திருவெண்காடு


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
 

பொழிப்புரை :

வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இசைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.

குறிப்புரை :

கண்காட்டும் - நெருப்புக்கண்ணைக்காட்டும். இவ்வாறே காட்டும் என்பதற்கு முன்னே இரண்டனுருபு (ஐ) விரித்துக் கொள்க. நுதலான், கையான், உருவான், சடையான், உறைவான் என்பன நுதல் முதலியவற்றை முறையே உடைமையால் வந்தது. உறைவானென்பது வினையாலணையும் பெயருமாம். இசையான், புயலான் என்பவற்று இசைவடிவாயும் புயல் (மேகம்) வடிவாயும் விளங்குகின்றான் என்று கொள்க. `ஏழிசையாய் இசைப்பயனாய்`, `ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே` என்பவை காண்க. விடை - எருது. கொடியான் - கொடியை உடையான். உம்மை ஏற்ற பெயர்கள் எழுவாய். கொடியானென்பது பெயர்ப்பயனிலை. (அற்புதத் திருவந்தாதி.98.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
 

பொழிப்புரை :

மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.

குறிப்புரை :

பேய் - பேய்கள். அடையா - சாரா. பிரிவு எய்தும் - சார்ந்த பேய்களும் இத்தலத்தை வழிபட்டால் நீக்கமுறும். பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் - பிள்ளை வரங்கேட்டலொடு மற்றைய வரங்களையும் மனத்தில் நினைத்தவாறே அடைவர். ஆயின - வினையாலணையும் பெயர். ஒன்றும் - சிறிதும். ஐயுற - ஐயம் அடைய. வேய் - மூங்கில். அன்ன - ஒத்த, இடைக்குறை. முக்குளம் - சோம சூரிய அக்கினி தீர்த்தங்கள். தோய்வினையார் - முழுகும் செயலுடைய அடியார் முதலியோர். தீவினை தோயாவாம் என்க. தோய்தல் - பீடித்தல், மெய்கண்டதேவநாயனார் தோற்றத்துக்கு இத்திருப்பாடல் திருவருட்குறிப்பாயிருந்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி
எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
 

பொழிப்புரை :

மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

`மண்...இயமானன்` - எட்டுருவம் (அஷ்டமூர்த்தி) `எட்டுக்கொண்டார்`.(திருவுந்தியார்) இகபரம் - இம்மை மறுமை, விண்ணவர்கோன் - இந்திரன். அவனும் வெள்ளானையும் வழிபட்டமை தலபுராணத்திற்காண்க (பா.7.9.) இதில் சிவபிரான் `உலகினை இறந்து நின்றது அரன் உரு.......மூடரெல்லாம்` - (சிவஞான சித்தியார்) என்பதில் குறித்த விஸ்வரூபி விஸ்வாந்தர்யாமி என்னும் இரண்டுநிலைகளை உணர்த்தியவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
 

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.

குறிப்புரை :

மிடற்று அண்ணல் - திருநீலகண்டப் பெருமான். தண் புறவில் - குளிர்ந்த முல்லை நிலத்தில். குருகு - குருகு என்னும் புள். தடம் - குளம். கெண்டை - மீன். பூ - பூவின் பால், விண்ட - விள்ளுதல் உற்ற. முத்தம் - முத்துக்கள். நகை - பல், சிரிப்புமாம். கெண்டையின் அறியாமைச்செயலைக் கண்டு கடல் நகைத்தது என்றது தற்குறிப்பேற்றம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.

பொழிப்புரை :

கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.

குறிப்புரை :

வேலை - கடல். கானல் - கடற்கரைச்சோலை. காலன் மாய்ந்ததால், தூதர் சிவனடியாரிடத்தில் அச்சமுற்றனர். இதிற்குறித்தது திருவெண்காட்டுத் தலத்தில் நிகழ்ந்த சுவேதகேது முனிவர் வரலாறு, (தி.2 ப.61 பா.7) இதனை மார்க்கண்டேய முனிவர் வரலாறு என்றும் கூறுகின்றனர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
 

பொழிப்புரை :

தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.

