திருச்சாய்க்காடு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

பொழிப்புரை :

நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

நித்தலும் - நாள்தோறும். நியமம் - தின நியமம் ஆகக் கொண்டொழுகும் வழிபாடுகள் (ஆன்மார்த்தம்). கடன்களுமாம். நீர் மலர் தூவல் - புறப்பூசை. சித்த மொன்றல் - அகப்பூசை, தியானம் முதலியன. பீலி - மயிற்பீலி. சாகரம் - கடல். சிவன்கோயில் - சாய்க்காடே என்க. மேலும் இவ்வாறே கொள்க. காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன்பட்டுக் கடலில் சேர்வது மிகச் சிறிதேயாதலின், பாயும் என்னாது `மேவும்` என்றார். (விடையின் மேல் வருவார் அமுதுசெய அஞ்சாதே விடம் அளித்ததெனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத காவிரி) என்றருளினார் சேக்கிழார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

பொழிப்புரை :

பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

பண் - பண்ணிசை, தலைக்கொண்டு - மேற்கொண்டு பண்பாட ஆடும் வேதியன் என்க. காட்டின் கருமையும் அங்குள்ள தலைகளின் வெண்மையும் முரண்டொடை அமைய நின்றன. கொண்டல் - (குணக்கிலிருந்து வீசுங்காற்றால் உந்தப்பட்ட) மேகம். ஏனை முத்திசைக்காற்றும் முறையே தென்றல் கோடை வாடை எனப்படும். பேரி - பேரிகை. தண் தலைதடம் - குளிர்ந்த இடப்பரப்பையுடைய சோலை (க்குக் காரண) ப் பெயர். தட - வளைவு எனலுமாம். `தட வென்கிளவி கோட்டமும் செய்யும்`. (தொல். உரி)

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடு மமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே.

பொழிப்புரை :

மணம்வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

நாறு - மணம் வீசும். கூவிளம் - வில்வம். நாகு இள மதியம் - மிக்க இளையதாகிய பிறை. அமரர் பிரான் - தேவர்கட்குப் பிரியத்தைச் செய்பவன். ஊறு - (சுவை) ஊறுகின்ற. தேங்கனி - `தெங்கங்காய்`, `தெங்கம் பழம்` என்பவைபோல் இதுவும் அரியதொரு பிரயோகம். தாறு - குலை. கதலி - வாழை விசேடம். புதல் - புதர். திருச்சாய்க்காட்டின் இயற்கைவளம் உணர்த்தப்பட்டது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

பொழிப்புரை :

வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

வரங்களை அருளும் வண்மையால் எய்தும் புகழ் அழியாமல் நிலைபெற்ற என் அப்பன். மருவார் - பகைவர். இரங்கல் ஒசை - நெய்தற்றிணையுரிப்பொருளை நினைவூட்டுவது. சரக்கொடும் என்னும் பாடமே சிறந்தது. ஈட்டிய - (பொருள் தேடிச்) சேர்த்த (சரக்கு). ஈண்டி - கூடி, நெருங்கி. தரங்கம் - அலைகள். நீள்தண் கழிக்கரை என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

பொழிப்புரை :

மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

ஏழைமார் - மகளிர். `ஏழைபங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்` என்னுந் திருவாசகத்திற்கு வறியர் பங்கை ஆள்பவன் என்று பொருள் கூறுதல் மாபாதகம். கடை - கடைவாயில். கூழை - கடை குறைந்தது. (தோற்றம்) மாழை - பொன். மேலும் இவ்வாறு நெய் தற்றிணைக் கருப்பொருள் சில கூறல் அறிக. கண்ணையும் கையையும் உடைய நுளைச்சியர் கொய்து கொண்டாடும் சாய்க்காடு எம்மான் உறையும் கோயில் என்க. பாம்பின் உருவத்தைத் தலை முதலாக நோக்கின், கடை குறைந்திருத்தல் ஆகிய கூழைமை புலப்படும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில்
வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே.

