திருநெல்லிக்கா


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.

குறிப்புரை :

அறத்தால் - தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர் காவல் - உயிர்களைக் காத்தல். மறம் - அதர்மம். மாண்பு - மாட்சி. தெரிவு - விளக்கம். தீ நிறத்தான் - அழல் வண்ணன். வெண்டிங்கள் நிறத்தான் - பவளம்போன்ற திருமேனியில் பால் போலும் திருவெண்ணீற்றைப் பூசிய திருக்கோலத்தால், வெண்டிங்கள் போலும் தண்ணொளியுடையவனான பரமசிவன், நிலாயவன் - நிலவி நின்றவன். நிலாயவனே நிறத்தான் என்றும் இயையும். `தான்` அசையுமாம். மேலும் இவ்வாறே அசையாதலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன். விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.

குறிப்புரை :

பதி இடுகாடு. தொங்கல் - (மாலை) கொன்றை. மதி - பிறை. மைந்தன் - வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை என்றபடி. விழுப்பம் - மேன்மை. திருவருளே தனக்கு மேலொன்றில்லாச் செல்வமாதலின் `விழுப்பம் பயக்கும் நெதி` எனப்பட்டது. `செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே` `சிவமேபெறும் திரு` `சென்றடையாத திரு` `சென்றடையாச் செல்வன்` என்பன காண்க. நிலாயவன் பதி இடுகாடு; தொங்கல் கொன்றை என்றும் நிலாயவனே மைந்தனும் விதியும் வினையும் நெதியும் என்றும் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப்பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.

குறிப்புரை :

நலம் தான் அவன் - அவனே நலம், மங்கலம். சிவம் அல்லாது வேறு நலம் உயிர்கட்கு இல்லை. `குறைவிலாமங்கல குணத்தன்` (காஞ்சிப் புராணம் திருநெறிக் 23) `நகராநலம்`(தி .2 ப .19 பா .11) பிரமனது தலையைக்கிள்ளிக் கையிற்கொண்ட வரலாறு முற்பகுதியிற் கூறப்பட்டது. கபாலி - பிரமகபாலத்தைத் தாங்கியவன். புலம் - சிவஞான சொரூபம். புகழால் எரிவிண் - கீர்த்தியால் விளங்கும் வானம். விண்புகழும் நிலம் - வானோர் துதிக்கும் சிவதலம் (திருநெல்லிக்கா). நலம்தான் கபாலியும்தான், புலம்தான், நிலம்தான் என்று கொள்ளின், நிலம் என்பது மிசை நிலம், வீட்டுலகு ஆம். `நிலமிசை நீடுவாழ்வார்` (குறள் 3) `மீதானம்.` (திருக்களிறு).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.

குறிப்புரை :

தலை - பிரமகபாலம். கலை - மான். ஏந்தியதுதலை, காடிடம் நாடிடமாம். காடாகிய இடம் நாடுகின்ற இடம், நாடாகிய இடமுமாம். மதில் மூன்றுடைய மலை தான் எடுத்தான் - முப்புரமும் உடைந்தழிய மேருமலை வில்லை எடுத்தவன் நிலை - உறையுள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறைமதியை உவந்து சூடியவன். மீனக் கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.

குறிப்புரை :

தவமும் அத்தவத்தின்பயனாக எய்தும் கதியும் தானே (சிவனே) ஆவான். வார்சடைமேல் மதியை உவந்தான். உவத்தல் - மகிழ்தல். சுறவேந்தன் - மீனக்கொடியுடைய மன்மதன். உரு அழிய - (உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக. சிவந்தான். கோபித்தான். சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து, நிவந்தான் - ஓங்கினான். செயற்செய்து என்னும் பாடத்திற்குச் சிவந்தானது செயலைச் செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி எனலுமாம். செயம் என்றதன் விகாரமாகக் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன்.

குறிப்புரை :

வெறி - மணம். தார் - மாலை. மறி - மான். மலைமங்கை இமாசலகுமரி. குறியால் குறிகொண்டவர் போய்க் குறுகும் நெறியான் - குரு உபதேசித்தகுறியினால் தியானித்துணர்ந்து கொண்டவர் சென்று அடையும் ஒளி நெறியுடையவன். `அறிவதொருகுறி குருவினருளினால் அறிந்து மன்னு சிவன்றனையடைந்து நின்று` அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி (சித்தியார் 286, 323) `குறியொடுதாம் அழியும் நெறி` (சித்தியார் 324) அதனின்மேலாயது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலைம் மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம்பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.

குறிப்புரை :

சடைச்சேர்த்திய - சடைமேல் சேரச்செய்த. ஏழன் தொகை, இறவாக்கயிலைமலை - என்றதால் அழிவில்லாத சிறப்புணர்க, புனல் - கங்கை, முதலடியிற் பிறையும் சடையும், மூன்றாவதடியில் மதியும், சென்னியும் என ஓரிடமும் நோக்கின் இப்பதிகத்தைப் பற்றி ஒரு சிந்தனை தோன்றும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன்.

குறிப்புரை :

ஒரு பாகத்தில் மாதினைப் பிணித்து மறைத்தான். பிணி மறைத்தான் - வரிப்புனைபந்து என்புழிப்போலும். மிறைத்தான் - வருத்தினான், மிகை - மீச்செலவை, குறைத்தான் - அடக்கினான். கோல்வளையை - கங்கையை - அன்மொழித்தொகை, கோல் - திரட்சி, வளை - வளையலையுடைவள், நிறைத்தான் - நிறைய அடக்கிக் கொண்டான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தழல்தா மரையான் வையந்தா யவனும்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் மேல் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி ஆகியவற்றைக் காண முயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளிவடிவினன்.

குறிப்புரை :

தழல் தாமரையான் - தீயைஒக்கும் செந்தாமரையில் வாழும் பிரமன். வையம் தாயவன் - உலகம் அளந்த திருமால், கழல் முடி - காலும் தலையும். காணிய - காண்பதற்கு. அழல் - தீப்பிழம்பு. அடியாருக்கு - யான் எனது என்னும் செருக்கற்றுத் திருவடிஞானம் பெற்றார்க்கு, அருளாய்ப் பரக்கும் நிழல் - திருஞானமாய்ப் பரவியுள்ளபேரொளி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் `என் அத்தனே காப்பாற்று` என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.

குறிப்புரை :

கனத்து ஆர் திரை - மேகத்தால் உண்ணப்படுங்கடல், ஈண்டுப் பாற்கடல் என்க, திரை - அலை, ஆகுபெயர். மாண்டு - பெருகி, அழல் - வெப்பம், கான்ற - வீசிய, உமிழ்ந்த. `என் அத்தா` என்று தேவர்வேண்ட, வாங்கி அது உண்ட கண்டன் என்க. மாண்பு - மாட்சி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

புகரே துமிலா தபுத்தே ளுலகில்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே.

பொழிப்புரை :

குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர்.

குறிப்புரை :

புகர் - குற்றம். புத்தேள் உலகு - தேவருலகம். நிகரா - ஒப்பாகாத. நகராநலம் - அழியாத நன்மை, சிவம், சொன்ன - சொல்லிய. இப்பாமாலையை. பகர்வார் - பாடித்தொழுவார்.
சிற்பி