திருச்சிக்கல்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வானு லாவுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை யாயின நையுமே.

பொழிப்புரை :

வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும் நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற்காலத்துக்குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே நினைபவர் வினைகள் நைந்துஅறும்.

குறிப்புரை :

வான் உலாவும் மதி - தன்மேல் வந்துலாவும் அளவு உயரிய மாளிகை. `வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்` என்றார் கம்பர். வேனல் - சினம். வேள் - மன்மதன். விழித்திட்ட - நெற்றிக் கண்ணைத்திறந்து எரித்த, எரித்தவன் வெண்ணெய்ப் பெருமான் என்ற நயம் உணர்க. ஞானமாக நினைவார் - `பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற்கீழ் நீங்காதே` (சித்தியார் 292.) நினைந்து நிற்பவர். நையும் - நைந்தொழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழும்மடி யாரவ ரல்ல லறுப்பரே.

பொழிப்புரை :

இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம்தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

குறிப்புரை :

மடம் - மடப்பம். குதி - குதித்தல். முதனிலைத் தொழிற் பெயர். பொய்கை - இயற்கை நீர்நிலை. திடம் - சிவபெருமானே மெய்ப்பொருட்கடவுள் என்னும் வேதாகம பரத்துவ நிச்சயம். மல்கிய - நிறைந்த. மேவி - விரும்பி. அல்லல் அறுத்தல் - பிறவித் துன்பந்தீர்த்தல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நீல நெய்தனில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஓரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

நெய்தல் - நெய்தல் மலர். நிலவி - விளங்கி. ஆலும் - அசையும், துள்ளும். மாலும் என்றுகொண்டு மயங்குமெனலுமாம். வேல் - வேல்போன்ற, வேலவொண் கண்ணியினாள் என்றது புதியது. வேல் நெடுங்கண்ணி என்னும் அத்தலத்தின் திருநாமத்தைக் குறித்தது. இவ்வாறு பல திருப்பதிகங்களுட் காணலாம். பிற்காலத்தில் வடமொழிப் பெயராக மாறிய காரணத்தால் சிற்சில பதிகங்களுள் அம்முறை விளங்கவில்லை. பாலவண்ணன் - பால்போலும் வெண்ணிறத்தன். பாலனாந்தன்மையனுமாம். பறையும் - நீங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கந்த முந்தக் கைதைபூத்துக் கமழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசைப் பாடன்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணைய்ப் பிரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

பொழிப்புரை :

மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும் பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும் பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம் செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர் வினைகள் தேய்வது திண்ணம்.

குறிப்புரை :

கந்தம் - மணம். முந்த - முற்பட்டுச் சென்று வீசிப்பரவ. கைதை - தாழை. கமழ்ந்து - மணந்து, செந்து - ஒரு பெரும் பண். தி .2 பா .3 ப .10. குறிப்பைப்பார்க்க. இசை. ஐந்து என்பது சந்து என்றாகிச் செந்து என்று மருவிற்று எனலுமாம். ஜயம் - சயம், செயம். கஜம் -(கசம்) கெசம் என்பன போலப்பலவுள. வெந்தவெண்ணீறு - விதிப்படி கற்பஞ்செய்யப்பெற்ற திருவெண்பொடி. திண்ணம் - உறுதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மங்குல்தங் கும்மறை யோர்கண்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந் தகையுமே.

பொழிப்புரை :

மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

குறிப்புரை :

மங்குல் - மேகம். தங்கும் மாடம் என்று சேர்க்க. மறையோர்களது மாடம் என்க. தெங்கு - தென்கு தென்னை என்பதால் அதன் தொல்லுரு விளங்கும். துங்கம் - உயர்ச்சி. ஏறு - விடை. மேல் - மேலானகதி. சரதம் - உண்மை. திரு - இலக்குமி. தகையும் - பொருந்தும். அழகு பெற்றிருக்கும், வீற்றிருக்கும். `பூவீற்றிருந்த திருமாமகள்`(சிந்தாமணி 30)`மேன்மை` புதியது. மேற்கதி என்றிருந்ததோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வண்டி ரைத்துமது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்
விண்டி ரைத்தமல ராற்றிகழ் வெண்ணெய்ப் பிரானடி
கண்டி ரைத்துமன மேமதி யாய்கதி யாகவே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச் சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும் தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற்பதியில், திருமால் பூசித்த மலர்களால் திகழும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதிபெற `மனமே மதித்துப் போற்றுவாயாக`.

