திருக்கோட்டாறு


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.

பொழிப்புரை :

கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண் வழியாக வீட்டுநெறியை எய்துவர்.

குறிப்புரை :

கண்ணின் - கண்ணையுடைய. இசைசெய்ய - (இனிய) இசைப் (பாக்களைப் பாடலும் ஆடலும்) செய்ய. கார் - மேகம். அதிர்கின்ற - முழங்குகின்ற. குருந்தம் :- மரம். மாதவி - குருக்கத்திக் கொடி, `மாடுலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் ஊடுலவு புன்னை விரைதாதுமலி சேருதவி மாணிகுழியே` (தி .3 ப .77 பா .9) விரை - மணம். மல்கு - நிறைந்த. உள்கி - நினைந்து. வருந்தும் ஆறு - துன்பம் அடையும் வழியை. வான்ஊடு - விண்வழியாகச் செல்லும். நெறி - வீட்டு நெறியை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றி னேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.

பொழிப்புரை :

பெரியயானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக்குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.

குறிப்புரை :

மாகரி - பெரியயானை, கரத்தையுடையது கரி. வான் மழை - மேகத்திலுள்ள மழைநீரை, நேர்ந்து - நேர்பட்டு. உகுத்தி - உகச்செய்து. (அபிடேகித்து). ஏர்ந்து - எழுந்து, குத்தி எனலுமாம். பணி - தொண்டு. மன்னிய - நிலைபெற்றுள்ள. வான் - தேவருலகம். பொன்றும் ஆறு - சாமாறு, (பிறந்திறந்துழலும் துன்பவழி). `சாமாறே விரைகின்றேன்` (திருவாசகம், திருச்சதகம். 14) ஆர்ந்த - நிறைந்த.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவு மாறுவல் லார்பழிபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

வியந்து - நன்குமதித்து, புகழ்ந்து. குரவம் - குராமரம். `நிழல்` என்ற பாடமே சந்தத்திற்குப் பொருந்துவது. (பதி .186 பா .6) அரவம் - பாம்பு. பரவும் ஆறு - வாழ்த்து முறைமை. பழி பற்று - பழியும் பற்றும், பழிக்கும் பற்று எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

அம்பி னேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம் பனேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பி னேர்ந்தறி யார்தடுமாற் றவல்வினையே.

பொழிப்புரை :

அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக் கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார்.

குறிப்புரை :

அம்பு - வேல்.(முற்பதிகம். பா .4) ஆடு அகம் - ஆடுகின்ற இடம். கொம்பின் ஏர் துகிலின் கொடி - கொம்பிற்கோத்து எழுகின்ற துணிக்கொடி. நேர் என்றும் பிரிக்கலாம். நடனே - கூத்தனே. (பதி .185 பா .11. ` நயன் நடன்`) நலம் - பேரின்பம். தம்பின் தடுமாற்ற வல்வினையே நேர்ந்து அறியார் என்றியைக்க. செய்தவர் எழுவாய், அறியார் பயனிலை. நேர்தல் வினையின் செயலாகும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த வாடிய
அழக னென்றெழுவார் அணியாவர் வானவர்க்கே.

பொழிப்புரை :

பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.

குறிப்புரை :

பழைய அடியார். `பழவடியீர்` `பண்டைப்பரிசே பழவடியார்க்கு ஈந்தருளும் அண்டம்`. பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன். `பழிப்பு இல் நின்பாதப் பழந்தொழும்பு`. (திருவாசகம் 157, 183, 424, 151) பார் - மண். குழல் - வேய்ங்குழல். மொந்தை - இசைக்கருவியுள் ஒன்று. கழலும் சிலம்பும் ஒலி செய்ய என்க. கான் - காடு. கணம் - பூதகணம், பேய்க்கணம். எழுவார் - நடு நாடியில், சிவபீஜத்தொடும் சிந்தித்து எழுகின்ற யோகியர். `சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி எழுவார் உள்ளம் ஏயவன் காண்`(தி .6 பதி .64 பா .4.). இவ்வுண்மையை ஒட்டித் `தொழுதெழுவார்` `தொழு தெழுவாள்` என்னுந் தொடர்கட்குப் பொருள் கொள்ளல் நன்று. `கொழு நற்றொழுதெழுவாள்` - படுக்கையின் நின்று தொழுது கொண்டே எழுதல் செய்வாள். தொழுதல் என்றதற்கு விழுந்து வணங்குதல் என்னும் பொருளே உரியது என்பார், பிறவாறெல்லாம் உரைப்பர். வானவர்க்கு அணி (பூஷணம்) ஆவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.

பொழிப்புரை :

பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.

