திருவாமாத்தூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

தென்றல் ஆர்கின்ற அழகிய மாடமாளிகைகளின் சூளிகைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனைமரத்தில் அன்றில் பறவை வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே! மேருமலையை நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும், மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை வென்றது எவ்வாறு?.

குறிப்புரை :

குன்றம் - மேருமலை. சிலை - வில். அரா - பாம்பு. அரி - திருமால். வாளி - அம்பு. கூர் - நுனி. எரி - அக்கினிதேவன். காற்று - ஈர்க்காகிய வாயுதேவன். காற்று ஈர்க்கு (தி .1 ப . 11 பா .6) இவற்றின் உதவியால் மும்மதிலை வென்றவாறு எவ்வாறு? தென்றல் ஆர்கின்ற மாடம் என்க. சூளிகை - வீட்டினுச்சி. பெண்ணை - பனை. அன்றில் - ஒரு பறவை. அம்மான் - அருமகன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ வுண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகி றந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

மறைவில்லாமல் சிறந்த மணிகளையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரியவிடத்தைக் கண்டு வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

தானவர் - அசுரர். வெருவ - (அஞ்சி) அலறிப்பிதற்ற. விடம் உண்டு உகந்த அருள் என்?. கரவு இல் - மறைவில்லா. சந்து - சந்தன மரம். கார் அகில் - கரிய அகில் மரம். தந்து - அடித்துவந்து. பம்பை, திருக்கோவலூரின் கிழக்கில், அண்மையில், பெண்ணையாற்றினின்றும் பிரியும் ஆறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுவென்
பூண்ட கேழன் மருப்ப ராவிரி கொன்றை வாள்வரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர் இறைவனே! நீண்ட சடை அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட, திருநீற்றை மெய்யில்பூசித் திருமால் பிரமன் முதலானோர் மாண்ட கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

நேரிழை - உமாதேவியார். `தளரிளவளரெனவுமை பாடத்தாளமிட` (பதி. 247-) மால் அயன்மாண்டவார் சுடலை - ஆறுகோடி நாராயணரும் நூறுகோடி பிரமர்களும் இறந்த நீண்ட சுடு காட்டில். மாண்பு - மாட்சி. என்? கேழல் மருப்பு - பன்றிக்கொம்பு. அரா - பாம்பு. `முற்றலாமை இளநாகமொடு ஏனமுளைக்கொம்பவை பூண்டு` (தி .1 ப .1 பா .2).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்திரு மாதைப் பாகம்வைத்
தேல மாதவ நீமுயல்கின்ற வேடமிதென்
பாலி னேர் மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

பாலையொத்த இனிய மொழிபேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசைபாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற பெரியதவத்தை மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?

குறிப்புரை :

நேர்அன - நேரொத்த. கண்ணி - கண்ணையுடையவள். வெள் நகை - வெண்மையுடையவாகிய பற்களையும். மான் விழி - மான்களைப்போல மருண்ட கண்களையும் உடைய. திருமாதை - அழகிய உமாதேவியாரை. ஏல - பொருந்த. தவம் புரிவார்க்கு, மங்கை பங்குடைமை முரண்பட்டசெயல் என்றவாறு. `பால் இன் நேர்மொழி` - பால்போலும் இன்சொல்லையுடைய. ஆலை - கரும்பாலை, கரும்புமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த விரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

வண்டல்மண் பொருந்திய வயல்களில் நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரைகள் மாதர்களின் ஒளிபொருந்திய முகத்தைப்போலப் பூக்கும் ஆமாத்தூரில் அண்டங்களில் வாழும் தேவர் முதலியோரால் வணங்கப்பெறும் இறைவனே! மாமலர்தூவி நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள் உணவின்மையால் வருந்தவும், அதற்கு இரங்காததற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

தொண்டர் பூசித்தும் உணவின்றி வருந்துகின்றனர். அது கண்டு இரங்காதது ஏன்? ஆமாத்தூரில் அன்றிருந்த இந்நிலைமையை ஆசிரியர் அறிந்துபாடியருளினார். வண்டல் - நீர் ஒதுக்கிவிட்டமண். ஆர் - நிறைந்த. கழனி :- கழனியில் கலந்து மலர்ந்த தாமரைப் பூக்கள் ஆமாத்தூரிலுள்ள மாதர்களுடைய ஒளி பொருந்திய முகம்போல இருக்கின்றன. தாமரைகள் முகம் போலப் பூக்கும் ஆமாத்தூர் என்று பொருத்திக்கொள்க. அண்ட வாணர் - அண்டங்களில் வாழும் தேவர்கள் முதலியோர். (பதி. 185. பா. 10. இல் உள்ள `அண்டவாணன்` என்பதன் பொருள் வேறு).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

ஓதி யாரண மாயநுண் பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீழல் உரைக்கின்ற நீர்மையதென்
சோதி யேசுட ரேசு ரும்பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே யரனே ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் விளங்கும் முதல்வனே! அரனே! ஆமாத்தூர் இறைவனே! வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள் அறியாது மயங்கிய சனகாதியர் அன்று ஐயம் கேட்க அவர்கட்கு ஞானமார்க்கத்தை முறையோடு ஆல் நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தகைமைக்குக் காரணம்யாதோ?