பொழிப்புரை :

உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

துங்கம் - உயர்ச்சி. கடல் தாம் கடை (யும்) போதில் என்க. பொழுது - போழ்து - போது என மருவிற்று. நீழல் - நஞ்சின் வெப்பம் தணித்தற்கு அளித்த அருணிழல். வங்கம் - மரக்கலம். இப்பி - சிப்பி, கடல் வங்கத்தையும் அங்கு ஒளிர்கின்ற இப்பியையும் முத்தினையும் மணியினையும் சங்கினையும் வாரி உந்தும் என்க. அங்கு வங்கம் வாரி உந்து மெனல் பொருந்தாது. ஒளிர்தல் முத்து முதலியவற்றிற்கும் உரியது. `சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே` (சுந்தரர் - 721)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னைமலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்.

குறிப்புரை :

சிவபிரான் வேதத்தை முதன் முதலாகச் சொல்லியருளிய திருநாவுடையார். பளிங்காலான குழை அணிந்த திருச்செவியார். ஓதம் நஞ்சு - பாற்கடலில் எழுந்தவிடம். அணி கண்டர் - அழகு செய்யும் திருநீலகண்டர். அணிந்த எனலுமாம். உகந்து - உயர்ந்து, விரும்பி. மாதர் - அழகு, இச்சையுமாம். மாதர் வண்டு - பெண், காதல் வண்டு - ஆண். ஆடுதலும் ஊடுதலும் உணர்த்தப்பட்டமை அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே.

பொழிப்புரை :

தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும்.

குறிப்புரை :

இருக்கும் நீள்வரை - வீற்றிருக்கும் உயர்ந்த கயிலை மலையை. ஆகம் - உடம்பு. மரு - மணம். தரு - மரம். நீடுதல் - ஒங்கிப் பரந்து அழியாமை குறித்தது. இருக்கும் வரையை எடுத்த அரக்கன், தூண் துரும்பாகும் இழிநிலையை எய்தி, அஞ்சி இறைவனை இன்புறுத்த இன்னிசைபாடி மகிழ்வித்து, நாளும் பெற்றான் வாளும் பெற்றான் என்பது குறித்தே, `நெரித்து` என்பதை அடுத்து `அருள் செய்தவன்` என்றருளினார் ஆசிரியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

வேலை - கடல். நேர் - ஒத்த. செருந்தி - கனகம் (பொன்) போலப் பூப்பது. ஆறு சாமத்திலும் பூக்கும் வெவ்வேறு இனங்களுள் காலையிற் பூப்பது செருந்தி, `நாண்மலர்` (நாள் - காலை) என்னும் தொல் வழக்குணர்க. `அல்லி` அல்லிற்பூப்பது பற்றிய காரணப்பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.

பொழிப்புரை :

அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்.

குறிப்புரை :

ஆத்தம் - ஆப்தம், உண்மை. அறிவு அரிது ஆயவன் - அறிவதற்கு அரிய உண்மைப் பொருளாயுள்ளவன். புகார்க்கு அருகில் சாய்க்காடு இருத்தல் கூறப்பட்டதறிக. புகார்க்கு மாளிகையும் காட்டுக்கு வாவிகளும் விசேடம். புகாஆறு என்றதன் மரூஉவே புகார் என்பது. இதன் முதற்பாட்டில் `பொன்னி சாகரம் மேவு` என்றதற்கு எழுதிய குறிப்பைக்காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே.

பொழிப்புரை :

சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர்புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.

குறிப்புரை :

ஏனையோர் - உபமன்யு முனிவர், இயற்பகை நாயனார், ஆதிசேடன் முதலியோர் (தி. 4 பதி.56 .பா.5). ஊனம் - சொற் குற்றம், பொருட்குற்றம், அநாசாரம், அன்பின்மை முதலியவை பாராயணத்துக்கு ஊனங்கள்.
சிற்பி