திருக்களர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

நீருள் ஆர் கயல் வாவி - என்பது குளங்களின் நீர் மிகுதியையும் அதிலுள்ள மீன்களின் பெருக்கத்தையும் குறித்தது. திருக்களர் நீர்வளம், சோலைச்சூழல், வயல் வளம், மதிற்சுற்று, தேர்வீதி, விழாமலிவும் உடையது. சடையில் மதி ஆர (- நிறைய, பொருந்த) நின்றவனே. அடைந்த அன்பர்க்கு அருள்வாய் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடி போற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

தோளின் ..... நீறு - `திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை`(திருவாசகம், திருச்சதகம்,33) அங்குச் சிவபிரான் தோள். இங்குச் சிவதொண்டர் தோள், `சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களமேயவனே` என்றதால், உடையானுக்கு ஏற்றது அடியார்க்கும் ஆதல் அறிக. மிண்டிய - நெருங்கிய. தாளினார் - திருவடியுடைய சிவபிரான். வேளின் நேர் - முருகனைப் போன்ற. விசயன் - அருச்சுனன். சிவவேடனிடம் தோற்றுச் சயம் நீங்கியவன். விசயன் - மேலான வெற்றியன் என்பது, அவன்பெற்ற பிறவெற்றிகளைக் குறித்தது. வித்தகா - ஞான வடிவா! ஆள் - அடிமையாக. உகந்தவனே - விரும்பிக்கொண்ட (ஆண்ட)வனே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாட வல்லநன் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாடவீடுகளைக் கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மைந்தர் - மக்கள். சேடர் - பெரியோர். நிமலன் - மலமில்லாதவன். அடி நிரைகழல் சிலம்பு ஆர்க்க மாநடம் ஆடவல்லவனே - திருவடிகளில் வரிசையாகக் கழலும் சிலம்பும் ஒலிக்க மகா தாண்டவம் ஆடவல்ல பெருமானே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

அம்பி னேர்தடங் கண்ணி னாருடன் ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொ னார் பொழில் சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா விணையடி போற்றி நின்றவர்க்
கன்பு செய்தவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

அம்பு - வாள். தடங்கண் - விசாலாட்சம். திருக்களரிலுள்ள ஆடவர் மகளிர் பன்மையும், மாளிகைச் சிறப்பும், செல்வப் பெருக்கும், வளமிகுதியும் குறித்தார். `எம் இறைவா` என்று வாயாரப்பாடி, இணையடிபோற்றி நின்றவர்கண் இறைவன் அன்பு செய்தருள்வான் என்ற உண்மையை அறிவித்தவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கெண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கை யிற்படையாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மதுஉண்டு இசைபாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

கொங்கு - மணம், பூந்தாதுக்களுமாம், கெண்டி - கிளறி, மாமது - மிக்க தேன். கமுகம் - பாக்கு. மங்கை ... மணவாளனே - பார்வதிமணாளனே! ஒருகைத்தலத்தில் பிணை (மான்) கொண்டு அழகிய (மற்றொரு) கையில்(மழுப்) படை உடையவனே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்ட னேநிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆல நீழலுளாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

கோலம் - அழகு. ஆல - தோகைவிரித்து ஆடி அசைய. கொண்டல்கள் - மேகங்கள். சேல், கயல் இரண்டும் மீன்வகை. நீலம் - நீலநிறத்தை. மேவிய - பொருந்திய. நஞ்சாலானநிறம். பொலி - விளங்குகின்ற. ஆல நீழலுளாய் - தக்ஷிணாமூர்த்தியாகிய குருநாதரை விளித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

தம்ப லம்மறி யாத வர்மதில் தாங்கு மால்வரை யாலழ லெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத்தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப் பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தம் பலம் - தமது வலிமையை. அறியாதவர் - தெரிந்துணராத அசுரர். தாங்கும் மால்வரை - உலகத்தை அச்சாக நின்று தாங்கும் பெரிய மேருமலை. திண்பலம் - திண்ணிதாகிய வலிமையை. பலம் - பயனுமாம். வம்பு - மணம். அலர் - பரந்த. பேரம்பலத்து உறைவாய் - பேரம்பலத்தில் (கூத்து உகந்து) உறைபவரே! சிற்றம்பலம் பேரம்பலம் என்பவை இரண்டும் சித்சபையே ஆகும்; சிதம்பரம், சிதாகாசம் என்பவற்றின் பொருள் ஞானவெளி என்பது. ஞானவெளி, ஞானசபை இரண்டும் பொருளால் ஒன்றே. அம்பலத்தின் அடை மொழியாகிய சிறுமை பெருமைகளை நோக்கின், சிற்றம்பலம் என்பது வடசொற்றொடரின் திரிபாகாது எனல் புலப்படும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
சென்ற டுத்துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள், நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள்வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தம்மேலுள்ள கொடிகள், கோபுரங்களின் மேற்போய், சந்திரனைத் தோயும் அளவு, மாளிகைகள் உயர்ந்துள்ளன. `வண் கொண்டல் விட்டு மதிமுட்டு வனமாடம்`. வரை - கயிலை மலையை. எடுத்தான்தன் - எடுத்த இராவணனுடைய. அன்று - எடுத்த அந்நாளில்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணி லாமதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ண லாயவெம்மான் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தெளிந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி, திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பண் + யாழ் = பண்ணியாழ். யாழைத்திருந்திய சுரம் அமையப்பண்ணி எனலுமாம். ஆர - நிறைய. பதியாகிய திருக்களருள். உள் திருக்கோயிலின் மூலத்தானத்தில், அன்பர் உள்ளத்தில். கழல் காட்சி - சீபாதசேவையை (அருளாய்).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே யடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பிரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்குபவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

பாக்கியம் - நல்வினைகள். பத்தர்கள் - அன்பர்கள். பணிகள் - திருப்பணிகள். தீக்கு இயல் - அக்கிநிகாரியத்துக்கு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும்பாடத் தவமாமே.

பொழிப்புரை :

திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத்தவம் சித்திக்கும்.

குறிப்புரை :

இந்து - சந்திரன். எழில் - அழகு. செந்து - முன் பதிகம் மூன்றில் உள்ள விளக்கம் காண்க. `அந்தி வண்ணன்`.
சிற்பி