திருவாமாத்தூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

பொழிப்புரை :

தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

குறிப்புரை :

துன்னம் - தைத்தல். பெய் - செறிந்த, இட்ட பெய் கோவணம்; வினைத்தொகை. பின் - பின்னிய. அம் - அழகிய. பொக்கம் - பொலிவு. பொலிவும் ஒரு பொலிவோ? பொலிவு அன்று என்க. பா. 5, 9, 10, பார்க்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

கைம்மாவின் றோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.

பொழிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடர் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.

குறிப்புரை :

கைம்மா - துதிக்கையையுடைய யானை. மும்மா மதில் - மூன்று பெரியபுரம். பேர் - திருநாமம். அம்மான், பெம்மான் என்பவை, அருமகன் பெருமகன் என்பவற்றின் மரூஉ. கோமகன் என்பது கோமான் என்று மருவியதுபோல. (பா. 81) ஏத்தாதார் - (உயர்த்துப்) புகழாதார். பேயரிற் பேயர் - கடவுளைப் புகழ்ந்து போற்றி வழிபடாதவர் மக்கள் வடிவினராயினும் பேயரே என்பது பெரியோர் முடிவு. `நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்` என்பது நம்பியாரூரர் திருவாக்கு. `வையத் தலகை` என்றார் நாத்திகரை வள்ளுவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன்
சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

பொழிப்புரை :

பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை.

குறிப்புரை :

அரை - இடுப்பில். பண்டரங்கன் - பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். விண்டது - பிளந்தது. தேம்பல் - மெலிதல், வாடுதல். `மதிப்பிளவு` `தேய்பிறை` என்னும் வழக்குணர்க. சென்னியான் - தலையன். சாம்பல் - திருநீறு. அகலத்தார் - மார்பினர் (அடியார்) திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிணக்கத்திலுள்ள பேரன்பும் உறுதியும் விளங்கும். `நக்கனாரவர் சார்வலானல்கு சார் விலோம் நாங்களே` `சைவனாரவர் சார்வலால் யாதுஞ் சார்விலோம் நாங்களே` (தி .2 ப .77 பா .8) `சாதுக்கண் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே` (தி .3 ப . 54 பா . 5) `கங்கை தரித்தானைச் சாராதார் சார் வென்னே` (தி .7 பா .872)`சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்` (தி .6 ப .98 பா .5.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.

பொழிப்புரை :

வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.

குறிப்புரை :

கோலி - வலிமை. கொலையுமாம். நாகம் - பாம்பு `பையரவல்குல்`. கோல் - திரட்சி. ஆகம் - உடம்பு. மார்புமாம். புல்கி - தழுவி, புல்கியவள் என்றுமாம். ஆண் ஆகம் - ஆணுடம்பு. ஆள் நாகம் - ஆளுகின்ற (மலை போன்ற) கொங்கை எனலுமாம். நாகம் - உவமையாகுபெயர். காணாத கண்களே - குருட்டுக் கண்களே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பாட னெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூட னெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆட னெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

பொழிப்புரை :

பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.

குறிப்புரை :

பாடல் நெறி - பாடுதலாகிய வழியில். சூடுதல் - அணிதல். வேட நெறி - உணர்ந்தறிந்தோர்க்கு உய்வேடமாகும்படி பயன் செய்யும் மெய்வேடமார்க்கம். (திருமந்திரம் - 1660) வேடமும் - மெய் வேடம் போலவே பூண்ட பொய் வேடமும், வேடமே, ஒரு வேடமாக மதிக்கப்படுமோ? படாது. `வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்? (திருமந்திரம் 240) சிவவேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது கொண்டொழுகுதலே வேட நெறி. `மாலறநேய மலிந்தவர் வேடமும் ... ... அரன்` என்பது சிவஞானபோதம்.(சூ . 12).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.

பொழிப்புரை :

பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலைவணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.

