திருமயிலாப்பூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மட்டு - கள். கானல் - கடற்கரைச்சோலை. மட மயிலைக் கட்டு - இளமயில்கள் ஆர்ப்புமிக்க ஊரில் உள்ள திருக்கோயில். மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர். இட்டம் - திருவுள்ளத்தன்பு.(இஷ்டம்) ஊர் மயிலை, மயிலாப்பூர், கோயில் கபாலீச்சரம். ஒட்டிட்ட பண்பு - அத்துவிதக்கலப்பு. `உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி` `ஒட்டியவனுளமாகில்லான்`. உருத்திர பல்கணத்தார் - மாகேசுரர்; அடியவர். மதிசூடும் அண்ணலாரடியார்தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் `நல்விழாப்பொலிவு கண்டார்தல்`. அட்டு - திருவமுது அமைத்து. இட்டல் - இடுதல்.(நட்டல் - நடுதல் போல) இதிற் குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது. இத்திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு மேல் வரும் பாக்களிற் குறிக்கப்பட்டமை உணர்க. போதியோ - போவாயோ? வருவாய் என்றவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மை - கண்ணிற்கிடும்மை, கைப்பயந்த நீறு - கைமேற் பயன்தந்த திருநீறு. வழிபடுவார் கையில் அர்ச்சகர் வடிவாயிருந்து கொடுத்த திருநீற்றினன். திருநீறு வடிவாயுள்ளானெனலும் சிறந்ததே, `கைப்பூசு நீற்றான்`, (பா .5) ஐப்பசித்திருவோண விழாச் சிறப்பும் அரியதவத்தோர்களாகிய அடியார்கள் திருவமுது செய்த காட்சியும் குறிக்கப்பட்டன. ஓணத்திற் கொடியேற்றம். கிருத்திகையில் தீர்த்தவாரி. தலவரலாறு காண்க. இராமர் வழிபாடு, ஓணம் திருமாலின் நாள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

வளை - வளையல். மறுகு - தெரு. வண்மை - தெருவினர் கொடைவளம். துளக்கு - அசைவு. தளர்வு, வருத்தம். இல் - இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து - சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

ஊர் திரை வேலை - ஊருந்திரையுடைய கடல். ஊர்தல் - மேற்படுதல். பரத்தல். வல்லார் -(நெய்தல் நிலமாக்கள்) வேலால் கடல் மீன்களைக் கொல்லவல்லவர்கள். கொற்றம் - கொன்று அடையும் வெற்றி. கார் - மேகம். ஆர்திரைநாள் - திருவாதிரை என்னும் மீன். எதுகை நோக்கின், `ஆர்திரை` என்றதே உண்மைப் பாடம் ஆகும். `ஆர்திரையான், ஆர்திரையான் என்றென்றயருமால் ஊர்திரை வேலியுலகு` என்னும் முத்தொள்ளாயிர முதற்செய்யுளமைதியை உணர்க. இது மார்கழித் திருவாதிரை விழாச்சிறப்புணர்த்திற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

`மைப்பயந்த வொண்கண்` கைப்பயந்தநீற்றான். (பா - 2) நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் - நெய்யால் மறைக்கப்பட்ட ஒள்ளிய சோறு. அடியார், வறியர் முதலோர்க்கு அளிக்கும் தைப்பூசவிழாச் சிறப்பு இதில் குறிக்கப்பட்டது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

தென்னையின் மடல் நீட்சியுடைமைபற்றி, `மடல் ஆர்ந்த தெங்கு` எனப்பட்டது. மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்ந்தவுண்மை குறிக்கப்பட்டது. அடல் - வலிமை. ஆனேறு - விடை. நடம் ஆடல் - கூத்தாடுதல்; உலாவுதலுமாம். பரவி - வாழ்த்தி, மாசிக் கடலாட்டுச் சிறப்புணர்த்தியது. `சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறு`. `பண்ணினேர் மொழி மங்கைமார் பலர் பாடியாடிய வோசை ... பொலியும் ... காழி`. `பாலினேர் மொழி மங்கைமார் நடமாடி இன்னிசைபாட`. எனப்பின் வருதல் அறிக. (ப .185-186)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மலிவிழா வீதி - விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி. `வீதிகள் விழவின் ஆர்ப்பும்`. கலிவிழா - திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள். முன்னவை பல்வகைக்களிவிழாக்கள். பலி - உருத்திரபலி; திசைதோறும் இடுவது. ஒலி - விழாவின் ஆரவாரம். பங்குனி உத்தர விழாச்சிறப்புணர்த்திற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?

குறிப்புரை :

தண்ணா:- வெம்மையைச் செய்யும் என்ற குறிப்பு. சாய்தல்; தோள்கட்கும் உகத்தல்; (உயர்தல்) தாள்கட்கும் கூறிய திறம் கருதத்தக்கது. இது சித்திரையில் நிகழ்ந்தது எனக்கொள்ள இடனுண்டு. அட்டமிநாள்விழா முற்காலத்தது. இக்காலத்தார் சித்திரைப் பௌர்ணமி கொண்டனர். பதினெண்கணங்களுக்கும் அட்டமிநாள் விழாவிற்கும் உள்ள தொடர்பு புலப்பட்டிலது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?

குறிப்புரை :

நல் + தாமரை. முற்றாங்கு - முழுதும் உள்ளபடி. இது பட்டாங்கு, நல்லாங்கு, பொல்லாங்கு என்பன போல்வது. கற்றார்கள் - `கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்` (தி .3 ப .40 பா .3) என்று மேல் ஆசிரியர் அருள்வதுணர்க. `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்` (தி .1. ப .129 பா .11) `கற்றல் கேட்டல் உடையார்` என்றதால் நிட்டை முடிய உடையாரை உபலட்சணத்தாற் கொள்க. பொன்தாம்பு (பொற்றாப்பு) பொன்னூசல். (நன் .411. சங்கர) தாம்பு - கயிறு. ஊஞ்சலுக்குத் தாம்பு கருவி. தாப்பிசை. வைகாசியில் ஊஞ்சலாடுந் திருவிழாக்குறித்தவாறு, இப்பாட்டில் `உற்றாங்கு` எனப்பிரித்தது பொருந்தாது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

உரிஞ்சு ஆயவாழ்க்கை அமண் - உடை ஒழிந்த காரணத்தால் உரிந்தது போன்று ஆகிய திகம்பரவாழ்வுடைய சமணர். உடையைப் போர்க்கும் சாக்கியர் என்றதால், சமணர்க்கு அஃதின்மை குறித்தாரெனல் பொருந்துமாறறிக. கருஞ்சோலை - பெரிய சோலை. இருளால்கரிய எனலுமாம். எடுத்து உரைப்ப - (தூற்றுமாறு) கொண்டாட. பெருஞ்சாந்தி - பவித்திரோற்சவம். கும்பாபிடேகம் என்பாரு முளர். ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது எளிதன்று. அதற்கீடாகப் பவித்திரோற்சவமே நிகழ்த்துவதுண்டு. இவ்விழா ஆனி முதலிய மூன்று திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டுமுழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில் திருவிழா உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச் சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் இருபக்கத்திலும் வரும் எட்டு பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் வேண்டும்.(சோமசம்புபத்ததி)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.

குறிப்புரை :

`தேன்அமர் பூம்பாவைப் பாட்டு` என்பதிலுள்ள பூவிற்குத் `தேன் அமர்` என்று அடை இயல்பாம். வானசம்பந்தத்தவர்- வீடு பெற்ற வித்தகர்.
சிற்பி