குறிப்புரை :

பஞ்சின் = பஞ்சுபோல. இன் - ஐந்தாவதனுருபு உவமப் பொருள். பன் + து என்றதன் மரூஉ. பனுவல் என்பதற்கும் அதுவே பகுதி, பஞ்சினைப்பன்னுதல் இன்றும் உண்டு. `பஞ்சி தன் சொல்லே பனுவல் இழையாக`(நன்னூற்பாயிரம்) `பருத்திப்பெண்டின் பனுவலன்ன` (புறம் -125). `நுணங்கு - நுண்பனுவல்` (நற்றிணை - 353).(தொல் - எழுத்து - நச்சர்: இறை - சூ 1 - உரை). பத்தர் - அன்பர். சித்தர் - அட்டமாசித்து வல்லவர். வைகலும் - நாள்தோறும். பண்பு - அவர்களுடைய குணங்களை. இன்மொழியால் கொஞ்சித் தொழுதல் நிறைந்த கோட்டாறு. தொழில் - தொழுதல். மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. `கிஞ்சுகவாயஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன்` (திருவாசகம் -362) `மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றேயன்றோ` (கம்பர் - பால - கோலங் - 19). மணிமிடற் றண்ணலே - திருநீலகண்டப்பெருமானே. துஞ்சும் ஆறு அறியார் - இனி இறக்கும் வகையை அறியார். இத் தொல் நிலத்தே பிறவார் என்பதும், துஞ்சு மாறறியாமை வலியுறுத்தி வீடுபெறுவரென்று விளக்கிற்று. நெகிழ்ந்தவர் - எழுவாய்; அறியார் பிறவார் இரண்டும் பயனிலை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.

பொழிப்புரை :

தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடிகொண்டுள்ள கோட்டாற்றில், நிலாவொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.

குறிப்புரை :

கலவம் - தோகை: மயிலாள் - மயில்போலும் சாயலுடைய உமாதேவியார். கண்மிசை நீர் நெகிழ்த்து - கண்ணீர் உகுத்து. நிலவம் - நிலாவைத்தரும். உன்னுவார் - தியானம் செய்பவர். வானவரின் - தேவரினும். உண்மையது - சத்தியமானது. ஆசிரியர் ஆணையிட்டுக் கூறுதலை நோக்கின், உயிர்களைச் சிவவழிபாட்டில் ஈடுபடுத்தக்கொண்டிருக்கும் பேரன்பு விளங்கும். (பதி. 220 பா. 11, பதி. 221 பா. 11, தி. 3 பதி. 118.பா.11).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.

பொழிப்புரை :

வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும் பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப்பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?

குறிப்புரை :

வண்டல் - நீர் ஒதுக்கிய மண். சாலி - நெல். ஆலை - கரும்பாலை கரும்பு. கொண்டலார் - `தென்றலார்` போல். `தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்து` (தி .1 ப .60 பா .7). தொண்டு - தொண்டர்கள்; சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை; வேந்து அரசு ஒற்று முதலியனபோல. ஆகுபெயருமாம். துதி - தோத்திரம். மிண்டு - திண்மை. `மிண்டனுக்கு இரண்டாள்` என்பது வழக்கு. தவிர்த்து - நீங்குதல். வெற்றிமை - வென்ற தன்மை. (பதி .186 பா. 9).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் றேடவானையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாது நீயும்வி யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள்
எருதுகந் தவனே யிரங்காயுன தின்னருளே.

பொழிப்புரை :

அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக.

குறிப்புரை :

அடியார் கருதி வந்து தொழுது எழ என மாற்றுக. கண்ணன் - கிருஷ்ணன் என்னும் வடசொல்லின் திரிபாக்கொள்ளின் கறுப்பன் என்னும் பொருளாம்; தமிழாக்கொள்ளின் சினைப்பெயரடியாப் பிறந்த பெயராம். கருதுபவனுமாம்` ஆனையின் ... கொண்டு` - யானை உரித்த வரலாறு. குருதி - இரத்தம். விருதினான் - விருதுகளால். மடமாது - உமாதேவி. வெள்எருது - நரைவெள்ளேறு. உகந்தவன் - விரும்பியவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர்
கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.

பொழிப்புரை :

உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக.

குறிப்புரை :

குண்டர் - சமணர். ஊணருந்தவம் - உண்ணுதலில்லாத தவம். அருமை - இன்மை; `அருங்கேடன்` (குறள்) குறை - குறை கூறுதல். இவர் - குண்டர் முதலிய இவர்கள். நுனை - உன்னை. அடைகிலாத வண்ணம் என்கொலோ - அடைந்து தொழுது உய்யாதவாறு என்னோ?. உன் அடியவர்க்கு அருளாய் - உன்னடியவர்களுக்கு அக்காரணத்தை உணர்த்தியருளாய். ஆசிரியரும் தம்மை அப்படர்க்கையில் அடக்கிக் கொண்டார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன்றி லாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே.

பொழிப்புரை :

காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.

குறிப்புரை :

கழலால் - கழலணிந்த திருவடியால். தானியாகு பெயர். கனலாகச் சீறி - தீயாகி வேவக்கோபித்து. கோலவார் குழலாள் மெய்குடிகொண்ட; என்று கூட்டி மாதியலும் பாதியன் என்க. (ப .189. பா . 11). மெய் - பெருமான் திருமேனி. மூலன் - அநாதிகாரணன். `படைப்போற் படைக்கும் பழையோன்`. முத்தன் - இயல்பாகவே பாசங்களில்லாதவன். வானகம் - வீடு.
சிற்பி