திருப்புகலி


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.

குறிப்புரை :

உரு - திருமேனிப்பொலிவு. மெல்லியல் - உமாதேவியார். கரு - `உருவமைந்த மாநகர்க்குக் கருவமைந்த மாடம்போல` என்றதில் உள்ள பொருளே ஈண்டுங் கொள்ளப்படினும், அங்குப் பொருட்கருவும் இங்கு அருட்கருவும் என்று வேறுபட்டு நிற்கும். பொருஆர்ந்த - மோதுதல் நிறைந்த. புகலி - சீகாழி. கோயிலாக - தலைமையில்லமாக. கோ - தலைவன், தலைமை தலைவனில்லம் இரண்டன் வேறுபாடு உணர்க.

பண் :

பாடல் எண் : 2

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீ ருழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

நீர் - கங்கை நீர். உழைமான் - உழையாகியமான் `புல்வாய்(புலி) உழை மரையே கவரி`, `நவ்வியும் உழையும்` என்னும் மரபியற் சூத்திரப்பகுதிகளால் மானின் பேதம் புலப்படும்.

பண் :

பாடல் எண் : 3

அழிமல்கு பூம்புனலு மரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்டோளீர்
பொழின்மல்கு வண்டினங்க ளறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே கோயிலாக விருந்தீரே.

பொழிப்புரை :

மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

அழி - மிகுதி. `அற்றார் அழிபசி`. அடைவு - சார்வு. இறை - நஞ்சின் கறுப்பு. எழில் - அழகு.

பண் :

பாடல் எண் : 4

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்றோல்
மயிலார்ந்த சாயன்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக விசைந்தீரே.

பொழிப்புரை :

கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கையில் என்பதில் ஐகாரம் ஒருமாத்திரையொலிப்பது `சங்கக் கயனும்` (தி. ப .36 பா .9). கரி - யானை, ஆர்ந்த - ஒத்த, வெருவ - (அஞ்சிவாய்) வெருவுதலடைய, தோல் போர்த்தீர் என்க. பயில் - (மறைப்) பயிற்சி, முதனிலைத் தொழிற்பெயர். எயில் - மதில்.

பண் :

பாடல் எண் : 5

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீ ரயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர்.

குறிப்புரை :

பாடல் - வேதகீதம். அரைக்கு - திருவிடையில். ஆர்த்தீர் - கட்டினீர். பாவும் அதன் பொருளும் அதன் பயனும் ஆயினீர். அயன் பேணும் புகலி - பிரமன் பூசித்த சீகாழி; பிரமபுரம். பூ - தாமரை மலர். `பூவினுக்கருங்கலம்`, `பொங்கு தாமரை` பூவிற்குத் தாமரையே. தே - பிரளயகாலத்திலும் அழியாத தெய்வத்தன்மை.

பண் :

பாடல் எண் : 6

மண்ணார்ந்த மண்முழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு - வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க, இமவான் மகளாகிய பார்வதிதேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக்கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர்.

குறிப்புரை :

மண் - மார்ச்சனை. முழவம் - மத்தளம். (மிருதங்கம்) ததும்ப மகிழ ஆடினீர் என்க. மலையான் மகள் என்னும் பெண் - இமாசலராசன் குமாரி எனப்படும் உமாதேவியார், `நாமகள்` `திருமகள்` `மலைமகள்` `மலைப்பெண்` என்புழிப்போலத் தேவி என்ற பொருளைக் குறித்தலறிக. மெய் - திருமேனி. மகிழ - பூரிக்க. `மெய் மகிழ` என்றது அரிய பிரயோகம். மிடை - நெருங்கிய. சந்திர மண்டலம் அளவும் ஓங்கிய மாடம் என்றவாறு, `வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்`. வியன் - அகலம். புகலிக்கண் ஆர்ந்த சீகாழியில் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 7

களிபுல்கு வல்லவுண ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த வருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமு மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக வுகந்தீரே.

பொழிப்புரை :

களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடையவரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தெளிந்ததேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

களி - களிப்பு. முதனிலைத் தொழிற்பெயர். புல்கு - பொருந்திய. மூன்று ஊர் - முப்புரம். அளி - வண்டுகள். அமரர் - தேவர். மரணமில்லாதவர் - நெடிது வாழ்பவர். ஏத்த - துதிக்க. தெளி - தெளிவு. கலங்கலின்மை - கலங்கல் நீக்கம். விரை மணம். ஒளி - சிவப்பிரகாசம். சுடரொளியுமாம். உகந்தீர் - விரும்பினீர்.

பண் :

பாடல் எண் : 8

பரந்தோங்கு பல்புகழ்சே ரரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீ ருகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச்செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

பரந்து ஓங்குபல் புகழ் - உலகம் எங்கும் பரவி ஓங்கிய பெருங்கீர்த்தி, இராவணன் திரிலோக சஞ்சாரியாதலின் அத்தகு புகழ் பெற்றனன். உரம் - அறிவு, `கைத்தலங்கள்.... பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமதத்துவனை .. ச் சாராதே சாலநாள்போக்கினேனே` (தி .6 ப .79 பா .10)`எறியுமா கடல் இலங்கையர்கோனை... அடர்ந்திட்டுக் குறிகொள்பாடலின் இன்னிசை கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டு நின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன் கூருளானே` (தி .7 ப .55 பா. 9). `அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை` (தி .7 ப.62 பா .9).(ஸாமபி: விவிதை: ஸ்தோத்ரை ப்ரணம்ய ஸ த ? நந:) என்று வான்மீகிராமாயணம் உணர்த்து மாற்றால் அச்சாம வேதத்தையே உரந்தோன்றும் பாடல் என்றார். புரம் .. மும்மதில் - முப்புரமாகத் தோன்றிய மதில். வரம் தோன்று கோவில் - `வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை` (தி.1- பதி .128, அடி .31)

பண் :

பாடல் எண் : 9

சலந்தாங்கு தாமரைமே லயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி யைம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சலம் - நீர். அயன் - பிரமன். தரணி - பூமி. அளந்தான் - திருமால். மாவலியிடம் மூவடி மண் பெற்ற வரலாறு. ஓங்கியவன் அயன், இழிந்தவன் அரி. கனல் - தீ. புலம் - மெய்யுணர்வு. செற்றார் - அழித்த ஞானியார், அடியார். நலம் - அழகு, நன்மை. நயந்தீர் - விரும்பினீர்.

பண் :

பாடல் எண் : 10

நெடிதாய வன்சமணு நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப்பேச, மேலானதொரு மெய்ப்பொருளாக விளங்குபவரே! பொடி பூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

குறிப்புரை :

நிறைவு - சமயக்கொள்கையின் நிறைவு அறிவின் நிறைவுமாம். கடிது - கடுமையுடையது. கழற - பழித்துப்பேச. மேல் ஓர் பொருள் - மேலாக ஒரு மெய்ப்பொருள். பொடி - திருநீறு. புரிந்து - இடைவிடாது நினைந்து. வடிவு ஆகும் - அழகு நிறைந்த தோற்றமும் ஆம்.

பண் :

பாடல் எண் : 11

ஒப்பரிய பூம்புகலி யோங்குகோயின் மேயானை
அப்பரிசிற் பதியான அணிகொண்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழாற் றெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசி லிடர்நீங்கி யிமையோருலகத் திருப்பாரே.

பொழிப்புரை :

ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.

குறிப்புரை :

மேயான் - மேவியவன். பரிசு - தகைமை. செப்ப அரிய- அருள்பெறாதவர் சொல்லுதற்கு அருமையவாகிய. தெரிந்த - ஆராய்ந்த.
சிற்பி