சீகாழி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 

பொழிப்புரை :

நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.

குறிப்புரை :

நல்லான் - மங்களவடிவினன், சிவன். நான்மறை - சைவத்திற்கு உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள். 'தத்து வாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற' (துக ளறுபோதம். 20) ஆறு அங்கம் - சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன. இவை சைவமறைக்கும் உரியன. `மறைகள் - வேதம்`. (தி.2 ப.12 பா.7) வல்லான் - வன்மையுடைய சிவபிரான், வல்லவர் - வன்மையுடைய அந்தணர். பால் - ஏழனுருபு. மலிந்து - நிறைந்து. சொல்லான் - துதிவடிவானவன். கோயிலாம் இல்லான் - கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன். நின்றார் - நிலைத்தவர். இன்பம் உளது; உளது - அழியாது என்றும் இருப்பது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நம்மான மாற்றிந மக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுட னாடல்பு ரிந்தானை
அம்மானை யந்தணர் சேரும ணிகாழி
எம்மானை யேத்தவல் லார்க்கிட ரில்லையே. 

பொழிப்புரை :

நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும் தலைவன். பேய்களோடு ஆடல் புரிபவன். அரிய வீரன். அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில் விளங்கும் எம் கடவுள். அத்தகையோனை ஏத்துவார்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

நம் மானம் - நம் குற்றங்களாகிய ஆணவம், மாயை, கன்மம் (மூன்றும்). மாற்றி - தீர்த்து, மாறச்செய்து, வீடுற்ற உயிர்களின் நீங்கி ஏனையுயிர்களையுற்று. அருளாய் - சிவஞானமாகி. `மருமகன்` மருமான் என்றானதுபோலப் `பெருமகன்` பெருமான் என மருவிற்று. பேயோடு கூத்தாடிய வரலாறு.
புரிதல் - செய்தல். அருமகன் என்பது அம்மான் என்று மருவி அருமைக்கடவுள் என்றதாம். எம்மான் - எம் கடவுள். மகன், மைந்தன் என்பவை வீரன், ஆடவன், கடவுள் என்னும் பொருளில் ஆளப்பட்டன. இடர் - கேவலாவத்தையும் சகலாவத்தையும் அவற்றுட்பட்டதுயரும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பாற்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே. 

பொழிப்புரை :

தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும் படையலை உண்ணாதவன். பொய்யாக அடிமை செய்வாரிடம் பொருந்தாதவன். புதுமைக்கும் புதியவன். நான்குவேதங்களை ஓதும் வேதியர் நிறைந்த காழிப்பதியில் இருப்பவன். அத்தகையோனை நும் இடர்போக ஏத்துவீராக.

குறிப்புரை :

அருந்தானை - உண்ணலாகாதென்ற நோன்பியை, `தன் உடம்பின் ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க` (நாலடி.80) அன்பு - பக்தி. ஏத்தகில்லார் - ஏத்தமாட்டாதவர். அன்பு செய்து ஏத்தமாட்டாதவரிடத்தில் யாதும் அருந்தாத (உண்ணாத)வனை. பொய்யடிமைத் தொழில் செய்பவருள் பொருந்தாதவனை.
விருந்தானை - புதியனை. வேதியர் - மறையோர். ஓதி - வேதம் ஓதி. நும் வினைபோக ஏத்துமின்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை யந்தணர் காழிய மர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

புற்று வடிவானவன். புற்றில் வாழும் பாம்பினைத் தன் அரைமீது சுற்றியவன். தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் பெருமைகளை விடுத்துப் பழகியருள்பவன். அந்தணர்கள் நிறைந்த காழிப்பதி மீது பற்றுடையவன். அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

