திருப்பிரமபுரம்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

எம்பிரா னெனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரா னாவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.

பொழிப்புரை :

எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனேயாவான்.

குறிப்புரை :

எம்பிரான் ஆவானும், தன்னை அடைந்தவர் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்திய கையானும், காபாலியும், கறைக்கண்டனும் வானவனே என்று முடிக்க. தம் - ஆன்மாக்கட்கு. பிரான் - இனியன். பிரியமானவன் என்றும் ஆன்மாக்கள் அநேகமாதலின் `தம்` என்றும், ஆண்டவன் ஏகனாதலின் தன் என்றும் குறித்தனர் முன்னோர். தன்னானந்தக் கொடி - `சிவகாமவல்லி` என்புழிக்காண்க. கம்பம் - அசைவு. கட்டுந்தூண். கரி - கரத்தையுடையது. யானை. காபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். கறை - நஞ்சு. வம்பு - மணம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா யுலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

பொழிப்புரை :

உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச்செய்த கண்ணுதலோனே யாவான்.

குறிப்புரை :

உலகத்துக்கு அடைக்கலம் சருவேசுவரன் ஒருவனே ஆவான் என்று, என்றும் மனம்தளராத தகுதியை உடையவராகி, அச்சிவபிரானையே சரணம் அடைந்தவர்களைக் காக்கும் கிருபாகரன். ஓம் என்று - ஓம் என்று பிரணவமந்திரத்தை ஓதி. உறைகின்ற கண்ணான்; எரியச் சேர்ந்த கண் என்க. மன்மத தகனம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம்மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார்.

குறிப்புரை :

நல்ல நெஞ்சமே! நீ உய்தி வேண்டுவாயானால் உன்னை இரந்தேன். இரந்தது என்ன என்றால், நம்பெருமான் திருவடிகளையே சதாகாலமும் நினைவுசெய்திரு. அன்னம் ஆசிரியர் காலத்திலிருந்தமை புலப்பட்டது. வாயதுவே - வாயே! எப்போதும் ஆரமுதைப்பன். அம்சீர்பன் - அழகிய கீர்த்தியைப் பன்னுக. கண்ணே! பரிந்திடப்பார். பரிந்திட - சிவபிரான் இரங்கி அருள்செய்ய. பார் - கேசாதிபாதம் + பாதாதிகேசம் தரிசித்துக்குளிர்வாய்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளு நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.

பொழிப்புரை :

மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவிவருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக.

குறிப்புரை :

சாம்நாள் இன்றி, இகரத்தைச்சுட்டாக்குதல் பொருந்தாது. சங்கை - சாகும் நாள் உண்டோ இன்றோ என்னும் சந்தேகம். தவிர்ப்பிக்கும் - தவிரப்போக்கும். கோன் - தலைவன் (சிவபிரான்) மேல் `திருவடியே` என்றும் இங்கு, `திருவடிக்கே` என்றும் அருளியதை உணர்ந்து, மறந்து மற்றொன்றை எண்ணாமைவேண்டும். தீவணன் - அழல் வண்ணத்தவன். நா - நாவே! நல்ல நியமம் செய்து அவன் சீரை நவின்று ஏத்து. நல்நியமம் - தோத்திரம் புரிதற்கு முன் செய்யற்பாலன ஆகிய பூஜாங்கங்களைத் தவறாமல் செய்யும் நியமம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக வறிந்தோமே.

பொழிப்புரை :

நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர்பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம்.

குறிப்புரை :

கண்நுதலான் - நுதலிற்கண்ணை உடையவன், கண்ணையுடைய நுதலினன். நுதலும் (கருதும்) இடமாதலின், `நுதல்` எனப்பட்டது; கண்ணுதல் என்றதும் அதுபற்றியே. செந்தீயான் (கண்ணுதலான்) என்று கருதின் வெண்ணீற்றான் முரண்டொடையாம். ஏறி - பெயர்ச்சொல். இதம் - நன்மை. பிஞ்ஞகன் - தலைக் கோலத்தன். பேர்பல - `பேராயிரம் (பரவிவானோர் ஏத்தும் பெம்மான்`) விண் - விண்ணோர்க்கு இடவாகுபெயர். நுதலா - கருதுதலாக. எண்ணுதலாம் செல்வத்தை - தியானிக்கும் ஐசுவரியத்தை. இயல்பாக - உள்ளவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.

