திருநாலூர்மயானம்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

பொழிப்புரை :

பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப்பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.

குறிப்புரை :

பால் - பக்கத்தில். ஊரும் - ஊர்ந்து செல்லும். மத்தம் - ஊமத்தை. நம்பான் - சிவன். மால் - அன்பு சிவபத்தி, (பதி -191: பா -6) `மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி யாண்டான்` (திருவாசகம் ஆனந்த மாலை.3) `மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே` (தி .4 ப .33 பா .4) `மாலொடுந் தொழுவார் வினை வாடுமே` (தி .5 ப .34 பா .9) `என்னிடைமாலும் உண்டு இறை என்றன் மனத்துளே` (தி .5 ப .35 பா .5) மறுபிறப்பு வந்து ஊரா - மறுபிறவிகள் வந்து பரவாவாம். ஊரா - செலுத்தா எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

சூடும் பிறைச்சென்னிச் சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.

பொழிப்புரை :

பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.

குறிப்புரை :

அழகாக ஆடும் என்க. ஓவா - ஒழியாத. சிறப்போர் பால் - சிறப்புடையோரிடத்தில். பாவம் பற்றாவாம் - பாவங்கள் பற்றமாட்டாதொழிவனவாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.

குறிப்புரை :

காம் உறு - காமம் (அன்பு) உற்ற. எல்லா அறன் உரையும் - சகல தர்மோபதேசங்களும். சொல்லாதவர் - துதிக்காதவர். தொல்நெறி - அனாதியான சைவமார்க்கம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.

பொழிப்புரை :

அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர்மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.

குறிப்புரை :

கோலத்து ஆர் - அழகால் நிறைந்த. நீலத்து ஆர் - நீலத்தைப் பொருந்திய. தொல்வினை - சஞ்சிதம். வினைசூழாவாம் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க் கெய்துமா மின்பமே.

பொழிப்புரை :

விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.

குறிப்புரை :

கறை - விஷக்கறை. மணி - நீலமணியை ஒக்கும். மிடறு - திருக்கழுத்து. கட்டங்கன் - மழுவேந்தியவர். பெண்பாகன் - மங்கை பங்கன். `ஏழைபங்காளன்`(திருவெம்பாவை) நறை - தேன். இறையான் - இறைவன். இன்பம் எய்துமாமென்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.

பொழிப்புரை :

கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.

குறிப்புரை :

ஆடு இடம் கனல் ஆக - ஆடுகின்ற இடம் நெருப்பாக. `தீயாடி`, அனலாடி; இறைவன் ஆடலுக்குப் பாடல் பண்ணார் மறை. நண்ணார் - பகைவர். நண்ணாதவர் - அடையாதவர், அணுகாதவர். நன்னெறி - சரியை, கிரியை யோகமென்னும் அழிவில்லாத தவத்தால் வரும் ஞானம். (சிவஞான -சூ -8- உரை).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க் கேலா விடர்தானே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத்தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.

குறிப்புரை :

பாவுதல் - பரவுதல். நாகம் - யானை. நண் - (நள்) நண்ணுதல், நள்ளுதலுமாகும். எண் - தியானம். இடர் ஏலா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென்
அத்த னடிநினைவார்க் கல்ல லடையாவே.

பொழிப்புரை :

பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

வாளோடு நாள் - வாளும், ஆயுளும். நத்து - சங்கு. அத்தன் - பிதா. அத்தன் - அத்தை. ஆத்தன் - ஆத்தான் என்பவை தந்தை தாயரைக் குறித்த பழைய வழக்கு. `ஆத்தானை அடியேன் தனக்கு என்றும்` (தி .7 பா .680)`அத்தை` என்பது தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது. அல்லல் - துன்பங்கள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடு மாறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.

குறிப்புரை :

நேட - தேட. நாலுவேதம் ஆறு அங்கம். பாலோடு நெய் - பாலும் நெய்யும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.

பொழிப்புரை :

துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு `சிவாய` என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.

குறிப்புரை :

துன்பு ஆய - துன்பமாகிய. மாசு - அழுக்கு. ஆர் - நிறைந்த. துவர் ஆய - பழுப்பாகிய. புன் பேச்சு - பொருளின்மையால் புல்லிய பிதற்றுரைகள். புண்ணியனை - சிவபுண்ணிய சொரூபனை, `புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே`( சிவஞானசித்தியார் . சூ -8) நண்பு - செறிவு. யோகம் - நட்பும் ஆம். இதிற்குறித்த திருவைந்தெழுத்து அதிசூக்கும (காரண) பஞ்சாட்சரம். `விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும், மண்ணினார் மறவாது சிவாயவென்று, எண்ணினார்க்கு இடமா எழில்வானகம், பண்ணினாவர் பாலைத்துறையரே`(தி . 5 ப . 51 பா .6) இன்பு - பேரின்பம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.

பொழிப்புரை :

உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.

குறிப்புரை :

ஞாலம் - உலகம். சீலம் - சிவபெருமானுடைய சீலத்தை. ஒழுக்கத்தாலும் புகழாலும் எனலும் பொருந்தும், ஏலும் - இயலும். ஏற்குமெனலுமாம்.
சிற்பி