புற்றான் - புற்றானவன் (வன்மீகநாதன், புற்றிடங் கொண்டான் என்பன திருவாரூர்ப் பெருமான் திருநாமங்கள். பந்தணைநல்லூர் முதலிய வேறு தலங்களிலும் புற்றிடத்தில் இறைவன் எழுந்தருளிய உண்மையை அறியலாம்). புற்று அரவம் - புற்றில் வாழும் பாம்பு. அரை - இடை. சுற்றான் - சுற்றுதலுடையவன். பாம்பை இடுப்பிற்சுற்றியவன். தொண்டு செய்வார் அவர் தம்மொடும் - தொண்டுகளைச் செய்பவராகிய அவரொடும். அற்றானை - அற்றவர்க்கு அற்ற சிவனை. `அற்றவர்க்கு அற்ற சிவன்` என்பதன் தாற்பரியம் ஆராய்ந்து உணரத்தக்கது. எல்லாப்பற்றும் அற்றவர்க்கே சிவபிரான் `பற்றற்றான்` எனல் விளங்கும். \\\\\\\"புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வந்தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம்அஞ்சுமாறே\\\\\\\" என்னுந் திருவாசகத்தின் கருத்தே ஈண்டுக் கொள்ளல் வேண்டும். `அற்றவர்கள் நற்றுணைவன்` (சம்பந்தர் திருக்கயிலாயம் 2). `பாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே` (திருச்சாத்த மங்கை.6), `நெஞ்சு அற்றவர் அருவினையிலரே. (திருச்சிறு குடி.5), `உறவும் ஆகி அற்றவர்களுக்கு மாநெதிகொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்புறவ மாநகர்க்கிறைவனே எனத் தெறகிலாவினையே` (திருப்பிரமபுரம்.8), `உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே`(2). `தம் வினையான எலாம் அற அற்றவர் ஆரூர் அரனெறி` (அப்பர்.5). `அற்றவர்க்கு அன்பர்` `அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணையாவான்` (திருவாஞ்சியம்,6) அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய்போற்றி` `அற்றார்க் கருள்செய்யும் ஐயாறன்னே`, `அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்`, `அற்றவர்க்கு அருள் செய்பாச்சிலாச் சிராமத்து அடிகள்` `அற்றவனார் அடியார் தமக்கு`... நின்றியூரே` `பங்கயச் சேவடிக்கே செல்ல அற்றனன் அற்றனன்` `சோற்றுத்துறையுள்... முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடிநாயூரன்` `ஒன்றுமிலாதவரைக் கழற்போதிறைஞ்சி` (திருவாசகம், 524), `அற்றவர்க்கு அற்றசிவன்` (பொன்வண்ணத்தந்தாதி, 74. இருபா இருபஃது 20.) எனத் தோத்திரமும் சாத்திரமும் இதனைப் பலமுறை குறித்தல் அறிதற்பாலது. `ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்` என்றதாலும் இதனை இனிதுணரலாம். இன்னும் பல இடங்களில் இதனைத் திருமுறைகள் வற்புறுத்துகின்றன. பற்றான் - பற்று உடையவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நெதியானை நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமி னும்வினை பாறவே. 

பொழிப்புரை :

நமக்கு நிதியாக விளங்குவோன். தம் நெஞ்சில் அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு நன்னெறி காட்டுபவன். மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத்தன் ஊராகக் கொண்டவன். அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக.

குறிப்புரை :

நெதி - நிதி என்பதன் மரூஉ. இவ்வாறாள்வது பயின்றுள்ளது. விதி - கட்டளை. கதி - நெறி. கார் - மேகம். பொழில் - சோலை. பதி - நகர். பாற - அழிய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

செப்பான மென்முலை யாளைத்தி கழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்திநி னைவார்தம்
ஒப்பானை யோதமு லாவுக டற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர்வி யந்தாரே.

பொழிப்புரை :

செப்புப் போன்ற மென்மையான தனங்களைக் கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளவன். தன் திருவடிகளை நினைபவர்களிடம் ஒப்பப் பழகுபவன். கடல் நீர் உலாவுவதும், கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில் மெய்ப்பொருளாக விளங்குபவன். அத்தகையோனை விரும்பி வழிபட்ட மக்கள் பிறரால் வியந்துபோற்றப்படும் புகழ் உடையோர் ஆவர்.

குறிப்புரை :

செப்பு ஆன - செப்பை ஒத்த. மேனி - திருமேனியின் இடப்பாதியில்.வைப்பானை -வைத்தலுடையவனை. `வைப்பவனை` எனின் முக்காலத்தும் ஒத்தியல்வதாகாது. தொல்காப்பியம் `செய்யும்` என்னும் வாய்பாட்டு நிகழ்காலத்து வினையாற் சொல்க என்றது. (வினையியல். 43) `முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்`. (பெயரியல், 19:) `நிகழூஉ நின்ற பால் வரை கிளவி` (வினையியல்.30:) பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங்காலத்துச் செய்யும் என்னுங்கிளவியொடு கொள்ளா`. என்பவற்றை நோக்குக. ஒப்பானை - ஒப்புதலுடைய வனை.`பராவுசிவர்` (தி.3 ப.67 பா.6, சித்தியார்.287) என்ற உண்மையை நோக்குக. ஓதம் - கடலின் அலை, குளிர்ச்சி. மெய்ப்பான் - மெய்யாதலையுடையவன். அவனே மெய்ப்பொருள். மேவிய - விரும்பி வழிபட்ட, மாந்தர் - மனிதரிற் சிறந்தவர். வியந்தார் - பிறரால் பேசப்படும் புகழ்க்குரியவர். பிறரை ஏவியாட்கொள்ளும் மேன்மையர் எனலும் பொருந்தும். மெய்ப்பானை வியந்தாரெனலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

துன்பானைத் துன்பம ழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை யணிபொழிற் காழிந கர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன். நாம் துயர் உறும் போது, அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப், புரியும் இன்ப வடிவாய் இருப்பவன். ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப் போற்றுவாரிடம் அன்பு செய்பவன். அழகிய பொழில் சூழ்ந்த காழிநகரில் நம்மால் விரும்பப்படுபவனாய் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோனை அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்.