குறிப்புரை :

சாமவரை என்பது மதில்; திரிபுரம். யாவரும் - சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார் மூவாதபல் முனிவர் எல்லோரும். (தி .1 ப . 12 பா .6.) அகரச்சுட்டு - உலகறிசுட்டு. பண்டறி சுட்டுமாம். தேவர் தலைவணங்கும் தேவர் - இந்திரன், பிரமன், மால் முதலியோர். தேவர்க்கும் தேவன் - தேவதேவேசனாகிய சிவபிரான். `தேவர்கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன்` (திருவாசகம்) அம்மான் - தேவனே என்று முடிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.

பொழிப்புரை :

யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக்கருதப்படுவர்.

குறிப்புரை :

மாறாத கூற்றைமாற்றி - ஒழியாத இயமனை ஒழித்து `மலைமகள் - இமாசல குமாரி (அம்பிகை) வேறாக நில்லாத வேடம் - அர்த்தநாரீசுவரவடிவம். ஆறாத - தணியாத. கூறாத - புகழ்ந்து வாழ்த்தாத கூறாத நாக்களே: ஊமைகளே என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால்
ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.

பொழிப்புரை :

தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்தநாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.

குறிப்புரை :

தாள் - திருவடி. தலைமகன் - கோமகன்.(பா .2.) நாள் ஆதிரை - திருவாதிரை நாள். நம்பன் - விருப்பிற்குரியவன் (சிவன்) ஆள் - அடிமை. நாமத்தால் - திருவைந்தெழுத்தால்; திருப்பெயர்களாலுமாம். நாமத்தால் ஏத்தும் ஊர் என்க. கேளாச்செவிகளே - செவிட்டுக்காதுகளே என்றபடி. கேளாமை - சிவபுராணம், சிவகீர்த்தி, சிவநாமம் முதலியவற்றைக் கேட்டல் இல்லாமை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

பொழிப்புரை :

கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாமோ?

குறிப்புரை :

புள் - கருடப் பறவை, கமலம் - தாமரை. கைக்கொண்டார் - ஊர்தியாக் கொண்டமால், ஆசனமாகக் கொண்ட அயன், உள்ளும் அவன் - தியானிக்கப்படும் அப்பரமசிவனது. ஒப்பு அளக்கும் தன்மையதே - ஒப்பாக அளவிடப்பெறும் தன்மையை உடையதோ! இல்லை என்றபடி. அள்ளல் - சேறு. வள்ளல் - எல்லாம் அருளும் பரம் பொருளினும் வேறு வள்ளல் உண்டோ? கழல் - (தானியாகு பெயர்) திருவடி. பரவா - வாழ்த்தாத. வாழ்க்கையோ - ஒரு வாழ்வா (மதிக்கப் படு)மோ? வாழ்வன்று என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே.

பொழிப்புரை :

மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.

குறிப்புரை :

கோ - தலைமை. சார -(தன்னையே) பொருந்த. கொச்சை - இகழ்வு. உரிவை தோல் - யானைத்தோல் போர்த்தும். மாயாதிருத்தல்பற்றிக் `கோசார` என்றார் (சிந்தாமணி . 2787 உரை பார்க்க) `யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற்பட்டால் கொல்லும் என்றுணர்க` என்றார் நச்சினார்க்கினியர், பின்சாரப் போர்த்துகந்தான், கோசாரப் போர்த்துகந்தான் என்றியைத்துப் பொருள் உணர்க. `கோசாரங்` என்று பாடபேதம் உண்டு என்று காட்டியுள்ளார் மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை. கோ - மலை. யானைக்கு உவமையாகு பெயராக்கொண்டு. யானைசார எனவும் பொருந்தும். தன் மாதேவிக்கு அச்சம் ஈந்தான் என்றது யானையை உரித்த வரலாறுபற்றியது.(பார்க்க: தி .1 ப .75 பா .7.) `மலைக்கு மகள் அஞ்சமதகரியை உரித்தீர்` (தி .7 ப .9 பா .1.).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஆட லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக்
கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

ஆடல் அரவம் - படம் விரித்து ஆடுதலையுடைய பாம்பு. அசைத்த - கச்சாகக்கட்டிய. கோடல் - வெண்காந்தள். இரும் புறவு - பெரியகாடு. முல்லை நிலம். புறவு, கொச்சை வயம் காழியின் வேறு பெயர்கள். பாவம் இல்லை ஆகும் என்க.
சிற்பி