்பவர் எனலுமாம். விரிவுற்ற இரண்டினர் - விரிதலடைந்த ஞானமும் கிரியையும் உடையவர். சிவமும் சத்தியுமானவர் எனலுமாம். `சிவசத்தி மூன்றனுள் யாண்டும் ஒரு பெற்றித் தாய் வியாபரிக்கும் இச்சையை ஒழித்து, ஒழிந்த ஞானக் கிரியைகள் இரண்டும் தனித்தனி வியாபரித்தலானும் ஒத்து வியாபரித்தலானும் தம்முள் ஏறிக்குறைந்து வியாபரித்தலானும்`(சித்தியார் உரை.85) விரிவுற்றன. இரண்டு - சொரூபம் தடத்தம் எனலுமாம். விரி வுற்ற இரண்டு - போகமும் முத்தியும் ஆதலும் பொருந்தும். மூன்றுமாய் - இச்சா ஞானக் கிரியையாய். `ஒன்றதாய் இச்சா ஞானக்கிரியை என்று ஒருமூன்றாகி`(சித்தியார் .83). அவை முறையே உயிர்கட்கு மலந்தீர்த்துச் சிவங்கொடுக்கும் கருணையும், அதற்கான உபாயங்களை அறியும் அறிவும், அவற்றை அவ்வாறே கொண்டு செய்யும் சங்கற்பமும் ஆகும். இலயம் போகம் அதிகாரமாய், ஒன்றாய் வேறாய் உடனாய், மூன்று தீயுமாய், முச்சுடருமாய் எனினும் பொருந்தும். மூன்றும் ஆய் நாவின் நாலர் என்று கொண்டு பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருளையும் ஆய்ந்துணர்த்தும் நான்மறை நாவர் எனலுமாம். உடல் அஞ்சினர் - பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருமேனியையுடையவர், பஞ்சப்பிரம மந்திர தேகமும் ஆம். அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்து உடலும் சொரூபமல்லவாயினும் உபசாரத்திருமேனியாகும். `அநாதி முத்த சித்துருவாகிய முதல்வனுக்குத் தன்னுருவமாகிய உலகத்தைத் தொழிற்படுத்தற் பொருட்டும் வேறோருருவம் வேண்டப்படுவ தன்றாயினும் ... உயிர் வர்க்கங்கள் பொருளியல்பு உணர்ந்து வீடுபெறுமாறு வேதாகமங்களைக் கோவைப்படச் செய்தற் பொருட்டும் அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற்பொருட்டும் திருமேனி ஒருதலையான் வேண்டப்படும்`(சித்தியார் .66 உரை) ஆறர் - அறுகுணத்தர், (ஷாட்குண்யர்) முற்றறிவு முதலியவை. பகவர் எனலுமாம். உடலஞ்சினர். ஆறர் - பிறவியையஞ்சிய நல்லோர் வழியில் விளங்குபவர், உடலஞ்சு:- பஞ்சகோசம், ஆறர் - கங்கையாற்றினர் எனினுமாம். `நன்மூவிருதொன்னூலர்` `முத்தீயர்` `நால் வேதத்தர்` `வீழிமிழலையார்`(தி.3 ப.9 பா.7) என்றதில் வருமாறுங்கொள்ளலாம். `திருவெழுகூற்றிருக்கை`யும் நோக்குக. ஏழ் ஒசையர் - `ஏழிசையாய்`(இசைப்பயனாய்) இருப்பவர். தேவில் - தெய்வத்தன்மையில். எட்டர் - அட்டமூர்த்தி, எண்குணத்தர் எனின் ஆறர் என்பதற்கு ஷாட்குண்யர் என்னாது வேறுரைக்க. பாவம் - தீவினை. பழி - தீச்சொல். முறையே செயலும் மொழியுமாய்த் தன் திரிகரணத்தாலும் பிறர் வாயாலும் நிகழ்வன. அடியார்கட்கே பாவந்தீர்ப்பர் பழி போக்குவர் எனவே அல்லார்க்கு இல்லை என்றதாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிடம் ஆக வமர்ந்ததே.

பொழிப்புரை :

சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேதவசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.

