திருக்கழிப்பாலை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

பொழிப்புரை :

கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.

குறிப்புரை :

புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய், அரணம் - திரிபுரக்கோட்டை, திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு. கனல் - தீ, உன வார்கழல் - உன்னுடைய நீள்கழலடிகள்.(பார்க்க: தி .2 ப .2 பா .9) உள்குதும் - தியானம் செய்வோம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே யிறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தஇடர் கெடுமே.

பொழிப்புரை :

தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்.

குறிப்புரை :

இறைவா! கழிப்பாலை உள்ளாய்! (உன்) கழல் ஏத்த (எம்) இடர் கெடும் என்று இயைத்துக் கொள்க. தூ - தூய்மை. எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. `பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினுங்கரக்கும்`(புறம் - கடவுள் வாழ்த்து) என்றதன் உரையைக் காண்க. துணை - துணைவி. இணை - இருவரென்னாதவாறு இணைதல், எயில் - திரிபுரம், எய் - எய்த, எய் கழிப்பாலை உள்ளாய் - வினைத்தொகை. `கழிப்பாலையுள்ளாய்` என்பது சிவனென்னும் பொருட்டாய் எய்யென்னும் பகுதியொடு தொக்கு வினைத் தொகையாயிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே.

பொழிப்புரை :

மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.

குறிப்புரை :

நெடியாய் - நீண்டவனே; குறியாய் - குறியவனே, புன் சடைமுடி - பொன்போலும் செஞ்சடைமுடி, சுடுவெண் பொடி - திருநீறு. முற்று அணிவாய் - முழுதும் அணிவாய். கடி - மணம். அடியார் - யான் எனதென்னும் செருக்கற்றவர். அவலம் அடையா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

பொழிப்புரை :

அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்கு பவனே!

குறிப்புரை :

அன்பர்க்கு எளியாய். அல்லாதார்க்கு அரியாய், `காண்டற்கு அரிய கடவுள் கண்டாய். கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் (தி.6 ப .23 பா .1)`நிலம் ......... காயம்` - மண் முதலிய ஐம்பெரும் பூதங்கள். இறைவன் அட்டமூர்த்தியாய் விளங்குதல் பற்றி `நிலம் ..... . வெளிமன்னிய தூ ஒளியாய்` என்றருளினார். உனையே தொழுது உன்னுமவர்க்கு அளியாய் - `ஆமாத்தூரம்மான்றன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே`- (தி .2 ப .44 பா .3) என்றருளியவாறு சிவனையே தொழுது தியானிப்பவர்க்கு திருவருட்பேறு எய்தும் என்பது தாற்பரியம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடல்நண் ணிவணங் குவனுன் னடியே.

பொழிப்புரை :

நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்.

குறிப்புரை :

அசைத்தவன் - கட்டியவன். நண்ணி அசைத்தவன் என்க. நடம் - திருக்கூத்து. விடம்... மிடறா - திருநீலகண்டனே, விகிர்தன் - விரூபாக்கன் முதலிய நிலைமையன். `விளையாடவல்ல விகிர் தத்துருக் கொள் விமலன்` (தி .2 ப .83 பா .10) கடல் நண்ணு கழிப்பதி - கடற்கரைக் கழியிலுள்ள தலம். உடல் நண்ணி வணங்குவன் - அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன். உன் அடியே - ஏகாரம் பிரிநிலை. `தோற்றிய திதியே என்புழி` ஏகாரம் இயைபின்மை நீக்குதற்கும், பிறி தினியைபு நீக்குதற்கும் பொதுவாய் நின்ற பிரிநிலை` என்ற சிவஞானபோதச் சிற்றுரைப் பகுதியைக்காண்க. உடன் எனப்பிரித்தல் பொருந்தாது. நண்ணுதற்குச் செயப்படுபொருள் நிலமும் திருவடியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே.

பொழிப்புரை :

பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.

குறிப்புரை :

ஆர் - பொருந்திய. பெரியாய் - முழு முதல்வனே. பெருமை - பரத்துவம். பெரியமறை ஆர்தரு வாய்மையினாய் - வேதத்திற் சொல்லப்பட்ட உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல் விகாரம். இறை ஆர் கழல் - (எங்கும்) தங்குதலுடைய திருவருளாகிய கழல். இறை - இறைமையும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே.

பொழிப்புரை :

முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத் தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.

குறிப்புரை :

கதிர் வெண்பிறை:- வெண்மை கதிர்க்கும் பிறைக்கும் உரியது. எதிர்கொள்மொழி - முன்னிலை மொழியாகிய துதிகள். அதிரும் நடுக்கத்தை விளைக்கும். ஆயின ஆசு - ஆனவையாகிய குற்றங்கள், பெயரெச்சமும் ஆம். `அரன்பணியில் நின்றிடவும் அகலுங்குற்றம்` `ஆசுபடுமல மாயை அருங்கன்மம் அனைத்தும் அகலும்`. (சித்தியார் பா.304 291.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.

பொழிப்புரை :

தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.

குறிப்புரை :

எரிஆர்கணை - அக்கினியை நுனியிற் பெற்ற திருமாலாகிய பாணம். எயில் - (முப்புரம்) மும்மதில். கரிகாடல் - கரிந்த காடு. காழிகாடலனே (பதி . 156, பா .3) கழிகாடு ஆடலனே என்பதன் விகாரம் என்றாருமுளர். உரிது - உரியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.

பொழிப்புரை :

நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும்.

குறிப்புரை :

நலம் - காத்தற்றொழிலாகிய நன்மை, அழகும் ஆம். உன - உன்னுடைய. (ஆறனுருபு பன்மை பார்க்க: தி .2 ப .2 பா .1). உன்னுமவர் - தியானம் புரிபவர். எயில் எய்தவன் - திரிபுராரி, முப்புரமெரித்த முதல்வன். வினைதான் இலதாம் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் உறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.

பொழிப்புரை :

தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்.

குறிப்புரை :

சமண் வேடர்க்குரிய தொழிலன்று. தவர் (தவத்தோர்) க்குரிய தொழிலை (ப்போலியா)க் கொண்டவர். துவர் - பழுப்பு நிறம். நுண்துகில் - மெல்லிய துகில். துகில் - ஆடை; ஈண்டு இருபெயரொட்டு, அவர் - அப்புறப்புறச்சமயத்தார். கொண்டன - கொண்ட கொள்கைகள், வினையாலணையும் பெயர். அடிகள் - பரமேசுவரன். உவர் கொண்ட கழிப்பதி - உவர் நீர் கொண்ட கடற்கழியிலுள்ள பாலைப்பதி. `உள்குதும்` என முதற்பாட்டிற் கூறியதே முடிவிலுங் கூறியதால் சிறப்பாகத் தியானம் புரிதற்குரிய தலமென்றுணர்க. மூவர் திருப்பதிகங்களும் இத்தலத்தின் தனிச்சிறப்பை விளக்குகின்றன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியா ரிமையோ ரொடுகே டிலரே.

பொழிப்புரை :

உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர்.

குறிப்புரை :

காவலன் - சிவபிரான்., `மறைஞானசம்பந்தன்` என்ற திருப்பெயர் `வேதநெறி தழைத்தோங்கப் புனிதவாய் மலர்ந்தழுத சிறப்பிற்பெற்றது, அகரம் - ஆறனுருபு பன்மை. வழிபாடு இவை - இத்திருப்பதிகப்பாடல் வழிபாடு. இமையோரொடு கெழியார் - வானோரொடு பொருந்தி விளங்குவார். கேடு இலர் - பிறவி முதலாய கேடு இல்லாதவராவர்.
சிற்பி