திருச்சாய்க்காடு


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

பொழிப்புரை :

வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.

குறிப்புரை :

மண் புகார் - பிறவார் என்றவாறு. வான்புகுவர் - பேரின்பம் அடைவார் என்றவாறு. மனம் இளையார் முதலிய மூன்றும் இம்மை நலம் குறித்தவை. கண்புகார் - இடுக்கண் உறார் (இடுங்குகண்) கற்றவரும் கேட்டவரும் என்பது இடை நிலை விளக்கா நின்று முன்னும் பின்னும் உள்ள பயனிலைகட்கு எழுவாயாயின. விண்ணிற் புகமாட்டார் எனல் வேண்டா, அதனினும் உயர்ந்த சிவலோகம் சேர்ந்து, திருவடியைச் சார்ந்தாரே. வீதிக்கு வெண்மாடம் விசேடம். புகார் - காவிரிப்பூம் பட்டினம். (பா .4)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.

பொழிப்புரை :

இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

காடே போய் மறைந்து உறைதல் புரிந்தான் - காட்டிலே சென்று ஒளிந்து வாழ்தலை விரும்பினவன். புகாரும் சாய்க்காடும் நெருங்கியிருத்தலால். `புகார்ச்சாய்க்காடு` என்றார். பதி - வாழுமிடம். வாய்க்காடு, காட்டுவாய் என மாற்றிக் காட்டின்கண் என்று உரைத்துக் கொள்க. வாய் - இடம், (அகன்ற) காடு என்றுமாம். முதுமரம் - ஆலமரம். பேய்க்கு ஆடல் - பேயின் பாடலுக்குத்தக ஆடுதலை. `பேயடைந்த காடிடமாப் பேணுவது` `பேயாயினபாடப் பெரு நடமாடிய பெருமான்` (தி .1 பதி .48 பா -5. தி .1 பதி .15 பா .3.). புரிந்தானும் முதலிய நான்கும் கூட்டிப்பெருமானே என்பதொடு முடிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

பொழிப்புரை :

நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

குறிப்புரை :

நல்நெஞ்சே! நீ நாளும் நினை. சாம்நாளும் வாழ்நாளும் அறிவார் ஆர்? எம்பெருமானுக்கே நாளும் தலை பூக்களைச் சுமக்கவும் செவிகள் அவன் திருப்புகழ்களையும் அவற்றைக் குறிக்கும். திருப்பெயர்களையும் கேட்கவும், நாக்கு அவற்றை நாளும் நவின்று ஏத்தவும் (செய்யும்) நல்வினையைப் பெறலாம், நல் வினையாற் பெறலாம் என்றுமாம். நவின்று - நாவால் சொல்லி அடிப்பட்டு, `மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே`. (புறம், கடவுள் வாழ்த்து) இறப்பும் இருப்பும் அறியாமையால். இருக்கும்போதே முன்னை நல்வினைப் பயனாக நாடோறும் திருவடி நினைவு, பூச்சுமை, புகழ்க் கேள்வி, நாநவிற்சி ஆகிய சிவபுண்ணியங்களைத் தேடிக்கொள்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.

பொழிப்புரை :

பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்ட விழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின்.

குறிப்புரை :

கட்டு - (கள் + து) கள்ளுடைய அரும்புகளின் உறுதி நிலை, பிணிப்புமாம். அலர்ந்த - அலரச்செய்த, பிறவினை. சிவபூஜை செய்க என்று ஏவியருளியவாறு, பொன் இயன்ற தட்டு அலர்த்தபூ - பொன்னால் ஆகிய தட்டுப்போலும் பூத்த பூ, கோங்கு அமரும் பொழில். மொட்டு - அரும்புகள். முருகு - மணம், உயிர்க்கும் - (வெளி) விடும். பரமேட்டி - தனக்கு மேலில்லாத உயர்ந்த இடத்தினையுடையவன். பாதமே கைதொழுமின் என்று விற்பூட்டாக்கொள்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.

பொழிப்புரை :

கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.

குறிப்புரை :

கோங்கு - கோங்கினரும்பு. அன்ன - ஒத்த, பணை - மூங்கில். பாங்கு - (பால் + கு) இடப்பால், பால் மதியம் - பால் போலும் வெண்டிங்கள். தாள் நிழல் கீழ் ஓங்கினார் - `ஓங்குணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத்தூங்குவர்` ( திருவருட்பயன் . 91) திருவடிக்கீழ் ஓங்கினவரே ஓங்கினவர், மற்று எங்கு ஓங்கினும் அஃது ஓங்குதலாகாது; தாழ்தலேயாகும். என உலகம் உரைக்கும் என்று மாற்றுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.

பொழிப்புரை :

சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.

