திருக்குடவாயில்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயின் மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.

குறிப்புரை :

திகழும் - அவர் அவர்க்குள்ள புவனங்களில் விளக்கம் பெறும். புகல - விரும்பித்துதிக்க. நிகழும் - பிரசித்தி பெற்றுள்ள. (பா . 11 இல்) `பெருங்கோயில்` என்று உணர்த்தியதால் ஆசிரியர் திருவுள்ளம் அதனது பெருமையில் ஈடுபட்டமை புலனாகும். வேறு சில தலங்களிலும் கோயிற்பெருமை கூறப்பட்டுள்ளது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறை மதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன்.

குறிப்புரை :

நதி - கங்கை. மதி - பிறை. உரகம் - பாம்பு, மார்பால் நகர்வது. உரம் - மார்பு. கம் - செலவு. தொல்கொடி - பழங்கொடி,`கொடிமேல் விடைகூடும்` என்றியைக்க. குடவாயில்தனில் நீடும் பெருங்கோயில் என்றதால், அதன் பழமையும் பெருமையும் விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத்தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன்.

குறிப்புரை :

கலையான் - பீதாம்பரதாரி, திருமால். மறையான் - வேதா ஆன பிரமன். கனல் - நெருப்பு. மலையாள் - இமாசலகுமாரி. கொலை ஆர்சிலை - மேருமலையாகிய வில்லுக்குக் கொலை திரி புரசங்கார கிருத்தியம். நிலை - திருக்கோபுரநிலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடம்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன்.

குறிப்புரை :

சுலவும் - சுற்றும். நலம் - அழகு. நகைசெய்ய - மகிழ, சிரிக்க என்றுமாம். குழகன் - இளைஞன். நிலவும் - ஒளிவிடும். நிலா, நிலவு என்பன வெள்ளொளியைக் குறித்தல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன்.

குறிப்புரை :

`என்றன் உளம் மேவி இருந்த பிரான்` என்று சிவஞான முண்டார் அன்றி மற்று எவர் சொல்லத்தக்கார்? கன்றல்மணி - கன்றிய நீலமணி. கன்றன் - இளைஞன், மான் கன்றுடையவன் எனலுமாம். மிடறன் - திருக்கழுத்தினன். மிடற்றன் என்னற்பாலது ஒற்றிரட்டாது நின்றது. எயிறன், வயிறன், கயிறன் எனல்போல. (தி .2. பா .23 ப .1) பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.

குறிப்புரை :

புனல் - கங்கை. அனல் - தீ. அமலன் - மும்மலமில்லாதவன். (எண்குணத்துள் ஒன்று) தலைசேர் பலியன் - பிரமகபாலத்திற் பலி பெறுபவன். சதுரன் - மூவர்க்கும் முதல்வன். விதிரும் - நடுங்கும். படை - திரிசூலம். மழுவாயுதம் முதலியன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

அறையார் கழலன் அழலன் இயலின்
பறையாழ் முழவும் மறைபா டநடம்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன்.

குறிப்புரை :

அறை - ஒலி. இயலின் பறை - இசையியலின் கண் அமைந்த வாத்தியம். நடம் - திருக்கூத்து. குறையா அழகன் - பூரணாலங்காரன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

பொழிப்புரை :

மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.

குறிப்புரை :

வரைஆர் - மலையை ஒத்த. வரை - கயிலை. ஆர - சுமை (யாக அழுந்திப்) பொருந்த. வகரமெய்விரித்தல் விகாரம். வரை ஆர்மதில் - மலைகளைப்போல உயரிய மதில்கள்; பெருங்கோயிலும் அத்தகையதே. வரையார் - வழிபாட்டை ஒழியாத அடியார் என்றும் உரைத்தல் கூடும். அரக்கன் - இராவணன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொன்னொப் பவனும் புயலொப் பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன்.

குறிப்புரை :

பொன் ஒப்பவன் - பிரமன், புயல் ஒப்பவன் - கார் வண்ணன், மால். தன்ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான் - தனக்குவமையில்லாதவனாகிச் சோதிப் பிழம்பாய் ஓங்கிப் பெருகிய பரசிவன். கொல்நல்படை:- பா . 6. பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பால்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன்.

குறிப்புரை :

நிலையார் - நிற்றலை உடையவர், வெயில் காய்பவர் என்றபடி. உரை - பிறமதபோதனை. குயிலன் - குயிலாதவன். பதியாதவன். குயிலல் - பதிதல், செய்தல், சொல்லல் எனல் இங்குப் பொருந்தாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.

பொழிப்புரை :

வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குட வாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை , நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியினனாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர் .

குறிப்புரை :

கடுவாய் - வேகம் வாய்ந்த . நீர்மலி குடவாயில் என்று அதன் வளம் உணர்த்தியபடி . ` நெடுமாபெருங்கோயில் ` என்றது இப் பதிகம் முழுதும் கூறியவற்றால் உறுதிப் படுகின்றது . திருமுறைகளுள் பெருங்கோயிலையும் சிறுகோயிலையும் பிரித்துணர்த்துங் குறிப்பு மிகுதியாயுளது . ` அதிகைமாநகர் ` என்பது முதலியவற்றை உணர்க . மா நகர் - பெருங்கோயில் .
சிற்பி