திருப்பழுவூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன், தலைவன். எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர் என்பர்.

குறிப்புரை :

முத்தன் - இயல்பாகவே பாசம் இல்லாதவன். நல்மூவிலை வேலன் - அழகிய திரிசூலப்படையினன். விரிநூலன் - விரிந்து பெருகிய மறை (நூல்களை அருளிய) முதல்வன். அத்தன் - தலைவன். மை - மேகம். தழை - தழைக்கின்ற. (பொழில்). வாசம் - மணம். பத்தர் - பத்துடையர். பத்து - பற்று, அன்பு. பக்தி என்னும் வடசொற்றிரிபுமாம். சித்தர் - சித்துடையர். சித்தத்தார் என்பதுசித்தம் அடியாகத் தோன்றும் பெயர். பயில்கின்ற பழுவூர் என்றதால், நம் ஆசிரியர் காலத்து இருந்த அத்திருத்தலத்தின் சிறப்பு விளங்குகின்றது. பழுவூரே இடமென்பர் என்று பாடல்தோறும் இயைத்துக்கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

பொழிப்புரை :

வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய, முடி மேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள் மலர். கோங்கு - கோங்க மலர். மாடம் - உயரிய வீடு. சூளிகை - வீட்டின் உச்சி. மலிதல் இரண்டும் தலத்தின் செல்வச் சிறப்பைக் குறித்தன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.

பொழிப்புரை :

பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும்,முப்புரி நூலணிந்தவருமான சிவபெருமானது இடம், வயல்களில் முளைத்த தாமரைமலர் போன்ற முகத்தினராய மகளிர் பால் போல இனிய சொற்களால் பாடல்பாடி நடம் புரியும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

வாலிய - பெரிய. புரத்திலவர் - முப்புரத்தை இல்லமாக உடையவர். புரத்தில் அவர் எனலுமாம். அவர் - பண்டறிசுட்டு. வேவ விழிசெய்த - திரிபுரத்தைச் சிரித்தெரித்ததுமன்றி விழித் தெரித்ததும் ஒருகற்பத்தில் நிகழ்ந்தது என்பர். `அரணம் அனலாகவிழித்தவனே` (பதி .157 பா .1)`பார்த்ததுவும் அரணம்படர் எரிமூழ்கவே` (பதி. 212.பா .5) `கடை நவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்` (பதி .319. பா .3) `முதுமதிள் வெவ்வழல் கொளநனி முனிபவர்`(பதி .342. பா .4) `நெடுமதில் ஒருமூன்றும் கொலையிடைச் செந்தீ வெந்தறக்கண்ட குழகனார்`(பதி .376 பா .7) என்று பிறாண்டும் ஆசிரியர் அருளியவாறறிக. `மதில் மூன்றுடைய அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப் பறவைப்புரம்`(தி .4 பதி . 111. பா .7) என்னும் திரிபுரத்தின் இயல்பையுணர்க. போலிய - போன்ற; தடத்தமென்றபடி. வேலி - வயலிலுள்ள, விரை - மணம். கமலம் - தாமரை. அன்ன - போன்ற. பால் என - பால்போல இனியது என்ன. மிழற்றி - பாடி (க் கொண்டு) பாடி ஆடும் (வளமுடைய) பழுவூர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலிகொண்டுபயில் கின்ற பழுவூரே.

பொழிப்புரை :

எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

எண்ணும் எழுத்தும் இசையின் கிளவி (யும்) தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுள் - எண்ணையும் எழுத்தையும் இசையொடுகூடிய இனிய கிளவியையும் ஆராய்வார் கருதும் முதற்பொருளாகிய கடவுள். `எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்` `எண்ணென்ப ஏனை எழுத்தென்ப` என்புழிப் போல ஈண்டும் இருபொருள் கொள்ளல் பொருந்தும். `எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாமொழியப் பண்ணின் இசைமொழிபாடியவானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத்தீர்க்கும் பிரான்` (தி .4 ப .90 பா .6). மலையாளர் ஆடியும் தொழுதும் ஏத்தியும் பாடியும் பயில்கின்ற பழுவூர் என்றதால், அத்தலத்தில் `அந்தணர்களான மலையாளர்` வந்து செய்யுந்திருத்தொண்டு, ஆசிரியர் கண்கூடாக் கண்டவுண்மையாதல் விளங்கும். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிற் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.

