திருக்காறாயில்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.

பொழிப்புரை :

நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர்.

குறிப்புரை :

நீள்சடைமேல் நீரான் - நீண்ட சடையின்மேல் கங்கை நீரையுடையவன், நிரை - வரிசை. தார் - மாலை. தாமரைமேல் அயன் - செந்தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமன். அயன் அஜன், தோன்றாதவன் என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன். ஊனம் - பிறவி முதலிய குறைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமிலாதாரே.

பொழிப்புரை :

பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை அமைப்பவன். விதிமுறைகளைப் பின்பற்றும் வேதியர்கள் வணங்கும் நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில் எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர்.

குறிப்புரை :

மதி - பிறைச்சந்திரன். அரவு - பாம்பு. மத்தம் - ஊமத்தம்பூ. விதியான் - ஊழானவன், பாக்கியமானவன், விதிக்குங்கர்த்தா. விதித்தலையுடையவன். விதி உடை வேதியர் - வேதத்தில் விதித்தவை செய்தலும் விலக்கியவை செய்யாமையுமாகிய விதியை உடைய மறையவர். நெதி - நிதி, செல்வம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே.

பொழிப்புரை :

வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும் போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன். நிலவுலகில் வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன். இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர்.

குறிப்புரை :

விண் - வீட்டுலகம், உயிர்க்கெல்லாம் கண். (தி. 2 ப.14 பா.9) எண் - எண்ணம். எண்ணான் - உள்ளத்திலிருப்பவன். எண்ணப்படாதவன், எண்ணுதற்குப் பொருளாயிருப்பவன், அளக்கும் அளவாயுள்ளவன். ஏதம் - குற்றம், கேடு, துன்பம் (எல்லாம்).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர் செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில் இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா.

குறிப்புரை :

தாயான் + தந்தை ... ஆயான் - `அம்மையப்பர்`. மெய்யுணர்வும் அன்பும் உடைய இருதிறத்தாரையும் நல்லன்பர் என்பது வழக்கம். கண்ணப்பர் நல்லன்பர்; மெய்கண்டார் மெய்யுணர்வினர்; இருவரும் அன்பிற் சிறிதும் வேறுபடார். சேயான் - செந்நிறத்தன் எனப் பொருள் கூறலாம். ஆயினும் முன் அணியான் என்றதனால் சேய்மை (தூரம்) இடத்தினன் என்பதே பொருத்தம். மேயான்- மேவியவன். மேவா - பொருந்தா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே

பொழிப்புரை :

எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.

குறிப்புரை :

கலையான் - கலைகளாயும் அவற்றின் ஞானமாயும் உள்ளவன். செம்பொற் கயிலாயமலை:- வெண்மைநிறமுடையது. வெண்கயிலை என்றதற்கு முரணன்று. இமயத்தை மேரு என்றும் மேருவை இமயம் என்றும் நூல்களிற் கூறுவதுபோல் கூறப்பட்டது. பனிமலையில் தவளகிரியும் காஞ்சனசிருங்கமும் உண்டு. மலைபவர் - போர்செய்பவர், திரிபுரத்தசுரர். சிலை - மேருவில். நிலை - உறையுள்; திருக்கோயில். நிலையானவனுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஆற்றானே யாறணி செஞ்சடை யாடர
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

`நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில் வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும் திருகாறாயிலில் நீறுபூசிய கோலத்தோடு விளங்குபவன்`, என்று இவ்வாறு கூறிப்போற்றுபவர்மேல் வினைகள் நில்லா.

குறிப்புரை :

ஆற்றான் - ஆறுடையவன், வேதாகம வழியினன். ஆடரவு - ஆடும் பாம்பு. ஏற்றான் - தாங்கியவன். போற்று - துதி. பொழில் - சோலை. நீற்றான் - திருநீற்றையணிந்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

பொழிப்புரை :

தீவினைகள் தேய்ந்து அறுமாறு செய்து நம்மை அவனோடு சேர்ப்பவன். தேவர்களால் போற்றப்படுபவன். நன்மாமுனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப் போற்றுவாரை வினைகள் வெல்லா.

குறிப்புரை :

ஏத்தான் - புகழ்களை எடுத்துச் சொல்லுதலைப் பெற்றவன். காத்தான் - தடுத்தவன். கார் - மேகம். வானோக்கும் பயிர்க்கிடம் ஆதலின் கார்வயல் என்றார். விளைபயிர்த் தோற்றம் பற்றியதுமாம். ஆர்த்தான் - நிறைந்தவன்; ஊட்டியவன். ஆடா - வெல்லா. `அட ராவே` என்பது பின்னோர் பதிப்பின் பாடம். அடரா - தாக்கா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

பொழிப்புரை :

காலனைக் காலால் கடிந்தவன். கயிலாயத்தைப் பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடுமாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன் என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா.

குறிப்புரை :

கடுத்தான் - கோபித்(து உதைத்)தான். ஆக + முனிவர் என்புழி மகரம் இசைபற்றி நின்றது. இராவணனுக்கு - ஏதம் (துன்பம்) ஆகுமாறும் முனிவர்களுக்கு இடர்கெடுமாறும் செய்தவன். கேழ் -(ஒளிரும்) நிறம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.

பொழிப்புரை :

இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப் பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும்.

குறிப்புரை :

இசை மறையான் - சாமவேதத்தவன். இறையான் - இறைவன், எங்கும் தங்கியவன். எழில் - அழகு. உறைவான் - திருக்கோயில் கொண்டவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும், சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர் என்ற பாவிகளும் கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன் ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக் குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை.

குறிப்புரை :

செடி - தீநாற்றம். சீவரத்தார்கள் - அழுக்குடையதும் பிறர்பால் காணாததும் அவர்க்கே வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தவர்கள் (சமணர் முதலோர்). படி - நிலம். கடி - மணம். குடியாருங்கொள்கை - தலவாசம் புரியும் விரதம். `அடியார் குடியாவர்` (தி .6 ப .17 பா .6)`அடியார்கள் குடியாக (தி .2 ப . 43 பா . 5), என் புழிப்படும் பொருளை உணர்க. குற்றம்:- ஆணவம் முதலியன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்திய ருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.

பொழிப்புரை :

புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப் பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற, நீர் பாய்ந்து வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி ஏத்துவார் வானுலகு ஆள்வர்.

குறிப்புரை :

ஏய்ந்த - பொருந்திய. ஆய்ந்தசீர் - வேதாகமங்களுள் ஆராயப்பட்ட (பொருள் சேர்) புகழ். பாய்ந்த நீர்க்காழி:- வெள்ளப் பெருக்கில் அழியாத உண்மை குறித்ததும் வளமுரைத்ததுமாம். `வந்தவணம் ஏத்துமவர் வானமடைவாரே` என்றது உணர்க.
சிற்பி