திருக்கைச்சினம்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய்பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.

குறிப்புரை :

தையல் - உமாதேவியார். கூறு - இடப்பாகம். மை - மேகம். உலாம் - ஒத்த. நிவந்து - மேலோங்கி. ஒளி - தீ. கைச்சினம் - இந்திரனது கைச்சின்னம் (குறி). சிவபிரான் திருமேனியில்பட்டது பற்றிய காரணப்பெயர். 1.2.3.6. ஆம் பாடல்களில் உணர்த்திய மறைப்பாடல் இத்தலத்தின் விசேடமாதலறியலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு மாடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

பொழிப்புரை :

விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்ததோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

விடம் - நஞ்சு. மல்கு - நிறைந்த. கண்டத்தான் - கழுத்தினன். பற்றாதார் - பகைவர். (தாரகாட்சன் முதலிய மூவர்). நடம் - தாண்டவத்தின் வகை. ஆடல் - ஆடுதல். `நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்` (திருவாசகம்). கடம் - மதநீர்; காடுமாம். உரியான் - தோலுடையான்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

சூடல் - சூடுதல். துன்று - நெருங்கிய. கரந்தை - பூ. காடலான் - காட்டினன். `அரவக்காடலான் - சடைக்காடு தாமரைக் காடு, வெள்ளக்காடு` போல மிகுதியை உணர்த்தியது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரா னென்றிறைஞ்சி யும்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர மூன்றுடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

பொழிப்புரை :

முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவிஉறையும் கோவில் கைச்சினம்.

குறிப்புரை :

பண்டு - முன்பு. அமரர் - தேவர். படுகடல் - ஆழ்கடல். விண்டவர்கள் தொல்நகரம் - பகைவர்களின் பழைய திரிபுரம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடனஞ்சுண்டநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்ததிருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப்பெரிய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

தேய்ந்து மலி - குறைந்து வளரும். திங்களுக்கு இயல்பு அடைமொழி. இது சிவபெருமான் திருமுடிமேற் பிறைக்கு அன்று. இலங்கு - விளங்கும். மாது - உமாதேவியார். சாய்ந்து - மெலிந்து, ஓடியெனலுமாம். அநங்கை - அநங்கனை. உருவிலியாகிய மன்மதனை, `பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்\\\\\\\" (ப.349 பா.9) `மாய்ந்தன தீவினை.... அநங்கைக் காய்ந்தபிரான் கண்டியூர் எம்பிரான்`(தி.4 பா.93 ப.9). அநங்கனை என்பது அநங்கை எனக்குறைந்தது போலும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையா னாடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

அங்கையோர் வெண்டலையான் - பிரமகபாலத்தை ஏந்திய கையன். பூண்ட அரவம் - அணிந்த பாம்பு. முறையே திருமேனியிலும் திருமுடியிலும் இருத்தல்பற்றி ஆதலின் கூறியது கூறலன்று. (ப. 155 பா.7 பார்க்க).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையான் முப்புரங்க ளெய்துகந்த வெம்பெருமான்
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற்பொறியைத்தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

வரி அரவு - வாசுகியென்னும் பாம்பு. நாண் - வில்லின் நாண் (கயிறு). மால்வரை - பெரிய மேருமலை. எரி கணை - அக்கினியை நுனியிலுடைய பாணம். சுடலை - சுடுதலைக்கொண்ட. ஈமப் புறங்காடு - புறத்தேயுள்ள ஈமக்காடு. கரி உரி - யானைத்தோல். போது - மலரும் பருவத்தது. நீதியினால் ஏத்த - முறைப்படித் துதிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

போதுலவு கொன்றை புனைந்தான் றிருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே .

பொழிப்புரை :

உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதிக்க அவனை முன் போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்புடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

திருமுடிமேல் கொன்றை மாலையை அணிந்தான்.
முடி போதுகள் பொருந்திய கொன்றை, உலவு கொன்றை - வினைத் தொகை.
உமையாள் அஞ்ச மலையை எடுத்தான் அரக்கன்.
நிகழ் வித்து - (பண்டுபோல்) விளங்கச்செய்து.
புனைந்தானும் காதலி னானும் ஆகிய சிவபெருமான் கைச்சினம் என்றியைக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ண  மெரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் னெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

இரந்த - மாவலியினிடத்து யாசித்த. எண் - எண்ணம். பண்ணிசையால் ஏத்தப்படுவான், `ஏழிசையாய் இசைப் பயனாய்` விளங்குதல்பற்றியது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப் பயின்ற விவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலகம் ஆள்வாரே.
 

பொழிப்புரை :

குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓதவல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர்.

குறிப்புரை :

பண்ணிசையால் ஏத்திப்பயின்ற இவை என்றதால்; ஆசிரியருடைய இசை உணர்வின் மிகுதியையும் இப்பதிகத்தைப் பலமுறைபாடி மகிழ்ந்ததையும் உணரலாகும். வியனுலகம் - சொர்க்கம், வீடுமாம். வியல் (வியன்) - அகலம்.
சிற்பி