திருஅழுந்தூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

பொழிப்புரை :

தொழும் வகையிலும், பிறவித்துயர்தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, `பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப்பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

குறிப்புரை :

திருவழுந்தூரிலுள்ள வேதியர் (கட்டி) வழிபாடு செய்யும் பெரியமடத்தில் (பா.3) சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவ்வேதியர்கள் சிவபிரானைத் தொழும் வகையிலும், பிறவித்துன்பம் போயொழிய நினைந்தெழும் வகையிலும், இசைபாடிட விம்மி அழும் வகையிலும் வன்மையுற்ற பயிற்சியுடையவர்கள், அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர் செய்து கொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர் - புலிசை, மறைக் காடு - மறைசை, ஆவடுதுறை - துறைசை முதலிய அறிக. தொட்டிக் கலை - கலைசை, திருவோத்தூர் (வேதபுரி, மறைநகர்) - மறைசை என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே.

பொழிப்புரை :

`கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே`! எனத்தொழ, `பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

குறிப்புரை :

பாற்கடல், உடலும், உயிரும், உணர்வும், எழிலும் ஆக இருப்பவன் சிவபிரான், அடல் - வலிமை, கொலையுமாம். `கொல்லேறு`. விடலே - தலைவனே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடமன் னினையே.

பொழிப்புரை :

`பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே`! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

கழிகாடலனே - சுடுகாட்டில் (இரவில்) ஆடுபவனே,` கரிகாடலினாய்` (தி .2 ப .21 பா .8)`சுடலையாடி`. கனல் ஆடலினாய் - தீயில் ஆடுதலையுடையவனே. பழிபாடு இலனே - பழிக்கப்படுதல் இல்லாதவனே. அழிபாடு - அழிவுபடுதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடமன் னினையே.

பொழிப்புரை :

அன்பர்கள் `வானே! மலையே!` என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே` எனப்போற்றப், `பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்`.

குறிப்புரை :

வான் - வானம். வானம் மலை என்று தொழமன்னிய உயிரே. வானே என மலையே என மன்னும் உயிர், தொழுவார் தொழு - வணங்குவார் வணங்குதற்குரிய. தாள் - திருவடி. ஆனே:- பசுபதி என்னும் பொருட்டு. ஆன் - பசு. அழுந்தையவர் - திருவழுந்தூர் மறையோர். எம்மானே - எம்பெருமானே. என - என்று கூவித்தொழ.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக.

குறிப்புரை :

இலையார் படை - திரிசூலாயுதம். இவையே நிலையான செல்வம். ஏனைய அழியும் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

நறவார் தலையின் நயவா வுலகில்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடமன் னினையே.

பொழிப்புரை :

அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் உள்ளாய்.

குறிப்புரை :

நறவு - தேன், நயவா - நயமுடையவன். நயம் - மகிழ்ச்சி, இன்பம், நன்மை, நீதி. உலகில் பிறவாதவன் - `பிறவா யாக்கைப் பெரியோன்` `பிறப்பிலி இறப்பிலி`(பாரதம்). பிணி இல்லவன் - நோயில்லான். அறை - ஒலி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில்
அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே.

பொழிப்புரை :

உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும்படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அட வந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

தடுமாறுவல்லாய் - உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச் செய்யவல்லவனே. `உணர்ந்தார்க்கு உணர்வரியோன்`. என்றது இத்தடுமாற்றத்தை வலியுறுத்தும். தடுமாறுதல் - தட்டுமாறுதல் என்பதன் மரூஉவாகக் கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது எனலுமாம். `ஆடவல்லாய்` `ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே` எனவரும் தேவாரங்களால் உணர்க. மதியம் சுடும் ஆறு - பிறையால் (காதல்கொண்ட) மகளிரைச் சுடும்வகை. சூடுமாறு என்பதன் முதற் குறுக்கமுமாம். அடும் ஆறு - கங்கைப்பெருக்கு, நெடு மாநகர் - நீள்பெருங்கோயில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.

பொழிப்புரை :

பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய்.

குறிப்புரை :

கரியமிடறாய் - நீலகண்டனே. சர்வசங்கார காலத்தில் எல்லாம் அழியுமாதலின், `கரிகாடு` என்றும் அதுவே முதல்வனுக்குக் கோயிலாதலின் `உயர்வீடு` என்றும் அருளினார். `கோயில் சுடுகாடு` பெருமை, சிறுமை, அருமை, எளிமை எல்லாம் ஆண்டவனுக்குள. `வெரியார்` - பழிபாவங்களை அஞ்சுதலுடைய அம்மறையோர். வேரியார் (தேன்போலும் இனியர்,) என்பதன் முதற்குறுக்கம் எனல் அமைவுடையதன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மணிநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணிமா மடம்மன் னியிருந் தனையே.

பொழிப்புரை :

மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

மணிமுடி - ரத்நகிரீடம். அரக்கன் - இராவணன், நெரித்த - நொறுங்கிய, அணி - அழகு. பணி - பணிகின்ற.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

முடியார் சடையாய் முனம்நா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழமா மடம்பற் றினையே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய்.

குறிப்புரை :

முடியார் சடையாய் - சடைமுடியுடையாய், நெடியான் - திரிவிக்கிரமனாகிய மாயோன். அடிமேல் - அடிமுடி, படியால் - விதிப்படி. பற்றினை - பற்றாகக் கொண்டாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.

பொழிப்புரை :

எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்.

குறிப்புரை :

அருஞானம் - எய்தற்கு அரிய திருவருண்ஞானம். திருஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தனுடைய, அ:- ஆறனுருபு, பன்மை, செந்தமிழ்கள் - செந்தமிழ்ப்பாக்கள், உரு ஞானம் - சொரூப ஞானம், உண்மையுணர்வு.
சிற்பி