திருவானைக்கா


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.

பொழிப்புரை :

நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், \\\\\\\"மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி\\\\\\\", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.

குறிப்புரை :

மழை ஆர் மிடறா - மேகம்போலக் கறுத்த திருக்கழுத்தினனே! உழை - மான், புல்வாய், மரை, கவரிவேறு, உழை வேறு.
கரவா- திருக்கையினனே.
விழவு - திருவிழாக்கள்.
வெண்நாவல் - ஜம்புகேச்சுரம்.
எம் அழகா என்னும் ஆயிழையாள் என்க.
எனும் - என்று அழைப்பாள்.
ஆய் இழையாள் - நுண்ணிய வேலைப்பாடமைந்த ஆபரணத்தை அணிந்தவள்.
ஆராய்ந்திழைத்த இழையாள் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கொலையார் கரியின் உரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளா யெனுநே ரிழையே.

பொழிப்புரை :

அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், `கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்` எனக் கூறுகின்றாள்.

குறிப்புரை :

கரி - யானை; கரத்தை உடையது என்னுங்காரணத்தால் பெற்ற பெயர்.
உரி - தோல்.
மூடியன் - போர்வையன்.
மலை - மேரு கிரி.
சிலை - வில்.
விலையால் - விலைக்குப் பெறும் அடிமைத்தன்மையால்.
(பா.
8) நேரிழை - அன்மொழித் தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய் யாடிய பால்வணனே
வேலா டுகையா யெம்வெணா வலுளாய்
ஆலார் நிழலா யெனுமா யிழையே.

பொழிப்புரை :

என் ஆயிழையாள், `காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல்ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே!` என்று பலவாறு கூறுகின்றாள்.
அருள்புரி.

குறிப்புரை :

காலனைக் காலால் உயிர்வீடு செய்தாய் - யமனைத் திருவடியால் உதைத்து உயிரைப் போக்கியவனே.
பால், நெய், தயிர் மூன்றும் சொல்லி நிறுத்தி, `ஆனைந்து` என்பது சைவ சம்பிரதாயம்.
கோமயம், கோசலம் இரண்டும் திருமுறையுட் கூறப்படாமை அறிக.
பால்வண்ணன்:- இறைவனுக்கு இத்தலத்தில் வழங்கிய திருப்பெயர்.
வேல் - திரிசூலம்.
ஆல் ஆர் நிழலாய் - கல்லால மரத்தின் நிழலின்கண் வீற்றிருந்து அறம் உரைத்தவனே.
ஆயிழை - அன்மொழித்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே
விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே. 

பொழிப்புரை :

என் ஆயிழையாள், `மீன் கொடியை உடைய மன் மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமைமிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது` என்று கூறுவாள்.

குறிப்புரை :

சுறவக்கொடி கொண்டவன் - மீன் கொடி உடைய மன் மதன்.
நீறு - சாம்பல்.
அது - பகுதிப் பொருள் அன்றி வேறு குறியாது, விகுதிபோல் நிற்பது.
அவர் முதலியன அங்ஙனம் நில்லா என்பது தமிழ் மரபு.
நீறாய் உறவிழித்த உத்தமன் என்க.
நெற்றி விழித்த - நெற்றிக்கண்ணால் விழித்த.
நெற்றி - நெற்றிக்கண்; இடவாகுபெயர்.
உத்த மன் - மேலவர்க்கும் மேலானவன்.
விறல் - வலிமை.
கரி - யானை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், `செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!` என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.

குறிப்புரை :

செங்கட் பெயர் - கோச் செங்கட் சோழன் என்னும் திருப்பெயர்.
செம்பியர்கோன் - சோழன்.
அம்கண் கருணை பெரிது ஆயவன் - கண்ணிற்கு அழகாகிய கருணையில் மிக்குள்ளவன் என்றவாறு.
வெம்கண்:- கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது.
சாதியடை.
அங்கம் - உடம்பு, அவயவம் எனலுமாம்.
அயர்வு - சோர்வு, காதலால் நேர்ந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய்
நின்றா யருளா யெனும்நே ரிழையே.

பொழிப்புரை :

தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், \\\\\\\"கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!\\\\\\\" என்று அரற்றுகின்றாள்.

குறிப்புரை :

குன்று - கயிலை, `புலியின் தன் தோல்` என்றும் `புரம் மூன்றை வென்றாய்` என்றும் கொள்க.
நின்றாய் - திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பவனே என்று எதிர்காலத்திற் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், `கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்` என்று கூறுகிறாள்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன்.
தொலைய - நொறுங்க.
என்னும் பொருட்டாய் நின்றது.
வகரமெய் விரித்தல் விகாரம்.
(பார்க்க:பா.2).
அலசாமல் - அலைக்காமல், வருத்தாமல்.
நல்காய் - வந்து அணைந்து இன்பங்கொடுப்பாய்.
எனும் - என்பாள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.

பொழிப்புரை :

ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், `திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே!` என்று கூறுகின்றாள்.

குறிப்புரை :

திரு - இலக்குமி.
மருவா - மருவி.
வெருவா - அச்சத்தால் வாயால் அரற்றி (நிற்க) என்று ஒருசொல் வருவித்து முடிக்க.
வெருவி (நிற்க) அழலாய் நிமிர்ந்தாய் என்றபடி.
விரை - மணம்.
அரவா - பாம்பணிந்தவனே.
ஹர! வா எனலும் பொருந்தும்.
`எம் அரனேயோ என்றென்று`

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் `புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர்.
உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்`! என்று கூறுவாள்.

குறிப்புரை :

அமண் - சமணர்.
பொய்த்தவர்கள் - மெய்த்தவரல்லாதவர்கள்; பொய்த்தவத்தையுடையவர்கள் என்று ஒரு மொழியும் தொடர்மொழியுமாக்கொள்ளலாம்.
ஒத்தவ்வுரை:- வகரம் விரித்தல் விகாரம்.
ஓரகிலார் - உணரமாட்டார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.

பொழிப்புரை :

வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

குறிப்புரை :

வேதியன் - வேதத்தைப்படைத்த பரசிவன்.
வல்லவரை விண்ணோர் ஏத்த விரும்புவர் என்றபடி.
`கண்ணாருங் காழியர்` (தி.
2 ப.
16 பா.
11) என்றது காண்க.
கண் - மூங்கில்; `வேணு வனம்`.
ஞானக்கண் என்றுகொண்டு.
அதையுடையார்க்கு ஆகுபெயராக்கலுமாகும்.
திருஞானசம்பந்த சுவாமிகள் பண்ணோடு பாடிய உண்மை ஈண்டும் புலனாகின்றது.
சிற்பி