திருப்புள்ளிருக்குவேளூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

கள் - தேன், ஆர்ந்த - நிறைந்த. மதமத்தம் - கடு நாற்றத்தையுடைய ஊமத்தம், முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா - தாழ்ந்த பறவைகள் எனக்கருதித் தள்ளிவிடத்தகாத உயிர்களாகிய சம்பாதி சடாயு என்பர்தாம்; இருவர் புள் ஆனார். சம்பாதியும் சடாயுவும் பறவைப் பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன் - வைத்தியநாதர். இதில் இருவரையும் உணர்த்தினார். `மேல்` 2, 4, 6, 8, 9, 10 சடாயுவையும் 3, 5, 7 சம்பாதியையும் ஒருமையாகக் குறித்தனர் எனலாம். புள்ளிருக்கு வேளூர் என்றதன் பெயர்க்காரணத்துள் ஒருபகுதி கூறப்பட்டது. சேக்கிழார்பெருமான் `புள்ளிருக்கும் திருவேளூர்` எனப்பாடுதலால்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

தையலாள் - தலத்தின் அம்பிகை திருநாமம். சடை மேலாள் - கங்காதேவி, மேல் ஓடி - வானிற்பறந்து. ஈடு - (இராவணனது) வலியை. இராவணன் மெய்சொல்லாதவன்; சடாயு பொய் சொல்லாதவன் என்று குறித்த திறம் உணர்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

வாசம் - தலவாசம். நலம் - தீர்த்தஸ்நானம், மூர்த்தி தரிசனம் முதலியன. இமையோர் - தேவர், சூரியன், செவ்வாய். முதலோர். மலர் தூவ - அர்ச்சித்துவழிபட. யோசனை - நான்கு கூப்பீடு. கொணர்ந்து - கொண்டுவந்து. ஒழியாமே - தவறாமல். பூசனை - சிவார்ச்சனை. இருந்தான் - சம்பாதி. இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பூங்காவைத்து நாள்தோறும் அங்கிருந்து மலர் கொண்டுவந்து வழிப்பட்ட வரலாற்றைக் குறித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்
ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

காயம் - திருமேனி, ஏகாயம் - (ஏகாசம்) உத்தரீயம். ஆகாயத்தில் ஓடுந்தேர்; புட்பகவிமானம். அமர் - போர். பொருது - தாக்கி. அழித்தான் - சடாயு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

கீதம் - பாட்டு. மணம் ஒன்றி உரை ஆர்கீதம் பாட நல்ல உலப்புஇல் அருள் செய்தார். (தி .1. ப .71. பா .8) அடியார்கட்குப் பாதமே குடி. குடியாகத் தொழ நின்ற சோதி என்க. பரஞ்சாதி - மெய்யொளி. மணலைச் சிவமாகப் போதத்தால் பாவித்து வேத மந்திரத்தால் வழிபட்டவன் சம்பாதி. போதம் - ஞானம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

திறம் - `சைவத்திறம்`. அறம் - அன்று `ஆலின்கீழ் இருந்து உரைத்த அறம்`. சிவதன்மம் - சரியையும், கிரியையும் `சிவ தன்மம்` என்பது சைவ சம்பிரதாயம் ஆயினும், இங்கு நான்கிற்கும் பொதுவாய் நின்றது. (இது தலவரலாற்றுக் குறிப்பு) மறம் - வீரம். தன் வலி - தனது பலத்தை. வந்தானை - வந்த (இரா) வ (ண) னை. புறம் கண்ட - முதுகுபார்த்த, வென்ற என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

அத்தி - யானை. மூடி - போர்த்து. பித்தரைப் போல் என்றதால், இறைவனைப் பித்தனெனல் ஏலாது. பத்தி - பக்தி. திருவடிக்கு அன்பு. புத்தி - ஞானம். ஒன்ற - சிவத்தொடு பொருந்த, `ஒன்றி இருந்து நினைமின்கள்`. உகந்தான் - விரும்பினான், உயர்ந்தவன். (சம்பாதி).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