குறிப்புரை :

ஆரணம் - வேதம். நால்வர் - சநகாதி முனிவர். நன்னெறி - ஞானமார்க்கம். ஆலநிழல் - `கல்லால் நிழல்`. சுரும்பு - வண்டு. ஆதி - முதல்வன். அரன் - பிறப்பிறப்பை அழிப்பவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

தாமரை மலரிலுள்ள தேனை உண்டு வண்டுகள் இசைபாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட, விண் மேகங்களாகிய முழவை அழகிய கையால் ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே! மங்கையாகிய ஒளிநுதலை உடைய மான்போன்ற பார்வதிதேவி வாடி ஊட மணம் கமழும் சடையில் கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாதோ?

குறிப்புரை :

வாள் - ஒளி. நுதல் - நெற்றி. மங்கையாகிய வாணுதன் மான் என்பது உமாதேவியாரைக் குறித்தது. வாடி ஊடுதற்கு ஏது, சடை மேல் கங்கையாள் இருப்பது. பங்கயம் - தாமரை. மது - தேன். விண் முழவு - விண்ணிலுள்ள மேகமாகிய மத்தளத்தை. அம் - அழகிய. அதிர்க்கும் - ஒலிக்கும், கையால் அதிர்க்கும் என்றது பொருந்துமாறு புலப்பட்டிலது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

நின்ற டர்த்திடு மைம்பு லன்னிலை யாத வண்ண நினைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபான் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாச ரன்திரள் தோளி ருபது தானெ ரிதர
அன்றடர்த் துகந்தார் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

அன்று கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் திரண்ட இருபதுதோள்களும் நெரியுமாறு அடர்த்துப் பின் அவன்பால் கருணை காட்டியவனே! ஆமாத்தூர் இறைவனே! மாறிநின்று மயக்கும் ஐம்புலன்களை மனத்தால் வென்று அவித்தும் ஒருபாகத்தே இளம்பெண்ணை விரும்பி ஏற்றுள்ளதுயாது காரணத்தாலோ?

குறிப்புரை :

அடர்த்திடும் - வருத்திடும். `நின்று....... அடர்த்து` என்ற பகுதி சிவபிரானது யோக நிலையைக் குறிப்பது. அதற்கு ஒவ்வாதபடி இடப்பால் அம்பிகையை விரும்பிக் கொண்டது ஏன் என்று வினவினார். நிசாசரன் - இரவில் சஞ்சரிப்பவன், இராவணன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சை தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தார் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

உமையம்மையோடு பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய் விளங்கும், தோலாடையை இடையில் கட்டிய வேடம் மேற்கொண்டு மாதரார் இல்லங்களில் ஐயம் ஏற்று உகந்தவனே! ஆமாத்தூர் இறைவனே! செந்தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் தேட அவர்கட்கு ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய் நிமிர்ந்த வெற்றிக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

வெற்றிமை - வென்றதன்மை. (பதி.188 பா.8) (ஐயம்). தையலாள் - உமாதேவியார். இச்சை தயங்கு - விருப்பம் விளங்குகின்ற. தயங்குதோல் - அசைகின்ற தோலுமாம். அரை - திருவரையில். ஆர்த்த - கட்டிய. ஐயம் - பிச்சையுண்டி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர்ப ரவிடும்
அத்தனே யரியாய் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

முத்தைவென்ற முறுவலை உடைய உமையம்மை பங்கனே! என்று தேவர்கள் பரவிப் போற்றும் தலைவனே! காண்டற்கு அரியவனே! ஆமாத்தூர் இறைவனே! புத்தர்களும் புல்லிய சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம் மொழியும் நூல்களைப் பிடித்துக் கொண்டு பழிக்கவும், அவற்றைப் பொருட்படுத்தாது பத்தர்களால் விரும்பப்படும் மேலாந்தன்மை உடையன் ஆதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

நூல் - பிடகம் முதலியன. அலர் - பழி. பத்தர் - அன்பர். பேண - விரும்ப. பரம் ஆய பான்மையது - மேலவர்க்கும் மேலாந்தன்மையுடையது, (முழு முதன்மை). முறுவல் - பல். அரியாய் - அரியவனே (எளியானல்லன் அன்பர் அல்லார்க்கு). `அரியதில் அரிய அரியோன். (திருவாசகம்: 3-47).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடன் மேயதென்னென்று ஆமாத்தூ ரம்மானைக்
கோட னாக மரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

தசைவாடிய வெண்டலை மாலையைக் கட்டிக் கொண்டு நள்ளிருளில் எரிஏந்தி ஆடுவதன் காரணம் யாதோ என்று ஆமாத்தூர் இறைவனைக் காந்தள் நாகம் போல அலரும் பசிய பொழில் சூழ்ந்த கொச்சை வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேலான வீட்டுலகம் அடைவர்.

குறிப்புரை :

வாடல் - வாடுதலையடைந்த. (பதி.196-5 பார்க்க). ஆர்த்து - கட்டி. ஆடல் - கூத்து. மேயது - விரும்பியது. கோடல் - வெண்காந்தள். நாகம் அரும்பு - பாம்புபோல அரும்புகின்ற. நாகம்; புன்னை மரமுமாம். கொச்சையார் இறை - காழியர் கோன்.
சிற்பி