திருவேணுபுரம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.

பொழிப்புரை :

பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள் - நிறைந்தகொடுமையையுடைய; சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார் - அழகுடையமகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம். கடல் முத்துக்கள் வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறு பற்றி, `கடலார் வேணுபுரம்\\\\\\\' என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அரவார் கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.

பொழிப்புரை :

பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக்கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

அரவு ஆர்கரவன் - பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன். அமை - மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் - ஒத்த. திரள் - திரண்ட. குரவு - குராமலர்மாலை. `கரவாது உவந் தீயுங் கண்அன்னார்\\\\\\\\\\\\\\\' (குறள் 1061). குழலாள் - கூந்தலையுடைய அம்பிகை. கூறன் - பாகத்தையுடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு. விரவு ஆகவல்லார் - நட்பாக வல்லவர்கள் (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண்
மேகந் தவழும் வேணு புரமே.

பொழிப்புரை :

அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம், மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத்தரும் வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

ஆகம் அழகு ஆயவள் - அழகிய திருமேனியை உடைய அம்பிகை. ஆகம் - உடம்பு. வெருவ - அஞ்ச. நாகம் - யானை. உரி- தோல். இரண்டடியிலும் வந்த மகர ஒற்றுக்கள் இசை பற்றி வந்த விகாரம். போகம் - வயல்விளைவாகக் கிடைக்கும் உணவுப்பொருள்கள். முதல் போகம் இரண்டாம் போகம் என்னும் வழக்கு உணர்க. பொழில்கண் மேகம் என்பதில் கண் உருபும், கள் விகுதியும் ஆகப்பிரித்துப் பொருள் கூறலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுவின் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே. 

பொழிப்புரை :

முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல். இன் நறவவாசக் கமலம் - இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம். அனம் - அன்னப்பறவை, இடைக்குறை. அன்னம் கமலத்தில் வலியஅலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அரையார் கலைசே ரனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் மிடமாம
நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 

பொழிப்புரை :

இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம் போன்ற நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

அரை ஆர் கலைசேர் அனம் மெல் நடையை - திரு விடையில் உடுத்தல் பொருந்திய மேகலை முதலிய திருப்புடைவை சேர்ந்த அன்னத்தினது மெல் நடைபோலும் நடை உடைய திருநிலை நாயகியை. உரையா - (புகழ்ந்து) உரைத்து. உகந்தான் - உயர்ந்தவன், மகிழ்ந்தவன் எனலுமாம். நிரை - வரிசை; நிகழ் - விளங்கிய; உடை விரை - உடைதலால் பரவும் மணம். உடைய பொழில் என்றும் இயையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
றளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.

பொழிப்புரை :

ஒளிதரும் பிறையையும், வில்வத்தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

பிறையும் தளிரும் உடையான். கூவிளம் - வில்வம். நளிரும் - குளிரும். மிளிரும் - விட்டு விட்டு விளங்கும், கண் மிளிரும் - கண்போல் விளங்கும் என்பதுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 

பொழிப்புரை :

இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய விற்படையை உடைய இராவணனை `ஆ' என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ என்று அலற - அலறுவோர் ஒலிக் குறிப்புக்களுள் `ஆ' என்பது தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின்`ஆவா' என்று உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். அடர்த்தான் - தாக்கியவன். மறிமான் - மான்கன்று; மறிகளும் மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே மதியமும் மேவும் என்க; மதியின் களங்கமுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் லிருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும் வேணு புரமே.

பொழிப்புரை :

திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

கண்ணன் - (திருமால்) கரியவன். கடி - மணம். மலர் - தாமரை. அண்ணல் - பிரமன். இறை - இறைவன். (சிவன்) வண்ணம்- அழகு. சுதை - சுண்ணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

போகம் அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே. 

பொழிப்புரை :

சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய ஆடைக்கு ஆகுபெயர். உழல்வார் - திரிவார் (சமணர்சாக்கியர்) ஆகம் அறியா அடியார் - சிவநிந்தைசெய்யும் பிறமதத்தரை ஏறெடுத்தும் பார்க்காத சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌனம். மீகம் - வானோர்க்குயர்ந்த உலகம். (கம் - வான். மீ - மேல்.) மூகம் அறிவாரும் கலை முத்தமிழ் நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம். அறிவார் - ஞானியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே. 

பொழிப்புரை :

மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை உடையதும், நன்செய்நிலங்கள் நிறைந்ததும் ஆகிய வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.

குறிப்புரை :

கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல். நற்புலம் - (நல் புலம்) நன்செய். நலம் - சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய ஞானத்தின் தொடர்பு. குலம் - மேன்மை. தமிழ் - இத்திருப்பதிகத்தை. கூறுவர் - அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட்பெருக்கம் அடைபவர்.
சிற்பி