குறிப்புரை :

துன்பானை - துன்ப வடிவாயிருப்பவனை. அருள் ஆகிய இன்பானை - சிவஞானந்தந்தபேரின்ப வடிவினனை, `இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே`, `பந்தமுமாய் வீடும் ஆயினார்`, `அருள் நிதிதர வரும் ஆனந்தமலையே` என்ற திருவாசகக் கருத்து இங்குக் கொள்ளற்பாலது. `இன்பமும் நீயே துன்பமும் நீயே` (பெருந்தேவபாணி. 59). ஏழிசையின் நிலை பேணுவார் - ஏழிசையின் நிலையை விரும்புவார். `ஏழிசையாய் இசைப்பயனாய்` `இன்னிசை வீணையில் இசைந்தோன்` `ஏழிசையோன் கொச்சையை மெச்சினை` எழுவகை யோசையும் ... ... ஆகிய பரமனை` `ஏழிலின்னரம் பிசைத்தனை`.
அன்பான் - அன்பு வடிவானவன் `அன்பேசிவம் ஆவது.` அணி - அழகு. நம்பான் - உயிர்களால் விரும்பப்படுபவன். `நம்பும் மேவும் நசையாகும்மே` (தொல்காப்பியம்). நண்ண - விரும்ப, அடைய, செறிய. நாசம் - அழிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குன்றானைக் குன்றெடுத் தான்புய நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானைந ணுகுமே. 

பொழிப்புரை :

மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் இருபது தோள்களையும் வென்றவன். மெல்லிய தாமரை மலரில் வாழும் நான்முகனும் மாலும் தேட ஓங்கி நின்றவன். உமையம்மையோடு காழிப்பதியுள் நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன். அத்தகைய நம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

குன்றான் - கயிலை முதலிய குன்றுகளையுடையவன். குன்றெடுத்தான் - கயிலையைத் தூக்கிய இராவணன். வென்றான் - நொறுக்கியவன். மலரான் - பிரமன். மால் - விண்டு. நேர் இழையாள்- திருநிலைநாயகி. இழை - ஆபரணம். நன்றான் - பெரியவன், நல்லதுடையான், சிவன். `குறைவிலா மங்கலக் குணத்தன்.` `நணுகும்` முன்னிலை ஏவல் வினை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டுவெகு ளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னானடி கூறுமே. 

பொழிப்புரை :

தம் கொள்கைக்கு அழிவு வந்தபோதும் விடாது வாது செய்யும் சமணர் சாக்கியர்களின் பொருந்தாத உரைகளைக் கேட்டு அவர்களையோ சைவத்தையோ, வெகுளாது கொன்றைப்பூவணிந்தவனும், புனல் சூழ்ந்த காழிநகரின் தலைவனாய் மேலான சிவநெறிக்கு உரியவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக.

குறிப்புரை :

சாவாயும் வாதுசெய்தல் - தம்கட்சி அழிந்தபோதும் வாதம்புரிதல். சாவு ஆயும் எனலுமாம். மேவாத - செல்லாத. வெகுளேன்மின் - கோபிக்காதீர்கள், (ஏவல்வினை) பகைவனை வெறுத்தல் வேண்டா என்றேனும், பகைவர் தீயுரைகேட்டுச் சைவத்தை வெறுத்தல் வேண்டா என்றேனும் கருத்துக் கொள்ளலாம்.
அடிகூறும் - திருவடியைத் துதிசெய்யுங்கள். கோஆய கொள்கையினான் - பரத்துவக்கடவுளாகிய கொள்கைக்குரியவன்; பரமசிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானையு கந்துள்கித்
தழியார்சொன் ஞானசம் பந்தன்ற மிழார
மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே. 

பொழிப்புரை :

கழிகளின் வழியே வரும் மிக்க கடல்நீர் நிறைந்ததும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள் கோயில் கொண்டு நீங்காது உறையும் இறைவனை, நினைந்து மகிழ்ந்து அவனைப் பொருந்தியவனாய், ஞானசம்பந்தன் பாடிய தமிழை மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள் மூவுலகையும் பெறுவார்கள்.

குறிப்புரை :

கழி - கழிகள், ஆர் - பொருந்திய, சீர் ஓதம் - மிக்க கடல் நீர். உகந்து - விரும்பி. உள்கி - நினைந்து, தழி - தழுவி. ஆர் - பொருந்திய. ஆர - நிறைய. மொழிவார் - பாடுவார். கள் விகுதி பிற்கால வழக்கில் வழங்குவது. மூவுலகும் - மண், விண், பாதலம் மூன்றும். தழியார் - தழுவிய சிவஞானியர், சொல் - புகழ்ந்து போற்றுகின்ற எனலும் பொருந்தும்.
சிற்பி