சீகாழி


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணி னேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.

பொழிப்புரை :

பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம் தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர்.

குறிப்புரை :

பண்ணின் - பண்ணிசையின்பத்தை. நேர் - ஒத்த. கண்ணின் நேர் - கண்ணெதிரில். பெண்....... பங்கு - மாதியலும்பாதி, உன்னும் - தியானம் புரியும். `அருளாலும்` என்ற உம்மை இம்மைக்குரிய பொருளாலும் அன்றி என்று இறந்தது தழீஇயிற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கெளிதாம் அதுநல் விதியாமே.

பொழிப்புரை :

நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும்.

குறிப்புரை :

திரை - அலை. வங்கம் - மரக்கலம். கண்டல் - தாழை. புடை - பக்கம். அலம்பிய - ஒலித்த. விண்டல் - நீங்குதல். விதி - பாக்கியம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே.

பொழிப்புரை :

நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக்காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

ஒளி - புகழ், விளக்கமுமாம், பொழிற்காடு - சோலைக் காடு. தேனை மலர் துளிக்கும் காடு. அக்காட்டையுடைய கடற்காழி. சங்கக்குழை - சங்கினாலாகிய குண்டலம். வேடம் - சிவவேடம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறும்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.

பொழிப்புரை :

கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர்கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே `அரனே` என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர்.

குறிப்புரை :

மை - மேகம். வாசம் - மணம். ஆர் - நிறைந்த. மது - தேன். மல்க - நிறைய. எழுவார் - எழுந்து பூசனை செய்யும் சிவபத்தர்கள். கலி - ஓசை. ஆதரித்து - விரும்பி. உய்யும் ஆறு - பிறவித் துன்புறாது தப்பும்வழி. உயர்ந்தாரின் - உயர்ந்த ஞானியரினத்துள். உள்ளார் - இருப்பவராவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோய் அவைமேவுவார் வீடே.

பொழிப்புரை :

நிறைந்து விரைந்து வரும் அலைகளில் எதிர்வந்து வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலியகாலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.

குறிப்புரை :

மலி - மிக்க. கடு - விரையும். நித்திலம் - முத்துக்கள். அலைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிரும். கலி - வறுமையை. கடிந்த - நீக்கிய. கையார் - கொடைக்கையினர். மருவும் - பொருந்திவாழும். மாணி - பிரமசாரி, மார்க்கண்டேய முனிவர். தீவினை நோயவை மெலியும். வீடு மேவுவர். நோய்கட்குக் காரணம் தீவினை. `நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம். நோய்செய்யார் நோயின்மை வேண்டுபவர்` (குறள்).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.

பொழிப்புரை :

இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைப் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தெளிவீர்களாக.

குறிப்புரை :

கற்ற - சிவபிரான் திருவடியை வழிபடக் கற்றறிந்த. இசைபாடுவாரை வினையைத் தீர்த்தமாந்தர் (ஞானியர்) என்று சிந்தையுள்ளே தெளிந்துகொள்மின்கள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

தான லம்புரை வேதிய ரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கானலின் விரைசேர விம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.

பொழிப்புரை :

நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப்பதியுள் ஊனுடம்புடையோர் உயிர்வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்த்தினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.

குறிப்புரை :

தான் தொழ என்று கூட்டித் தானே தொழ என்க, பாட்டின் முதலில் அசையாக்குதல் பொருந்தாது. நலம் - நன்மை. புரை - பெருமை. வேதியர்க்கு அடை. வேதியரோடு மாதவர் - மறையுணர்ந்தவரும் பெருந்தவத்தோரும். விரை - மணம். ஊனுள் - உடம்பினுள். ஆர் - பொருந்திய. ஆருயிர் எனலுமாம். உயிர்வாழ்க்கையாய் - உடம்பில் உயிர்வாழ்வது போல, உயிருள் வாழ்கின்ற பெற்றியாகி, `இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது` (கொடிக்கவி,) ஆன்நலம் - ஆக்கள் (பசுக்கள்) இடத்திலிருந்து பெறும் பால், தயிர், நெய் ஆகிய நலங்களை. கொடு - கொண்டு உய்ப்பார் - அபிடேகம்புரியப் பயன்படுத்தும் அன்பர், அருள் வேந்தர் - ஞான நாயகர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென் றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்தராய்ப் பரவும் பயனீங்கு நல்காயே.

பொழிப்புரை :

வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.

குறிப்புரை :

மைத்த - கருமையுடைய. ஆலைகள் - கரும்பாலைகள் கரும்புகளுமாம். சாலி - நெல். ஆர - நிறைய. வைகலும் - நாள் தோறும். கத்து - ஒலிக்கின்ற. அரக்கன் - இராவணன். அடர்த்து - நெருக்கி. உன - உன்னுடைய. கழல் பரவும் பயன் - பத்தராய்ப் பரவும் பயன். ஈங்கு - இம்மையிலேயே. நல்காய் - அருள்வாய்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.

பொழிப்புரை :

பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.

குறிப்புரை :

பரு - பருத்த. மராம் - வெண்கடம்பு. கதலி - வாழை. திரு - இலக்குமி. ஆய - ஆகிய. செய்ய மாமலர்ச் செல்வன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் மறையவன் (பிரமன்), காண்பு அரியான் - காண்பதற்கு அருமையுடையவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவா ணனென்பார்க் கடையா வல்லல்தானே.

பொழிப்புரை :

சோற்றுத்திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். `அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே` என்பாரை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

பிண்டம் - சோற்றுத்திரளை, (நின்றுண்போர்)`நின்று கவளம்பலகொள்கையரொடு மெய்யிலிடு போர்வை யவரும்` (தி .3 ப .69 பா .10) சேரகிலார் - சேரும் அறிவாற்றல் இல்லாதவர். தொண்டை - கோவை (ப்பழம்போற் சிவந்த). வேடன் - வேடுவனான சிவபிரான். அண்டவாணன் - அண்டங்களில் வாழ்பவன்; (வாழ்நன் - வாணன்) `மன்றவாணன்` `அம்பலவாணன்`. அல்லல்தான் அடையா என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே.

பொழிப்புரை :

பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.

குறிப்புரை :

பன்னிருபெயர்களையுடைய (சீகாழிச்) சிறப்புணர்த் திற்று. பெயர் - புகழ். நயன் - நீதி சொரூபன். நயன் - அருள் (கலி .8). நடன் - கூத்தன். அருட்கூத்தன், `ஞானக்கூத்தன்` (சிவப்.பொது.37)`நம்பனே நடனே` (ப.188 பா.4). உயருமா - உயர்ந்து அடையும் முறைமையில்.
சிற்பி