குறிப்புரை :

சுவண்டு - பொருத்தம், சால - மிக, பொடி - திருநீறு, மறைபேசுவர் எனமாற்றுக. சீலம் - பெருந்தகைமையுள் ஒன்று, ஒழுக்கமுமாம். ஆலம் - நஞ்சு. ஒற்று (ள்) மிகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

பொழிப்புரை :

கையின்கண், விளங்கும் மான்கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதிதேவியைத் தமது பாகமாகக் கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரியமிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.

குறிப்புரை :

மறி - மான்கன்று. காந்தட்பூ கைவிரல்கட்குவமை. தையல் - கட்டழகுடைமையாற் பெண்ணைக் குறிக்கும் பெயர், இங்குப்பார்வதிதேவியாரை உணர்த்திற்று; தையல் எல்லார்க்கும் நாயகியாதலின். அடையார் - பகைவர். புரம் செற்றவர் - திரிபுரதகனம் செய்தவர். `முப்புரமாவது மும்மலகாரியம்` என்பது திருமந்திரம். மிடறு - கழுத்து. செய்ய, கரிய முரண். ஐயர் - முதல்வர், அருநோய் அடையா - நீங்கற்கரிய பிறவிநோய் முதலியயாவும், திருவடியடையும் அன்பர்க்கு இல்லை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க வகந்தொறும்
இரவி னல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

பொழிப்புரை :

அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப்பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அரவம் - பாம்பு, பூண்பர் - சூடுவர். அணியுஞ்சிலம்பு - அலங்காரமாகப்பூணும் வேதச்சிலம்பு. ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு. பேணுவர் - விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாமஜபமே செய்பவர். வினை - கர்மம். மடமாது - உமாதேவியார். மைந்தர் - வீரர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலநங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானவிசை பாடன்மல் குந்திரு வாஞ்சியத்
தண்ணலார் தம்மடி போற்றவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திரு முடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

பிறை - பிறத்தலுடையது என்னுங்காரணப் பொருட்டான பெயர். `திங்கட்டுண்டம்`. அநங்கன் - அங்கமில்லான். உருவிலி, மன்மதன். பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின் பண்ணில் ஆன இசை என்றார். போற்ற வல்லார் - போற்றுதலில் வேதாகம ஞானவல்லபம் உடையவர், நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் - துன்பம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடியூ டவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாடவீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடிவருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள். மன்னிய - நிலைத்த. மன் - அரசன். இராவணன். வரை - கைலாசகிரி. வேடவேடர் - வேட்டுவக்கோலத்தர். வினை பற்று உம்மைத்தொகை. வினை - கர்மம். பற்று - மூலகர்மம். `இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள்`(பெரிய. அப்பர்.129) என்புழியறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

செடிகொ ணோயினடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடய னேத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடிவரும்.

குறிப்புரை :

செடி - துன்பம், பாவமுமாம். திருவாஞ்சியத்துப் பெருமான் திருவடியை அடைந்தவருடைய அடியார்க்கு அடியார் ஆனவர்க்கு நோயின்மையும், தீவினை நீக்கமும், இறவாமையும், சிவகதியும் உண்டு என்றது. இத்திருப்பதிகத்துள் (3,5,6,7,8,10,11.) அடியார் சிறப்புணர்த்திய உண்மையை உணர்க. கூற்றம் - இயமன். புகல் - சிவகதி. `தன்னைச் சரணென்று தாளடை` (தி.4 ப.105 பா.1) வதே புகலாகும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

பிண்டம் - பிண்டித்த சோறு. மிண்டர் - வலியர். கெண்டி - கிளறி. பொழில் - சோலை. அண்டவாணன் - அண்ட முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி, பாவாணன், அம்பலவாணன், மன்ற வாணன், அண்டவாணன் என்னும் வழக்கால் இறைவனியல்பு உணர்தல் கூடும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றவிறை யானை யுணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

பொழிப்புரை :

தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடுபேற்றை அடைவர்.

குறிப்புரை :

என்றும் நின்ற இறையான் - நித்தியகர்த்தா. செந்தமிழ் - திருப்பதிகம். ஒன்றும் உள்ளம் - ஒன்றியிருந்து நினைக்கும் உள்ளம். `இப்பதிகம் ஒன்றும் மனம்` என்பதே ஆசிரியர் உட்கோள். வானம் - வீடு.
சிற்பி