பொழிப்புரை :

இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப் பாடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

`கோயில் சுடுகாடு` என்றது, திருவாசகம். மறையாளர் - (மலையாளத்து) வேதியர். `ஏத்த` பின்னோர் பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

பொழிப்புரை :

தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகணவாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக் கற்பித்துப் பேசவைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

மேவு அயரும் - பொருந்துவதால் துயர் உறுத்தும், மேவ அயரும் எனலுமாம். தழல் - தீ. விளைத்து - தோற்றி. மா - யானை. உரிசெய் - உரித்தலைச் செய்த. மைந்தன் - வீரன். பூவை - நாகணவாய்ப் பறவை. `பொற்பில் நின்றன பொலிவு` அப்பொற்பு, கற்பால் நீடுநிற்கும். கற்பிலார்பொற்புக் கடிதில் அழிவது கண்கூடு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.

பொழிப்புரை :

இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர்.

குறிப்புரை :

மந்தணம் - இரகசியம். மாமடி - மாமன்; தக்கன். வேள்வி - யாகம். சிந்த - அழிய. விளையாடு - வீரபத்திராய்ச் சென்று போர்விளையாட்டைச் செய்த. யாகத்தைப் போராக்கொள்ளாது விளையாட்டாக் கொண்டழித்த என்றபடி. `சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு பரிதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்` (தி.3.ப .376.பா.5) என்று பின்னும், ஆசிரியர் அவ்விளையாட்டைக் குறித்தருளுமாறறிக. ஆர் - பொருந்துகின்ற (மாதர்). சுவடு - அடிச்சுவடு. அகில் தூபவர்க்கங்களுள் ஒன்று. மட்டு - தேன். ஆர் - ஆர்கின்ற, உண்ணுகின்ற. `கருப்பு மட்டு வாய்மடுத்து` திருவாசகம் (பதி .80 பா.5)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளு மப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே.

பொழிப்புரை :

வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்ததந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது ஏறிக்கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

உரம் - வலிமை. மிடற்றில் - கழுத்தில். குரங்கு இனம் - குரக்கினம். (வலித்தல் விகாரம்). விரை - மணம். பரக்கு - பரத்தல். புனல் செய் - நீர்வளமிக்க வயல். குரங்கினம் கனியுண்டு செய்யில் விளையாடும் ஊர் என்க. `புணர்ச்செய்` என்ற பழைய பாடத்திற்குக் கலவி பொருளாகும். புணர்தலைச் செய்யும் விளையாட்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

பொழிப்புரை :

உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர்.

குறிப்புரை :

ஒன்றும் - தனிமுதலாகிய சிவபெருமானையும். இரு மூன்றும் - ஆறு அங்கங்களாய் வேதார்த்த சாதகமாயுள்ளவற்றையும். ஒருநாலும் - நாலு வேதங்களையும், உணர்வார்கள் - உணரும் அந்தணர். மன்று - அம்பலம், சபை, (பெரிய, திருநீலகண்ட) `அருமறையோடாறங்கம் ஆய்ந்துகொண்டு பாடினார் நால்வேதம்`(தி . 6 பதி.83 பா. 5) என்பதில் மறையும் வேதமும் வெவ்வேறு ஆதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மொட்டையம ணாதர்துகின் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

பொழிப்புரை :

முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய குற்றமுடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுகமரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர்.

குறிப்புரை :

அமண் ஆதர் - சமணராகிய அறிவிலிகள். ஆதம் - அறிவின்மை. மொட்டை - தலைமயிர் பறித்தலால் ஆனது. முட்டைகள் - வழுவினர், குறைவினர், வறியர், பதர்கள் எனப் பல பொருளும் பொருந்தும். மொழிந்த - சொல்லியவை. முனிவான் - வெறுப்பவன். இளநீரது என்க. இசை - இசைந்த. பூகம் - பாக்குமரம். தாறு - குலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

பொழிப்புரை :

மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.

குறிப்புரை :

முன் உள்ள பாக்கள் 4,5,7,9 காண்க. ஏத்தும் பந்தம் - வழிபட்டு நிற்கும் அருளுறவு. ஆர - நிறைய. ஞானம் உணர்பந்தன் என்று திருப்பெயர் பொருள் விளக்குமாறுணர்க. பேணி - விரும்பி. பதிகம் 165 முடிவிலும் இவ்வடி அமைந்தமை காண்க.
சிற்பி