குறிப்புரை :

இரைத்த - ஒலித்து, விம்மிய - மிக்குச்சொரிந்த. மாமலர் - தாமரைப்பூ. திரை - அலை. விண்டு இரைத்து மலர் - திருமால் அருச்சனைசெய்த (பத்திர) புட்பங்கள். இரைத்து - துதிசெய்து. மதியாய் - தியானிப்பாய். கதி - சிவகதி. ஆக - எய்தலாக ஆக மதியாய் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முன்னுமா டம்மதின் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை யோயவே.

பொழிப்புரை :

மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும் பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும் எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக.

குறிப்புரை :

துன்னுகணை, வார்கணை, வெங்கணை என்க. உன்னிநீட - தியானித்து அழியாது வாழ. ஒய்தல் - தேய்ந்தொழிதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே.

பொழிப்புரை :

தெளிந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள்யாவும் தேய்ந்தொழிய நீ உற்று நினைவாயாக.

குறிப்புரை :

தெற்றல் - அறிவில் தெள்ளியவன். `நடைகற்ற தெற்றல்`.(திவ். பெரியதி.11.4.9.) மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறிய புதுப்பொருள். அதற்கு ஆதாரமில்லை. இராவணன் ஒழுக்கத்திற் பிழைத்தவனேயாயினும் அறிவிற் சிறந்தவன். செற்ற -(வலியை) அழித்த.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையுநம் பாவமே.

பொழிப்புரை :

திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும் சிவ பிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

மால் - திருமால். முனிவன் - பிரமன், சிவன்சேவடி குறுகக் கோலினார். கோலியும் அறியார் என்க. கோலுதல் - வழிவகுத்தல், அடிமுடிதேட மாறிமுயலுதல்; இங்குக்கோலுதலாம். சீலம் - பரமசிவன் மெய்த்தன்மை. பால் - பக்கம் - பசுப்பாலும், மலரும் என்று உம்மை கூட்டிப் பாலும் மலரும் என்க. பாலபிடேகம் புரிய. பறையும் - நீங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல் லினைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.

பொழிப்புரை :

நல்ல மருதந்துவர்ப்பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும் பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும் சிக்கலில் வெண்ணெய்ப் பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில் வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப்பணிவீர்களாக.

குறிப்புரை :

பட்டை நற்றுவராடையினார் - சாக்கியர். துவர் - செந்நிறம். காவியேறியது. பட்டை என்பது துவர்ப்பட்டை. நிறம் துணிக்கு ஊட்டும் வழக்கை நினைவூட்டும். பாங்கிலாமை - முறையற்றபண்பு. கட்டு - உடற்கட்டு. கழுக்கள், கழுவேறுதற்குற்ற அபசாரம் செய்தவர்கள். அமண் - சமண்; க்ஷமண் என்பதன் திரிபு. சிட்டன் - வேதாகமம் வல்ல பெருமான். `சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்`.(தி.1 ப.80. பா.10) பட்டன் - புலவன். தன்னைத்தானே அருச்சித்தானாதலின் அருச்சகன் எனினும் பொருந்தும். `ஆலநிழற் பட்டன்`(திருப்பல்லாண்டு) என்ற தால் ஆசாரியனுமாம். ஏகாரம் - பிரிநிலை. பிணி - பிறவிப் பெரும் பிணி முதலிய பலவுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கந்த மார்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணியும்பெரு மானடி மேவரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

குறிப்புரை :

சந்தம் - இசை. செந்தமிழ் - இத்திருப்பதிகத்தை உணர்த்திற்று. வான் - பேரின்பவீட்டுலகு, தேவாரத்தில் `வான்` என்று வரும் இடங்களிற் பெரும்பாலும் இப்பொருளே கொள்ளல் வேண்டும். `வானிடை` அடிமேவர்` என்றதால் துறக்கம் ஈண்டுப் பொருந்தாமை அறிக. `கேடிலா வானுலகம், `தூயவிண்` `வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே` என்ற திருமுறை வசனங்களை நோக்குக.
சிற்பி