குறிப்புரை :

சாந்து - சந்தனம். சாந்தாக நீறணிந்தான் - `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்தநீறு` (தி . 1 பதி .52 பா 7.) தீந்து - தீய்ந்து, எரிந்து. ஆகம் - உடம்பு. ஆகத்தைத் தீய்ந்து எரிகொளுவச் செற்று உகந்தான் என்க. கொள்ள - தன்வினை. கொளுவ:- பிறவினை. கொளுத்த; பொருத்த. ஓய்ந்து ஆர - நுணுகிப்பொருந்த. ஓய்தலுற்றுத்தங்க எனலுமாம். மலை மகள் (உமாதேவியார்). தோய்ந்து - தழுவி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.

பொழிப்புரை :

மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.

குறிப்புரை :

மங்குல் - மேகம். புலம்பும் - ஒலிக்கும். கொங்கு - மணம். தேன் உலாமலர். கொங்கிற்கு உலா வண்டு எனலுமாம். தொங்கலான் - மாலையினன். சுவர்க்கங்கள் - தேவலோகங்கள். வானோர்க்கும் உயர்ந்த உலகத்தை அடையத்தக்க சிவனடியார்க்கு வானோருலகம் பொருளாகா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.

பொழிப்புரை :

தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக்கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

தொடல் - (தொடு + அல்) தொடுத்தல், தொடுதல் என்னும் இருபொருளும் அமையும்; தீக்கணையாதலின். படஅரவத்து எழில் ஆரம் - படத்தையுடைய அழகிய மாலை. தடவரை ... ஊன்றினான், இராவணனது பெரிய மலைபோலும் தோள்களை விசாலமான கயிலை மலையால் அழுத்திய பரமசிவன். இடர் - பிறவித்துன்பம் முதலிய எல்லாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.

பொழிப்புரை :

இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.

குறிப்புரை :

வையம் - பூமி. மூவடிமண். நீர் - தத்தஞ் செய்நீர். ஏற்றான் - மாவலிபால் இரந்த திருமால். ஐயன்மார் இருவர் - அயனும் அரியுமாகிய துவி கர்த்தர்கள். அளப்பு - அளவிடுதல். தையலார் - பெண்டிர். ஓவா - இடைவிடாத. பேணாதார் - விரும்பிவழிபடாதவர். தெளிவு - ஞானத்தேற்றம்.
`சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம்
கச்சிக்கச் சாலைக் கனி `.
எனப் பின்வந்த ஞானப்பாடலை அறிக. தேறோம் - அதை ஒரு தெளிவாகக் கொள்ளோம், மதியோம் என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.

பொழிப்புரை :

தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக்கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்சாய்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

குறிப்புரை :

முதலீரடியும் புறப்புறச்சமயத்தார் நிலையும் செயலும் உணர்த்துகின்றன. குறங்கு ஆட்டும் - துடையில் அசைக்கும். உலோவி - சிக்கனம்; கொண்டாடி. மெய்யொழுக்கத்தால் உண்டெனத் தோற்றுதல் இன்றித்தம் பொய்யொழுக்கத்தை நூலாலும் பேச்சாலும் மறைத்து, தம்மிடத்தில் அறம் உள்ளது போலக் காட்டுதலால் `அறம் காட்டும்` என்றார். அலர் - பழி. காட்டல் - காட்டுவதை. கேளாதே - பொருட்படுத்தாமல் `தம்மிற்புணராமை கேளாம்புறன்`(சிவஞான போத வெண்பா . 1. உரை) தெளிவுடையீர் கேளாதே சாய்க்காடே சென்று அடைமின் என்க./n `கோலோவிப்போய்` என்ற தொடருக்குப் பழையபதிப்பாசிரியர் பாடபேதம்: `ஓலோவிப்போய்`. சுவாமிநாத பண்டிதர் தரும் பாடபேதம்: `உலாவிப்போய்`. புதுச்சேரிப் பதிப்புத் தரும் பாடபேதம்: `உலோவிப்போய்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.

பொழிப்புரை :

பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள்தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும்.

குறிப்புரை :

நொம் - நோகும். பைந்து - பந்து. `தண்மலர் நறும் பைந்து ஊழ் அறிந்து உருட்டா` (பெருங் . மகத 8-64) புடைத்து - (பந்து) அடித்து. ஒல்கு - தளரும். நூபுரம் - (பாதக்) கிண்கிணி, சிலம்பு. அம்பந்து - அழகிய பந்து. கழல் - பெண்கள் விளையாடும் கழற்காய். அரவம் - ஓசை. எம்பந்தம் - எம்முடைய பற்று (க் கோடு). ஏத்துவார்- பாராயணம் புரிபவர்.
சிற்பி