திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

அக்கிருந்த வாரமும் ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேரஅணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமையான கோயில், பொய்யில்லாத மெய்ந்நெறியாகிய சைவசமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.

குறிப்புரை :

அக்கு - உருத்திராக்கம். எலும்பும் ஆம். ஆரம் - மாலை, என்புமாலை, தலைமாலை. கொன்றைமாலை, உருத்திராக்கமாலை முதலியவற்றுள் முதலும் முடிவும் இங்குப் பொருந்தும். அரவு - பாம்பு, `முற்றல் ஆமை இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு` (ப .1. பா .2) தோலுடையான் - யானைத்தோலும் புலித்தோலுமாகிய உடையினன். உடையவனுமாம். சைவநெறி பசுபாசக் கலப்பாகிய பொய்யில்லாதது மட்டுமன்று, சிவத்துவமாகிய மெய்யேயாய் நிற்பது. கேவலம் சகலம் - பொய். சுத்தம் - மெய், அந்நெறிக்கே தக்கிருந்தார் - ஆக்கூர்ச் சைவர்கள். (பா .3. வேளாளராகிய தாளாளர் முதலியோர்) இப்பதிகத்துள் முதற்பத்திலும் ஆக்கூர்ச் சைவர் சிறப்பு உணர்த்துதல் அறிக. இது தொல்கோயில் என ஆசிரியர் காலத்தே விளங்கியது. அவ்வாறே இன்றும் எண்ணக்கிடக்கின்றது. `தான்றோன்றி மாடமே வெண்ணீற்றான் புக்கு இருந்த தொல்கோயில்` என்று கூட்டுக. `பூங்கோயில்` (4) என்றும் சொல்லப்படும். இதைத் தரிசித்தவரே இதன் பெருமை, தொன்மை முதலியவற்றை நன்கு உணர்வர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீரார வார்சடையான் நீறுடையா னேறுடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் காக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்டவனும், கார்காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.

குறிப்புரை :

நீர் - கங்கை. ஆர - பொருந்த, நிறைய. வார் - நீண்ட. கார் ஆர் பூங்கொன்றை - `கண்ணி கார்நறுங் கொன்றை`. ஆரல் - ஆரல் மீன்களை. தாரா - நாரையினம். வாய் நிறைய ஆரலைக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாராமல்கும் ஆக்கூர் என்று இயைக்க. கோடகம் - நீர்நிலை, நீர்க்கரை, தான்தோன்றி - சுயம்பு. ஊர்க்கும் திருக்கோயிற்கும் வெவ்வேறு பெயர் வழங்கிய பழைய மரபை ஈண்டும் காணலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.

குறிப்புரை :

வாள் ஆர் - வாள்போன்ற ஒளிபொருந்திய. துவர் - பவளம். துவர்வாய் - உவமைத்தொகை. மடந்தை - உமாதேவியார். தோள் ஆகம்பாகமா, (பார்க்க: ப .177 பா .6.). புல்கினான் - புணர்ந்தான். வள்ளன்மை - வள்ளலாந்தன்மை. கொடைமை. தாள் - முயற்சி. தாளாளர் - ஆக்கம் அதர் வினாய்ச் சாரத்தக்க ஊக்கமுடையர். வேளாளர் - அவ்வாக்கத்தைப் பிறர்க்கு உபகரிக்கும் வண்மையாளர். வேள் - மண் என்று கொண்டு உழவர் எனலும் உண்டு. வேளாண்மை - உபகாரம். `வேளாண்சிறுபதம்` (புறம் . 74. உரை,) கொன்றையினான் காதலித்த கோயில் என்றதனால், வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளுக்குக் காதல் உண்டென்ற குற்றம் தோன்றும் எனலாம். ஆயினும் அது பொருந்தாது. அன்பர்க்கு அன்பன், அல்லாதார்க்கு அல்லன் என் புழிப் பக்குவாபக்குவங்களைக் காரணமாக் கொள்ளல் போற்கொள்க. ஆண்டவனுக்கு வேறுபாடில்லை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.

குறிப்புரை :

கொங்கு - தேன், மணம், தாது. கூற்று அடர - இயமனை வருத்த. பொங்கினான் - கோபம் மிகுந்தான். ஆறு அங்கம் - வேதாங்கம் ஆறும். ஐவேள்வி தங்கினார் - பஞ்ச மகாயக்ஞம் புரிவோர். வேள்வி - யாகம், பூஜை. தேவயாகம். பூதயாகம் முதலியன.(பா -7. பார்க்க.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வீக்கினா னாடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்கள் ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

வீக்கினான் - (அரவக்கச்சு) கட்டினான், வீந்து - மாண்டு. அழிந்தார் - அழிந்தவரது. தலை என்பு - தலையும் எலும்பும். கலன்கள் - ஆபரணங்கள். ஆதரித்து - விரும்பி. பாகம் - இடப்பால். பெண் - உமாதேவியார். ஆம்பல் அம்பூம் பொய்கை - ஆம்பல் மலரும் அழகிய பூங்குளம். பூ - பொலிவு. ஆம்பற்பூவுமாம். பொய்கையைப் புடையில் (எதிர்ப்பக்கத்தில்) தாக்கினார் (-வெட்டினார்) வாழும் ஆக்கூர் என்க. ஆதரித்து ஆக்கினான் என முன்னும் பின்னும் கூட்டுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

ஒளி - அறிவினொளி. கண்ணொளி - நெருப்புக் கண்ணொளி. தண் ஒளி - குளிர்ச்சி ஆக்கும் ஒளி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.

குறிப்புரை :

வீங்கினார் - பெருமையுடைய சிவபிரான், திரிபுரத் தசுரரையுங் குறிக்கும். செலவில் மிக்கார் - மீச்செலவினார். (பகைவர்) வில்வரை - மேருவில், வில்லாகியவரை. மறை + அங்கம் + பல கலைகள். தாங்கினார் - கற்றுணர்ந்து கொண்டவர். அந்தணர். (பா .4. பார்க்க).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணைகாட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

கல்நெடிய குன்று - திருக்கயிலைமலை, பொன்..... அடியார் - `பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின் அடியார்` (தி. 1 பதி . 52 பா .3)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

தொன்மையான் - `தொல்லோன்` தோற்றம் கேடு - பிறப்பும் இறப்பும். இன்மை - வறுமை. ஈந்துவக்கும் தன்மையார் - `ஈத்துவக்கும் இன்பம்` அறிந்தவராய், தம் உடைமை வைத்திழவாத தண்ணளியர், (சிறப்புலி நாயனார் புராணம் .1.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடையினனாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

புன்மை - அற்பக் கொள்கைகள் `புன்பேச்சு`(ப .182 பா .10)ம் ஆம். நவிற்ற - பிதற்ற. சமண்தேரர் - சமணரும் தேரரும். சேல் - மீன். பைங்கயம் - பசியநீர்நிலை. தாம் - கழுநீர் குவளைகளைக் குறித்த பன்மைப்பெயர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாடவீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

ஆடலமர்ந்தான் - திருக்கூத்தை விரும்பியாடியவனை. அமர்ந்தான் - விரும்பியவன். தங்கியவன். நாடற்கு - ஆராய்தற்கு.
சிற்பி