குறிப்புரை :

தண்மை; வெம்மை இரண்டும் முறையே மதியின் நிலவும் பாம்பின் நஞ்சும் குறித்தன. ஒள்மதியம் நுதல் உமை - ஒளி பொருந்திய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியார். கூறு - இடப்பால். பெணை - பெண்ணை, பனை, கிள்ளை நாமம் ஓதவீற்றிருக் கும் காடு என்க. `பாரிசையும் பண்டிதர்கள் பல்நாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே` (தி.1 ப.132 பா.1) `வேதத்தொலியாற் கிளிசொற்பயிலும் வெண்காடே` (ப.197 பா.2).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
 

பொழிப்புரை :

திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.

குறிப்புரை :

மாற்கு - விஷ்ணுவுக்கு, அக்கு - எலும்புமாலை. அயிராவதம் - வெள்ளானை (பா.9). அதனுக்கு - அவ்வெள்ளானைக்கு அருள்மிக்குச்சுரக்கும் என்க. காடும் குளமும் உடையான் என்றும், காடும் முக்குளம் உடையானும் இறையவன்; பிளந்தானும் அசைத்தானும் உடையானும் இறையவனே என்றும் கொள்ளலாம். `வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே` (பா.19,6).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
 

பொழிப்புரை :

பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

மொழியாள் - சொல்லியள் (தேவியார்). பயம் - அச்சம். உன்மத்தன் - பித்துக்கொளி. உரம் - மார்பு. கண் - தோகைக் கண்கள். கருமஞ்ஞை - நீலமயில். மயில் ஆட்டத்திற்கு முடிவு, கடல், இசைவண்டினொலி, `விண்மொய்த்த பொழில்` என்ற தலத்தின் சோலைவளம் இன்றும் உளது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிகஉயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.

குறிப்புரை :

கள் - தேன். கமலத்தான் - தாமரை மேலுள்ள பிரமன். கடல் - பாற்கடலில். கிடந்தான் - அறிதுயில் செய்யும் திருமால். `தேசங்கள் தொழநின்ற திருமால்` (தி. 4 ப.7 பா.6). ஆண்மை - ஆளாந்தன்மை, அடிமைத் திறம். கொளற்கு - கொள்ளவேண்டி. உயர்ந்து - மேல் பறந்தும் ஆழ்ந்தும், கீழ்தோண்டிச் சென்றும். உணர்வு அரியான் - உணர்வதற்கு அரியவன்.`வெள்ளானை....வெண்காடு` (பா.7) வெள்ளானைக்காடு என்பது வெண்காடு என்று சுருங்கிற்று எனக்கருத இடமுண்டு. உள் ஆடி - உள்ளம் கசிந்து, உள்ளம் நடுங்கி. உருகாதவரது ஞானப் பேற்றை. உணரோம் - மதியோம். உருக்கம் சிவஞானத்தை எய்துவிக்கும். உருகாமை தற்போதத்தை ஒழிக்காது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
 

பொழிப்புரை :

போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோகமரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.

குறிப்புரை :

போதியர்கள் - சாக்கியர்கள். போதி - அரசமரம். புத்தன் போதி விருட்சத்தின் கீழினன்; போதி வேந்தன், பிண்டியர்கள்- சமணர்கள். பிண்டி - அசோகமரம் `பூமலி அசோகின் புனை நிழல மர்ந்த நான்முகன்` மிண்டு மொழி - வன்புரை. பேதையர்களாகிய அவரைப் பிரிந்து சென்மின். அறிவுடையீர் இதைக் கேண்மின். `மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்` (திருப்பல்லாண்டு) எனல் போல அவர் `சென்மின்` எனலுமாம். ஓதினவர் ஒருதீதும் இலர் என்று உணருமின் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
 

பொழிப்புரை :

குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.

குறிப்புரை :

விண்பொலி வெண்பிறை - ஆகாயத்தில் விளங்குகின்ற வெள்ளைப் பிறை. பண்பொலி செந்தமிழ்மாலை மண் பொலிய வாழ்ந்தவர் விண் பொலியப் புகுவர் என்க. வாழ்ந்தவர் எழுவாய், புகுவார் - பயனிலை.
சிற்பி