ஒன்ற - பொருந்த. `பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பன்` (தி .4 ப .12 பா .5) குடியாகக் கொடுக்கும் மணிகண்டன் என்க. மண் இன்றி என்றது, பிறவாமைக்கும், விண்கொடுக்கும் என்றது, வீடு பேற்றிற்கும் எனக்கொள்க. எண் - கணக்கு. வாணாள் - வாழ்நாள் என்பதன் மருஉ. அழித்தான்:- சடாயு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

வேதித்தார் - பேதித்தவர், பகைவர். சாதித்த - கொன்ற. வில்லாளி - (மேரு) வில்லை ஆள்பவன். கண் ஆளன் - ஞானக்கண்ணாயிருந்து எல்லாவுயிர்களையும் ஆள்பவன், அடையாதார்க்குச் செய்யும் மறக்கருணையின் வேறாய், அடைந்தார்க்கு நல்கும் அறக்கருணையைக் காட்டுங்கண்ணை ஆள்பவன் எனலும் பொருந்தும். ஆதித்தன் - சூரியன். இதிற் குறித்த வரலாறு:- சூரியனுக்குச் சம்பாதி சடாயு இருவரும் மக்கள் என்றும், ஞாயிற்று மண்டலம் வரை பறந்து சென்று சிறகுகள் கரிந்து தலத்தில் வீழ்ந்து வழிபட்டுச் சிறகும் வரமும் பெற்றனரென்றும் புராணம் உள்ளது. இச்செய்தி இராமாயணத்தில் முறையே ஆரண்ய காண்டத்திலும், கிஷ்கிந்தா காண்டத்திலும் கூறப்பெற்றுள்ளன. அகல் - அகலிய, பரந்த. ஞாலத்தவர் - உலகத்தவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

கடுத்து - கோபித்து. சடைமேல் கங்கையைத் தடுத்தவர். ஒன்று - சிறிதும். ஆடாமே - முழுகாமல். விடைத்து - சீறி, வேறுபடுத்து. மலங்க - அலைய. இராமற்கு - இராமபிரானுக்கு, புடைத்து - அடித்து, அலைத்து. அவனை - அவ்விராவணனை. பொருது - அழித்து. அழித்தான்: சடாயு. அழிக்கப்பட்டது வலி (கம்பர். சடாயுவுயிர்நீத்த 118). அவனைப் புடைத்து அழித்தான் என்று கூட்டுக. `எறிந்தான் அதுநோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் அறிந்தான் முனிந்து ஆண்டதோர் ஆடகத்தண்டு வாங்கிப் பொறிந்தாங் கெரியின் சிகை பொங்கியெழப் புடைத்தான் மறிந்தான் எருவைக்கிறை மால்வரை போல மண்மேல்`. (பா .121). என்றதை நோக்கிப், புடைத்தவன் என்று கொண்டே இராவணன் என்று கூறலும் நன்றாகும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

பொழிப்புரை :

குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.

குறிப்புரை :

செடி - குணமில்லாமை. ஆய - ஆகிய. உடல் தீர்ப்பான் - பிறப்பில்லாமலருள்பவன். `தீவினைக்கு ஓர்மருந்து ஆவான்` `வரும் பிறவி நோய் தீர்ப்பான்காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்` (தி .6 ப .64 பா .4)`உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே` (தி .5 ப .79 ப . 8-9)`மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளவல்லான்`( தி .6 ப .54 பா .8). இத்தலத்தில் நோய் நீங்கும் பொருட்டு மக்கள் திரள் திரளாக வந்து வழிபடுதலை இன்றும் காணலாம். பொடியாடிக்கு - திருநீற்றில் மூழ்கிய சிவபிரானுக்கு. அடிமை - அடித்தொண்டு, கடி - மணம், காவல். மடியாது - சோம்பியிராமல், வாளாபிறந்திறவாது எனலுமாம். இத்தலத்தை வழிபட்டவர்க்கு மேற்கூறியவாறு, தீராத பிறவி நோயையும் தீர்த்தருள் வான் சர்வலோகங்கட்கும் ஏகவைத்தியனான நாதன் என்னும் உண்மையை விளக்க `இல்லையாம் மறு பிறப்பே` என்றருளினார். இத்திருப்பதிகத்தை மட்டும் நாடோறும் பாராயணஞ் செய்வோர்க்குப் பிறவிஒழியும் என்பது உறுதி.
சிற்பி