திருக்ஷேத்திரக்கோவை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே.

பொழிப்புரை :

பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.

குறிப்புரை :

பீடு - பெருமை. நீர் ஊர் வயல் - நீர் பரவிய கழனி. பிதற்றாய் - இத்தலங்களின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருப்பாய். பிதற்றுதலாலேயே பெரும்பயன் எய்துவாய் என்ற படி. பிறைசூடி - சந்திரசேகரன். பேரிடம் - பெருந்தலங்கள். குடந்தை, குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை என்றும், பா .9- இல் குடமூக்கென்றும் வெவ்வேறு கூறப்படுதல் காண்க. இப்பதிகத்துள் அடங்கிய வைப்புத்தலங்கள் தனியாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங்
கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே.

பொழிப்புரை :

அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும்.

குறிப்புரை :

முத்தாறு - விருத்தாசலத்தின் அருகே ஓடும் ஆற்றின் பெயர். வாட்போக்கி - ரத்நகிரி. வாள் - ஒளி. போக்கி - போகச் செய்வது. ஒளிவீசும் அரதனகிரி என்க. ஈற்றடி கிடைத்திலது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே.

பொழிப்புரை :

இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக.

குறிப்புரை :

அட்டானம் என்று ஓதிய நாலிரண்டும் - எட்டு வீரட்டங்களும். அட்டானம் - அஷ்டஸ்தாநம் என்பதன் திரிபு. கா, துறை, காடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அவற்றுள் கா அல்லாதவற்றின் தொகையையும் குறித்தமை காண்க. சிட்டன் - சிஷ்டன். காடொன்பது - திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு என்பவும் உள. (சுந்தரர் ஊர்த்தொகை. 3) குளமூன்றும் களம் அஞ்சும் - திருக்குளம், இடைக்குளம், பாற்குளம், வளைகுளம், கடிக்குளம், தஞ்சைத் தளிக்குளம் என்பவற்றுள் எம்மூன்றோ? `வளைகுளமும் தளிக்குளமும் நல்லிடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம்` (அப்பர். அடைவு திருத்தாண்டகம்). வேறு இரண்டு களம் யாவையோ? பாடி நான்கு - எதிர் கொள்பாடி, மழபாடி, பிற எவையோ? வலிதாயம் (பாடி) சேரின் மூன்றாம். பாழி மூன்று - திருவரதைப் பெரும்பாழி, களப்பாழி பிறிதொன்று யாதோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.

பொழிப்புரை :

நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும்.

குறிப்புரை :

பிறப்பில்லவன் - `பிஞ்ஞகா பிறப்பிலி` பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமை இயல்பாகவே இல்லாதவன். உறைப்பு - திருவருள் உறைப்பு, அன்பின் அழுத்தம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

* * * * * * *
ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே

பொழிப்புரை :

சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக .

குறிப்புரை :

மாகறல் , அம்பர் , ஐயாறு , அணி - அழகு . துலைபுகலூர் - என்ற குறிப்பால் , பெயர்க்காரணம் ஒருவாறு ஊகிக்கப்படுகின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும்
இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே.

பொழிப்புரை :

வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.

குறிப்புரை :

மனவஞ்சர் - வஞ்சமனத்தர். மற்றோட என்பது இங்குப் பொருந்துமாறு புலப்பட்டிலது. திருக்கூடலில் ஆலவாய் - திருக்கூடலில் உள்ள ஆலவாயென்னும் திருக்கோயில். இனவஞ்சொல் இலா - வன்சொல் இனம் இல்லாத. கனம் அம்சினம் மால்விடை - மேன்மையும் அழகும் கோபமும் உடைய திருமாலாகிய விடை. தஞ்சம் - அடைக்கலம். (தண் + து + அம்). தவமாம் - தவமாகும். மலம் ஆயினதான் அறுமே - மும்மலமும் தானே அற்றொழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்
********

பொழிப்புரை :

மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.

குறிப்புரை :

மற்று உறையூர். இப்பாடலின் முழுப்பகுதி கிடைத்திலது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

* * குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே.

பொழிப்புரை :

திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.

குறிப்புரை :

என்று - என்றும் நீ கருது என்க. இதன் முழுப் பகுதியும் கிடைத்திலது. `பருத்தி நியமத்துறைவாய்`(சுந்தரர். ஊர்த்தொகை . 8.) என்று வேறொன்றுமுண்டு. அதனை வைப்புத் தலத்தில் அடக்கினர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்
சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.

பொழிப்புரை :

நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக.

குறிப்புரை :

குறும்பலா - திருக்குற்றாலத் தலவிருட்சம். கற்குன்றம் - கோவர்த்தனகிரி. காணாச்சொற்கு - காணாதபுகழ்க்கு. தொலைவு - அழிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த
நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே.

பொழிப்புரை :

குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.

குறிப்புரை :

அலம்பும் சலம் - அலையாய்ப் பெருகுங்கங்கைநீர். சொல்லா - புகழ்ந்து போற்றாத.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று
விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே.

பொழிப்புரை :

தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.

குறிப்புரை :

பதியான - தலமானவற்றை. விம்மா - விம்மி. வெருவா - வெருவி. விதியார் - செல்வமுடையவர். சேவடிக்குப் பிரியார்.
சிற்பி