குறிப்புரை :

எங்கு யாது பிறந்திடினும் என்பதும், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் என்பதும் பொருள் வேறுபாடுடையன. இடமும் பிறப்பும் வேறுபட்டாலும் அடியார்க்கு ஆண்டவனருள் கிடைப்பது திண்ணம். `எங்கேனும் இருந்து, எங்கே போவேனாயிடினும்,` `எங்கேனும் போகினும்` என்னுந் தொடக்கத்துத் திருப்பாட்டுக்களை (திருமுறை 7) அறிக. `இங்கே` என்றது பிறந்த இடத்தையும் அப்பிறவியையும் குறித்து நின்றது. கொங்கு - மணம். ஏயும் - பொருந்தும். பவளம்போலும் மேனியிற்பால் வெண்ணீறு சண்ணித்த திருமேனிக்குச் சங்கு ஒப்பு. எம்பெருமான் சங்கரன்றன் தன்மைகள் இங்கே என்று அருள்புரியும் என்றியைக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை யடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.

பொழிப்புரை :

மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல்வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்.

குறிப்புரை :

சிலை அது - மேருமலையானது. (அது; பகுதிப் பொருள் விகுதி) சிலை - வில் (பதிகம் 173: பா 7. குறிப்புணர்க) திரிபுரம் - வினைத்தொகை. `திரிதருபுரம் எரிசெய்த சேவகன்` (தி. 3. ப. 23 பா 9.) `திரியும் மூவெயில்` (தி .4 ப .20 பா .7. தி .5 ப .25 பா .4) `திரியும் மும்மதில்` (தி .5 பதி .36 பா .10) `திரியும் முப்புரம்` (சுந்தரர் பா. 626,685, 809) இலை - உவமை. நிலையுடைய பெருஞ்செல்வம் - சிவாநந்தாநுபவம். நீடுலகு - வானோர்க்குயர்ந்த உலகம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமன மெப்போதும் பெறுவார்தாந் தக்காரே.

பொழிப்புரை :

எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.

குறிப்புரை :

சிவமூர்த்தி - சிவமாகிய மூர்த்தி. தக்கார் - பெருந்தகையுடையார். மாணடிசேர்தல் தக்காரிலக்கணம் எனப்பட்டது. கற்றதனாலாய பயன் அதுவே. பார்க்க: பா. 10. `தோளொடு தாள்` என்புழித்தோளொடு தாளையும் தாளொடு தோளையும் சேர்த்து நெரித்து என்று கொள்ளலாகாது. தோளையும் தாளையும் நெரித்து எனல் வேண்டும். `சிவமூர்த்தி` என்பதில், மூர்த்தியும் மூர்த்திமானும் ஆக வெவ்வேறாக கொள்ளாமல் அபேதபுத்தியொடு தியானம் பண்ணுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
றெரியாதா னிருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தா மேழுலகும் உடனாள வுரியாரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர்.

குறிப்புரை :

பரமேட்டி - தன்னின்மேலதில்லாத உயரிய நிலையினன். அரவம் - பாம்பு. அகலம் - மார்பு. தெரியாதவன் - சிந்தையும் மொழியுஞ் சென்று தெரிதற்கு அரியவன். `போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும்` (ப . 177 பா . 2) ஆம். பிரமபுரத்தை இடைவிடாது சேர்ந்து தியானம் புரியும் உரிமையடைவார்க்கு ஏழுலகாட்சியுரிமை உண்டு. உலகாட்சி ஆண்டவனை வழிபட்டால்தான் எய்தும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை யுணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

பொழிப்புரை :

உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர்.

குறிப்புரை :

உடையிலார் - திகம்பரர். சீவரத்தார் - புத்தர். முடையில் - சுடுநாற்றத்தில். ஆர் - பொருந்திய. மூர்த்தியாந் திருவுருவு - ஞானமூர்த்தி மந்திரமூர்த்தி, அத்துவாமூர்த்தி முதலியன. உருவன் - மூர்த்திமான், உருவை உடையவன் தக்காரிலக்கணம். பார்க்க: பா. 8

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.

பொழிப்புரை :

தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்.

குறிப்புரை :

தன் அடைந்தார்க்கு - தன்னை அடைந்த அன்பர்க்கும் அறிவர்க்கும். இன்பங்கள் - பெத்தத்திலுள்ள சிற்றின்பங்களும் முத்திப் பேரின்பமும். தத்துவன் - மெய்ப்பொருள். கன் - கல் (அடைந்த மதில்). முன் - முற்பிறப்பு, இளமை, சந்நிதி, தந்தைமுதலியோர் எதிர் என்றபொருளும் குறித்து நிற்றலறிக. வல்லார் எழுவாய். அடைந்தார் இரண்டும் வினைப்பயனிலை, புண்ணியர் பெயர்ப்பயனிலை உம்மை கொடுத்து ஆக்கம் (ஆவர்) வருவித்து முடித்தலுமாம்.
சிற்பி