திருநாகேச்சரம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.

பொழிப்புரை :

பொன்னையொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன் வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து கெடும்.

குறிப்புரை :

பொன் ஏர் தரு மேனியன் - பொன்னைப்போல ஒளிரும் திருமேனியுடையவன்.
ஏர் - உவமவுருபு.
விரை (காவிரி) நீர் - விரைந்தோடும் (காவிரி) நீர்.
நீர்வயல் - நீர் நிலவளம் உணர்த்தியவாறு.
மன்னே - இறைவனே.
வல்வினை மாய்ந்து அறும் என்றதுபோல இத்திருப்பதிகம் முழுதும் பாடியருளியதால் இத்தலவழிபாடு நம் பழவினைப் பற்றறுக்கும் என்பது உறுதியாதலறிக.
என - என்று துதிக்க.
மேலும் இவ்வாறே கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.

பொழிப்புரை :

சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள் அழிந்து கெடும்.

குறிப்புரை :

சிறவார் - சிறக்காதவர் (திரிபுரத்தசுரர்).
சிலையில் உற - மேருவில்லிற் பொருந்த.
வார்கணை - நீண்ட அம்பு.
உய்த்தவன் - செலுத்தியவன்.
உயரும் பொழில்.
நறவு ஆர் பொழில்.
நறவு.
கள், தேன்.
நகர் - திருக்கோயில்.
அறவா - தருமசொரூபி! ஆசு - குற்றம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.
 

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

கல் ஆல் நிழல் மேயவன் - கல்லாலின் நிழலில் வீற்றிருந்தவன்.
கரும்பின் வில்லான் - கரும்பை வில்லாகவுடைய மன்மதன்.
எழில் - அழகு.
ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது.
விழித்தவன் - தீ விழிதிறந்து எரித்தவன்.
நல்லார் - நன்னெறியாகிய சிவஞானத்தை உடையார், நற்பண்புடையாருமாம்.
செல்வா - சென்றடையாத திருவுடையானே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.
 

பொழிப்புரை :

விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும்.

குறிப்புரை :

நகு - விளங்குகின்ற.
வான்மதி - விண்ணிலூரும் திங்கள்; வெண்டிங்களுமாம்.
அரவு - பாம்பு.
புனல் - கங்கை.
தகு - தக்க.
வார் - நீண்ட.
தளவம் - முல்லை.
நகுவார் - பல்லைக் காட்டிச் சிரிப்பார் (போலப்பூக்கும் பொழில்) தளவம் நகும்வார் பொழில் எனல் வெளிப்படை.
பகவா - கடவுளே; ஷாட்குண்யனே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினை தா னறுமே.
 

பொழிப்புரை :

மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக்கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

கலைமான்மறி - ஆண் மான்கன்று.
கனல் - தீ.
மழு - மழுவாயுதம்.
நிலை - நிற்றல்.
நிகழும் நலம் - உலகப் பிரசித்தி பெற்ற வினை தீர்தலாகிய நன்மை.
நகர் - திருக்கோயில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம்
அரைசே யெனநீங் குமருந் துயரே.
 

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதிதேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆட நடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும்.

குறிப்புரை :

குரை - ஒலி.
நடம் - நிருத்தம்.
வரையான் - இமாசலராசன்.
நரை - வெண்மை.
ஆர் - பொருந்திய.
விடையேறு: (தொல்காப்பியம், மரபியல்.
சூ 37,38, ) அரைசு - மொழியிடை நின்ற ஐகாரம் போலி.
அரசனே என்று விளித்தது.
நீங்குதற்கு அரிய துயரமும் நீங்கும் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலி கொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையாவென வல்வினை தானறுமே.
 

பொழிப்புரை :

முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக்காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

முடை - புலால், நாற்றமுமாம்.
கடை - கடை வாயில்.
காரணன் - முதல்வன்.
நடை - ஒழுக்கம்.
சடையா - (ஞானமான) சடையனே.
`நுண்சிகை ஞானமாம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஓயா தவரக் கனொடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே யெனவல் வினைதா னறுமே.
 

பொழிப்புரை :

தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயாரவாழ்த்துவர்.
நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

ஓயாத - (தான் செய்யும் குற்றத்தை உணர்தற்கு உணர்வில்) நுணுகாத, இடைவிடாத என்றலுமாம்.
நீ - தேவரீர்.
ஆரருள் - பூரணகருணை.
வாயார வழுத்துவர் - \\\\\\\"வாயாரப்பாடுந் தொண்டர்\\\\\\\".
தாயே - `தாயாய் முலையைத் தருவானே` (முத்திநிச்சயப்பேருரை பக்கம் 78-9-, 192-3இல் உள்ள விளக்கம் பார்க்க).
(தி.
2 ப.
86 பா.
4 குறிப்புரை காண்க).

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சுர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.

பொழிப்புரை :

திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற் கொள்ளச் சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன் இன்புறுவான்.

குறிப்புரை :

நெடியான் - விக்கிரமன்; திருமால்.
நேடல் - அடி முடி தேடுதல்.
மால் - பெரிய.
சோதியன் - தீப்பிழம்பானவன்.
நடு - நாற்று நடுகின்ற.
மாவயல் - நீள் கழனி.
நகரே இடமா உறைவாய் - திருக்கோயிலே உறையுளாக எழுந்தருளியவனே.
இன்பு - இம்மை மறுமை வீட்டின்பம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே.
 

பொழிப்புரை :

அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

மலம் - அழுக்கு.
பாவிய - பரவிய.
மண்டை - உணவு கொள்ளும் பொருட்டு, விரிந்த பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்டது.
உண்கலம் - உண்ணும் பாத்திரம்.
பாவியர் - தீவினையுடையவர்.
கட்டுரை - கட்டிச்செல்லும் பொய்ம்மொழி.
சிலம்பா - சிலம்பணிந்தவனே, கயிலை மலையானே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா.

குறிப்புரை :

கலம் - மரக்கலம்.
தலம் - சிவதலம்.
விரகன் - வல்லவன், அறிஞன்.
சொலல் - சொல்லுதலையுடைய, புகழுடைய.
சொல்- புகழ்.
சொல்ல - இசையுடன் பாட, வினை நில்லா என்க.
சிற்பி